சிவகுமாரன் தொடங்கி பிரபாகரன் வரை முன்னெடுத்த தனிநபர் பயங்கரவாத அரசியலானது, தாமல்லாத அனைவரையும் "துரோகியாக்கியது". ஜனநாயகத்தை ஒடுக்கியதன் மூலம் - ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனையை உருவாக்கினர். இதில் தேர்தல் ஜனநாயகம் விதிவிலக்கல்ல. 1970 களின் பின்னான வரலாறும் - தமிழ் அடையாளங்களும், ஜனநாயக மறுப்பில் எழுந்த வன்முறையிலான வலதுசாரிய வெள்ளாளிய வக்கிரங்களே.
1970க்கு பின்னான இன்றைய தமிழ் தேர்தல் அரசியலின் எதார்த்தம் என்ன? வன்முறை மூலம் போலித் தமிழ் தேசியத்தை பாதுகாத்த துப்பாக்கிகளில்லை, துரோகிகளைச் சுட்டுக்கொல்ல தனிநபர் பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபட்ட லும்பன்கள் இல்லை.
50 ஆண்டுக்குப் பின்பாக, அதாவது 1970க்கு முந்தைய தேர்தல் அரசியல் வரலாறு தெரியாத தலைமுறைக்கு, இன்றைய தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்து இருக்கின்றது.
தமிழரின் ஒற்றுமை, தமிழ் வாக்குகள் சிதறாமை, பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் .. என்று 1970க்கு பின் வன்முறை மூலம் கட்டமைக்கப்பட்ட, தமிழ் தேசிய சிந்தனை முறையை, 2020 தேர்தல் தகர்த்திருக்கின்றது.
"துரோகிகள்" குறித்தும், ஒன்றுபட்ட "தேசியம்" குறித்தும் புலம்பும் அளவுக்கு, ஜனநாயக மறுப்பு "மனநோயாக" முற்றி இருக்கின்றது. முன்பு துப்பாக்கி முனையில் சாதித்த தங்கள் ஜனநாயக விரோத சிந்தனைமுறையானது, இன்று நடைமுறையிழந்து நிற்கின்றது. தாங்கள் விரும்புவதும், தங்கள் விருப்பே துரோகமல்லாதவொன்று என கட்டமைத்த தங்கள் சுய விம்பங்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால்களில் புதைந்தது போக – எஞ்சியது 2020 தேர்தலில் பின் தனிப்பட்ட மனிதனின் மனநோயாகிவிட்டது. தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு முரணாக - தங்கள் மனநோய் கண்ணோட்டத்தையே - தமிழனின் கண்ணோட்டமாக்க புலம்புகின்றனர்.
இலங்கையில் வடகிழக்குத் தமிழர்களின் தேர்தல் அரசியல் வரலாறு என்பது, 1970 க்கு முன் - 1970க்கு பின் என இரு வேறு காலகட்டங்ளைக் கொண்டது.
1970 களின் பின் தமிழரசுக் கட்சியும் – தமிழ் காங்கிரஸ்சும், தாம் அல்லாதவர்களைத் துரோகியாகக் காட்டியது. மாற்றுக் கருத்தை துரோகமாகவும், அவர்களை கொல்வதே ஆயுதப்போராட்டம் என்றும் கூறி, மாற்றுக் கருத்தற்ற (மாற்றுக்கருத்திருந்தால் மரணம் என்ற)தமிழரின் போலி ஒற்றுமையை துப்பாக்கி முனையில் உருவாக்கினர். மாற்றுக் கருத்து கொண்ட தேர்தல் அரசியல்வாதிகளை கொல்லத் தொடங்கிய தனிநபர் லும்பன்களின் பயங்கரவாத வன்முறையானது - தமக்கு மட்டும் வாக்களிக்கும் புதிய ஏற்பாட்டையே 1977 தேர்தலில் தேர்தல் ஜனநாயகமாக்கினர். இந்த வன்முறை ஏற்பாட்டின் பின்னணியிலேயே, தமிழ் அரசுக்கட்சியும் – தமிழ் காங்கிரஸ்சும் ஒன்று சேர்ந்து கொண்டது.
1970 க்கு முன்பான தமிழர் பகுதிகளின் தேர்தல் முடிவுகளானது, 2020 தேர்தல் முடிவுகளைப் போல் பல்வேறு தேர்தல் கட்சிகளின் செல்வாக்குட்பட்டே காணப்பட்டது. தமிழர்கள் அதிகமாக வாழும் ஒட்டுமொத்த தேர்தல் தொகுதிகளையும் ஒருநாளும், ஒடுக்கும் தமிழ் தேசியம் வென்றது கிடையாது, இந்த போலித் தமிழ் தேசியமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பான்மையை பெற்றது கிடையாது.
ஒரு நாளும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக, வலதுசாரிய தமிழ் தேசிய தேர்தல் அரசியல் இருந்தது கிடையாது. மாறாக தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தங்கள் அதிகாரத்தைக் கோரும், தமிழ் தேசியமானது மக்கள் ஒன்றுபடுவதை மறுதளித்து வந்தது. வட்டாரத்தின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், சாதியின் பெயரால் தங்களை உயர்ந்தவராகவும், கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக கூறிக்கொண்ட வலதுசாரிய வெள்ளாளிய தேசியமானது, மக்கள் ஒன்றுபடுவதற்கு எதிராக இயங்கியது. ஒற்றுமையைப் போலியாக உருவாக்க, வன்முறையைப் பயன்படுத்தியது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மறுக்கும் வெள்ளாளிய தலைமையிலான தேர்தல் அரசியலானது, அதை ஒருங்கிணைக்க சிவகுமாரன், பிரபாகரன்.. போன்ற தனிநபர் பயங்கரவாத லும்பன்களை உருவாக்கியது. இதன் மூலம் தேர்தல் அரசியல் எதிரிகளை போட்டுத்தள்ளி, தாங்கள் மட்டுமே தேர்தலில் நின்று வெல்லும் புதிய நிலையை உருவாக்கினர்.
ஜனநாயக வழியில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வெல்லுகின்ற, ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய வேலைத்திட்டத்தை ஒருநாளும் கொண்டிருக்கவில்லை. அதேநேரம் இடதுசாரிய எதிர்ப்புக் கொண்ட ஒடுக்கும் தமிழ் தேர்தல் தேசியமானது, இலங்கை ஆட்சியாளர்களை இரட்டை நிலைப்பாட்டுடன் அணுகியது. யூ.என்.பியை ஆதரிக்கும் நிலைப்பாடும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியை எதிர்க்கும் வலதுசாரிய வர்க்க நிலைப்பாடும், அடிப்படையில் தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தமிழ் தேசிய நிலைப்பாடாகவே இருந்தது. இப்படி வர்க்கக் கண்ணோட்டம் கொண்டு, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை எதிரியாக்கி, தமிழனுக்குள் தமிழனை பிரிவினைக்குள்ளாக்கி ஒடுக்கியது.
1965 தேர்தலில் பெரும்பான்மையற்ற யூ.என்.பி அரசுக்கு, தமிழரசுக்கட்சியும் – தமிழ் காங்கிரஸ்சும் ஆதரவு அளித்ததுடன் மந்திரிப் பதவிகளைப் பெற்றதுடன் - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கவும் செய்தனர். தங்கள் வெள்ளாளிய ஒடுக்கும் சமூக நிலைக்கு ஏற்ப, 1965 களில் நடந்த சாதியப் போராட்டங்களை அரசின் பிரதிநிதியாக இருந்தபடி ஒடுக்கினர்;. 1970 தேர்தலில் இந்த இரண்டு தமிழ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதுடன், சில தொகுதிகளில் சிறு எண்ணிக்கையாலேயே வெல்லவும் முடிந்தது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான தமிழ் மக்கள், ஒடுக்கும் தமிழ்தேசியத்தை ஆதரிக்கவில்லை. இவர்களுக்கு எதிராக விழுந்த வாக்கு எண்ணிக்கை அதிகமாகும்.
1965 இல் அரசுடன் கூடி இருந்த அதே அவர்கள், 1970 களின் தாம் அல்லாதவரை "அரச கூலிகளாகவும்" துரோகியாகவும் காட்டி, அவர்களை கொல்வதையே தமிழ் தேசியமாகவும் கட்டமைத்தனர். இப்படி தேர்தல் அரசியலின் எதிரிகளை கொல்லத் தொடங்கிய இந்தக் கூட்டம், 1977 தேர்தலில் தேர்தல் ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தினர். இதன் மூலம் போலி ஒற்றுமையையும் – தமிழ் பிரதிநித்துவத்தையும் உருவாக்கினர். பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம், ஒற்றைத் தலைமை என்று எல்லாம் துப்பாக்கி முனையில் உருவான வரலாற்று வழியில் தான், 1986-1990 களில் பிற இயக்கங்களை கொன்று, புலிகள் மட்டும் என்ற புதிய பாசிச நிலைமை உருவானது.
இப்படி பாசிசமாக வளர்ந்த போக்கானது - போலி ஒற்றுமையை கட்டமைக்கவும், உணர்ச்சி அரசியலே அறிவாக்கப்பட்டது. தாம் அல்லாத அனைத்தையும் "துரோகமாகவும்", அவர்கள் கொல்லப்பட வேண்டியவராகவும் காட்டி உருவான போலி ஒற்றுமை, 2000 இல் போலியான தேர்தல் கட்சியை (கூட்டமைப்பை) உருவாக்கியது.
இப்படி 1970 முதல் 2009 இல் வரை துப்பாக்கி முனையில் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் ஜனநாயக போலி ஒற்றுமையலான போலி அரசியல், 2015 தேர்தலில்; ஊசலாடியது. 2020 இல் துப்பாக்கி முனையில் உருவான போலி ஒற்றுமை, மரணத்தை தழுவியிருக்கின்றது.
துப்பாக்கி முனையில் தமிழரின் ஒற்றுமை பற்றி கனவுகாணுகின்ற சிந்தனைமுறையும் - பழைய தேர்தல் பெருச்சாளிகளுமே, இன்று "துரோகிகள்" குறித்து புலம்புகின்றனர். புலம்பெயர் நாட்டில் புலிப் பணத்தை தமதாக்கிக் கொண்டு அதையே தொடர்ந்த பிழைப்பாக்கி வாழ்கின்ற கூட்டமும், தமிழ் உணர்ச்சியூட்டி மக்களின் பணத்தை கறக்கும் வியாபாரிகளும், தமிழ் தேசிய உணர்ச்சி ஊட்டி வாழும் ஒட்டுண்ணிகளும் மற்றும் இலக்கிய அரசியல் பிரமுகர்களும் "துரோகிகள்" குறித்து ஒப்பாரி வைக்கின்றனர்.
இந்த வியாபாரத்தில் பங்குதாரர்கள், இலங்கையில் தமிழ் தேர்தல் அரசியலில் புளுத்து வெளி வந்திருக்கின்றனர். மக்களின் கடந்தகால தியாகங்கள், போராடி மரணித்தவர்களின் வாழ்வை, தங்களின் தனிப்பட்ட சுயபிழைப்புவாத தேர்தல் அரசியலுக்கு ஏற்ப சிறுமைப்படுத்தி – தாம் அல்லாத மற்றவற்றை துரோகமாக்கி – அதை தமக்கான வாக்காக்கி இருக்கின்றனர்.
சுயபிழைப்புவாதம் தான், இன்று "துரோகம்" குறித்தும், கற்பனையான தமிழ் தேசிய கனவுகளையும் முன்வைத்து புலம்புகின்றது. மனநோய் கொண்ட கூட்டமோ, இதை காவிக் கொண்டு அலம்புகின்றது.