Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதச் சிந்தனைமுறை உள்ளடக்க ரீதியாகவும், சாராம்சமாகவும் இனவொடுக்குமுறையை மறுதளிக்கின்றது. இதனால் இனவாதச் சிந்தனைமுறை ஒருநாளும் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாது. இதுவே இன்றைய எதார்த்தம்.

ஏனெனின் இனவாதச் சிந்தனைமுறை என்பது, இனவொடுக்குமுறையாளனின் அதே சிந்தனை முறையல்லவா!? தன் இனவாத சிந்தனையிலான அதே இனவாதத்தால், தான் ஒடுக்கப்படுகின்றேன் என்று எப்படி, எந்த அடிப்படையில் கூறமுடியும்;? இதனாலேயே காரண காரியத்துடனான இனவொடுக்குமுறையை மூடிமறைத்து, இனவொடுக்குமுறையின் வெளித்தோற்றத்தையும் - இனவொடுக்குமுறையின் விளைவுகளையுமே, இனவொடுக்குமுறையாக காட்டுகின்றனர்.

யுத்தம் இருந்த (2009) வரை யுத்தத்தின் விளைவுகளை இனவொடுக்குமுறையாக காட்டியவர்கள், யுத்தம் முடிந்த பின் இனவொடுக்குமுறையானது எப்படி எந்த வடிவில் தொடர்ந்து இயங்குகின்றது என்பதை, இனவாதிகளால் காட்டவும் - முன்வைக்கவும் முடிவதில்லை.

இதேபோன்றே 1970 களில் தரப்படுத்தலிலான விளைவைக் கொண்டு இனவொடுக்குமுறையைக் காட்டியவர்கள், இன்று அதே தரப்படுத்தல் நீடித்த போதும் - இனவொடுக்குமுறையை அதைக் கொண்டு விளக்க முடிவதில்லை. அன்று உருவான அந்த தரப்படுத்தலை, இன்று இனவொடுக்குமுறையாக ஏற்றுக்கொள்வது கூட இல்லை. இதன் பின் இருப்பது இனவாதம் சார்ந்த, சுயநலமே. இன ரீதியாக கொண்டு வரப்பட்ட இனவொடுக்குமுறையான தரப்படுத்தல் இன்று இல்லை என்றால், பல்கலைக்கழக அனுமதியில் யாழ்ப்பாண (இனவாத) எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் இனவாதச் சிந்தனைமுறை, கல்வியில் கையாளப்படும் இனவொடுக்குமுறையை கண்டுகொள்வதில்லை.

இனவாதச் சிந்தனைமுறை என்பது, விளைவையும் - நலனையும் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ஒழிய, இனவொடுக்குமுறையின் காரண - காரியத்தில் இருந்து உருவானதல்ல. இதனால் இனவொடுக்குமுறை எப்படி இன்றைய சூழலில் செயற்படுகின்றது என்பதை விளக்கவும் - முன்வைக்கவும் முடிவதில்;லை. இதனால் இன்று புலியை முன்னிறுத்துவதும் - புகழ்பாடுவதுமே, இனவொடுக்குமுறையின் அடையாளமாக்கப்படுகின்றது. இன்றைய இனவொடுக்குமுறையை இனம் கண்டு போராட மறுப்பதால், நடந்த போராட்டத்தை சுயவிமர்சனமாக ஆராய்வதை இனவாதம் மறுக்கின்றது. இனவாதமானது இந்த அடையாளத்தைக் கொண்டு, இனவொடுக்குமுறை உண்டு என்று கூறுவதைத் தாண்டி - இன்றைய இனவொடுக்குமுறையை காட்ட முடிவதில்லை.

கடந்த காலத்தின் தொடர்ச்சியாக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவுகளின் பின்னணியில் இருக்கக் கூடிய மக்களின் இழப்புகளையும், துயரங்களையும் அவர்களிடமிருந்து பறித்துவிடும் இனவாதிகள், அதை புலிகளின் நினைவுதினமாக மாற்றுவதன் மூலம், சிங்கள - தமிழ் இனவாதிகளுக்கு இடையிலான முரண்பாட்டை ஒடுக்குமுறையாக காட்டவும் - கட்டமைக்கவும் முனைகின்றனர்.

இப்படி இனவாதச் சிந்தனைமுறையென்பது, இனவொடுக்குமுறையாளனின் அதே சிந்தனைமுறை என்பதால், இனவொடுக்;குமுறையைப் பேசமுடிவதில்லை. உண்மையில் இனவொடுக்குமுறையை மூடிமறைக்கின்றது. இனவொடுக்குமுறையின் பின்னணியில் உள்ள காரண - காரியங்கள் எல்லா இனவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் காரணங்களால் பொதுவானது. இனவாதக் காரணங்களை மூடிமறைப்பதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திப்பதையும் - செயற்படுவதையும் தடுக்கவே, இனவாதம் சொந்த இன மக்;களை ஒடுக்குகின்றது. அதேநேரம் தான் தன் இனத்தை ஒடுக்குவதை திசைதிருப்ப, தானும் ஒரு இனவொடுக்குமுறையாளனாக மாறுகின்றது. அதையே போராட்டம் என்கின்றது. இதுதான் கடந்த எமது வரலாறு.

இப்படி இனவொடுக்குமுறையை முன்வைத்து போராடுவதை மறுப்பதே, இனவாதமாக வெளிப்படுகின்றது. இனவாதத்தை நியாயப்படுத்த கையாளும் எதிர் இனவாதமானது, தன் இனத்திற்கு ஜனநாயகத்தை மறுத்தளிக்கவும் - இறுதியில் பாசிசமாகவும் மாறுகின்றது.

இப்படி கடந்த காலத்தில் உருவான இனவாத தமிழ் அரசியல் என்பது, தேர்தல் அரசியல் கட்சிகளின் வாக்குக்காக உருவாக்கப்பட்டதே. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலில் இருந்து, இனவாதம் ஒருநாளும் தோன்றுவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் என்பது இனவாதமாக இருக்கும் என்று கூறுகின்றவன் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை முன்மொழிபவனாகவே எப்போதும் - எங்கும் இருக்கின்றான்.

இந்த இனவாதம் என்பது, தானல்லாத பிற இனத்தை எதிரியாக காட்டுகின்றது. தன் இனவாதச் சிந்தனையை மறுக்கும் தன் இனத்தை எதிரியாக காட்டி ஒடுக்குகின்றது. அதிகாரமும், ஆயுதமும் கிடைத்தால், இனவாதம் பாசிசமாக மாறுகின்றது.

இனவாதமானது எல்லா இனங்களிலும் இனவாதத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதை மறுதளிக்கின்றது. இனவொடுக்குமுறைக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் இருப்பதில்லை என்ற உண்மையையும், அரசுக்கு ஆதரவாக இருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் தவறான இனவாத புரிதலில் இருப்பதை கண்டுகொள்வதில்லை. இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக, ஒடுக்கும் இனத்தை அணிதிரட்ட வேண்டிய கடமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கி;றது என்ற உண்மையை - இனவாதம் மறுதளிக்கின்றது.

அதாவது இனவாதத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட இனத்தை அணிதிரட்டும் போது, எப்படி பிற இனம் குறித்து தவறான புரிதல் உருவாக்கப்படுகின்றதோ அப்படித்தான், ஒடுக்கும் இனத்திலும் நடக்கின்றது. இந்த உண்மையை இனவாதம் மறுதளிக்கவே, உண்மையான இனவொடுக்குமுறையை சமூகத்தில் இருந்து மூடிமறைத்து, காணாமலாக்கி விடுகின்றது. இன்று இதுதான் நிலைமை.

தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)

அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)

1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)

ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)

தொடரும்