Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 3

  • PDF

தாங்கள் யார் என்பதை மூடிமறைக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் அரசியலை மூடிமறைக்க முடியாது. தாங்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் நிஜவாழ்வு சார்ந்த அரசியல் முகம் அம்பலமாகிவிடும் என்று கருதுகின்றவர்கள் கூட, புனைபெயரில் தான் ஒளித்துக் கொள்கின்றனர். எதிர்ப்புரட்சி அரசியலின் ஒருபக்கம், இப்படி தன்னை ஓளித்து வைத்துக்கொண்டுதான், மக்களை மற்றொரு வடிவில் ஏய்க்க முடிகின்றது.

ஒரு கருத்தை முன்வைக்கும் நோக்கம் மக்கள் நலன் சாராத வரை, அதைச் சார்ந்து வெளிப்படையாக கருத்தை முன்வைக்;காத வரை, அவை அனைத்தும் மக்களைத் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழவைக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும்.

இந்தவகையில் உலகம் தளுவிய அளவில், மக்கள் விரோதிகள் தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவிடாது தடுக்க, அங்குமிங்குமாக அலையவைக்கும் வண்ணம் கருத்துக்களை உற்பத்திசெய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இந்த வகையில் அரபுலக சர்வாதிகாரிகள், இலங்கை அரசு எல்லாம் வெளிப்படையாகவே கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனர். இந்த வகையில் கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் இன்றைய உலகில் உள்ளது. கட்டுரைகள், ஆய்வுகள், அவதூறுகள் முதல் மக்கள் விரோதிகளின் நல்ல பக்கங்கள் என்று எடுத்துக்காட்ட முனையும் பிரச்சாரங்களைக் கூட, கூலிக்கு மாரடிக்கும் ஒரு உலகத்தில் நாங்கள் வாழ்கின்றோம். இப்படி தொழில் ரீதியான பிரச்சாரங்கள் கூட, இன்று நல்ல வியாபாரமாகிவிட்டது. இங்கு பிரச்சாரம் தான் விளம்பரமாகின்றது. மக்கள் இதன்பால் மந்தையாக்கப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழவைக்கப்படுகின்றனர்.

 

 

இந்த வகையில் இலங்கை அரசாங்கம் புலத்தில் இன்று தனக்காக பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களையும், கூலியாட்களையும் கொண்டு இயங்குகின்றது. இதில் எந்தச் சந்தேகமும் இன்று யாருக்கும் கிடையாது. ஆனால் யார், எந்த வடிவில்;, எங்கே என்பதுதான் வெளிப்படையற்றதாக உள்ளது. இதற்குள் தன்னியல்;பாக, கூலியின்றி அந்தக் கருத்தின்பால் சென்று விட்டவர்களும் உள்ளனர். உண்மையில் மக்கள் சார்புக் கருத்துக்குள், தன் மக்கள் விரோத கருத்தை புகுத்திக்கொண்டும், தன்னை மூடிமறைத்துக் கொண்டும், ஜனநாயகத்தின் துரும்மை தூக்கி நிறுத்திக்கொண்டும், வலதும் இடதுமற்ற பொது வெளியில் தாம் நடுநிலையில் நேர்மையாகயிருப்பதாகக் காட்டிக்கொண்டு தான், அனைத்து எதிர்ப்புரட்சிக் கூறுகளும் பதுங்கிப் பாய்கின்றது

இப்படிக் கட்டுரைகள், ஆய்வுகள் முதல் பின்னோட்டம் போடுவது வரையான பலமுனை பிரச்சாரத்தில் (இலங்கை அரசு) ஈடுபடுகின்றது. மக்கள் விரோத வலதுசாரியத்தை முன்தள்ளும் போது, இடதுசாரியம் கலந்த தந்திர உபாயத்தையும், "நடுநிலை உண்மை" என்று வலதும் இடதுமற்றதாக காட்டியும், விலாங்குத்தனத்துடன் அங்குமிங்குமாக விலகியும், விதவிதமாக தன்னை வெளிப்படுத்துகின்றது. ஆனால் அவர்கள் யார், எங்கே எப்படி தம்மை வெளிப்படுகின்றனர் என்பது தெரியாத வண்ணம் இருப்பதால்தான், இந்தப் பிரச்சாரத்தின் வெற்றியே இங்கு வியாபாரமாகவே விரிவடைந்துள்ளது. நிறுவனங்கள் முதல் கூலிக்கு பலர் இதைச் செய்கின்றனர். இப்படி பலதரப்பு கருத்துக்கள் உற்பத்தியாகின்றது.

இந்த வகையில் இதை இனம் காண முடியாத வண்ணம்தான், எம்மைச் சுற்றிய கருத்துக்கள், பிரச்சாரங்கள், பின்னோட்டங்கள் என அனைத்தும், ஒரு குழம்பிய குட்டையில் இருந்து வெளிப்படுகின்றது.

இதை எந்த வகையில், எப்படி நாம் இனம் காண்பது என்பதைப் புரிந்து கொண்டால் தான், இதை குறைந்தபட்சம் நாம் வேறுபடுத்தி அம்பலப்படுத்தி அதை அணுகமுடியும்.

1. வெளிப்படையாக தங்கள் அரசியல் நோக்கத்தை முன்வைக்காத, அதற்காக பிரச்சாரம் கிளர்ச்சியைச் செய்யாத நோக்கம் என்பது, எப்போதும் சந்தேகத்துக்குரியது. இவர்கள் யார்?, எந்த நோக்கில் இருந்து இதை முன்வைக்கின்றனர் என்ற கேள்வி அடிப்படையானது. இதை கேட்காத, அந்த அடிப்படையில் அணுகாத கருத்துகள், மக்கள் சார்ந்து நின்று அணுகாத போக்கின் மற்றொரு பக்கமாகும்.

2.மக்கள் சார்பான கோட்பாடுகள், விடையங்கள், நிகழ்வுகள் எதிர்த்தரப்பால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அதுபற்றி கருத்தற்ற கூட்டம் சந்தேகத்துக்குரியது. கருத்து சொல்பவர்கள் கருத்துச் சொல்லாத மௌனம், எதிர்ப்புரட்சி கூட்டத்தின் எடுபிடித்தனத்தின் மற்றொரு அரசியல் வெளிப்பாடாகும். அதேபோல் அவர்களுடன் சேர்ந்து நின்று தாக்குதலை நடத்தும் கூட்டமும், இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

3..வலதுசாரியத்தை அரசியலாகக் கொண்டும், "நடுநிலை" பேசிக் கொண்டும் வெளிப்படும் கருத்துக்கள் மக்களுக்கு எதிரானது மட்டுமன்றி, சந்தேகத்துக்குரியவர்கள் இங்கு தான் தம்மை மூடிமறைத்துக் கொள்கின்றனர்.

4. இடதுசாரியத்தின் பெயரில் வலதுசாரியத்தை கொண்டு வரும் அங்காடித்தனங்களுக்குள்ளும், இது தன்னை வெளிப்படுத்துகின்றது. இந்த இடதுசாரிய வலதுசாரியம் சமூகத்தின் முரண்பாட்டை, பிரதான முரண்பாடல்லாத மற்றொரு முரண்பாடாக காட்டுவதாகும்.

உதாரணமாக வறுமையை எடுத்தால், வறுமைக்கு காரணம்

1. அதிக சனத்தொகை 2. உணவு விரையமாவது 3. உற்பத்தி நவீனமாகவில்லை 4. விநியோக முறைமை சரியில்லை 5. ஊழல் 6. திட்டமிடப்படாத குடும்ப, சமூக முறைமை 7. உணவைப் பதுக்கல் 8. திட்டமிடாத உற்பத்தி முறைமை 9. கல்வியின்மை … என்று பல முனையில் காட்டுகின்றனர். இதில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்தைக் காட்டியும், சிலர் சுரண்டலையும் வர்க்க அமைப்பையும் கலக்கியும் காட்டுவர். இதன் மூலம் பிரச்சனையை திசைதிருப்பும், வலதுசாரிய இடது சிந்தனை முறை. இதை பன்முகத்தன்மை கொண்ட இடதுசாரியமாகவும், ஏன் ஜனநாயகமாவும் கூட காட்டிக்கொள்கின்றனர். கட்டுரைகள், ஆய்வுகள் என்று, பலமுனையில் இந்த இடதுசாரிய வே~மிட்டு வலதுசாரியம் களமிறங்குகின்றது. இதுதான் நடைமுறையில் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகளாக களத்தில் இறங்குவது. உண்மையில் வறுமைக்கு காரணம் மனிதனை மனிதன் சுரண்டுவதால் ஏற்படும் வர்க்க சமூக அமைப்புத்தான். இதைச் சுற்றித்தான் மற்றைய அனைத்து காரணிகள் அமைகின்றன. இதை திசைதிருப்பியபடியும், மனிதனை மனிதன் சுரண்டுவது ஜனநாயகம் என்றளவுக்கு, இந்த இடது வலது கோட்பாடு சூட்சுமமாக இயங்குகின்றது.

இப்படித்தான் புளட்டின் கொலைகாரத்தனத்தை, சதிகாரத்தனத்தை எதிர்த்து போராடியவர்கள் மேல், குற்றம் சாட்டுகின்ற, திசைதிருப்புகின்ற வலதுசாரி அரசியலை தேர்ந்தெடுத்து முன்தள்ளுகின்றனர்.

 

தொடரும்

பி.இரயாகரன்

12.03.2011

 

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

2.புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2

Last Updated on Saturday, 12 March 2011 07:37