Language Selection

கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை,ஆசான்கள் கார்ல் மார்க்சும்,பிரடெரிக் ஏங்கெல்சும் உலகதொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை,தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும்,இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ்மொழிபெயர்ப்பை  பெரியார்,பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக,மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார்.  பார்ப்பனக் கொடுங்கோன்மையை,மனிதர்களை சாதி பிரித்து உயர்வு,தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும்,செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து,அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.

பெண்களை ஒடுக்குவதற்கு கர்ப்பப்பை ஒரு காரணம் என்றால் அந்த கர்ப்பப்பையை அறுத்தெறியுங்கள் என்று முழங்கினார். "பெண் ஏன் அடிமையானாள்" என்பது பெண்விடுதலை குறித்து அவர் எழுதிய புத்தகம். அவர் பெண்விடுதலைக்கு காட்டிய ஆதரவை கண்ட பெண்கள் அமைப்பினரே அவரை பெரியார் என்று முதலில் அழைத்தனர். அம்பேத்கார் தனது சகோதரி என்று அழைத்த மீனாம்பாள் தான் அவரை பெரியார் என்று அறிவித்தார்.


"நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம்","நமது தமிழ் மொழி சாதியை காப்பாற்றும் மொழி" என்று அவர் தமிழ்மொழியின் மீது படிந்திருந்த சாதிக்கறையை எடுத்துக் காட்டினார். பொதுவில் இருக்கும் நம்பிக்கைகளை,வழிபாடுக்ளை உடைத்தெறிவதால் தனக்கோ அல்லது இயக்கத்திற்கோ பொதுமக்களின் ஆதரவு குறைந்து விடக்கூடும் என்று கணப்பொழுது கூட அவர் தயங்கியதில்லை. ஏனென்றால் வாக்குப்பிச்சைக்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசும் அரசியல்வாதி அல்ல அவர். தமிழ்மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளிற்கு மாறாக மொழி என்பது தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகமே தவிர வேறு ஒன்றுமில்லை. எமது மொழி என்பதற்காக தமிழ்மொழியில் படிந்துள்ள சாதி,மத அடையாளங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


அதனால் தான் தமிழ் இனவெறியர்கள்,சைவத்தமிழ் சகதிக்குள் ஒழிந்து கொண்டு இருப்பவர்கள் அவரை தமிழ்மொழியை பழித்தவர் என்று பொய் கூறுகிறார்கள். கம்பராமாயணத்தின் புராணப்புழுகுகளிற்காக அவர் அதனை நிராகரித்த போது கம்பரின் கவித்திறனையும்,இலக்கிய நயத்தினையும் அவர் அறியாமல் குறை சொல்கிறார் என்று கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். னா,ணா,லை,ளை போன்ற எழுத்துச் சீர்திருத்தங்களை எத்தனையோ ஆண்டுகளிற்கு முன்னரே தனது எழுத்துக்களில் பயன்படுத்தியவர் அவர் என்பது போன்றவைகளை மறைத்து விட்டு பொய்களை புனைந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த புரட்சிக்காரனிற்கும், அ.தி.மு.க என்னும் ரெளடிகள் கூட்டத்தின் தலைவனான எம்.ஜி.ராமச்சந்திரனிற்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி "வீர வணக்கப் பொதுக்கூட்டம்" நடத்துகிறது. தனது பெரும்சொத்தை பகுத்தறிவு இயக்கத்திற்காக செலவிட்டவர் பெரியார். படங்களில் நடிக்கும் போது கறுப்புப்பணத்தில் லட்சங்களை பதுக்கியவர் புரட்சிவாத்தியார். பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாராய உடையார்,எத்திராஜ் முதலியார் போன்ற கள்ளச்சாராய,கட்டைப்பஞ்சாயத்து ரெளடிகள் மூலம் ஊழல் செய்தார். "பெண் ஏன் அடிமையானாள்" என்று பெண்விடுதலைக்கு குரல் கொடுத்தார் பெரியார். தனக்கு சினிமாவில் இருந்த செல்வாக்கை வைத்து நடிக்க வரும் பெண்களை ஆசைகாட்டி,பயமுறுத்தி அடிமைகளாக்கியவர் எம்.ஜி.ஆர். மூடநம்பிக்கைக்கு முதல் எதிரி அந்தக் கிழவன். இருக்கிற அம்மன் போதாது என்று கர்நாடகத்து மூகாம்பிகை அம்மனையும் தமிழ்நாட்டுக்கு பரப்பியவர் வாத்தியார்.(கர்நாடகத்து அம்மன்கள் என்றாலே அவருக்கு தனி விருப்பம் தான்).


அந்தக் கிழவன் இறந்து இத்தனை வருடங்களாகி விட்ட போதிலும் இன்றைக்கும் மக்கள் போராட்டம் எதிலும் அவனின் தொண்டர்கள்,அவனின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் முன்நிற்கிறார்கள். இவரிற்கு தாமரைக்கனி,ராபின் மொயின் என்பவனோடு சேர்ந்து கொள்ளை அடித்த மாண்புமிகு மந்திரி,சபாநயகர் போன்ற பதவிகளிற்கு பெருமை சேர்த்த காளிமுத்து,கள்ளச்சாராயம் காய்ச்சிய பணத்திலே கல்வி வியாபாரம் செய்யும் ஜேப்பியார்,கட்டைப்பஞ்சாயத்து ரெளடி மதுசூதனன்,இன்றைய அடிமைகள் என்று ஊழல்பணியை ஒழுங்காக தொடருகிறார்கள். அவரின் அதிகாரபூர்வ அரசியல்வாரிசின் கொள்ளைகளை,அராஜகங்களை,பார்ப்பன வெறியை தனியே எடுத்து சொல்லத் தேவையில்லை.


இதிலே அவர்கள் வாத்தியாரிற்கு அவர்கள் ஈழத்திற்கு உதவிய தலைவர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இந்த பச்சைப்பொய்யை பற்றி முன்பொரு பதிவிலே எழுதியதை மீள குறிப்பிடுகிறேன். இவரின் ஈழ ஆதரவிற்கு உதாரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் மதுரை உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது நடந்த நிகழ்வொன்றை குறிப்பிடலாம். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான பட்டிமன்ற புகழ் ஜெயராஜ் (நால்வருணக் கோட்பாடு,சைவசமயம் என்பவை புனிதமானவை என்று பேசித்திரிகிறாரே அவர்தான்), குமரகுருபரன் போன்றவர்களால் அகில இலங்கை கம்பன் கழகம் தொடங்கப்பட்டது. இந்த கழகத்திற்கும் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தது. அந்த மேடையிலே எம்.ஜி.ஆர் முன்பு ஜெயராஜ் பேசிய போது ஈழத்தமிழர்களிற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


அசத்தலான ஒரு மறுமொழியை அரசியலறிவு மிகுந்த நம்ம வாத்தியார் கொடுத்தார். நீங்கள் என்னை கேட்டா போராட வெளிக்கிட்டீர்கள்? ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். மதுரையே கலங்கிப்போச்சு. மறுநாள் இலங்கை, இந்திய பத்திரிகைகள் எல்லாம் கோபால் பல்பொடி விளம்பரத்தைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு வாத்தியின் அரசியலறிவையும், ராசதந்திரத்தையும் கொட்டை எழுத்துக்களில் வெளிப்படுத்தினார்கள். இலங்கை முழுவதும் வாத்தியின் கொடும்பாவிகள் கொழுத்தப்பட்டன. இந்த அரசியல் கோமாளி தான் நம்ம மீட்பராம்.


இந்திரா காந்தியை அவசரகாலச்சட்டத்தின் போது கூட ஆதரித்த ஒரு கட்சித்தலைவர் என்றால் அது நம்ம வீராதிவீரன் எம்.ஜி.ஆர் தான். அதற்கு அடுத்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த போது மொரார்ஜியின் காலிலே விழுந்த தன்மானச்சிங்கம் நம்ம வாத்தியார். மொரார்ஜியை கவிழ்த்து விட்டு சரண்சிங் ஆட்சிக்கு வந்தவுடன், சிங்குடன் கூட்டு என்று ஆட்சிக்கு யார் வந்தாலும் நின்னையே கதியென்று சரணடைந்தவர் நம்ம ஆளு. அவர் புலிகளிற்கு மத்திய அரசையும் மீறி கோடி, கோடியாகக் கொடுத்த கொடைவள்ளல் என்று சிலர் சிந்து பாடுவதுண்டு. எந்த மத்திய அரசையும் மறந்தும் கூட பகைக்காத இந்த சுத்த வீரன் மத்திய அரசின் ஆணையின்றி தனது பணத்தை கொடுத்தாராம். தனது படங்களிலே நடிப்பு என்றால் என்னவன்றே தெரியாமல் ஓடித்திரியும் வாத்தி, றோவினது உளவு நாடகங்களிலே, சும்மா சொல்லக்கூடாது நல்லாவே நடிச்சிருக்கு. "இந்த உதவிகள்" தான் மக்கள் போராட்டமாக படிப்படியாக வளர வேண்டிய போராட்டத்தை வீங்க வைத்து ஈழத்தை சுடுகாடாக்கியது.


தமிழ் இனவெறி,சந்தர்ப்பவாத அரசியல்,தேர்தலில் நின்று முதலமைச்சராக வேண்டும் போன்றவைகளின் கலவையாக பால் தாக்கரே ஈழமக்களிற்கு ஆதரவு,இலை மலர்ந்தால் ஈழம் மலரும்,ஈழத்திற்கு உதவிய தலைவர் எம்,ஜி.ஆர் என்று எதை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் அந்த போராளியை,கலகக்கார கிழவனை இதற்குள் இழுக்காதீர்கள். தயவு செய்து விட்டுவிடுங்கள்.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ