Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அப்பழுக்கற்ற தியாகங்களை யாரும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதை வைத்து வியாபாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. இவைகள் மட்டும் தான் தியாகம், வீரம் என்ற கூறுகின்ற பாசிசப் புரட்டை முன்வைத்து பிழைப்பதை அனுமதிக்க முடியாது.

இலங்கையில் மக்கள் பாசிச இனவாத அரசின் கோரப்பிடியில் சிக்கி, மூச்சுக் கூட விடமுடியாதவர்களாக உள்ளனர். புலத்தில் புலியின் பாசிசப் பிடியில் சிக்கி, மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது வாழ்கின்றனர். இப்படி அரசு – புலி இரண்டும் மக்களின் உரிமைகளை ஒடுக்கி இதில் குளிர்காய்கின்றது.

 

 

 

புலத்தில் எஞ்சிய புலி மாபியாக்கள், புலிச்சொத்தை தமது தனிப்பட்ட சொத்தாக்கி அதை மூடிமறைக்கவும், அதைக் கேள்வி கேட்காத வண்ணம் தடுக்கவும் "மாவீரர் தினம்" கொண்டாட்டம்.

பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள் முதல் புலிகளால் கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் மாற்றுப் போராளிகள் கருத்தாளர்கள் எவரையும் நினைவு கோர மறுக்கின்;ற பாசிட்டுகளின், தனித்த கொண்டாட்டம் தான் "மாவீரர் தினம்". ஆக இது மக்களுக்கு எதிரான, பாசிட்டுகளின் வக்கிரத்தை மட்டும் வெளிப்டுத்தும் "மாவீரர் தினம்".

தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்கள் போராட்டத்தை அழித்து, தமிழ்மக்களை அரசியல் அனாதையாக்கிய புலிக் கூட்டம், அதற்கு நியாயம் கற்பிக்கும் தினம்;தான் மாவீரர் தினம்;. போராட்டத்தின் பெயரில் மற்றவனைக் வகைதொகையின்றி கொன்று போராட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், இறுதியில் தங்கள் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ள ஏகாதிபத்திய தளத்துக்கு ஏற்ப சரணடைந்து மரணித்த கூட்டத்தின் பின்னான துரோக அரசியலின் பின்னணியில், அதன் சொத்துகளை அபகரித்த கூட்டம் "மாவீரர் தினம்" என்ற வியாபாரத்தை தொடர்ந்து நடத்துகின்றது.

செத்தவனின் உறவினர்களின் உணர்வுகளைக் கொண்டு, தங்கள் வியாபாரத்தை தொடருகின்றவர்கள் "மாவீரர் தினம்" என்கின்றனர். புலியின் பெயரில் திரட்டிய மக்கள் பணத்தை கையாடல் செய்து, அதில் வாழும் கூட்டம் "மாவீரர்" பற்றி வீர வசனம் பேசி கொசிப்படிப்பதன் மூலம் இந்தச் சொத்தை பற்றி கேள்வியை இல்லாததாக்கும் நாள்.

போராட்டத்தின் பெயரில் புலத்தில் லும்பன்தனமான வன்முறை கும்பலை உருவாக்கி வைத்துக் கொண்டு, தாம் அல்லாத அனைவர் மேலும் வக்கிரமாக பாய்ந்து குதறும் மாபியாப் போக்கிரிகள் கொட்டமடிக்கும் நாள்.

இதுதான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி தம்மைத் தியாகம் செய்தவர்கள், இது விடுதலைப் போராட்டமல்ல என்று புரிந்தும் தப்ப வழியின்றி மரணித்தவர்கள், பலாத்காரமாக பிடித்துச்சென்று புலிகளால் யுத்தமுனையில் பலியிடப்பட்டவர்களை மையமாக வைத்து "மாவீரர் தினம்" என்ற பெயரில் புலிகள் நடத்தும் பாசிசக் கூத்து, மரணித்த உறவினர்களின் உணர்வுகளைத் திருடி வியாபாரம் செய்வதைத் தாண்டி இதற்கு வேறு எந்த அர்த்தமும் இருப்பதில்லை.

இப்படி இவர்கள் கொண்டாடும் அந்த "மாவீரர்"களின் பெரும்பாலான உறவினர்கள் ஒரு நேரக் கஞ்சிக்காக மண்ணில் கையேந்தி நிற்கின்றனர். ஆனால் அவர்கள் பெயரில் கொண்டாட்டம். அந்த மக்களின் பெயரில் திரட்டிய பல நூறு கோடி சொத்தை, தமது தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டவர்கள் தான் இந்தக் கொண்டாட்டத்தை நடத்துகின்றனர். "மாவீரர்" தினம் என்கின்றனர்.

தமிழ் மக்களிடம் திருடிய பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட முரண்பாடும், அதை தக்க வைக்க முனையும் போராட்டத்தின் பின்னணியில், இம்முறை இலண்டலின் இரண்டு மாவீரர் தின அறிவுப்பு வெளியாகியுள்ளது. மோதல்கள் தொடங்கியுள்ளது. நல்ல தொடக்கம்.

தமிழ் மக்களைச் சொல்லி, அவர்கள் பெயரால் திண்டு கொழுப்பெடுத்த குண்டர்களுக்கு இடையேயான மோதல் பகிரங்கமாக வீதிகளில் நடக்கும் என்பதை, அதன் பின்னுள்ள வன்முறையை அடிப்படையாகக் கொண்ட மாபியாக் குண்டர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றது. இதை மரணித்தவர்களின் பெயரில் அரங்கேற்றத் துடிக்கின்றனர். இதன் மூலம் பகுத்தறிவற்ற மந்தைகளாக வாழும் தமிழ் சமூகம், தன்னை விடுவிப்பதற்கான சூழலை இந்த மோதல்கள் தொடக்கி வைக்கும் என்று நம்பலாம்.

 

பி.இரயாகரன்

04.10.2011