Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கனடா அரசின் புலிகள் மீதான தடை – சில கேள்விகள்

  • PDF

கனடா கேன்சவேட்டிவ் அரசு விடுதலைப்புலிகள் உட்பட பல அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாகக் கருதி கனடாவில் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை பல திருப்பங்களை இலங்கை ஆரசியலிலும் சமாதான முயற்சியிலும் ஏற்படுத்தவல்லது. இதைவிடவும் இந்த தடையானது எப்படி எந்த விடயங்களை பாதிக்கும் என்பதை பல கோணங்களிலிருந்தும் ஆராயப்பட வேண்டும்.

 

சர்வதேசத்தின் பார்வையில் விடுதலைப்புலிகளும் அவர்களின் பாசிசமும்


புலிகளின் தேவையும் அவர்களது அரசியலும்


சமாதானப் பேச்சுவார்த்தையும் இதன் உள்ளார்த்தமும்.

 


இலங்கை அரசாங்கத்தின் நலனும் இனவாதமும்

 

மேற்குலக நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளையும் அந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்களையும் கணிப்பிடும் முறையை சற்று விழிப்புணர்வுடன் பார்க்கவேண்டியுள்ளது. குறிப்பாக அந்த நாடுகளில் உள்ள பிற்போக்குக் கட்சிகள் (கேன்சவேட்டிவ் கட்சி) மூன்றாம் உலகநாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் காட்டுமிராண்டிகளாகவே வாழ்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு நாகரீகத்தை நாங்களே புகட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்தந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்களில் உள்ள நியாய அநியாயத் தன்மைகளை ஆழமாக பார்ப்பதைத் தவிர்த்து மேலோட்டமாகப் பார்த்து வெறும் மொட்டையான தீர்வினை தாங்களே தீர்மானித்து விடுவார்கள். விடுதலைப்புலிகள் பாசிஸ்ட்டுக்களா இல்லையா என்று கேள்வியை பின்னர் பார்ப்போம். சரி விடுதலைப் புலிகள் இல்லாமல் (உதாரணத்திற்கு)மிகச் சிறப்பான முறையிலோ அல்லது முடிந்த அளவிலென்றாலும் ஐனநாயகப் பண்புடன் ஒரு போராட்டமோ ஒரு இயக்கமோ நல்ல சமத்துவக் கொள்கையுடனே போராடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் என்ன செய்திருப்பார்கள். விடுதலைக்கு ஒரு மாதம் முதல் வரையிலும் தென்னாபிரிக்காவையும் நெல்சன் மண்டேலாவையும் பயங்கரவாத சாயம் கொண்டு விமர்சித்தவர்கள் விடுதலைக்குப் பின்னர் தவிர்க்க முடியாமல் விடுதலைப்போராட்டமாக பேசினார்கள்.

 

கேன்சவேட்டிவ் கட்சி புலிகளை தடைசெய்தமை தமிழ் பேசும் மக்களில் கொண்ட அன்பினால் அல்ல. அல்லது தமிழர்களில் மேல் புலிகள் அராஐகம் செய்தார்கள் என்பதற்காகவும் அல்ல. இதுவே தான் இவர்களின் கொள்கை. இவர்களிடம் அமெரிக்கா அளவிற்குப் பலமும் புஸ் அளவிற்கு அதிகாரமும் இருந்தால் தங்கள் படையினை தமிழ்பிரதேசத்திற்கு அனுப்பி அங்கே கூட தடைசெய்யக்கூடியவர்கள்.

 

எனது வாதம் மேற்கத்திய நாடுகளில் இவர்கள் மட்டும்தான் அரசியலில் உள்ளவர்கள் என்பதல்ல. ஆனால் இந்தக் கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்தால் சரியான அரசியல் சக்திகளுக்கும் கூட பாதகமான விளைவுகள்தான்.

 

ஆகவே புலிகளின் அராஐகத்தை வெறுப்பவர்கள் கூட இந்தத்தடை மூலம் குறுகிய சந்தோசங்களை அடையமுடியாது. ஏனெனில் கொள்ளைக்காரனுக்கூடாக கள்ளனுக்கு தண்டனை வழங்குவது சரியா?

 

எனவே புலிகளின் அராஐகத்திற்கும் பாசிசத்துக்குமான தண்டனையை வழங்கும் பாத்தியதை உடையவர்கள் இலங்கை தமிழ்பேசும் மக்கள் மட்டுமேதான். ஆகவே இத்தண்டனையினை வழங்க சிங்கள அரசியல்வாதிகளுக்கோ இந்திய அரசிற்கோ அமெரிக்க அரசிற்கோ ஏன் கனடிய அரசிற்கோ கிடையாது.

 

ஆனால் கனடிய மண்ணில் கூட புலிகளின் அராஐகம் நடந்தது என்பது உண்மை ஆகவே கனடிய மண்ணின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புணர்வு என்னும் பார்வையில் இதனை சரியான பக்கத்திலும் பார்க்கமுடியும்.

 

ஓவ்வொரு மனிதனும் தான் விரும்பும் கொள்கைக்காக போராடும் உரிமையும் ஒவ்வொரு சமூகமும் தான் விரும்பும் விடுதலைக்காக போராடும் உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் சமூக இயங்கியல் மிகவும் வேகமாக முன்னோக்கிச்செல்லும்.

 

புலிகளின் நிலைப்பாடும் அவர்களின் அரசியலும் என்ற வகையில் தாங்கள் மட்டுமே தமிழர் தரப்பு என்ற வாதத்தினூடாக தங்களை தமிழ் தேசியத்தின் பிரதிநிதியாக பிரகடனப்படுத்தும் முறைமையானது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது என்பது ஒரு பாரிய கேள்வி. இந்தக் கேள்வி மாற்று இயக்கங்களையும் தமிழர் பிரதிநிதிகளாக பார்க்கவேண்டும் என்கின்ற வகையிலிருந்து கேட்கவில்லை. மாறாக இலங்கைத் தமிழ் பேசும் மக்களை ஒருமித்த கூட்டாகக் கருதமுடியாது. காரணம் முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்பாறை மட்டக்களப்பு பிரதேச வேற்றுமை கூட இன்று கூர்மையடைந்துள்ளது என்பது வேதனையான தவிர்க்கமுடியாத உண்மையாகும். இந்தச் சமூகங்கள் எத்தனை விகிதம் புலிகளின் பிரதிநிதித்துவத்தினை மனமார ஏற்றுக்கொள்ளும்?


புலிகள் தங்களின் ஆளுமைக்குள் முற்று முழுதாக தமிழர் தரப்பினை தக்கவைத்துக்கொள்வதற்கு முன்னர் அதனை நிறைவேற்ற மற்றைய எல்லா அரசியல் அமைப்புக்களையும் தடைசெய்தார்கள். தங்களை நிபந்தனையற்று ஏற்றுக்கொள்பவர்களை தவிர மாற்றுக்கட்சி மாற்று அரசியல் என்பன முற்றாக புலிகளால் நிராகரிக்கப்பட்டது.

 

அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மாற்று அரசியல் மறுக்கப்படுவதும் ஐனநாயகம் நிராகரிக்கப்படுவதும் தமிழ்ஈழ மண்ணிலும் கனடிய மண்ணிலும் யதார்த்தமாகின்றது.


இது இவ்வாறிருக்க இன்று மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள். நடுநிலைமை வகித்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடம் உருவான பிரதான கேள்விகள் எவை?


புலிகளை தமிழ் தேசிய சக்தியாக அங்கீகரிப்பதா இல்லையா என்பது?

அதே நேரம் தேசிய சக்தியாக பார்ப்பதா இல்லையா என்பதை விடுத்து தமிழர் தரப்பில் வேறு யார்?

 

மேற்சொன்ன கேள்விகளுக்கு பதிலை ஆளுக்காள் அரசியல் விஞ்ஞான விளப்பங்களை செய்வதை விடுத்து தமிழ் பேசும் மக்களிடையே விட்டுவிடுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். ஆனால் மக்களின் குரல் இன்றைய சூழலில் எவ்வளவு பலமானது என்பது யாவருக்கும் தெரிந்ததொன்று. இனந்தெரியாதவர்களால் இனந்தெரியாதவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் இச்சூழலில் இது மிகவும் கடினமானது.

 

புலிகளின் நடவடிக்கைகள் புலம் பெயர்ந்த நாடுகளில் எப்படிப்பட்ட அரசியல் வரலாற்றை வெளிப்படுத்தியது. பல புத்திஜீவிகள் கொல்லப்பட்டும் பல பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டும் பல தனிநபர்கள் அச்சுறுத்தப்பட்டும் பல வியாபார தாபனங்கள் பினாமியாக்கப்பட்டும் ஒரு பலவந்தமான ஆளுமை மூலம்தான் பெரும்பான்மை பலத்தினை தங்கள் பக்கமாக்கினார்கள் அல்லது காட்டிக்கொண்டார்கள்.

 

இதற்கு எதிர்மாறான நிலைப்பாடு கொண்டவர்கள் பலர் தங்களிடையே பல முற்போக்கான அரசியல் சமூக எண்ணங்களை கொண்டிருந்தபோதும் புலிகளை பழிவாங்குவதே முதற்கடமை என்று எப்படிப்பட்ட அதிகார சக்திகளுடன் இணைந்தென்றாலும் (புலிகளை விடவும் மோசமான பாசிச சக்திகள் பல இன்று பாரிய அதிகார இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள்) அதனை நடைமுறைப்படுத்த நினைக்கின்றனர்.

 

இவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கான பிரதான பங்கு புலிகளின் அதீதமான பாசிசப்போக்குதான் காரணம். இதனை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இவர்களின் எதிர் நடவடிக்கைகள் காரணமாக இந்தத்தடையினை கனடிய அரசு கொண்டுவரவில்லை. மற்றும் மனிதஉரிமை கண்காணிப்புக்குழுவின் அறிக்கையும் ஒரு முழுமையான காரணமாக அமையமாட்டாது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே இந்த முடிவு கேன்சவேட்டிவ் கட்சிக்கு இருந்தது.

 

புலம்பெயர்ந்த மக்களில் பெரும்தொகையான எண்ணிக்கையும் ஓரளவுக்கு செறிந்தும் வாழும் சூழல் கனடாவிலும் அதிலும் ரொறொன்ரோவில் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் கொண்டுவரப்பட்ட தடையிலும் பார்க்க இது தாக்கமானதும் தார்ப்பரியமானதுமாகும். காரணம் கனடாவில் பல படித்த இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் கல்வியறிவு இந்தநாட்டின் புதிய பரிமாணம் ஊடகவியலறிவு இணையத்தளப் பிரச்சாரம் என்பவற்றின் மூலம் புலிகளுக்காக வேலை செய்வது என்பது ஒரு முற்போக்கான தமிழ்த்தேசியத்திற்கு உழைப்பதாகும் என்றும் நம்பிக்கொண்டிருந்தார்கள். கடுமையான அர்ப்பணிப்புடனும் உழைத்தார்கள் என்பதும் உண்மைதான். (பேராசிரியர் சிவத்தம்பிக்கு மட்டும் இது தெரியவில்லை) இவர்களிடம் வரலாற்றுரீதியிலான தமிழ்த்தேசிய அரசியலை கலந்துரையாடமுடியாததற்குக் காரணம் இவர்களில் பெரும்பான்மையினர் 25 வயதிற்குட்பட்டவர்களாவர். பெரும்பாலோர் புலிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றைதான் கற்றவர்கள். பதினைந்து வருடங்களிற்கு முன்னர் இயக்கங்களிடையே நடந்த குத்து வெட்டுகள் கழுத்தறுப்புகள் இருட்டடிப்புகள் என்பவற்றின் உண்மை வரலாற்றினை சொல்லப்போனால் நம்பவோ இருந்து கேட்கவோ இவர்கள் தயாராக இல்லை.

 

இந்தத் தமிழ்த் தேசியத்திற்கான புனைவு வரலாறு என்பது புலிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உருவாகிய தமிழ் தேசிய கட்சிகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு உறுதுணையாக பல அனுபவம் மிக்க புத்திஜீவிகள் உண்மை வரலாற்றை கூறாமல் புலிகளின் வாய்ப்பாட்டையே பாடுகிறார்கள் தங்கள் சொந்தப்பிழைப்புக்காக.


இந்தத்தடை என்பது புலிகளின் “அடிப்படை இயந்திர அமைப்பை” ஆட்டுவிக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு ஓரளவுக்கு பிரச்சினை உள்ளது. இதன் காரணத்தால் பொருளாதாரத் தேடல்களுக்கும் ஓரு பிரச்சனைதான்.

 

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக உளவியல் தாக்கம் என்பதுதான் பாரிய பிரச்சனை. மனரீதியில் அசைக்கமுடியாத நம்பகமான மலை ஒன்றின்மீது பல கேள்விகள் யதார்த்தமான முறையில் எழுகின்றன.

 

புலிகளின் போராட்ட வரலாற்றில் இது ஒரு ஆரம்ப வளர்ச்சிப்பருவத்தில் நடக்கவில்லை. புலிகளும ஓர் நிர்வாகத்தை தமிழ்ப்பிரதேசத்தின் ஒரு பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமளவிற்கு வளர்ந்து கடைசி யுத்தநிறுத்தத்திற்கு என்றாலும் அரசு தங்களுடன்தான் பேசவேவண்டும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்ட நிலை என்பதை மறுக்கமுடியாது. சர்வதேச சமூகமும் இதனை ஒத்துக்கொண்டுள்ளது. அரசும் புலிகளும் திறந்த மனதுடன் சமாதானத்தில் ஈடுபடவில்லையென்றாலும் புலிகள் இனியாவது திறந்த மனதுடன் ஐனநாயகத்தை பேணும் நோக்கில் ஆரம்பக்கட்டமாக பழிவாங்கல் அராஐக நடவடிக்கைகளை நிறுத்த ஒத்துக்கொள்ளவேண்டும்.

 

சமாதானப் பேச்சுவார்த்தையும் அதன் உள்ளர்த்தமும் என்று பார்க்க முதல் யுத்தநிறுத்தத்தை பற்றிப்பார்க்காமல் போகமுடியாது. ஆனால் அது ஓரளவுக்கு பழங்கதையாகிவிட்டது.


சமாதானமும் இனப்பிரச்சனையும் என்று பார்த்தால் அரசின் ஒடுக்குமுறை திட்டமிட்ட குடியேற்றங்கள் ஒன்றும் புதிதல்ல தொடர்கின்றது. அரசாங்கத்தின் அரசியல் முடிவுகளை முடிவெடுப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளல்ல “தீர்மானிக்கும் சக்தியான சிங்கள இனவாத சுற்றுவட்டம்”. இவர்களை ஆயுதப் போராட்டம் ஒன்றினூடாக மட்டுமே செவிசாய்க்கப்பண்ண முடியும்.

 

ஆனால் பாதிக்கப்படுகின்ற இனங்கள் என்று பார்த்தால் (தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக மக்கள்) தங்களின் உண்மையான பிரச்சனைக்கு சரியான தீர்வு என்றவகையில் பார்க்கின்றார்களா?


இல்லை தங்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என்று நம்பும் தங்களின் பிரதிநிதி சொல்லுகின்ற தீர்வை பார்க்கின்றார்களா?

 

இலங்கை வரலாற்றில் தவிர்க்கமுடியாத யதார்த்மாக இரண்டாவது நிலைப்பாட்டைத்தான் காணமுடிகின்றது. யார் எந்தக்கட்சி அரசுடன் பேசப்போகின்றார்கள் என்று பார்க்கின்றார்களே அல்லாமல் என்ன பேசினார்கள் என்று பார்ப்பதில்லை.

 

சரி தங்களின் பிரதிநிதிகள் சொல்லும் தீர்விலிருந்துதான் அமையவேண்டும் என்று பார்த்தாலும் யாருக்கு யார் பிரதிநிதி என்று பார்க்கவேண்டும். சிங்களத்தரப்பிலிருந்து தமிழர் தரப்பை நோக்கி முட்டாள்தனமாக கூறுகிறார்கள் பிரபாகரன் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பிரதிநிதியல்ல என்று.


தமிழர்கள் அல்லவா கூறவேண்டும் யார் எங்கள் பிரதிநிதி என்பதை.

 

இது சுயநிர்ணய உரிமைக்குள் அடங்கவில்லையா?


மறுபடியும் பார்த்தால் மேற்கூறிய அதே கருத்தைதான் தமிழர் தரப்பினர் கூறுகிறார்கள் முஸ்லிம் மக்களைப் பார்த்து.

 

முஸ்லிம் மக்களல்லவா முடிவெடுக்கவேண்டும் தங்களின் பிரதிநிநி யாரென்று. அதே வெள்ளாள யாழ்ப்பாண மையவாதம். இங்கே! தேசியம் போய் மறைய ஆண்டபரம்பரை மேல்வருகின்றது. மக்களிடம் அரசியல் கல்வி வளராமல் இருப்பதற்கு காரணம் தமிழர்களின் அரசியல் தலமை வெள்ளை வேட்டி அப்புக்காத்துக்களின் கறுப்புக் கோட்டுக்களிலிருந்து சீருடைக்கு மட்டும் மாறியுள்ளதுதான் காரணம்.

 

இலங்கை அரசின் நலனும் இனவாதமும் இந்தத் தடை மூலம் பெரியநன்மை பெறுவார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இந்தத் தடை போன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தடை செய்ய இதனை உதாரணமாக்கி கோரிக்கை வைப்பதற்கு கனடியத் தடை ஒரு நல்ல சாட்டு.

 

இலங்கை அரசு எதிர்பார்க்கும் பாரிய விடயம் புலிகளை பலவீனப்படுத்தி விடுவதன் மூலம் நாடு பிளவுபடுவதை தவிர்க்கலாம் என்பதுதான். சிங்கள மக்களிடம் வாக்கு பெறுவதற்கும் அங்கீகாரம் பெற்று ஆட்சியமைப்பதற்கும் தேவையான முக்கியமான அம்சங்கள் இவைதான்.


மறுபக்கம் இடதுசாரித் தத்துவத்தில் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் JVP யினர் புலிகள் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளல்ல என்று கூறும் போக்கு ஏற்கமுடியாதவொன்று. இன்று வரையிலும் தேசியஇனப்பிரச்சினகைகு ஓரளவேனும் சர்வதேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வாக “பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமை” யைதான் பார்க்க முடியும். இது முக்கியமாக பெரும்பாலும் சர்வதேசிய வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியத்தீர்வு ஒன்று. மாக்ஸ்சிஸ்ட்டுகளாக தங்களை வலியுறுத்துபவர்கள் (JVP) தங்களின் நாட்டில் மட்டும் இதனை ஏற்கவில்லை.

 

இதில் தமிழர் தரப்பு ஒன்றுக்கும் குறைந்ததல்ல. முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி விடுதலைப்புலிகளாக இருந்தாலும் சரி ஒன்றையே தான் கூறுகிறார்கள். தங்களை அதாவது பெரும்பான்மை தமிழர்களை அனுசரித்துத்தான் முஸ்லிம்களின் அரசியல் அமையவேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்துகிறார்கள். சிங்கள இனவாதிகளின் கருத்துக்கு இது ஒன்றும் குறைந்தது இல்லை.

 

இதைவிட புதிதாக ஆரம்பித்துள்ள மட்டக்களப்பு தேசியவாதத்தை பார்த்தாலும் இதே நிலமைதான். இன்றைய தேசிய இனப்பிரச்சனையில் புதிதாக இதுவும் அவசியமா என்று வேதனையான ஒரு கேள்விதான். ஆனால் எங்கு பிரிவினையும் தனித்துவமும் தேவை என்று ஒரு சமூகக்கூட்டம் அங்கலாய்கின்றதோ அங்கே தான் சார்ந்து நிற்கின்ற பெரும்பான்மையிடமிருந்து தனக்கு பாதுகாப்பின்மையையும் உத்தரவாதத்தையும் கேள்வியாக்குகின்றது என்பது யதார்த்தம். முப்பதிற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் கொண்ட இடைக்கால நிர்வாக சபையில் ஒருவர்தானும் மட்டக்களப்பு அம்பாறையை சார்ந்தவர்கள் இல்லையே என்ற கேள்வி கருணாவினால் கேட்கப்பட்டது. இதற்கு இன்றுவரை பதிலில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய பொழுதிலும் தேசிய விடுதலை போராட்டமானது யாழ்ப்பாண மையவாதத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துமானால் மட்டக்களப்பு தேசியவாதம் தவிர்க்க முடியாத ஒன்று. இங்கு கருணா என்ற தனிநபர் பற்றிய கேள்வி இரண்டாம் பட்சமானது.

 

இந்தக் கேள்வி யாரால் உருவாக்கப்பட்டது என்பது இங்கு அவசியமல்ல. இக்கேள்வியில் உள்ள நியாயத் தன்மைதான் முக்கியம்.

 

புலிகளின் வரலாறுதான் புலிகளின் எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும். அரசியலற்ற ஆயுதப்போராட்டம் எங்கே கொண்டுபோய்விடும் என்பது உலகத்தில் மனித வரலாற்றில் கண்கூடுகள் பல.

 

புலிகள் இனிமேலாவது தமக்குமட்டுமே உரிய புலித்தேசித்திற்கான அங்கீகாரத்தினை தேடுவதை விடுத்து தமிழ்த் தேசியத்திற்காக (முஸ்லிம்களினதும் மட்டக்களப்பு அம்பாறை நலனும் அடங்கிய) நன்மை என்ற வகையில் செயற்படத் தொடங்கவேண்டும். அதிலும் பார்க்க அவசியம் யுத்தம் ஆயுதப்போராட்டம் வன்முறை என்பவை அரசியல் விடுதலைக்கான ஒரு வலியுறுத்தலே அன்றி தீர்வு அல்ல என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். போரில வென்றவர்;கள் யாருமில்லை மனித வரலாற்றில். வெற்றி என்று தங்களின் குறுகிய கண்ணோட்டத்துடன் முடிவுசெய்கிறார்களே அன்றி அது முடிவல்ல.


ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுக்கும் எந்தப்போராட்டமும் ஒரு கொலைகூட நடக்கக்கூடாது என்ற விமர்சனத்தினை எதிர்பார்க்கத்தான் வேண்டும். அது நடைமுறை சாத்தியம் அல்ல. இது யதார்த்தம். ஆனால் அவசியமற்ற தனிநபர் பழிவாங்கல்களை நிறுத்தியே ஆகவேண்டும்.


வரலாறு எப்படி இருந்தாலும் இன்று ஓடுவது அப்பாவிகளின் இரத்தம் வழக்கம் போன்று அரசியல்வாதிகள் தப்பிவிடுவார்கள் அரசியல் ஆய்வாய்வாளர்கள் விமர்சனம் வைப்பார்கள்.


இதன் ஆரம்பமாக இரு தரப்பினரும் ( புலிகள் தரப்பும் அரசும் அரசுசார்பு தமிழ் ஆயுதக்குழுக்களும்) பொது மன்னிப்பாக ஒருவருக்கு ஒருவர் இணக்கப்பாட்டிற்கு வருவது இன்றைய காலகட்டத்தின் மிகவும் அவசியமான ஒன்று.

 

எதிர்கால இலங்கையின் அரசியலில் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு என்பது ஒரு சோசலிச வடிவத்தை நேர்மையாக கடைப்பிடிக்கும் கூட்டு முயற்சிக்கூடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். காரணம் பாசிசத் தேசியமும் இனவாதமும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடாத சதுரங்கத்தைத்தான் நடத்தும். இது அதிகாரப்போட்டிக்காக நடத்த்தப்படும் அப்பாவிகளை பலியாக்கும் வெறும் அரசியல் நாடகம்

 

இதைவிடுத்து பாரிய மக்கள் படுகொலைக்கூடாக சர்வதேசிய அல்லது உலக வல்லரசுகளின் நேரடி இராணுவ தலையீட்டினை நாங்கள் அனுமதித்தால் இன்னுமொரு ஈராக் இன்னுமொரு ஆப்கானிஸ்தான் போன்று மோசமான சீர்குலைவை அனுமதித்தவர்களாவோம்

சபேசன் .
30.07.06

 

Last Updated on Sunday, 20 April 2008 22:10