கட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவம், கற்றல், விவாதித்தல், விமர்சனம, சுயவிமர்சனம் .. முதல், கட்சியின் வர்க்கத் தன்மைக்குரிய வளர்ச்சிக் கூறுகளை ஒட்ட நறுக்கிவிடுகின்றனர்.
கட்சித் தலைமையை அதிகாரம் பெற்ற சலுகைக் கூட்டம் கைப்பற்றிக் கொள்வதுடன், பரஸ்பரம் தங்களுக்கு இடையிலான வர்க்க விரோத ஒழுக்கக் கேடுகளை அங்கீகரிக்கின்றது. அதேநேரம் ஒழுக்கக் கேடுகளை, கண்டும் காணாமல் இருத்தலே, கட்சிப் பண்பாக மாறிவிடுகின்றது. அண்மைக்காலமாக இலங்கை இந்தியக் கட்சிகளுக்கு இடையில் நடப்பது, இத்தகைய கட்சிச் சீரழிவின் பொது வெளிப்பாடுகளே. சமூகப் பொது வெளியில் அம்பலமாகும் போது, அதை தனிநபர் பிரச்சனையாக குறுக்கிக் காட்டுவதும், கட்சி அதை பொறுப்பேற்று சுயவிமர்சனம் செய்ய மறுப்பதன் மூலம், வர்க்கக் கட்சிக்குரிய அனைத்துப் பண்புகளையும் இழந்து வருகின்றது.
1950 களில் ஸ்ராலின் மறைவை அடுத்து சோவியத் கட்சியின் தலைமைக்கு வந்தவர்கள், எப்படி வர்க்க அரசியலைப் படிப்படியாக சிதைத்தனரோ, அதை இன்று பொருத்திப் பார்க்க முடியும்;. புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதாக நம்பியே, ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் தலைமையும் அதை அண்டிப் பிழைத்த கூட்டமும், தங்கள் இருப்பு சார்ந்து அன்னிய சக்திகளுடன் சேர்ந்து போராட்டத்தை புதைகுழியில் புதைத்தனர். இதுபோன்று தான் இவை அனைத்தும்.
போராடும் மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புகளும், தியாகங்களும், இலட்சியங்களும் சிதைக்கப்படுவதையும், காட்டிக்கொடுக்கப்படுவதையும் காண்கின்றோம்;.
அண்மையில் இந்தியாவில் ம.க.இ.க மையப்படுத்திய கட்சித் தலைமையில் நடந்த 200 கோடி ரூபா ஊழல் அம்பலமாகியது. இலங்கையில் புதிய ஜனநாயகக் கட்சியை மையப்படுத்தி பெண்களை, "பெண்ணியத்தின்" பெயரில் சுரண்டிய ஆணாதிக்கம் அம்பலமாகியது. தெரிந்தும், தெரியாது போல் அனுசாரிக்கும் போக்கு கட்சித் தன்மையாகி விடுகின்றது.
அம்பலமாகும் போது எமக்கு தெரியாது என்று கூறுவதும் - நடவடிக்கை என்பது, வர்க்கத்தின் கட்சியாக இருக்கவில்லை என்பது தான் பொருள். குறிப்பாக ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட கட்சியாக அல்லாது அதிகாரத்துவக் கட்சியாக இருந்தது என்பது தான் பொருள். அதேநேரம் சுயவிமர்சனம் இல்லாதிருப்பது என்பதன் பொருள், வர்க்கத்தில் இருந்து தங்களையும் கட்சியையும் விலக்கிவிட்டனர் என்பது தான் பொருள்.
நீண்டகாலமாக கட்சிக்குள் தெரிந்து அனுமதித்த இந்த விடையங்கள், புழுத்துதான் அம்பலமாகின்றது. இதன் பொருள் இது மட்டுமல்ல என்பது தான். இது போன்று அம்பலமாகாது மூடிமறைத்த விடையங்களை உள்ளடக்கிய கட்சியாக, கட்சி வடிவங்களாக, பிளவுகளாக எந்த சுயவிமர்சனமும் இன்றி சீரழிந்த கட்சியாக – கட்சி நபர்களாக நீடிக்கின்றனர். தொடர்ந்து வர்க்கத்தை ஏமாற்ற முனைகின்றனர்.
இங்கு நடந்தது தனிப்பட்ட நபர்களை மையப்படுத்திய சம்பவங்களோ, விடையங்களோ அல்ல. அப்படி குறுக்கிவிடுவதும், குறுக்கிக் காட்டுவதும் சீரழிந்து போன கட்சிகளின், நபர்களின் வர்க்க கண்ணோட்டமற்ற அணுகுமுறையேயாகும். வர்க்கக் கட்சிக்குரிய, வர்க்கங்களுக்கும் முன் சுயவிமர்சனம் செய்யும், கட்சிப் பண்பை இழந்துவிட்டது என்பது தான் பொருள்.
இந்த கட்சிகள் பின்னால் இருக்கக் கூடிய அணிகள், வர்க்கத்துக்காக போராடக் கூடிய சமூக நோக்கோடு நம்பிக்கையோடு இருக்கும் ஒரு எதார்த்தத்தில் - தலைமைகள் இதற்கு எதிர்திசையில் பயணிக்கின்றனர்.
வர்க்கத்தின் கட்சியாகவும், தனிநபராகவும் தங்களை முன்னிறுத்தும் அடிப்படை நேர்மை என்பது, பரந்துபட்ட மக்கள் முன் முழுமையான சுயவிமர்சனம் தான். இதை யாரும் செய்யவுமில்லை, செய்யத் தயாராகவுமில்லை. இதன் பொருள் வர்க்கத்தில் இருந்து விலகி தனிநபராக, கட்சியாக சிந்திப்பது தான்.
புதிய ஜனநாயகக் கட்சியின் மயூரனைக் குற்றஞ்சாட்டும் மொட்டை அறிக்கை
புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை இரண்டு அரசியல் அடிப்படைகளை மூடிமறைத்து பாதுகாக்கின்றது. குறிப்பாக இது கட்சிக் "கொள்கைக்கு" முரணானது என்றால், சமூகத்தின் முன் சரியானதா? இங்கு கட்சி வேறு, மக்கள் வேறா?
கட்சிக் "கொள்கைக்கு" முரணானது என்றால் அந்தக் கொள்கை என்ன என்பதைச் சொல்லி - பெண்களை பொது விழிப்பூட்ட வேண்டும். இதைக் கூட கட்சி செய்யவில்லை என்றால், கட்சியிடம் கற்றுக்கொள்ள என்னதான் இருக்கின்றது. இத்தகைய கட்சிப் பின்னணியில்
1. கட்சியும், கட்சி வடிவங்களும், கட்சி அரசியலும், வர்க்கத் தன்மையும் இத்தகைய பாலியல் நடத்தைக்கு காரணமாக இருந்ததை மூடி மறைக்கின்றது.2. மயூரன் போல் பெண்களும் சம அளவில், இணங்கிய பாலியல் நடத்தையில் ஈடுபட காரணமாக இருந்த ஆணாதிக்க "பெண்ணியக்" கோட்பாட்டை தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றது.
இதுதான், இந்த மொட்டை அறிக்கையின் அரசியல் சாரம்;. தங்;கள் கட்சிக் "கொள்கைக்கு" முரணாக மயூரனின் நடத்தை இருந்தால் கட்சியில் இருந்து வெளியேற்றியது என்றால் ஏன்? அது என்ன கட்சிக் கொள்கை? குறிப்பாக பெண்ணியக் கொள்கை தான் என்ன? இதை தெளிவுபடுத்தாத அறிக்கை, பெண்கள் குறித்து கட்சியில் இருக்கக்கூடிய ஆணாதிக்க கண்ணோட்டத்துக்கு சார்பானது.
கட்சிக் "கொள்கைக்கு" முரணானதென இன்று குற்றஞ்சாட்டும் விடையம், நீண்டகாலமாக தொடர்ந்த விடையம், எந்தப் "பெண்ணியக்" கோட்பாட்டு அடிப்படையில் இவை அங்கீகரிக்கப்பட்டது. இன்று பெண்ணியம் பேசும் எந்த "பெண்ணியக்" கோட்பாடும், இவற்றை இதுவரை விமர்சிக்கவில்லை.
பாலியலில் மட்டுமல்ல, பாலியல் அல்லாத மனித உறவுகளில் கூட, சமூகக் கூறுதான் இயங்குகின்றது. சமூகக் கூறற்ற உறவுகள் சமூகத்தில் நீடிப்பதில்லை. சமூக கூறற்ற உறவுகள் தன்னலம் சார்ந்த உறவுகளாக இருக்கின்றனவே ஒழிய, சமூக உறவாக இருப்பதில்லை.
சமூக அனுபவங்களும், வாழ்வியல் போராட்டங்களும் முன்னோக்கியதாக மாறுகின்ற வாழ்வியல் முறையில், தனக்கான வாழ்வியல் துணையை தேடும் போராட்டங்களும் அடங்கும். இந்தவகையில் தேர்ந்தெடுத்ததே, சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறை. சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கையில், தனக்கான துணையாக அது இல்லாத போது, அதை விட்டு விலகுவது என்ற தேர்வுமுறை இருக்கின்றது. இது திருமணத்தின் பின் விவாகரத்து செய்வது போன்றதே. இந்த வாழ்க்கைமுறை சமூக கூறாகவே இருக்கின்றது. இங்கு இந்த வாழ்வியல் ஆணாதிக்கம் என்ற பாலியல் சுயநலத்துடனானதல்ல.
இருவர் இணைந்த வாழ்க்கையை, சட்டரீதியான திருமண வடிவத்தில் தான் இருக்க முடியும் என்று கருதும் ஆணாதிக்க பார்வை போன்று, திருமணத்துக்கு வெளியில் இருவர் இணைந்து வாழ்கின்ற வாழ்க்கையில் பிரிவு இருக்க முடியாது என்பதும், ஆணாதிக்கமே.
சமூக வாழ்வுக்கான கூட்டுப் பயணம் தோல்வி பெறும் போது, பிரிந்து செல்வது என்பது ஜனநாயக உரிமை. இங்கு வெறும் பாலியலுக்காக இணைவதில்லை. ஆணாதிக்க சமூக அமைப்பு, ஆண் பெண் உறவை தன் பாலியல் "வேட்கை" கண்ணோட்டத்தில் இருந்து, பாலியலாக மட்டுமே கருதுகின்றது. வெறும் பாலியலுக்காக இணைவது நுகர்வு. அதை பணம் கொடுத்தும் - பணம் கொடுக்காமலும் நுகரலாம், ஆனால் இரண்டும் ஒன்று தான்.
வெறும் பாலியலுக்காக இந்த இணைந்து வாழும் முறையை பயன்படுத்துவது, அடிப்படையில்; தன்னலம் சார்ந்து சுயநலமானது. இந்த இடத்தில் அது ஆணாக இருக்க வேண்டியதில்லை பெண்ணாகவும் இருக்கலாம், இத்தகைய உறவு ஆணாதிக்க வைக்கப்பட்டது.
பாலியல் உணர்வு தூண்டப்படக் கூடிய வயதில் இருக்கும் குழந்தைகளின் பாலியல் நடவடிக்கை, சமூகத்தின் பொது ஆணாதிக்க உளவியல் அடிப்படையில் இருப்பதில்லை. அந்த வயதுக்கே உரிய துடிப்புடன், புறவுலகின் தாக்கங்களுக்கு உட்பட்ட பாலியல் நடத்தையில், உள்நோக்கம் இருப்பதில்லை. சிறு வயதுக்கே உரிய, சமூகத்தின் பிரதிபலிப்புடன் கூடிய ஆர்வக்; கோளாறுகளும், உணர்ச்சி தூண்டுதல்களும் தான். இதை தூண்டுவதில் சமூகம் காரணமாக இருக்கின்றது என்பதைத் தாண்டி, அவர்களின் நடத்தையை எந்த வகையிலும் வரையறுக்க முடியாது. அவர் வாக்களிக்க முடியாது, வாகனம் ஓட்ட முடியாது, குற்றவாளியாக்க முடியாது .. என்பது எப்படியோ, அப்படி அவர்களின் வயதுக்குரிய பாலியல் நடவடிக்கையை கொண்டு வந்து பொதுவில் பொருத்த முடியாது. இந்த வயதைக் கடந்தவர்கள் அப்படியல்ல. அவர்கள் எதை, ஏன் செய்கின்;றோம் என்பதை தெரிந்து, விளங்கி, புரிந்து செய்பவர்கள்.
ஆண் - பெண், இருவரும் பரஸ்பரம் உடல் "புனிதம்" குறித்து கொண்டிருக்க கூடிய தூய்மைவாதக் கண்ணோட்டம் என்பது, தனியுடமைவாத தூய்மைவாத சொத்துடமை வாத பாலியல் கண்ணோட்டமே. சொத்துடமைவாத சமூகத்துக்கே உரிய இத்தகைய கண்ணோட்டம் என்பது, ஆண் - பெண் இருபாலாரிடமும் ஆணாதிக்க வடிவில் இருக்கின்றது. இது பாலியல் உறவில் இழிவைக் கற்பிக்கின்றது. வாழ்க்கை அனைத்தையும் உடல் "தூய்மை" சார்ந்த உறவுமுறைக்குள் வரம்பிடுகின்றது. இத்தகைய ஆணாதிக்க சிந்தனைமுறை, அதே ஆணாதிக்கத்தின் எதிர்மறையில் உடலை நுகர்வதை முன்னிறுத்துகின்றது. இது தான் உடல் நுகர்வு கலாச்சாரத்தின் அடித்தளம்;. சமூக உறவற்ற உடல் உறவை கோருகின்றது, முன்னிறுத்துகின்றது.
இந்தப் பின்னணியில் இணங்கிய பாலியல் உறவு (தனிப்பட்ட விவகாரம் - ஒழுக்கம் குறித்த கேள்விக்கு அப்பாற்பட்டது), சமூக உறவுக்கு வெளியில் தொடர்வது குறித்து, கட்சி நிலைப்பாட்டுக்கு முரணாகவில்லையா? பணம் கொடுத்துப் பெறும் இணங்கிய பாலியல் உறவை தனிப்பட்ட விவகாரமாக கட்சி கருதுகின்றதா?
கட்சி என்பது சமூக உறவுகளை மையப்படுத்தும் வர்க்கப் போராட்டம் தான். சமூகத் தன்மையற்ற லும்பன்தனமான எல்லாவகையான உறவுகளையும் எதிர்த்துப் போராடுகின்றது. இதைவிட்ட மற்றதெல்லாம், தனியுடமைவாத கண்ணோட்டம்.
ஆணுக்கு இல்லாத சிறப்புத்தன்மையாக இன்னமும் பெண்களிடம் இருக்கக்கூடிய சமூகப் பண்பை, ஆணுக்கும் சேர்த்து வளர்த்தெடுப்பதே பெண்ணியம். அதாவது பெண்ணின் சமூகப் பண்பை ஆணுக்கு ஏற்படுத்தும் வண்ணம், ஆணாதிக்கத்தை மறுத்து சமூகமயப்படுத்துவது தான். பெண்ணின் சமூக நிலைக்கு ஆணை உயர்த்துவது தான்; பெண்ணியம். வர்க்க அமைப்புக்கே உரியதே பெண்ணியம். வர்க்கமற்ற சமூக அமைப்பில் ஆணாதிக்கம் இல்லாது போய்விடும், அதனால் பெண்ணியமும் இல்லாத போய்விடும். இன்று தமிழ் "பெண்ணியம்" இந்த அடிப்படையில் இருந்து அனுகுவதில்லை என்பதே உண்மை.
கட்சியை நோக்கி வரும் பெண்ணிடம் இருக்கக்கூடிய ஆணாதிக்க சமூகக் கூறுகளை அகற்றவும், ஆணுடன் இணைந்த பெண்ணியமாக உயர்த்தி விடுவதே - வர்க்கக் கட்சியில் பெண்ணிய கண்ணோட்டமாக இருக்க முடியும்;.
பெண்ணை வேட்டையாடக் கூடிய ஆணாதிக்க இடமாக கட்சி இருக்க முடியாது. சமூகத் தன்மை கடந்த லும்பன்தனமான பாலியலுக்கு இணங்கிப் போக வைக்கும் இடத்தில், கட்சி இருக்க முடியாது. மனித உறவிலான சமூகத் தன்மைக்கு உட்பட்டதே ஆண் - பெண் உறவு என்பதே, கட்சியின் பெண்ணியக் கண்ணோட்டமாக இருக்க முடியும்.
இப்படி இருக்க, சமூகத்தன்மை கடந்த லும்பன்தனமான நுகர்வுப் பாலியல் நடத்தை கட்சியில் எப்படி சாத்தியமானது? கட்சி உறுப்பினராக இருந்தவர் இதை தவறல்ல என்று கூறுமளவுக்கு, தன்னை முன்னிறுத்த முடிகின்றது.
கட்சியைச் சேர்ந்த நபர்கள் தன் செல்வாக்கு சார்ந்து, தன் தோழர்களிடம் சலுகை பெற்று வாழ்வது சரியா? கட்சித் தோழர் தொடர்புடைய தோழர் வீட்டு பெண்களை - ஆண்களை, அவர்களின் "இணக்கத்"துடன் பாலியலுக்கு பயன்படுத்துவது சரி என்று கூறுமளவுக்கு, இணக்க "அறம்" பேசுவதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா?. ஆண் - பெண் பாலியல் நெருக்கடி என்பது, இருக்கும் சமூகப் பொருளாதார அமைப்பின் முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்து தான் வெளிப்படுகின்றது. இதை மற்றொரு ஆண் - பெண் பாலியல் உறவு மூலம் அடைவது என்பது, அறமாகாது. இதற்குத் தீர்வாக இருப்பது ஜனநாயக வடிவிலான விவாகரத்தும், புதிய வாழ்வை சமூக வடிவில் உருவாக்கிக் கொள்வதும் தான். பாலியலை வெறும் நுகர்வுப் பொருளாக அணுகுவது, அறமுமல்ல பெண்ணியமுமல்ல, வர்ககக் கண்ணோட்டமுமல்ல.
வர்க்க அரசியல் மற்றும் வர்க்க "பெண்ணியத்தின்" பெயரில் நடந்த இந்தச் சம்பவத்தில், கட்சி நிலைப்பாடு தான் என்ன? "சுதந்திரப்" பாலியல், "நுகர்வுப்" பாலியல், "இணக்கப்" பாலியல் - குறித்த கட்சியின் நிலைப்பாடு தான் என்ன? இதன் மீதான பெண்ணிய அரசியல் என்ன என்பது குறித்தும், கட்சியின் சுயவிமர்சனம் குறித்தும் எதையும் கட்சி முன்வைக்கவில்லை. கட்சியைச் சுற்றி இருந்த பெண்களிடையே முரண்பாட்டையும், ஆணாதிக்க கொசிப்பையுமே, "பெண்ணியத்தின்" பெயரில் கட்சி வழிகாட்டி இருக்கின்றது. பெண்களை முதலில் இருந்து பாலியல் ரீதியாக ஆணாதிக்கத்துக்கு இரையாக்கியதும், அம்பலமான பின், பொது வாழ்விற்கு வந்த பெண்கள் பந்தாடப்படுவதும் அரங்கேறுகின்றது.
மிகத் தெளிவாக இத்தகைய பாலியல் நடத்தை மீதான விமர்சனத்தை - கட்சியின் சுயவிமர்சனத்தை முன்வைக்கும் வர்க்க அரசியல் புதிய ஜனநாயகக் கட்சியிடம் இல்லை என்பது தான் பொருள்.
கட்சியில் சலுகை பெற்றவர்கள், கட்சியைப் பயன்படுத்திக் கொள்ள கட்சி அனுமதித்திருக்கின்றது. கட்சி வர்க்கத்துடன் இணைந்த வர்க்கக் கட்சியாக இருக்காத அதன் தன்மை, சலுகை பெற்ற கட்சித் தலைமையாக மாறுகின்றது. குறிப்பாக குட்டிபூர்சுவா பின்னணியுடன் கட்சி அடையாளம் மூலம், தம்மை அறிவுஜீவிகளாக முன்னிறுத்த முனையும் கூட்டம் - வர்க்கத் தன்மையற்ற கட்சியை பயன்படுத்துகின்றது. இப்படி குழுவாகும் குட்டிபூர்சுவா வர்க்க பின்னணி கொண்டவர்களை, வர்க்கத்துடன் இணைக்கும் கட்சியாக, கட்சியே இருக்கவில்லை. இந்தக் குட்டிபூர்சுவா பின்னணியில் ஆண் - பெண் பூர்சுவா "அறிவுசார்" சந்திப்புக்கு அப்பால், சமூகத்தன்மையற்ற சந்திப்பு இடமாக மாறுகின்றது. பெண்களை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் - அணுகும் ஆண், தன் வேட்டைக்குரிய பெண்ணையும் - அதே ஆணாதிக்க வேட்டைக்கு இணையாக கொண்டு வருவதை மையப்படுத்தி அதைப் "பெண்ணியமாக" போதிக்கின்றனர்;. இதை வர்க்கத் தன்மையற்ற கட்சி, சலுகை பெற்ற நபர்களுக்கு அனுமதிக்கின்றது. பெண்களை "பெண்ணியத்தின்" பெயரில், இணங்க வைத்து நுகர்ந்தமை என்பது, தொடர்ச்சியான நீண்டகாலமாக கட்சிக்கு தெரிந்து அனுமதிக்கப்பட்டது தான்.
சமூக மற்றும் வர்க்க விடுதலையை முன்வைக்கும் கட்சியில், கட்சி உறுப்பினர் ஒருவர் கட்சியை தனது சுயநலனுக்கு பயன்படுத்த விடுவது என்பது, கட்சியின் வர்க்க சீரழிவுடன் தொடர்புபட்டதாக இருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இதனால் தான் கட்சி மௌனம் சாதிக்கின்றது.
தமிழகத்தில் ம.க.இ.க வை மையப்படுத்தி இருந்த கட்சி, தொழிலாளர்களை பயன்படுத்தி 200 கோடி ரூபா ஊழலில் கட்சித் தலைவர் ஒருவர் ஈடுபட்டது அம்பலமாகியது. கட்சி இதை தனக்கு தெரியாது என்றும், தெரிந்தும் மறைத்தது என்றும் குற்றம்சாட்டும் பின்னணியில் - சாதாரண பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரே தமக்குத் தெரியும் என்று கூறுமளவுக்கு - கட்சி வர்க்க கட்சிக்குரிய எல்லா அரசியல் பண்புகளையும் இழந்து இருந்தது. தமிழக முதல் அமைச்சர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொலைக்காட்சியில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிற அதே பாணியில் - வர்க்க கட்சிகளும் தலைவர்களும் தம்மை நியாயப்படுத்துகின்றனர். மயூரன் விவகாரம் கூட பொது வெளியில் எழுப்பப்பட்ட பின் தான் கட்சித் தலைமை தெரிந்து கொண்டது என்ற பாணியில், புதிய ஜனநாயக கட்சியின் நடத்தை - அதன் வர்க்கத் தன்மையற்ற கட்சி சீரழிவைக் காட்டுகின்றது.
ம.க.இ.க, புதிய ஜனநாயக கட்சி ஜனநாயக மத்தியத்துவம், சுயவிமர்சனம் .. என்ற கட்சி அடிப்படைகளை எல்லாம் இழந்து இருப்பதையும், வெளிப்படையான சுயவிமர்சனத்தை செய்யத் தயாரற்ற லும்பன் தலைமைகளாக - தங்கள் சுய இருப்பை தக்கவைக்கும் அரசியல் முரண்பாடுகளை முன்வைக்கின்றனர்.
1960 களில் சண் தலைமையிலான சர்வதேசிய வர்க்க கண்ணோட்டத்திலான பிளவுடன் தோன்றிய கட்சியில் இருந்து, புதிய ஜனநாயகக் கட்சி 1970 களில் புதிய பிளவுடன் உருவானது. 1960 களில் சண் தலைமையிலான கட்சி தன்னை வர்க்கக் கட்சியாக முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி பல்வேறு போர்க்குணாம்சம் கொண்ட போராட்டங்களை நடத்திய போதும், வர்க்கத்தின் கட்சியாக இருக்கவில்லை. கொள்கை அளவில் வர்க்க கட்சியாகவும், நடைமுறையில் பூர்சுவா ஜனநாயகப் போராட்டங்களுக்குள் முடங்கியது.
சமூக முரண்பாடுகள் மீது வர்க்கக் கட்சியாக இருப்பதற்கு பதில், வரம்புக்கு உட்பட்ட ஜனநாயகப் போராட்டங்களுக்குள் முடங்கி, 1970 களில் சிதையத் தொடங்கியது. இப்படி சிதைவில் இருந்து தோன்றிய புதிய ஜனநாயகக் கட்சி, 1960 களில் கட்சி கொண்டிருந்த போர்க்குணாம்சங்களை இழந்து - வெறும் கோட்பாட்டு வாதக் கட்சியாக மாறியது.
கட்சி பின்னணியில் அங்குமிங்குமாக நடந்த தன்னியல்பான ஜனநாயகப் போராட்டங்களை கடந்து, செயலற்ற கோட்பாட்டுவாத கட்சியாக, சுய இருப்பை தக்க வைக்கும் கட்சி என்ற வரம்புக்குள் முடங்கியது. 1980 களில் தமிழினவாதப் போராட்டங்கள் கூர்மையடைந்த போது, வர்க்க நிலைப்பாட்டை முன்வைத்து ஒடுக்கப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து செயற்படவில்லை. அதேநேரம் சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி குட்டி முதலாளித்துவ இயக்கம் நடத்திய இரு ஆயுதப் போராட்டங்கள் நடந்த காலத்திலும், புதிய ஜனநாயகக் கட்சி பெயரளவில் முடங்கிக் கிடந்தது. என்றைக்கும் வர்க்கக் கட்சிக்குரிய வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கவும் இல்லை, அதை சுயவிமர்சனம் செய்யவுமில்லை.
தமிழினவாத பயங்கரவாதமும், பேரினவாத பயங்கரவாதமும் கூர்மையாகி இருந்த எந்தக் காலத்திலும் பதிய ஜனநாயகக் கட்சி, மக்களுடன் போராடியதில்லை. போராடாதிருந்ததில் எந்த விதத்திலும் முரண்பாடுகளும், பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை.
இந்தக் கட்சியின் வரலாற்றுப் பின்னணியிலேயே பெண் வேட்டையை, ஆணாதிக்கத்தால் "பெண்ணியத்தின்" பெயரில் இலகுவாக - நீண்டகாலம் செய்ய முடிந்தது.
ஆணாதிக்க "பெண்ணியமும்" பெண்ணியமும்
ஒடுக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட பெண்களை மையப்படுத்தாத, பூர்சுவா "பெண்ணியத்தின்" பாலியல் நடத்தையும் - அதையொட்டிய கண்ணோட்டங்களும் எதிரும் புதிருமான "பெண்ணிய" வாதங்களையே இன்று முன்வைக்கின்றனர். புதிய ஜனநாயகக் கட்சியுடன் இருந்த மேட்டுக்குடி சீமான்களும் - சீமாட்டிகளும் தங்கள் சுயாதீனமான பாலியல் நடத்தையை "பெண்ணியமாக", மனிதனின் "சுதந்திரமான" நடத்தையாக முன்னிறுத்தத் தயங்காத பின்னணியில் - கட்சியின் மௌனம் என்பது இந்தப் பூர்சுவா "பெண்ணிய" ஆணாதிக்க நிலைப்பாட்டை அனுசரித்து போவதுதான்.
கட்சி மற்றும் கட்சிக்கு வெளியில் இருக்கும் பூர்சுவா "பெண்ணியல்" வாதிகளின் ("பெண்ணியம்" பேசும் ஆண் உள்ளடங்க) மூன்று முனைகளில் முரண்படுகின்றனர்.
1. சமூகத் தன்மையற்ற இணங்கிய கட்டற்ற நுகர்வுப் பாலியலை "பெண்ணியமாக" முன்வைத்து முரண்படுகின்றது.
2. இணங்கிய கட்டற்ற பாலியல் உறவுக்கு தம்மை தயார்படுத்தி ஏமாற்றப்பட்டதை ஆணாதிக்கமாக உணர்ந்ததன் அடிப்படையில் "பெண்ணிய" கண்ணோட்டத்தை முன்வைக்கின்றனர்.
3. முதல் இரண்டு வகையானதையும் "பெண்ணியமாக" வரையறுக்கும், மையவாத "பெண்ணியம்" முன்வைக்கப்படுகின்றது. பெண்ணியவாதிகள் தமக்குள் முரண்படுவதை கைவிடுமாறு, "பெண்ணியத்துக்காக" கட்டைப் பஞ்சாயத்தை செய்துகொள்ளுமாறு நடுநிலை "பெண்ணியம்" கோருகின்றது.
நடந்த சம்பவம் குறித்து (தனிப்பட்ட சம்பவங்களையோ, பெயர்களையோ அல்ல), ஒடுக்கப்பட்ட பெண்ணிய கண்ணோட்டத்தை முன்வைக்க முடியாது, சுற்றிச் சுழன்று பூர்சுவா "பெண்ணியத்திற்;கு" ஏற்ப வெளிப்படையாக எதையும் பேசாது பேசுகின்றனர்.
இந்த பூர்சுவா "பெண்ணியத்தின்" அடிப்படையாக இருப்பது, பெண்ணின் "சுதந்திரமான" முடிவு. அதை கேள்விக்கு உட்படுத்த முடியாது. பெண்ணின் "சுதந்திரம்" என்பது, அவளின் பாலியல் தேர்வும் ஆணாதிக்கத்துக்கு எதிரானது என்ற பூர்சுவா "பெண்ணிய" நிலைப்பாடும் இதற்கான அடிப்படையாகும். "பெண்ணின் முடிவு எடுக்கும் சுதந்திரம்" என்பது சமூகப் பொருளாதார அடிப்படைக்கு அப்பாற்பட்ட, பெண்ணின் "முடிவாக – புனிதமாக" வரையறுக்கின்றது இந்த பூர்சுவா "பெண்ணியம்".
பெண் முடிவெடுக்கும் "சுதந்திரம், ஆண் முடிவெடுக்கும் "சுதந்திரத்துக்கு" நிகரானது. ஆணாதிக்க அமைப்பில் ஆணின் ஆணாதிக்க முடிவுகளை, பெண் எடுக்கும் சுதந்திரமாக, ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பு வழங்குகின்றது அல்லது அதைத்தான் பெண் கோருகின்றாள், பெறுகின்றாள்.
பெண் முடிவெடுக்கும் சுதந்திரத்தை ஆணாதிக்கம் மறுப்பதற்கு எதிரான போராட்டமும், முடிவெடுக்கும் சுதந்திரத்தை ஆணாதிக்கம் பெண்ணுக்கு வழங்கும் போது (சமூகம் ஆணாதிக்க அமைப்பு), அதை ஆணாதிக்கம் தனக்கு ஏற்ப வழங்குகின்றது அல்லது அதை பெண் எடுத்துக் கொள்கின்றாள். இதன் பொருள் ஆணாதிக்க அமைப்பைக் கடந்தல்ல. இங்கு ஆணின் பாலியல் சுதந்திரத்துக்கு ஏற்ப பெண்ணின் பாலியல் சுதந்திரம் என்பது, ஆணாதிக்க பாலியலுக்கான அதே அடிப்படையும் அதே கண்ணோட்டமுமே. இங்கு ஆணை வர்க்க அடிப்படையிலான பெண்ணிய நிலைக்கு கொண்டு வருவதில்லை, ஆணின் நிலைக்கு பெண் நகர்த்தப்படுகின்றாள். வர்க்கக் கண்ணோட்டமற்ற இடத்தில், பெண்ணியம் இருக்க முடியாது.
மனிதனின் சமூக உறவிலான சமூகத் தன்மைக்கு உட்பட்டதே, தனிப்பட்ட ஆண் - பெண் உறவு. அதாவது ஜனநாயகம், சுதந்திரம் சமூகத்திற்கானதாகவும், அதில் தனிமனித ஜனநாயகம் சுதந்திரமும் எப்படியோ, அப்படி தான் தனிமனித மனித உறவுகளும்.
இல்லை ஜனநாயகம், சுதந்திரம் என்பது சமூகம் பற்றியதல்ல, தனிமனிதனுக்கு என்ற தனியுடமைவாதக் கோட்பாடு, சமூகம் கடந்த தனிமனித சுதந்திரம் ஜனநாயகம், தான் அல்லாத சமூக மனிதர்களை ஒடுக்குகின்றது.
தனிமனித சுதந்திரமும் ஜனநாயகமும் கட்டமைக்கும் லும்பன்தனமான நுகர்வுச் சமூகம், தன் வரைமுறையற்ற கட்டற்ற நுகர்வு சார்ந்து - பாலியலில் கட்டற்ற உறவை முன்வைக்கின்றது. இந்த நுகர்வுப் பாலியல் நடத்தை தனியுடமை சார்ந்து இன்று இருக்கின்றது. இத்தகைய நுகர்வுப் பண்பாட்டை எதிர்க்கின்ற ஜனநாயகக் கூறு சார்ந்து முரண்கூறு தனியுடமைவாதப் "பெண்ணியமாக" இருக்கின்றது. அடிப்படையில் "பெண்ணியத்தின்" பெயரில் ஆணாதிக்கமே.
இங்கு இருக்கக்கூடிய ஜனநாயகக் கூறுகளுடன், வர்க்கப் பெண்ணியத்தை முன்வைக்க வேண்டியது அவசியம். ஆணாதிக்கமானது வர்க்கத்தின் கூறு என்பதால், பெண்ணியம் என்பது வர்க்க அடிப்படையிலானது. ஆணாதிக்கம் என்பது தனியுடமைவாதத்தில் இருந்து தோன்றியது என்பதால், தனியுடமைவாத "பெண்ணியம்" அதாவது பூர்சுவா "பெண்ணியமும்" ஆணாதிக்கமே.
வர்க்க சமூகத்தின் விளைபொருளான ஆணாதிக்கத்தை பெண்ணியம் எதிர்த்து போராடுவதன் பொருள், வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குவதே. அதாவது வர்க்க ஆணாதிக்கத்தை ஓழித்தல். இதன் ஆலம் வர்க்கமற்ற சமூகத்தில் ஆணாதிக்கமும் இருக்காது பெண்ணியமும் இருக்காது.
இன்று நடக்கும் பாலியல் சார்ந்த விவாதங்கள், ஆண் சார்ந்த ஆணாதிக்க கொசிப்புகள் அனைத்தும், இந்த தனியுடமைவாத "பெண்ணிய" ஆணாதிக்கத்துக்குள்ளேயே முரண்படுகின்றனர்;. குறித்த ஆணின் இணங்கிய பாலியல் நடத்தையை தங்கள் மீதான ஆணாதிக்கமாக உணர்ந்த பெண்கள் ஒருபுறம். இதை மறுக்கும் பெண்கள் தொடர்ந்தும் தங்கள் தரப்பை "பெண்ணியமாக" முன்னிறுத்துகின்றனர்;. இத்தகைய பாலியலில் ஈடுபட்ட ஆண்கள் தங்கள் ஆணாதிக்க நடத்தையை "பெண்ணியமாக" முன்வைப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை இலக்கு வைத்து, அவளின் "நடத்தையாக" குற்றஞ்சாட்டி தனிமைப்படுத்துகின்றனர். இதன் பொருள் எந்தப் பெண்ணும், தம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது என்பது தான்;. கடந்த சில பத்தாண்டுகளாக இது அரங்கேறி வருகின்றது.
இணக்கமான பாலியல் சுதந்திரக் கண்ணோட்டத்தில், சமூக அறம் என்பது அற்பத்தனமாகின்றது. ஆணாதிக்க பாலியல் கண்ணோட்டத்தில் பெண்ணை அணுகாமல், பெண்கள் தாமாக தம்மை பாலியலுக்கு பலியாக்கி இருக்க முடியாது. இதை மீறி பெண் தானாக பாலியல் நடத்தைக்கு ஆணை அணுகினால், ஆண் அதை மறுதளிப்பதே பெண்ணியம். இல்லாத சூழலில் அது ஆணாதிக்கப் பாலியலே. கட்சியின் சமூக அறம் என்பது மனிதனை மனிதனாக மதித்தலே, ஒழிய, அதைப் பயன்படுத்துதல் அல்ல. இப்படி பலியாக்கப்படும் பெண்கள், வர்க்க ரீதியான நுகர்வுக் கலாச்சாரத்தில் பலியாகிக் கிடப்பவர்களே. நுகர் பொருளைப் போல், பெண் உடலும் பாலியலும் நுகர்வுப் பொருள் தான். இதுதான் சந்தைக் கலச்சாரம். இது ஜனநாயகத் தேர்வு - விருப்பம், சுதந்திரம் என்ற, சந்தை விதிக்குள் இயங்குகின்றது.
வர்க்க ரீதியாக மேலே இருக்கும் ஆண்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் மூலம் அணுகவே முடியாது. அங்கு வர்க்க அடிப்படையில், பெண் இயல்பாகவே சமூக பெண்ணியக் கூறு கொண்டு, இதற்கு எதிராக போராடுகின்றது.
பூர்சுவா வர்க்க பின்னணியில் - விதவிதமாக நுகரும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பாலியகும் நுகர்வுப் பண்டமே, சமூக கூறயற்ற இணங்கிய பாலியல். பெண்ணை நுகர்வதற்கு ஆணாதிக்க நுகர்வுப் பண்பாட்டுக்கு ஏற்ப, பெண் "சுதந்திரம் - ஜனநாயகம்" சொற்றொடர்கள் மூலம் பதப்படுத்தப்படுகின்றாள். இதற்கு "பெண்ணிய" முலாம் பூசப்படுகின்றது. பல வடிவங்களில் "பெண்ணியம்" மூலம் ஆண்கள் பெண்களை தமக்கு பலியாடாக்குகின்றனர்.
சாதாரணமாக இருவர் சேர்ந்து இருக்கக்கூடிய இடத்தில் முரண்பாடு இருக்கும்;, அதுவே குடும்பத்தில் இருக்கும். குடும்ப முரண்பாடுகளை பாலியல் வேட்டைக்கு பயன்படுத்துகின்ற வக்கிரம் "பெண்ணிய" போர்வையில் புழுத்துக் கிடக்கின்றது. வர்க்கத்துடன் தொடர்பற்ற அரசியல், இலக்கியத்தை தன் தனிப்பட்ட சுயநலனுக்காக பேசுகின்ற கூட்டம், இப்படி இணங்கிய பெண் வேட்டையில் "பெண்ணியத்தை" முன்னிறுத்தி இயங்குகின்றது. புலம்பெயர் இலக்கியத்தின் பின்னால், இத்தகைய பெண் வேட்டை என்பது - குறிப்பாக ஆண்களில் பலர் இதை இலக்காகக் கொண்டு பெண்ணியம் பேசினர்.
சமூகம் சார்ந்து வர்க்கத்தை முன்னிறுத்தி இலங்கை - புலம்பெயர் அரசியல் இலக்கியம் மீதான விமர்சனத்தை முன்வைத்த போது, இதற்குள் நடந்த ஆணாதிக்க பெண் வேட்டை குறித்தும் கடந்தகாலத்தில் பேசிய போது யாரும் அதை அலட்டிக் கொள்ளாது - பெண் வேட்டைக்கு உதவினர். பெண்கள் சந்திப்பு ஆண் வேட்டைக்கு எதிராக எதையும் முன்வைக்காது "பெண்ணியம்" பேசியது, உதவியது. இலக்கியம், அரசியல், பெண்ணியம் .. ஒடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை முன்னிறுத்தியதுமில்லை, அதற்காக நடைமுறையில் இயங்கியதுமில்லை. அந்த அரசியலை வெறுத்து, ஒடுக்கும் அரசியலையே முன்னிறுத்தியது - இன்றும் முன்னிறுத்துகின்றது.
பெண்ணியம் என்பது வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது. அது சமூகத் தன்மை கொண்டது. சமூகத்தின் சுதந்திரம், ஜனநாயகத்தைக் கடந்த பெண்ணியம் என்பது, ஆணின் அதே ஆணாதிக்கமே. அதை பெண் அனுபவிக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு மறுக்க முடியாது என்பதால், அது பெண்ணியமாகி விடாது. அதுவும் ஆணாதிக்கமே. பெண்ணுக்கு மறுக்கப்பட்டது பெண்ணுக்கு கிடைப்பதால், அது பெண்ணியமாகிவிடுவதில்லை. இணங்கிய பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கு, ஆணாதிக்கத்தில் இருந்து விதிவிலக்கா என்ன!? அதுவும் ஆணிண் ஆணாதிக்கத்துக்கு நிகரானதே. இதையே பூர்சுவா "பெண்ணியம்" மறுத்து, தங்கள் ஆணாதிக்க நடத்தையை "பெண்ணியம்" என்கின்றது.
புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode