ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும்
கடந்த வரலாற்றுப் போக்கில் பிள்ளையான் ஒழுங்கமைப்பட்ட குற்றங்களுடன் தொடர்புபட்டவன். மற்றொருவரைக் கைகாட்ட முடியாத அதிகாரத்துடன், வன்முறை வடிவங்களுடன் பயணித்த பிள்ளையான், யுத்தம் முடிவுக்கு வந்தபின் அதை நிறுத்தவில்லை.
பிரபாகரனின் மனிதவிரோத தொடர் குற்றங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் முலாம் பூசிய பாலசிங்கம் போல், பிள்ளையானின் குற்றங்களுக்கு கிழக்கு மய்யவாத அரசியல் முலாம் பூசியவர் ஸ்ராலின் என்று அழைக்கப்படும் ஞானம்.
புலிக்குப் பிந்தைய பிள்ளையானின் கிழக்குப் படுகொலைகள், பணத்துக்கான கடத்தல்களும் கப்பங்களும், பாலியலுக்கான கடத்தல்களும் படுகொலைகளும், சொத்துக்களுக்கான படுகொலைகள், அதிகாரத்துக்கான படுகொலைகள் .. என்று எண்ணிலடங்காத குற்றங்கள் நடந்தேறின. இந்த வகையில் வவுனியாவில் சித்தார்த்தன், வடக்கில் டக்கிளஸ், இடைக்காலத்தில் பிரேமச்சந்திரன்.. தலைமையேற்ற மனிதவிரோத செயற்பாடுகள், புலிகளின் மனிதவிரோதத்தையும் மிஞ்சியிருந்தது. புலிகளுக்குத் தனிமனித நோக்கம் இருக்கவில்லை. அதாவது தனிநபர் பாலியல் நோக்கமும், தனிநபர் சொத்துக் குவிப்புக்கான நோக்கமும் குற்றங்களின் பின்னனியில் இருக்கவில்லை.
குற்றங்கள் இனந்தெரியாத நபர்கள் என்ற பெயரிலும், புலிகளின் பெயரிலும் நடந்தேறியது. இதுவொரு உண்மை. இந்த உண்மையின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், பிடிபட்ட போது கையை விரித்ததும், சாட்சியங்களை அழிக்க சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கொன்றதும் என்று, எண்ணற்ற விடையங்களைக் கடந்த வரலாற்றுடன் இனம் காணமுடியும்.
