ஒடுக்குபவனுக்கு ஜனநாயகம் - ஒடுக்கப்பட்டவனுக்கு ஜனநாயகம் இல்லை என்பதே புலம்பெயர் இலக்கியச் சந்திப்பாக முன்னிறுத்தப்படுகின்றது. ஒடுக்கப்பட்டவனுக்கான வரலாறும் - குரல்களும் இல்லாதாக்கப்பட்ட வரலாற்று ஓட்டத்தில், ஒடுக்குபவனின் குரல்களே ஜனநாயகமாகியிருக்கின்றது.
இலக்கியச் சந்திப்பானது தனியுடமைவாத சுரண்டலையும் - சிந்தனையையும் ஜனநாயகமாக அங்கீகரிக்கின்றது. வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் சமூகப் பாரம்பரிய தனியுடமை அமைப்பைப் பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தையும் - இலக்கியச் சந்திப்பையும் தகவமைத்து வந்துள்ளது.
சுற்றிச்சுழன்று நின்றாலும், இவைதான் இலக்கியச் சந்திப்பில் நடந்தேறுகின்றது. எந்தச் சமூக அமைப்பு ஆதிக்கம் பெற்று இருக்கின்றதோ, அங்கு எந்தச் சிந்தனைமுறை நிலவுகின்றதோ, அதன் பிரதிநிதிகளின் சந்திப்பும் - இலக்கியமும் முன்நிறுத்தப்பட்டுச் சந்தைப்படுத்தப்படுகின்றது.
வெளிநாட்டுப் புலம்பெயர் வியாபாரிகள் புலிகளையும் - தமிழ் தேசியத்தையும் எப்படிச் சீரழித்து சுடுகாட்டுக்கு அனுப்பினரோ, அப்படி புலம்பெயர் இலக்கியத்தின் பெயரில் வலதுசாரிய கும்பல் களமிறங்கி நிற்கின்றது. இயக்க காலத்தின் தியாகங்களை – போராட்டங்களை புலம்பெயர் புலி வியாபாரிகள் எப்படி பணமாக்கினரோ, அதே போன்று புலம்பெயர் இலக்கியமானது வியாபாரமாக, பாலியல் நுகர்வாகிவிட்டது. இலக்கியத்தின் பெயரில் சமூக நோக்கமற்ற, நடைமுறையற்ற … தனியுடமைவாதமாகிவிட்டது.
இந்த வகையில் முன்னிலைப் பாத்திரம் வகிக்கும் சோபாசக்தி, ராகவன், பிரசாத், நிர்மலா, ஸ்ராலின் …. என்று, வகைதொகையின்றி சுரண்டலை ஆதரிக்கின்ற வலதுசாரிய முதலாளித்துவ தரப்பானது, மிகத்தெளிவாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சித்தாந்தரீதியாக ஒடுக்கும் ஜனநாயகத்தை முன்வைத்து இயங்குகின்றனர்.
புலம்பெயர் இலக்கியத்தின் வரலாறு என்ன?
புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு உருவான வரலாற்;றுப் பின்னணி என்பது, இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலுக்கும் - அதன் நடைமுறைகளுக்கும் எதிராகவே. அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் - அவர்களின் குரலுக்காகவும் உருவானது.
இயக்கங்களின் உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தை மறுதலித்து, போராடுபவர்களை கொன்று வந்த வரலாற்றுக் காலத்தில், இதற்கு எதிரான குரல்களாக புலம்பெயர் அரசியல் - இலக்கியக் குரல்கள் உருவானது.
இந்தப் போராட்டங்களில் முன்வைத்த அரசியல் தொடங்கி தியாகங்களை முன்னிறுத்திய, புலம்பெயர் இலக்கிய அரசியலானது, இந்தப் போராட்டத்தில் தப்பி வந்தவர்களின் இணைவுடன் பலம்பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைத்து, சமூக நடைமுறையைக் கோரியும் உருவான சஞ்சிகைகளே, புலம்பெயர் இலக்கியத்தின் மய்யமாக இருந்தது.
இந்தப் புலம்பெயர் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியே, அரசியல் பேசுவதாக இருந்தது. ஆணாதிக்கத்துக்கு எதிரான, பிரதேசவாதத்துக்கு எதிரான, சுரண்டலுக்கு எதிரான, இனவாதத்துக்கு எதிரான, சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்வைத்ததுடன், வர்க்கப்போராட்டத்தை முன்வைத்தது. வர்க்கப்போராட்டத்தை மறுத்த போலி முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்வைக்கவில்லை. மார்க்கியத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக நடைமுறைப் பாதையை முன்வைத்த அரசியல் - இலக்கியமே, புலம்பெயர் இலக்கிய சந்திப்புக்கு வித்திட்;டது.
காலவோட்டத்தில் வர்க்க அரசியல் நடைமுறைகளை நிராகரிக்கின்ற புத்தக பேராசிரியர்கள், புத்தக அறிவுஜீவிகளின் பொழுதுபோக்குக் கூடாரமாக புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு மாறியது. தாங்கள் பேசுகின்ற அரசியலுக்கு முரணாக, வாழ்வியல் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக, மக்களில் இருந்து விலகிய திண்ணைப் பேச்சாக இலக்கியச் சந்திப்பு மாறியது.
மக்களிலிருந்து விலகி வந்த இந்த இலக்கியச் சந்திப்பானது, வரலாற்று ஓட்டத்தில் தனியுடமைவாதத்தை ஜனநாயகமாகக் கொண்ட, வலதுசாரியக் கும்பல்களின் மக்கள் விரோத ஜனநாயகத்தைத் தூக்கி முன்னிறுத்துகின்றது. அமெரிக்க வகை ஜனநாயக பாணியில் இடதுசாரிய கருத்தியலை குழிதோண்டிப் புதைக்கின்ற இடத்தில் இலக்கியச் சந்திப்பு வந்து நிற்கின்றது. மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவ அவதூறுகளுடன், முதலாளித்துவப் பெண்ணியத்தின் வக்கற்ற வசைபாடல்களுடன் கூச்சலிடுகின்றது. அரசியல் - இலக்கியம் - சமூக செயற்பாட்டின் பெயரில் பெண்களை வேட்டையாடும், ஆணாதிக்க வேட்டை நாய்கள் கூடுமிடமாக, இதன் பின்னால் நின்று தெருநாய்கள் எல்லாம் குரைக்கின்ற இடமாக இலக்கியச் சந்திப்பு மாறியிருக்கின்றது.
25.04.2024
புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு வலதுசாரியமாகச் சீரழிந்த வரலாறு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode