Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! – (தொடர் : 03)

  • PDF

எனை நான் புலம் பெயர்த்திய

காலத்தின் முன்பாக

அந்தத் தெருக்கள்

நீண்டதாய் பரந்து கிடந்தன.

ஏன் தானோ இப்போது

ஒரு வழிப் பாதை போல

அவை குறுகிக் கிடக்கிறது.

வீட்டுக்கு அறிக்கையான வேலியும்

கறையானின் மண்ணை அப்பி

கட்டுகள் உக்கி அறுபட்டு

தன்பாட்டுக்கு சாய்ந்து வீழக்கிடக்கிறது.

அதில் கூட்டம் கூட்டமாய்

குழுமிக் கீச்சிடும்

புருமுள் குருவிகளும்

அவை கூடி விளையாடும்

பூவரச மரங்களும்

திட்டமிட்டு அழிந்தனவோ..!?

என எனை நினைக்க வைக்கிறது.

 

 

இந்துமத சாதியச் சம்பிரதாய

 

ஆகம விதிமுறை வழியில்

கணவன் உயிர் செத்த உடலாகின்..!

அவனது இளம் துணையாள்

செம் பொட்டழித்து

வெண் கதர் உடுத்தி

கைகளுக்கு கண்ணாடி வளையல் போட்டு

அவை கலகலக்கும் போதினிலே..!?


 

சில முன்னாளின் சீதாபிராட்டியர்கள்

அவள் நெற்றிப் பொட்டளித்து

அவள் கரம்பற்றி காப்புடைத்து

அவள் கழுத்தினை தினம் கறுவும்

தாலிக் கயிற்றினை அறுத்தெடுத்து..!!?

இத்தனைக்கும் இதற்கும் மேலான

அத்தனை சமூக கற்பிதங்களுக்கும்

அடிமையான அறிவுக் கொழுந்தெனும்

அவ்வூர் மண்ணின் பெரிசுகள்

மனிதவதை செய்யும் நிந்தனைக்குள்

அவளை மாட்டி வைத்த நிலையிதனை

நினைந்து அவள் அழுகையிலே..!?

 

இராவெலாம் பாற்சொரிந்த

நிலவு செத்த நடுப் பொழுதின்

பக்கமெனும் எரிகாட்டில்

பூதவுடலான அவள் துணையின்

தலைமீது எரியூட்டி..,

அவன் கனன்று எரியும்போது..!?

இந்த உயிர்த் துணையாளும்

அவனொடு துடிதுடித்தெரிந்து

சாம்பலாகும் உயிர் உடம்பின்

உடன் கட்டை ஏற்றம்

இப்பொழுதில்..,

சற்றே மாறிப் போனாலும்..,

 

இந்த மனிதர்களின் சா பார்த்து

அவர் நெஞ்சில் ஏறுகின்ற

நெஞ்சாங்கட்டை மரங்களான

இந்த பூவரச மரங்களின்

முற்றிய வேர்களுக்கு

இன்னுமொரு மரியாதை..?

 

எந்தன் அம்மாவின்

நாளந்த அடுப்பெரிவில்..,

அரைத்த மாவை

அவித்தெடுத்து அதை அரித்து

அதில் சுடுநீர்விட்டுக் குழைத்து

அதை சிக்கலான தட்டுகளில்

நெழிய நெழியப் புழியும்

புதுமையைக் கண்டுபிடித்த

தமிழரின் இயந்திரம் என்ற

இடியப்ப உரலுக்கு

தகும் என்பதுதான் அவை.

 

இருந்தும்

காடழியும் மரம் தறித்து

அதைக் காசாக்கும்

மரக்காலைகளும் அங்காடிகளும்

சிறிலங்காவின் சம்பிரதாய

ஆகம விதிமுறை வழிகளினால்

தினந்தோறும் எரி குண்டெறிந்து

குடும்பம் குடும்பமாக சுட்டெரித்து

சொந்த வீடுகளையே எரிகாடாக்கி

அனைவரையும் ஓரிடத்தில்

உடன்கட்டை ஏற்றிய

அந்த யுத்த கங்கண காலத்தில்..!?

எத்தனையோ மனிதர்களின்

நெஞ்சேறி எரித்த

இந்த மரங்களின்

இலை பிடுங்கி – அதில்

பீப்பீ சுத்தி ஊதிய காலமும்

அந்தச் சுகங்களும்

இந்த புலம் பெயர்வுடன்

கருகியேபோனது.

 

மாணிக்கம்

29/04/2011

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – மாணிக்கம் (தொடர் : 01)

2.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – (தொடர் : 02)


Last Updated on Tuesday, 13 March 2012 22:36