முன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வந்த நோக்கம் எது
வென்பது இன்னமும் புரியாத புதிராக இருந்த போதும், சுரேன் ராகவன் அறிவுத்துறை சார்ந்த ஒருவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு - இனப் பிரச்சனை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றார். குறிப்பாக சமவுரிமை குறித்து பேசுகின்றார்.
சமவுரிமை என்பது ஆட்சி அதிகாரத்திலும் தான். இதை சிங்களத் தரப்புகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதேநேரம், தமிழ் தரப்பு கோருவது முரணற்ற ஜனநாயக ஆட்சியையல்ல. இந்த வகையில் தமிழ் - சிங்கள மக்கள் தம்மைத்தாம் ஆளும் முரணற்ற ஜனநாயக உரிமை குறித்துப் பேசுவதில்லை.
இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தமிழ் பிரிவினைவாதிகள் கோருவது தமிழனைத் தமிழன் ஒடுக்கியாளும் வெள்ளாளிய அதிகாரம் குறித்தே. அதாவது பௌத்த சிங்கள ஆட்சி அதிகாரம் போல், ஒடுக்கியாளும் தமிழ் அதிகாரத்தை கோருகின்றனர். இந்த வகையில் தேர்தல் அரசியல் எல்லைக்குள் ஒரு பிரச்சனையைத் தீர்க்க விரும்புகின்ற எவரும், எதார்த்தத்தை கடந்து சிந்திக்க முடியாது.
இந்த வகையில் 2015 இல் யூ.என்.பி அதிகாரத்துக்கு வந்த போது, சுமந்திரன் அரசுடன் பேசுவதன் மூலம் தீர்வை முன்வைத்தார். இன்று சுரேன் ராகவன் மகாநாயக்கர் பேசுவதன் மூலம் தீர்வு பற்றி பேசுகின்றார்.
சுரேன் ராகவனின் அரசு மற்றும் ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைக்கும் அறிவு சார்ந்த தர்க்க அரசியல் கவர்ச்சிகரமானது, தேர்தல் ஜனநாயகம் மூலம் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதை உளமார விரும்பும் தரப்பிற்கு, நம்பிக்கை கொடுப்பதாக இருக்;கின்றது. இருந்த போதும் அவரின் தர்க்க அறிவு சார்ந்த கவர்ச்சிகரமான அரசியல், எதார்த்தத்தில் நிலவும் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து முன்வைக்கப்படவில்லை. அறிவு சார்ந்த தன்னிலைக் கற்பனையில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருள் சுரேன் ராகவனின் அறிவு சார்ந்த தர்க்க அரசியல் மூலம், தீர்வு சாத்தியமில்லை.
மக்களை பிரிக்கும் - பிளக்கும் இன-மதவாதங்களானது தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கையாக இருக்கும் அதேநேரம் - அரசே அதுவாகவே இருக்கின்றது என்பதே எதார்த்தமாக இருக்கின்றது. இந்த சூழலில் இந்த இனவாத அரசு மற்றும் கட்சிக் பின்னணியில் இருந்து பாராளுமன்றத்துக்கு சுரேன் ராகவன் தெரிவாகி இருப்பது - அவரின் கருத்துக்கு முரணாகவும் இருக்கின்றது. அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையில் சம்மந்தமற்ற ஒன்றாக இருப்பதை காணுகின்ற போது, அவர் முன்வைக்கும் கருத்துகளை நாளை அரசியலில் பிரதிபலிக்கின்ற அரசியல் சூழல் இருப்பதால் விரிவாக விவாதிப்பது அவசியமானது.
ஜனநாயகம் குறித்து
தேசங்கள், தேசிய இனங்கள், மதங்கள்.. சமவுரிமை கொண்டவையாக ஏற்றுக் கொண்டு, அரசு இனம், மதம், சாதியைச் சாராது தன்னை முன்னிறுத்துகின்ற போதே – ஜனநாயகம் செழித்து வளரும். அதாவது இனங்கள், மதங்கள், சாதிகள் .. கடந்து, மனிதம் முதன்மை பெறும் போதே - ஒன்றுகலந்த இலங்கையராக மக்கள் தம்மை முன்னிறுத்துவார்கள். அதாவது சிங்களவர், பௌத்தர் என்று அதிகாரம் சார்ந்து தம்மை முன்னிறுத்துவதற்கு பதில் இலங்கையர் என்று முன்னிறுத்தும் போது, அனைவரும் தம்மை இலங்கையராக முன்னிறுத்துவர். இது முரணற்ற ஜனநாயகம் மூலம் சாத்தியம்.
இலங்கை இன-மத ஒடுக்குமுறையும் – பிரிவினைவாதமும் இல்லாதிருந்திருந்தால், இன-மத- சாதி கடந்த சமூகக் கலப்பு ஏற்பட்டு இருக்கும். இதன் பொருள் முன்னேறிய ஜனநாயக சமூகமாக மாறி இருக்கும். மாறாக இனவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை … மக்களை பிரித்ததுடன், அவர்களை மோத வைத்திருக்கின்றது.
1960 களில் மத-இன அடையாளங்களற்ற சமூகமாக இருந்த சூழல், இன்று இல்லை. இன-மத அடையாளங்கள் மூலம் தம்மைத்தாம் தனிமைப்படுத்திக் கொள்ளும், குறுகிய மனப்பாங்குக்குள் சமூகம் குறுகிச் செல்லுகின்றது. இன்று மத அடையாளங்கள் - மதப்பெயர்களைக் கொண்டு ஒருவனை அடையாளப்படுத்துமளவுக்கு - சமூகத்தில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அன்னியமாக்குமளவுக்கு சமூகம் பின்நோக்கி பயணிக்கின்றது. இதற்கு ஏற்ப முரண்பட்ட மத வழிபாட்டு இடங்களும்; - முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. இ;ந்தச் சூழலை அரசே உருவாக்குகின்றது என்பது உண்மை.
இன்று எல்லாத் தேர்தல் கட்சிகளும் இனம் - மதம் சார்ந்து தங்கள் அரசியலை முன்வைப்பதுடன், முழு மக்களுக்குமான முரணற்ற ஜனநாயக அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இதுதான் இன்றைய எதார்த்தம்;. மக்கள் இன-மத-சாதி சார்ந்து பல்வேறு தப்பபிப்பிராயங்களையும், நம்பிக்கை சார்ந்தும், ஒருவரை ஒருவர் எதிரியாக கருதுவது அல்லது விலகி ஒதுங்கி வாழ்வதே எதார்த்தமாக இருக்கின்றது. வாக்களிப்பு இன-மத-சாதி அடிப்படையில் தொடருகின்றது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து சமவுரிமை உருவாக்குவது
இன-மத ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமவுரிமையை முன்வைக்கும், சமவுரிமை இயக்கத்திலான (எமது) போராட்டத்தின் தோல்வி நடைமுறை சார்ந்தது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் இன-மதம் சார்ந்த தப்பபிப்பிராயங்களை களைகின்ற சிந்தாந்தப் போராட்டத்தை சமவுரிமை இயக்கம் நடைமுறையில் முன்னெடுக்கத் தவறியதே, சமவுரிமை இயக்கத்தின் தோல்வி. இதை முன்னெடுக்க முடியாத சூழலில் சமவுரிமை இயக்கத்தில் தொடர்ந்து செயற்படுவது அர்த்தமற்றதாகியது. சமவுரிமை இயக்கம் செயலற்ற நிலைக்கு சென்றுள்ளது.
மக்களை கீழ் இருந்து ஒன்றுபடுத்தும் இந்த செயற்திட்டமென்பது, மக்கள் தம்மைத் தாம் பரஸ்பரம் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாகும். சமூகப் பொருளாதார வர்க்க அடிப்படையில் மக்கள் ஒன்றுபடுவதற்கு – இனம் மத குறித்த தங்கள் குறுகிய சிந்தனை முறையைக் கடந்தாக வேண்டும். இதை இலங்கை இடதுசாரிகள் கையில் எடுக்க தவறுகின்றனர் அல்லது அதைப் பொருட்படுத்துவதில்லை. அரசு பௌத்த மதம் சார்ந்து கையாளும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் - மதத்தை தனிமனித நம்பிக்கையாக புரிந்து கொள்ளும் சிந்தனைமுறைக்குள் மக்களை அணிதிரட்ட வேண்டும். இது தான் மக்கள் திரள் சார்ந்த நடைமுறையும் தீர்வும். இது சாத்தியமானது. அதற்கான நடைமுறை தேவை.
ஆளும் வர்க்கம் முன்வைக்கும் சமவுரிமை குறித்து
கீழிருந்து மக்களை ஒன்றுபடுத்தும் சமவுரிமைக்கான வழிமுறையை சுரேன் ராகவன் முன்வைக்கவில்லை. மாறாக மேல் இருந்து, அதாவது ஆளும் வர்க்கம் சார்ந்து சமவுரிமையை உருவாக்குவது குறித்தே பேசுகின்றார்.
அண்மைய தனது தொலைக்காட்சி பேட்டியில் "ஒரு பிரச்சனை என்றால் புதுடில்லிக்கு ஓடுகிறார்கள் அல்லது ஐநா வுக்கு ஓடுகிறார்கள். ஒரு மாறுதலுக்காக ஏன் கண்டிக்கு ஓடிப் பார்க்க கூடாது ? ஹிந்திக் காரன் காலிலோ அல்லது வெள்ளைக்காரன் காலிலோ விழுவதற்குப் பதிலாக ஏன் மகாநாயக்கர் காலில் விழுந்து பார்க்க கூடாது." இப்படி இனவாத தமிழ் தேர்தல் அரசியல்வாதிகளை நோக்கி கேள்வியை எழுப்பி இருக்கின்றார். அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் பிரச்சனையை தீர்க்க - தமக்குள் தீர்வை காணும் வழிமுறையில் இது பொருத்தப்பாடுடையதாக இருந்தாலும் - இது சாத்தியமா?
ஐநா, புதுடில்லி தீர்வைத் தரும் என்று நம்பவைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், பிரச்சனையை தீர்ப்பது அவர்கள் நோக்கமல்ல. பிரச்சனையை வைத்திருப்பதே – தங்கள் தேர்தல் அரசியலுக்கான அரசியல் அடித்தளம். ஒருவேளை தீர்வே நோக்கமென்றால் ஐநா, புதுடில்லி ஊடாக நாடுவது என்பது அபத்தமே. ஐநா வோ, புதுடில்லியோ அரசு மூலம் தான் எதையும் தீர்வாக தரமுடியும்;. இந்த எதார்த்த சூழலில் சுமந்திரன் மற்றும் சுரேன் ராகவன் அரசியல் வழிமுறையானது ஆளும் வர்க்கம் மூலம் தீர்வு என்பது - பிரச்சனையை தீர்ப்பதற்கான நெருக்கமான வழிமுறை தான்.
ஆளும் வர்க்க தீர்வுக்கான அரசியல் சாத்தியப்பாடானது, இலங்கையின் சமூக பொருளாதார கொள்கையே தீர்மானிக்கின்றது. இன்றைய நவதாராளவாத பொருளாதாரத்துக்குப் பதில் தேசிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தீர்வை வந்தடைவது சாத்தியமானது.
இன-மத ஒடுக்குமுறை என்பது, சமூகப் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க உருவானதே. இ;ந்த அடிப்படைக் காரணம் நீடிக்கும் வரை, அதாவது குறைந்தபட்சம் இலங்கை தேசியத்தை முன்னிறுத்தும் சமூகப் பொருளாதாரத்தை முன்வைக்கும் பட்சத்தில் - ஆளும் வர்க்க தீர்வு சாத்தியம்.
இன, மத, சாதி ஒடுக்குமுறைகள் என்பது - இன்றைய தேர்தல் ஜனநாயக அரசியல் வழிமுறையாக இருக்கின்றது. தேர்தல் ஜனநாயகத்தில் அரசியல் ரீதியாக தங்களை முன்னிறுத்த வேறு கோசங்களோ – வேலைத்திட்டங்களோ இருப்பதில்லை. சமூக பொருளாதார கட்டமைப்பு நவதாராளவாதமாக மாறிய பின்பாக, இதற்கு முரணாக மக்களை முன்னிறுத்தும் பொருளாதாரத்தை முன்வைக்க முடியாது.
நிதி மூலதனம் என்பது கடனாக மாறிவிட்ட சூழலில், தேசிய நிதி மூலதனம் - தேசிய முதலீடுகள் என்பது வெற்றுக் கனவாகிவிட்டது. தேசிய வருமானத்துக்கு நிகரான கடன், அதற்கான வட்டியைக் கட்டவே வரவு - செலவு திட்டமாகவும், சமூக பொருளாதாரக் கொள்கையாகவும் மாறிவிட்டது. மக்களுக்கும் - இலங்கை தேசியத்துக்கும் எதிரான இந்த சமூக பொருளாதார எதார்த்தத்தை மூடிமறைக்க, இனவாத - மதவாத அரசாக அரசு இருக்கின்றது.
நவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியலாகக் கொண்ட தேர்தல் அரசியல் கட்சிகள், இன-மத வாதத்தை கைவிட்டால் - மாற்று அரசியலில்லை. இவர்கள் இன – மத முரண்பாட்டை தீர்க்கும் ஜனநாயக அரசியலைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் அரசியல் இல்லாத போது - தீர்வு எப்படி சாத்தியம்?
சுரேன் ராகவன் முன்வைக்கும் கவர்ச்சிகரமான தர்க்க அறிவியல் வாதங்கள் மூலம் தீர்வைக் காணமுடியாது. சமூகப் பொருளாதார அரசியல் உள்ளடக்கத்தைக் கடந்து, ஆளும் வர்க்க அரசியல் தீர்வு என்பது கானல் நீராகும்.