மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட "இனக் கலவரங்கள்", திட்டமிட்ட இனவழிப்பிலான குடியேற்றங்கள், மத ரீதியாக பிரதேசங்களை ஆக்கிரமித்தல், படைத்தளங்களைக் கொண்டு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமித்தல் தொல்பொருள் (புராதன) எச்சங்களின் (புனித பிரதேசங்கள்) பெயரில் பிரதேசங்கள் மீதான இன-மத ஆக்கிரமிப்புகள், நூலக எரிப்புகள், கூட்டு ஒப்பந்தங்களை கிழித்தல், மனித உயிர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பெடுக்க மறுத்தல், இன-மத ரீதியான வாக்களிப்பை தூண்டுதல், சட்டம் ஒழுங்கில் இனரீதியான பாகுபாடுகள், வேலைவாய்ப்பில் இன ரீதியான சலுகைகள், இன-மத ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் … இப்படி எங்குமான இன-மத ஓடுக்குமுறைக்குப் பின்னால், காரணகாரியங்கள் இருப்பதை காணமுடியும்.
2009 இல் யுத்தம் முடிந்த பின், எப்படி இனவொடுக்குமுறை தொடருகின்றது என்பதை அடையாளப்படுத்த முடிவதில்லை. உதிரிச் சம்பவங்களைக் கொண்டும், உணர்ச்சிகரமாக பொங்குகின்றதைத் தாண்டி, இனவொடுக்குமுறையை அரசியல்ரீதியாக விளக்கவோ, முன்வைக்கவோ முடிவதில்லை. கிணற்றுத் தவளைகள் போல் புலி விட்டுச் சென்ற வட்டத்துக்குள் நின்று குலைக்க முடிகின்றதே ஒழிய, இன்றைய இனவொடுக்குமுறையில் இருந்து பேசமுடிவதில்லை.
இதற்கான அடிப்படைக் காரணம் இனவொடுக்குமுறையை சம்பவங்கள் மூலம், அதன் விளைவுகளைக் கொண்டு விளங்கியதே காரணமாகும். இதனால் இன்று இனவொடுக்குமுறையை காணமுடியாமல், காட்டமுடியாமல் போகின்றது.
இனவொடுக்குமுறை என்பது காரணங்களாலானது. சாதியைப் போல் இனப் பிறப்பைக் கொண்டு விளக்கிவிட முடியாது. காரிய காரணங்களின்றி இனவொடுக்குமுறையைக் காண்பது, காட்டுவது, இன வெறுப்பாக - இனவாதமாகவே பரிணமிக்கின்றது. காரிய காரணங்கள் இனவொடுக்குமுறையாக இருப்பதை மறுப்பது அல்லது விளங்கிக் கொள்ளாமல் இருத்தல் என்பது, இனவொடுக்குமுறைச் சம்பவங்கள் இல்லாத போது ஒடுக்குமுறையை விளக்க முடிவதில்லை. இதுதான் இன்றைய அரசியல் நிலைமை. இனவொடுக்குமுறையானது எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடருகின்ற போதும், அதை காட்டவும் - விளக்கவும் முடிவதில்லை. எங்கே இன்று இனவொடுக்குமுறை உள்ளது என்ற கேள்விக்கு, பதில் சொல்ல முடிவதில்லை. இன்று சாதி எங்கே இருக்கின்றது என்று கேட்கின்ற வெள்ளாளியத்தின் அரசியல் பரிணாமம் போல் - இனவொடுக்குமுறை எங்கே எப்படி நடக்கின்றது என்று கேட்கின்ற அளவுக்கு, இனவொடுக்குமுறையானது சூக்குமமாக இயங்குகின்றது.
இனவொடுக்குமுறை என்பது காரணகாரியமின்றி நிகழ்வதில்லை. காரணகாரியம் இருக்கும் வரை இனவொடுக்குமுறை என்பது மறைமுகமாக இயங்குகின்றது. காரணத்தைக் கண்டுபிடிக்காத சமூகம், தன் மீதான ஒடுக்குமுறை சூக்குமமான வடிவில் இருப்பதை உணரவே முடியாது.
உதாரணமாக மருத்துவத்தில் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் வழங்குவது போல், சமூகப் பிரச்சனைகளில் அதற்கான காரணத்தை கண்டடைந்தால் மாத்திரமே, சரியான போராட்டத்தையும் - தீர்வையும் கண்டடைய முடியும்;. மருத்துவத்தில் செய்வதை போல் நாம் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை அறிய மறுக்கும் போது, எதிர் இனவாதமாக மாறுகின்றது. இனவொடுக்குமுறைக்கான காரணகாரிய வேரைக் கண்டறிவோம்.
இலங்கையை ஆண்ட காலனியவாதிகள் 1948 இல் அரசியல் அதிகாரத்தை தங்கள் கறுப்பு அடிமைகளிடம் கைமாற்ற முன்னமே, இலங்கையில் இன-மத ஓடுக்குமுறையைக் கையாண்டவர்கள். அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? அதேநேரம் காலனியவாதிகள் தங்கள் கறுப்பு அடிமைகளைக் கொண்டும், இன-மத ஒடுக்குமுறையை தூண்டினர். இதன் பின் இருந்த நோக்கம் என்ன? இவற்றுக்கு நாம் பதில் கொடுத்தாக வேண்டும்;.
1948 க்குப் பின்பான காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட கறுப்பு அடிமைகள், தாங்கள் ஆளும் அதிகாரத்தையே "சுதந்திரம்" என்றனர். அதேநேரம் காலனியவாதிகள் தங்கள தேவைக்காக் பயன்படுத்திய இன-மத ஒடுக்குமுறையை தொடர்ந்ததுடன், ஆட்சி அதிகாரத்தை பெறவும் - அதைத் தக்க வைக்கவும், இன-மத ஒடுக்குமுறையைத் தூண்டினர். வாக்குகள், அதிகாரத்துக்கான படிகற்கள் என்பதால், இன-மத ரீதியான வாக்குகளைப் பெற இன-மத ஒடுக்குமுறையைத் தூண்டினர். இதன் மூலம் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக, மக்கள் அணிதிரள்வதை பிரிக்கவும் - பிளக்கவும் முடிந்தது.
ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல, ஆட்சியைக் கைப்பற்றவும், பிராந்திய அதிகாரங்களைப் பெறவும், இந்த இன-மத ரீதியாக பிரிவினையும் - ஒடுக்குமுறையும் முன்வைக்கப்பட்டது. இது இன்று வரை தொடருகின்றது.
இன-மத ஓடுக்குமுறை என்பதும், இதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் பிரிவினைவாதங்களும், இன-மத வெறுப்பு மற்றும் வன்மத்தில் இருந்து உருவாகுவதில்லை. சாதாரணமாக இலங்கை வாழ் மக்கள் இன-மத வெறுப்பு இன்றி தமக்குள் பரஸ்பரம் கூடி வாழ்வது, திருமணங்கள் தொடங்கி வாழ்வியல் சார்ந்து ஓன்றுகலப்பது நடந்தேறுகின்றது. அசாதாரணமான சூழல்களில் இன-மத வெறுப்பு ஊட்டப்படும் போது, அதற்கு பலியான உதிரிகளின் நடத்தைகளுக்கு அப்பால், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இன-மத வெறுப்பு இருப்பதில்லை.
தேர்தலின் போது திட்டமிட்டு இன-மத வாக்களிப்பு தூண்டப்பட்டாலும், தேர்தலின் பின் மக்களிடையேயான வாழ்வில் இன-மத வெறுப்பு உணர்வு இருப்பதில்லை. கூடியே வாழ்கின்றனர். இவர்கள் ஓன்றுபடுவதை தடுக்க, இன-மத ஒடுக்குமுறைகள் மூலம் - எப்போதும் வெறுப்பு அரசியலாக - விவாதமாக முன்தள்ளப்படுகின்றது.
அதேநேரம் இன-மத வெறுப்பை தூண்டி வாக்கைப் பெறும் கட்சிகளும், அதன் தலைவர்களும் இன-மத வெறுப்புடன் - வன்மத்துடன் தமக்குள் அணுகுவதில்லை. மாறாக கூடி உண்டு வாழ்வதுடன், மக்களை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இதுதான் எதார்த்தம்.
இவற்றை இன-மத ஓடுக்குமுறை வடிவங்களையும், விளைவுகளையும் கொண்டு விளக்கிக் கொள்ள முடியாது, விளக்கி விடவும் முடியாது. இன-மத ஓடுக்குமுறையை அரசும், சொந்த இனவாதத்தை இன-மதம் கடந்த இன-மதவாதக் கட்சிகளும், ஏன் முன்வைக்கின்றனர்? இதை விளங்கிக் கொள்வதே, இனவொடுக்குமுறை எப்படி, எந்த வடிவில் தொடருகின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கான அரசியல் அடிப்படையாகும்.
காலனியவாதிகள் தங்கள் கறுப்பு அடிமைகளிடம் ஆட்சியை ஒப்படைக்க முன்னம், எதற்காக இன-மத ஒடுக்குமுறையைக் கையாண்டார்கள்? தங்கள் காலனிய ஆட்சியை இலங்கையில் தொடரவும், இலங்கை மக்களை சுரண்டவும், மக்களை இனமத ரீதியான பிரிவினைக்கு உட்படுத்தியதன் மூலமே, மக்களைப் பிரித்தாண்டார்கள். இனம் மதம் கடந்து, ஓடுக்கப்பட்ட இலங்கை மக்களாக ஒருங்கிணைந்து தமக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதே இதற்கான காரணம்.
அதாவது காலனியமானது உலக ஏகாதிபத்திய ஆட்சியதிகாரமாக பரிணமித்து வந்த சூழலில், இலங்கையைச் சுரண்டுவதற்கும், பிராந்தியங்கள் மேலான ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை தக்க வைக்கவும், இலங்கை மக்களைப் பிரிக்கும் இன-மத ரீதியான பிரிவினையைக் கையாண்டார்கள். இவர்களின் ஆசி பெற்ற கறுப்பு அடிமைகளும் இன-மத பிரிவினைகளை முன்வைத்தே - தங்கள் கறுப்பு அடிமை அரசியலை முன்னிறுத்தினர்.
இப்படி காரணமிருக்க, இந்தக் காரணத்தை விட்டுவிட்டு இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் பேசுவது என்பது, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவுவதே.
கறுப்பு அடிமைகள் ஆட்சியைப் பெற்ற பின், இந்த காரணகாரியங்கள் மாறிவிட்டனவா எனின் இல்லை. அதே காரணகாரியங்கள் வெவ்வேறு வடிவம் பெற்ற போதும், மிகத் தெளிவாக கறுப்பு அடிமைகளின் வர்க்க ஆட்சியை எதிர்த்து இலங்கை மக்கள் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பது தான், தொடரும் இன-மத ஒடுக்குமுறைக்கான காரணம். இலங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் இனம்-மதம்-சாதி-பிராந்தியம்.. கடந்து, இன-மதம் கடந்த மக்கள் கூட்டமாக மாறி விடுவது என்பது, இன்று யாரால் வெறுக்கப்படுகின்றதோ அவர்களும், மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதை ஏன் வெறுக்கின்றனர் என்ற காரணங்களும், இனவொடுக்குமுறைக்கான இன்றைய அரசியல் அடித்தளம்;.
ஒன்றுபட்ட மக்கள் எதை அரசிடம் கோருவார்களோ, அதை தடுக்க அவர்களை பிரித்து விடுவதுதான் இனவொடுக்குமுறை. மக்களை பிரிக்க வேண்டிய காரணகாரியங்களே, ஒடுக்குமுறை வடிவங்களாக, விளைவுகளாக வெளிப்படுகின்றது. இப்படி இருக்க இந்தக் காரணகாரியத்தை மூடிமறைத்து விட்டு, வெளிப்படையாக தெரிவதை இனவொடுக்குமுறையாக முன்வைத்துப் பேசுகின்றவர்களின் அரசியல் நோக்கம் என்ன? தன் பங்குக்கு மக்களை பிரிக்கின்றதும், காரணகாரியத்துடன் தனக்குள்ள உடன்பாட்டை மூடிமறைப்பதும் தான். இப்படி காரணகாரியத்தை மூடிமறைக்கும் அரசியல் என்பது ஒரு கூட்டுச்சதி. இரு தரப்பும் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை மூடிமறைக்கின்றனர்.
இந்த மூடிமறைக்கும் காரணகாரியங்களை விட்டுவிட்டு இனவொடுக்குமுறையை அடையாளம் காண்பது என்பது, மக்களை இன-மத ரீதியாக தொடர்ந்து பிரித்து வைத்திருப்பது தான். இன - மத ரீதியான ஒடுக்;குமுறையுடன், பரஸ்பரம் ஒத்துப்போவது தான்;. இதுதான் அன்றும் இன்றும் அரசியலில் நடக்கின்றது.
மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட "இனக் கலவரங்கள்", திட்டமிட்ட இனவழிப்பிலான குடியேற்றங்கள், மத ரீதியாக பிரதேசங்களை ஆக்கிரமித்தல், படைத்தளங்களைக் கொண்டு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமித்தல் தொல்பொருள் (புராதன) எச்சங்களின் (புனித பிரதேசங்கள்) பெயரில் பிரதேசங்கள் மீதான இன-மத ஆக்கிரமிப்புகள், நூலக எரிப்புகள், கூட்டு ஒப்பந்தங்களை கிழித்தல், மனித உயிர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பெடுக்க மறுத்தல், இன-மத ரீதியான வாக்களிப்பை தூண்டுதல், சட்டம் ஒழுங்கில் இனரீதியான பாகுபாடுகள், வேலைவாய்ப்பில் இன ரீதியான சலுகைகள், இன-மத ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் … இப்படி எங்குமான இன-மத ஓடுக்குமுறைக்குப் பின்னால், காரணகாரியங்கள் இருப்பதை காணமுடியும். கடந்த வரலாற்றுச் சம்பவங்களும், அதன் விளைவுகளையும் கொண்டு இதை அணுகமுடியும்;. இனவொடுக்குமுறையிலான சமூக வாழ்வியலில் சில இனவொடுக்குமுறைகளை உணர முடியாத வண்ணம், இயல்பான வாழ்வியலாக மாறிவிட்டத்தை - இனவொடுக்குமுறைக்கான வரலாற்றில் இருந்து காணமுடியும்;. ஆனால் இதற்குப் பின்னால் காரணகாரியங்கள் இருந்ததையும் - தொடர்ந்து இருப்பதையும் மறுப்பதும், மறுத்தபடி போராடுவது என்பதும் ஓடுக்குமுறைகள் தொடருவதற்கானதே. இப்படி காரணகாரியத்தை விட்டுவிட்டு போராடும் எதிர் இனவாதம் என்பது, இன்னுமொரு எதிர்மறையான பிற இனங்கள் மீதான இனவொடுக்குமுறையாகவே மாறிவிடுகின்றது. இன-மத ரீதியான வாக்களிப்புக்கு மக்களை பிரித்துவிடுகின்ற உணர்ச்சி, அறிவுபூர்வமாக இனவொடுக்குமுறையை விளங்கிக் கொள்ள எந்த வகையிலும் உதவாது. சொந்த இன உணர்ச்சி அரசியல் மக்களுக்கானதல்ல, மாறாக சொந்த இன மக்களை ஓஒடுக்குவதற்கானதே. இது தான் கடந்த வரலாறும் கூட.
ஒடுக்குமுறையை உணரமுடியாத போது, இனவொடுக்குமுறை பழக்கப்பட்ட இயல்பான வாழ்வியலாக மாறிவிடும்;. இன்றைய நிலை இதையே பிரதிபலிக்கின்றது. உதாரணமாக 1970 களில் இனவொடுக்குமுறையாக உணர்ந்த தரப்படுத்தல், இன்று தொடர்ந்து இருப்பதை யார் உணருகின்றனர்? இனரீதியாக ஓடுக்க கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை, ஒரு இனவொடுககு;முறையாக இன்று யாரும் உணர்வதில்லை. இதை அரசியல் ரீதியாக எப்படி விளங்கிக் கொள்வது? தரப்படுத்தல் பின்னால் காரணகாரியங்கள் இருந்ததை முன்வைத்து அன்று போராட மறுத்ததால், இன்று தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பழக்கப்பட்டு விட்டது.
எந்தக் காரணகாரியத்துக்காக மக்களை பிரித்துவிட்டு இன ரீதியாக ஒடுக்குகின்றனரோ, இதற்கு எதிராக காரணகாரியத்தை முன்வைக்காது இனரீதியாக யார் பிரிக்கின்றனரோ, அவர்களை எதிர்த்து மக்களைப் பிரித்துவிடாத வண்ணம் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை விளங்கி ஓன்றுபடுவது தான். இனவொடுக்குமுறையில் இருந்து விடுபடுவதற்கான ஓரேயொரு அரசியல் வழிமுறையும் தீர்வுமாகும். காரணகாரியத்தை விளங்கிக் கொண்டு மக்களை பிரிப்பதை எதிர்த்து, ஒன்றுபடும் போது தான், இனவொடுக்குமுறை எந்த வடிவில், எப்படி இயங்குகின்றது என்பதை இனம் காணவும், அதை முன்வைத்து போராடவும் முடியும்.தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)
அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)
1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)
இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)
ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)
காரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode