மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.
இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.
மூலதனமே உலகம் என்றும், தனியுடமை சிந்தனையிலான வாழ்க்கை முறை என்ற 2000 ஆண்டுகள் வாழ்வியல் முறைமையை, 1917 வர்க்கப் புரட்சி கவிழ்த்துப் போட்டது. மனித உழைப்பைச் சுரண்டி உருவாகும் தனியுடமையும், அதனாலான மூலதனத்தின் திரட்சியுமே, மனித குலத்தை அடிமைப்படுத்தியுள்ளதை இந்தப் புரட்சி நடைமுறைரீதியாக எடுத்துக் காட்டியது. அதேநேரம் மார்க்சியத்தின் மெய்நிகர் தன்மையை புரட்சிகர செயலாக்கியது.
ஆனாலும் பொதுவுடமையை முன்வைத்து முன்னேறிய வர்க்கப் புரட்சி, தொடர்ந்து நீடிக்கவில்லை. ஆம், தனியுடமையால் தோற்கடிப்பட்டிருக்கின்றது. அதேநேரம் மார்க்சிய தத்துவத்தையும், புரட்சிகர நடைமுறைகளையும் முறியடிக்க மூலதனம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது. மார்க்சிய தத்துவத்தை எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் வெல்ல முடியவில்லை. இது தான் உண்மை. இது தான் இந்த வர்க்கப் புரட்சி எமக்கு கற்றுத்தரும் எதார்த்தமும்; கூட. முதலாளித்துவத்திற்கு அச்சம் தருவது மார்க்சியமும், அதன் நடைமுறையுமே என்பது, உலகின் மெய்நிகர் உண்மையாக இருக்கின்றது. இதனாலேயே வர்க்கப் போராட்டங்கள் பாரிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றது.
1917 புரட்சியின் தோல்வியென்பது, மார்க்சிய தத்துவத்தின் தோல்வியல்ல. அதாவது தனியுடமைத் தத்துவத்தின் பலத்தால், மார்க்சியம் தோற்கடிக்கப்படவில்லை. அதேநேரம் பாட்டாளி வர்க்கம் முன்னெடுத்த வர்க்க நடைமுறைத் தவறுகளால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக 2000 வருடங்களுக்கு மேலான தனியுடமையிலான சமூக அமைப்பின் பழக்கவழக்கங்களும், சிந்தனைகளையும் கொண்டு, பொதுவுடமைச் சமுதாயத்தை கீழ் இழுத்து வீழத்துகின்ற, முதலாளித்துவ மீட்சி மூலமே புரட்சி தோற்கடிக்கப்பட்டது. அதாவது மார்க்சியம் - புரட்சி பெயரில், ஆட்சி அதிகாரங்களில் புகுந்து கொண்ட தனியுடமை கொள்கைகள் மூலமே, அதிகாரத்தை உள்ளிருந்து கைப்பற்றியதே நடந்தேறியது.
புரட்சியின் தோல்விக்கு தத்துவத்தின் "தவறுகளே" காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். முதலாளித்துவ மீட்சியை மூடிமறைக்க முனையும் அற்பதனமான திரிபுகள். அதேநேரம் தவறுகள் இன்றி புரட்சி நடப்பதில்லை. லெனின் இந்த குறித்து கூறும் போது “விசயத்தின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டோமானால், ஒரு புதிய உற்பத்திமுறை, தொடர்ந்து பின்னடைவுகளையும், தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல் உடனே வேர்பிடித்து நிலைபெற்றதாக வரலாறு உண்டா?” என்று கேட்கின்றார். ஆம் தவறுகள், பின்னடைவுகள், தோல்விகள் ஊடாகவே, புரட்சிக்கு பிந்தைய வர்க்கப் போராட்டத்தை லெனின் முன்னெடுத்துச் சென்றார். புதிய அனுபவமற்ற விடையங்களில் முன்னேறும்போது, தவறுகளை இனம் கண்டு களைவதன் மூலம், முன்னேறுவதே பாட்டாளி வர்க்கத்தின் இயங்கியலாகும். இதுவே கடந்தகாலம் குறித்த இன்றைய எமது போராட்டத்தின் இயங்கியலாகவும் இருக்கின்றது. புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில், வர்க்கப் போராட்டமே புரட்சியின் நாதமாக இருந்தது.
புரட்சிக்கு பிந்தைய வர்க்கப் போராட்டத்தை மறுப்பதும், வர்க்கப் போராட்டத்தை தவறாக காட்டுவதும், தனியுடமையை ஆதரிக்கின்ற போலி "மார்க்சிய" சிந்தனைமுறையாக இருக்கின்றது. நடந்த வர்க்கப் போராட்டம் குறித்து அவதூறுகளைக் கொண்டே, இன்று போராடுகின்றவர்கள் மீதான அரசியல் விவாதங்களாக்குகின்றனர். இது போன்றவற்றை பற்றி லெனின் “அவதூறின் அரசியல் முக்கியத்துவம்” என்ற கட்டுரையில் “அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது” என்றார்.
வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் (சர்வாதிகாரத்தையும்), பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் (சர்வாதிகாரத்தின்) பின்பாகத் தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும், மூடிமறைத்த அவதூறுகளை 100 வருடங்கள் கழித்து இன்று இனம் காண வேண்டியுள்ளது.
100 வருடத்துக்கு முன் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் புரட்சி முடிந்து விட்டது என்பதும், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் (சர்வாதிகாரம்) புரட்சிக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடைமுறை என்று திரித்துக் காட்டவும் முற்படுகின்றனர். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, மூலதனத்தின் சர்வாதிகாரமாகும். இதன் பொருள் மூலதனத்திற்கே ஜனநாயகம். இதே அரசியல் அடிப்படையிலேயே மூலதனத்துக்கு எதிரான பொதுவுடமை சர்வாதிகாரம். இதன் பொருள் உழைக்கும் வர்க்கத்திற்கு ஜனநாயகம். இந்த அடிப்படையிலேயே லெனின் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் வர்க்கமற்ற சமுதாயத்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்” என்றார். முதலாளித்துவம் புரட்சிக்கு பிந்தைய சமுதாயத்தில் இயங்குவதை லெனின் எடுத்துக்காட்டுகின்றார்.
மார்க்சியத்தின் பெயரில், புரட்சியின் பெயரில், கட்சியின் பெயரில் இயங்கும் முதலாளித்துவம் குறித்து லெனின் “தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்கை கடைப்பிடிக்கும் நபர்கள் முதலாளிகளைப் பாதுகாப்பதில், முதலாளிகளையே விஞ்சி நிற்கிறார்கள் என்பதை முதலாளிகள் புரிந்து கொண்டுள்ளதை காணமுடிகின்றது” என்றார்.
புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் முதலாளித்துவ மீட்சி என்பது, உள்ளார்ந்த வர்க்கப் போராட்டத்தாலானது. ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார்.
1917 புரட்சியின் பின் லெனின் கூறினார் “உலகம் முழுக்க கம்யூனிசம் தோன்றும் வரை சோசலிசம் உக்கிரமான வர்க்க மோதல்கள் நிறைந்த ஒரு முழுச் சகாப்தமாக அமையும்" என்றார். “இந்த சகாப்தம் முடிவடையும் வரை, சுரண்டல்காரர் தவிர்க்க முடியாதபடி மீட்சிக்கான நம்பிக்கையை ஆவலுடன் வளர்த்துக் கொண்டிருப்பதோடு, இந்த நம்பிக்கை மீட்சிக்கான முயற்சிகளாகவும் மாற்றப்படுகிறது” என்றார். இது தான் எதார்த்தமும் கூட. கடந்தகாலம் குறித்து பேசும் பலர், இந்த உண்மையை முன்வைத்து பேசுவதில்லை. இதுவே இன்று மார்க்சியத்துக்கு எதிரான அரசியல் கோட்பாட்டின் சாரமாக இருக்கின்றது.
1917 நடந்த புரட்சிக்கு பின்பான சமூகத்தின் வர்க்கப் போராட்டம் குறித்து யாரும் பேசுவதில்லை. மாறாக 1917 புரட்சியை வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாக மாற்றுவதும், புரட்சிக்கு பிந்தைய வரலாற்றை தனிப்பட்ட ஸ்ராலின் நடத்தை சார்ந்த பிரச்சனையாகக் காட்டுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை மறுப்பதே நடக்கின்றது.
புரட்சியைப் புனிதமான பொருளாகக் காட்டுவதன் மூலம், தங்கள் முதலாளித்துவச் சிந்தனைமுறையை மார்க்சியத்துக்குள் புகுத்துவது நடக்கின்றது. புரட்சிகர சூழலுக்கு ஏற்ப, சந்தர்ப்பவாத அரசியலை முன்வைப்பது நடக்கின்றது. லெனின் கூறுவது இந்த “சந்தர்ப்பவாதம் என்பது ஒரு விபத்தோ, தனிப்பட்ட நபர்கள் செய்கிற பாவமோ, தவறோ, துரோகமோ அல்ல, மாறாக அது ஒரு முழு வரலாற்று சகாப்தத்தின் சமூக உற்பத்தி” முறையின் விளைவாகும். வர்க்கப் புரட்சிக்கு எதிரான சிந்தனைமுறையின் வெளிப்பாடு. மார்க்சிய வர்க்கப் போராட்ட நடைமுறைகளை எதிர்த்து நீண்ட பல வருடங்களாக இயங்கியவர்கள், இன்று 1917 புரட்சியை கொண்டாடுவதன் மூலம், புரட்சியின் புரட்சிகர வர்க்க சாரத்தை உறிஞ்சிவிடுகின்றனர்.
லெனின் கூறுவது போல் இவர்கள் “யதார்த்தத்தில் அவர்கள் முதலாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் பிரிவு… தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அதன் செல்வாக்கை பரப்புகின்றவர்களும், அதன் ஏஜெண்டுகளும் ஆவர்” இவர்கள் 1917 புரட்சியை கொண்டாடுகின்ற அதேநேரம், அதுவொரு வர்க்கப் புரட்சி என்பதையும், புரட்சிக்கு பின் வர்க்கப் புரட்சி தொடருகின்றது என்பதை மறுப்பதையே, 100 வருட புரட்சி நினைவு மூலம் முன்வைக்க முற்படுகின்றனர்.
இந்தப் போலி முதலாளித்துவ மீட்பாளர்களிடம் இருந்து, மார்க்சியத்தையும், இதன் நடைமுறையையும் முன்னிறுத்தி போராட வேண்டியிருக்கின்றது. இந்த சமுதாயத்தை தலைகீழாக்கும் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவலை விடும்போது, கடுமையான நெருக்கடிகளை மூலதனம் கொடுக்கின்றது. கடுமையான தூற்றுதலை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது. வர்க்கப் போராட்டத்தை தனிமைப்படுத்துவது, இருட்டடிப்பு செய்வதன் மூலமான புறநிலையான தடைகள் போடுவது நடந்து வருகின்றது. எதிர்நீச்சல் என்பதும் பல்துறை சார்ந்து கடுமையானதாகின்றது.
இதை எதிர்த்து மார்க்ஸ் கூறுவது போல் “கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன்தான்” உலகத்தின் உண்மைகளையும், சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியைச் செய்யமுடியும். இன்று நிலவும் புரட்சிகர சூழலில், மார்க்சியம் எல்லா போராட்டங்களின் உயிர் மூச்சாக இருப்பதை தடுத்த நிறுத்த முடியாது என்பது உலக எதார்த்தமாக மாறி இருக்கின்றது. அதில் நாமும் பயணிக்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டு, மானிட விடுதலைக்காக உழைக்கும் மக்கள் அனைவருடன் ஒன்றிணைந்து சர்வதேச கீதத்தைப் பாடுவோம்.