எதற்குப் பொலிஸ் அதிகாரம்? எதைப் பாதுகாக்க? எதை மூடிமறைக்க? யாரை ஒடுக்க?
தமிழினவாதத்துக்குள், மதவாதத்துக்குள், பிரதேசவாதத்துக்குள், சாதியவாதத்துக்குள் … மூழ்கிக் கிடந்த தமிழ் சமூகம், ஜனாதிபதி தேர்தலின் பின்பாக சமூக அதிர்வுக்குள்ளாகியுள்ளது. இடதுசாரிய அரசியல் மீதான பொது நாட்டம் அதிகரித்துள்ளது. தமிழினத்தின் பெயரால் ஊழலும், சுயநலமும்… புளுத்துப் புரண்டு படுத்துக் கிடந்ததையும், மக்களை வறுமையிலும் அறியாமையிலும்.. தள்ளிவிட்டு அனுபவித்த அரசியலை, மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இன, மத, சாதி, பிரதேசவாத.. மூலம் மக்களை கூறுபோட்டு, தமிழ்மக்களை முற்றாக போதைக்குள் மூழ்கடிக்கும் தமிழ் அரசியல், அம்மணமாக மேடையேறி இருக்கின்றது.
சாராயக் கடைகள் மூலம் தமிழனுக்கு விடிவைக் காட்டும் தமிழ் தேசியமும், தாங்கள் அப்படியல்ல என்று கும்பிடு போடும் குறுங்குழுவாதிகளும் சாராயக்கடை அரசியலில் தாங்கள் பங்கு கொண்டவர்கள் அல்ல என்பதன் மூலமும் தப்பிக்க முனைகின்றனர். இந்த வகையில்
1. சாராயக்கடை எனது பெயரிலில்லை என்று கூறும் சிறிதரன்
2. சாராயக்கடைக்கு எதிராக வழக்கு போட்டிருக்கின்றேன் என்று கூறும் சுமந்திரன்
3. நாங்கள் சாராயக்கடை நாங்கள் பெறவில்லை என்று கூறும் பிள்ளையான்
இப்படிக் கூறும் அரசியல் பித்தலாட்டங்கள் அரங்குக்கு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலின் பின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் இன, மத, பிரதேசவாதம் கடந்து ஐக்கியத்தை விரும்பும் ஒரு மாற்றத்தை தெரிவாகக் கொண்டிருக்க, மக்களின் ஜக்கியத்தை விரும்பாத அரசியல,; சாராயக்கடையை வைத்து மக்களைப் பிரித்து வாக்குப் பெற முனைகின்றது.