யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.
பகுத்தறிவற்ற எல்லாக் கடவுள் வழிபாடுகள் போலேவே மிருக பலி வழிபாட்டு முறையும் காணப்படுகின்றது. மிருக பலி வழிபாட்டு முறையை தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றவர்கள், தங்கள் பகுத்தறிவற்ற சாதிய வழிபாட்டு முறையை முன்னிறுத்திக் கோருகின்ற பின்னனியில் இதை அரசியல் ரீதியாக எதிர் கொள்வது அவசியமாகின்றது.
தடையைக் கோரியவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த தங்கள் வாதத்தில் "எமது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் மத உணர்வுகளுக்கும், சமய பாரம்பரியத்திற்கும் முரணானது" என்கின்றனர். இந்த தடைக்கான தர்க்கத்தின் பின்னால் ஜனநாயக விரோத சாதிய திமிரைத் தவிர, இதற்கு வெளியில் இதற்கு எந்த சமூக உள்ளடக்கம் கிடையாது.
சாதிய மத அடிப்படையில் வேள்வியை தடை செய்வதானது யாழ் மேலாதிகக் வெள்ளாள சாதிய மதப் பண்பாட்டை பிற மக்கள் மேல் திணிப்பதாகும்.
பகுத்தறிவற்ற தங்கள் மதத்தின் பெயரில் சாதியைப் பாதுகாக்கும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் முன்னிறுத்திக் கொள்ளும் இந்து மதத்தினர் சாதிய ஆலயங்களை கட்டுபவர்களாகவும் நடத்துகின்றவர்களாகவும் இருக்கின்றனர். இந்து சாதியவாதிகள் தான் மிருக பலி பூசையை தடை செய்யக் கோருகின்றனர்..
மிருகங்கள் வதைக்கப்படுவது முதல் அவை கொல்லப்படும் முறைகள் வரை, எந்த கேள்விக்கும் இடமின்றி சட்டரீதியான வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இந்த வகையில் வேள்விகளில் நடைபெறும் மிருக வதைகள் அனுமதிக்க முடியாது.
இதற்கு பதில் மற்றைய வழிபாட்டு முறைகளை "பெரும்பாலன மக்களின் மத உணர்வுக்கு" முரணாகவும், அவர்களின் "சமய பாரம்பரியத்துக்கு" எதிரானதாகவும் காட்டி விடுவது என்பது, ஜனநாயகத்துக்கு முரணாது. இங்கு யாழ் வெள்ளாள சாதிய "தமிழ்" பண்பாடு தனக்கு உடன்படாத அவர்களால் ஒடுக்கப்படும் சாதிகளின் வழிபாட்டு முறையினை தடை செய்யக் கோருகின்றது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட "பெரும்பாலான மக்கள்" என்ற தர்க்கமானது, சிறுபான்மை மக்களின் வாழிபாட்டு உரிமையை மறுக்கின்றது. அதே நேரம் யார் இந்த சிறுபான்மை மக்கள் என்ற கேள்வியையும், அவர்களின் ஜனநாயகம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது.
"தமிழர்" என்ற வெள்ளாளச் சாதிய ஒற்றைப் பண்பாட்டை, இந்து மதம் மூலம் திணிக்க முனைகின்ற சாதிய வக்கிரம் இது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் சாதிய கலாச்சாரத்தை பெண்கள் மீதும், அவர்களின் "நடத்ததைகள்" மீது திணிக்க முனைந்த அதே ஆணாதிக்க சாதியத்தின் மற்றொரு நீட்சி தான் இதுவும்.
இன்று சாதிக்கொரு கோயில்கள் மூலம் சாதியம் கோலோசுகின்ற யாழ் மேலாதிக்க சாதிய பின்னணியில் "பெரும்பான்மை" மக்களின் சாதியம் சார்ந்த வழிபாட்டு முறையினை மட்டும் அங்கிகரிக்கக்கோரி அந்த பண்பாட்டை சட்ட ரீதியானதாக மாற்ற முனைகின்ற முயற்சியையே வேள்வியினை தடை செய்யக் கோருவதன் மூலம் முன்வைக்கப்படுகின்றது.
இந்தியாவில் பார்ப்பானிய ஆட்சி மூலம் முன்தள்ளுகின்ற இந்து-பார்ப்பானிய சாதிய வெறிதனங்களை பின் பற்றியே, இன்று இலங்கையில் இந்து-வெள்ளாளிய சாதியமும் கோலோச்சுகின்றது.
இந்த பின்னணியில் "தமிழனின்" பெயரில் வடக்கில் சாதியம் கோலோச்சுகின்றது. வடக்கில் சாதிய , மத வக்கிரங்களை இனம் கண்டு போராட வேண்டியது, இன்று முதன்மையான அரசியல் விடையமாக மாறி வருகின்றது.
05.04.2016