பெண்ணினது பாலியல் சுதந்திரமே "பெண்ணியம்" என்று கூறக் கூடிய "பெண்ணியக்" கோட்பாடுகள் இருக்கின்றது. கட்டற்ற பாலியல் சுதந்திரம், காதல் செய்யும் சுதந்திரம். உட்பட அனைத்தையும், ஆணுக்கு நிகராக பெண் பெற்றுவிடுவதால் அது "பெண்ணியமாகி" விடாது. ஆணாதிக்கமானது ஆணுக்கு ஏற்றாற் போல் பெண்ணையும் தகவமைத்துக் கொண்டு இயங்கக் கூடியது. தனிச்சொத்துடமையிலான ஆணாதிக்கமானது, பெணணியப் பெயரிலும் நீடிக்கக் கூடியது.
இப்படிப்பட்ட ஆணாதிக்க வர்க்கப் பின்னணியில் ஆணுக்கு ஏற்புடையதாய், ஆண் நுகர விரும்புவது போல் பெண்ணும் பாலியல் சுதந்திரத்தினூடு பண்டமாக மாறுவது தான், "பெண்ணியப்" போராட்டம் என்று கூறக் கூடிய "பெண்ணியமானது", தனியுடைமைவாத ஆணாதிக்கப் "பெண்ணியமாகும்". அதாவது முதலாளித்துவ ஜனநாயகம்; வழங்கும் "பெண்ணியமாகும்." தனியுடமையை ஆதரிக்கின்ற இத்தகைய "பெண்ணியம்", தனியுடமைவாத ஆணாதிக்க கோட்பாடுகளை - நடைமுறைகளையும் முன்வைக்கின்றது. இத்தகைய "பெண்ணியத்தின்" பாலியல் கண்ணோட்டம் என்பது, நுகர்வாக்க சமூக கண்ணோட்டத்துக்கு முரணாக இருப்பதில்லை. அதாவது தனியுடமைக் கண்ணோட்டத்தில் பாலியலும் நுகர்வுப் பொருள் (பண்டம்) தான். தனியுடமைக்கு எதிராக அரசியல் - இலக்கியத்தை முன்வைத்து செயற்படாதவர்களின் பாலியல் கண்ணோட்டம் என்பது, பாலியலில் நுகர்வாக்கத்தை எதிர்க்காத இணக்கமான "ஜனநாயகக்" கண்ணோட்டம் தான்.
இலங்கை தமிழ் சமூகத்தில் "பெண்ணியம்" பேசுகின்றவர்கள், தனியுடமையிலான ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணியத்தை முன்வைப்பதில்லை. அவர்களின் "பெண்ணியம்" என்பது தனியுடமையிலானது. அதாவது முதலாளித்துவ ஜனநாயக "பெண்ணியமே". இலங்கை தமிழ் சூழலில் வர்க்க நடைமுறைக் கண்ணோட்டம் கொண்ட "இடதுசாரியம்" இல்லாத பின்புலத்தில், "இடதுசாரியம்" கொண்டிருக்கக்கூடிய இடதுசாரிய பெண்ணியம் கூட முதலாளித்துவ "பெண்ணியமே". கோட்பாட்டு அடிப்படையில் வர்க்கக் கட்சியாக தன்னை முன்னிறுத்தும் புதிய ஜனநாயகக் கட்சி, நடைமுறையில் வர்க்கக் கட்சியாக வர்க்கங்களை அணிதிரட்டுவதில்லை. இந்தப் வர்க்கப் பின்புலத்தில் இருந்து தான், "பெண்ணியத்தை" பாலியல் வேட்டைக்கு பயன்படுத்த முடிந்தது. புதிய ஜனநாயகக் கட்சி வரக்கக் கட்சியாக நடைமுறையில் இல்லாவிட்டாலும், கணிசமான ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பும் கட்சியாக இன்னமும் இருக்கின்றது. (புதிய ஜனநாயகக் கட்சியை, தனியாக விரிவாக பார்க்க இருக்கின்றோம்)
தமிழ் சமூகத்தில், சமூகம் நோக்கி வரும் பெண்ணுக்கு சாதகமான புரட்சிகர புறநிலையில்லை. சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொடுக்கவும், பெண்ணியத்தை வளர்த்தெடுக்கவுமான, சமூகவுடமைக் கண்ணோட்டம் கொண்ட பெண்ணியம் இல்லை. தனியுடமைவாத "பெண்ணியமும்" பெண்ணிய வழிமுறைகளும் இருந்தது, இருக்கின்றது. இங்கு பெண்ணை இணங்க வைக்கும் ஆண்களுக்கு இசைந்த நுகர்வுப் பாலியல் வேட்டையே "பெண்ணியமாக" கருதப்பட்டது. அதாவது பெண்ணை பாலியல் பண்டமாக்கும் தனியுடமைவாத "பெண்ணியமே", பெண்ணின் தற்காப்பு உணர்வை உடைத்தது.
இதனாலேயே சமூகம் நோக்கி வந்த பெண்கள், சமூகத்தை விளங்கிக் கொள்வது என்பது இலகுவானதாக இருக்கவில்லை. பெண் தனியுடமைக்குள் தன்னைத் தான் உணர்தல் மூலம், தன் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுபட முடிவதில்லை. ஆணாதிக்கப் புதைகுழிகள் இடைவிடாது "பெண்ணியத்தில்" பெயரில் தோன்றி, அவர்களை தனியுடமைவாத "பெண்ணியம்" மூலம் சுரண்டியது, சுரண்டுகின்றது.
பெண் தன்னளவில் தான் விடுதலை பெற்றுவிட்டதாக நம்பும் பெண்ணின் கற்பனைக்குள், ஆணாதிக்கம் இயங்குகின்றது. பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கு துணைபோகின்றது.
வர்க்கக் கண்ணோட்டமற்ற முதலாளித்துவ ஜனநாயக கற்பனைக்கு "பெண்ணியம்" ஆணாதிக்கமாக குறுகி விடுகின்றது. இதற்கு அப்பால் ஆணுக்கு கீழானாவள் பெண் என்று கருதும் தனியுடமையிலான ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் சமவுரிமைக்காக எல்லா விடையத்திலும் தொடர்ந்து போராட வேண்டியிருக்கின்றது. அதேநேரம் ஆணாதிக்க தனியுடமைவாத அமைப்பு ஆணுக்கு சலுகைகளையும், பெண்ணுக்கு சுமைகளையும் கொடுக்கின்றது.
இந்த பின்னணியில் பெண்ணின் சமவுரிமைக்கான போராட்டமும், தன் மீதான சுமைகளில் இருந்து விடுபடுவதற்கான சுதந்திரமான வாழ்க்கைத் தேர்வை, தனியுடமைக்கு வெளியில் காண மறுக்கும் போது, பெண் பாலியல் பண்டமாக்கப்படுகின்றாள்.
இதன் பொருள் பெண்ணின் சுதந்திரமான உணர்வையும் - வாழ்வையும், ஆண் தனக்கான பாலியல் வேட்டைக்கான ஒன்றாக மாற்றுகின்றான். தனியுடைமையிலான நுகர்வாக்க சமூகத்தில், சுதந்திரமான பெண்ணின் முடிவுகளை தனதாக்கிக் கொள்ளும், பாலியல் சுதந்திரத்தையே முன்வைக்கின்றது.
பெண்ணின் போராட்டம் என்பது சமூகத் தன்மை பெற்ற பெண்ணியமாக இல்லாத எல்லா சந்தர்ப்பத்திலும், பெண் தன்னை விடுவிக்கும் முதலாளித்துவ தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் போது, ஆணாதிக்கமும் அதே வழியில் தனக்கு இரையாக்குகின்றது.
பெண்ணின் பாலியல் சுதந்திரம் ஆணாதிக்க தனியுடமை சமூக அமைப்பில் பெண்ணுக்கு இருப்பதில்லை. இதில் இருந்து விடுபடும் போராட்டம் என்பது, பெண் தான் விரும்பிய பாலியல் தேர்வை செய்யும் உரிமையானது, மறுதளத்தில் பெரும்பாலும் ஆணினுடையதே. அந்த ஆண் ஆணாதிக்க பாலியல் கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்;தவனாக இருப்பதை, பெண் உறுதி செய்வதற்கான சமூக அடிப்படை என்பது, சமூகத்தன்மை கொண்ட இயக்கத்தில் சாத்தியம். தனியுடமைவாதக் கண்ணோட்டத்தில் பாலியல் என்பது சுயநலம் தான். அடிப்படையில் அது தனியுடமைவாத ஆணாதிக்கம் தான். சமூக தன்மைக்கான வாழ்வுக்கான போராட்டத்திலும் - நடைமுறையில் இணைந்து பயணிப்பதிலும் தான், ஆணாதிக்கமற்ற பாலியல் என்பது, உண்மையாக இருக்க முடியும்.
இப்படி சமூகம் சார்ந்ததே பெண்ணியமாக இருக்க, வெறும் வார்த்தைகளையம், "பெண்ணியம்" குறித்த கதையாடல்களையும் கொண்டு பெண்ணை பாலியலுக்கு இணங்க வைப்பதன் மூலம் நடக்கும் பாலியல் என்பது ஆணாதிக்கமே. "பெண்ணியத்தின்" பெயரிலான நுகர்வாக்க மோசடி. குறிப்பாக சமூகம் கடந்து பாலியலுக்காக இணைகின்ற சுதந்திரம் என்பது, "பெண்ணியமோ" பெண் சுதந்திரமோ அல்ல. இங்கு நுகர்வு வக்கிரமே அரங்கேறுகின்றது. ஆணாதிக்க ஆண் போல், ஆணாதிக்க பெண் என்பதைத் தாண்டி, இதில் எதுவுமில்லை.
இந்தகைய பாலியல் சுதந்திரம் என்பது, கட்டற்ற நுகர்வாக்க சமூகத்தில் கட்டற்ற பாலியல் கோட்பாடாகும். அதை "பெண்ணியத்தின்" பெயரில் ஆணாதிக்க ஆண்களும் பெண்களும் முன்வைக்கின்றனர். இதனால் தான் நடந்தை எவரும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. எப்படி பொருட்களை கட்டற்ற வகையில் விதவிதமாக வரையமுறையின்றி நுகர்வதும் அதில் திருப்தியடையாது புதியவைகளை நாடுகின்ற நிலையோ, அதுவே பாலியலுக்கும் ஏற்படுகின்றது. பொருளாதார சமூக அமைப்பாக எது இருக்கின்றதோ, அது பாலியலில் பிரதிபலிகின்றது. "பெண்ணிய" சிந்தனையிலும், கோட்பாட்டிலும் வெளிவருகின்றது.
இணக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த முடியாத "ஜனநாயகமாக" முன்னிறுத்தும் தனியுடமைவாத சிந்தனைமுறையில், "திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று கூறவும், பாலியலை நுகரவும் - சுரண்டவும் முடிகின்றது. இதுதான் "பெண்ணியம்" பேசும் பெண்களினதும், இணங்கிய பாலியலில் ஈடுபட்ட பெண்களினதும் நிலை கூட. "இணக்கத்தில்" என்பதில் அவர்களால் ஆணாதிக்கம் இருப்பதைக் காணமுடிவதில்லை. பெண் முடிவு எடுப்பதை "பெண்ணியமாக" குறுக்கும் ஆணாதிக்க அளவீடுகள் இவை.
பாலியலில் உள்ள சமூகத் தன்மையும் - இயற்கைக் கூறுகளையும் இழந்த, பாலியலை நுகர்வு பண்டமாக - நுகர்வை "பெண்ணிய" உணர்வாக சமூக பொருளாதார தனியுடமைவாத கண்ணோட்டம் உருவாக்குகின்றது. பெண் உடல் என்பது பாலியல் நுகர்வுக்கு ஏற்ற பொருள் (பண்டம்) என்ற கண்ணோட்டம், நுகர்வதை இலக்காக்குகின்றது. சமூகத்தன்மை என்பது "பெண்ணியத்துக்கும் - சுதந்திரத்துக்கும்" எதிரானதாக முதலாளித்துவ "பெண்ணியம்" கருதுகின்றது. இதற்கு மாறாக தனியுடமைவாதமானது எல்லையற்ற வேட்கை, திருப்தியற்ற பாலியல் வேட்கையாக மாறி, தனக்கென்று பாலியல் கோட்பாட்டை உருவாக்குகின்றது.
இதற்கு இணங்கிய பாலியல் நடத்தை தேவைப்படுகின்றது. பணம் கொடுத்து வாங்கும் பாலியல் நடத்தைக்கு நிகராக, நுகர்வு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இணக்கமான நுகர்வுக்கான பாலியல் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கட்டற்ற பாலியல் கோட்பாட்டை உருவாக்குகின்றது. அண்மைய சம்பவத்தின் பின்னணியில் இதையே காண முடியும்.
"குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா"!?
"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு.." இருக்க முடியுமா?
போலிப் பெண்ணியல் வாதிகளும் "பெண்ணியம்" பேசும் மயூரனும்
"பெண்ணியம்" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது!?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode