Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அகிலன்-செல்வன் படுகொலையை திரித்தும், மூடிமறைத்தும் கொலைகாரர் வரலாற்றை மீண்டும் எழுதுகின்றார் ஜென்னி

  • PDF

உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் பங்கை மூடிமறைத்தபடி, செத்தவர்களின் பெயரில் மட்டும் குற்றங்களைச் சுமத்தியபடி சொல்லும் வரலாற்றுக்கு பெயர் சுயவிமர்சனமாம். கொலைகாரர்கள் சுயவிமர்சனம் என்றால், தங்களை மூடிமறைத்தல் தான் என்கின்றனர். யாரெல்லாம் அன்று புளட் உட்படுகொலைகளை முன்னின்று செய்தனரோ, யாரெல்லாம் இதற்கு துணை நின்றனரோ, அவர்கள் மறுபடியும் அதை திரித்து புரட்டியதை சுயவிமர்சனம் கொண்ட வரலாறு என்கின்றனர். அன்று இவர்கள் கொன்றவர்களை மறுபடியும் கொன்று, இதற்கு எதிராக போராடியவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் புரட்டுத்தனம் தான், இந்த வரலாறு. இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலின் மகுடிகள்தான் இவர்கள்.

அன்று தீப்பொறி, கொலைகாரர்களிடம் இருந்து தப்பி தலைமறைவான பின், அவர்களை கொல்ல அலைந்த கூட்டம் தான், தங்களால் கொல்லப்பட்ட அகிலன்-செல்வன் கொலை பற்றி திரித்து கதை சொல்லுகின்றது.

15.02.1985 திகதி தீப்பொறி புளட்டில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியது. இது வரலாறு. அதுபோல் 26.03.1985 திகதி, அகிலன்-செல்வனை புளட் கடத்திச்சென்று கொன்றதும் வரலாறு. இப்படியிருக்க 25 வருடம் கழித்து, தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலுடன் தொடரும் கொலைகாரர்கள் மீண்டும் களத்தில் இறங்குகின்றனர். நாங்கள் மட்டும் கொல்லப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த நிலையில், அவர்களின் புரட்சிகர அரசியல் எம்மூடாக தொடர்வதை முறியடிக்க வரலாற்றை மறுபடியும் திரிக்கின்றனர். இலங்கை -இந்திய அரசுகளின் அரசியல் எடுபிடிகளாக இருந்தபடிதான், இதை சுயவிமர்சனம் என்கின்றனர்.

26.03.1985 அகிலன்-செல்வன் கடத்தலை அன்று வெளியாகிய தீப்பொறியின் முதலாவது இதழான, தீப்பொறி (தீப்பொறி-1) அம்பலப்படுத்தியுள்ளது. இரண்டாவது தீப்பொறியும் (தீப்பொறி-2)அதைப் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் அதில் அகிலன்-செல்வன் நீண்டகாலமாகவே அமைப்பில் அதிருப்தியுற்று விலகியிருந்த உண்மையையும், தாங்கள் விலகிய 15.02.1985 அன்று, அவர்களும் அமைப்பில் இருந்து விலகியதாக ஒரு துண்டுப்பிரசுரத்தையும் (தமிழீழ விடுதலைப் போராளிகள் அகிலன் செல்வன் ஆகியோருக்கு எமது இதய அஞ்சலிகள்)தீப்பொறி அன்று வெளியிட்டது. இதை மறுத்து திரிப்பதன் மூலம் தான், தன்னை பாதுகாத்தபடி, உயிருடன் உள்ள தனது கொலைகார கூட்டாளிகளை பாதுகாத்தபடி தான் ஜென்னி அகிலன்-செல்வனை மறுபடியும் கொல்லுகின்றார்.

இப்படி உண்மையிருக்க அன்று புளட்டுக்கு தலைமைதாங்கிய கொலைகார கூட்டம், அவர்களைக் கொன்ற பின் அகிலன்-செல்வன் பின்தளம் சென்றுள்ளதாக ஊர் உலகத்துக்கு கதை கூறியது. இதை அன்று சொன்ன ஜென்னி தான் இன்று, புதுசாக புலடா விடுகின்றார். அந்தக் கொலைகார கூட்டத்தை சேர்ந்த ஜென்னி, அவர்கள் அமைப்பில் இருந்து ஒதுங்கியிருந்ததை மறுக்கின்றார். தீப்பொறி தப்பியோடிய அன்று, அவர்களும் அமைப்பில் இருந்து விலகி தலைமறைவானார்கள். பார்க்க தீப்பொறி துண்டுப்பிரசுரத்தை. இந்த நிலையில் அவர்களை யாழ் வரும்படி எழுதிய கடிதங்கள், கொல்வதற்கல்ல என்று கதையும் சொல்ல முற்படுகின்றார். ஈஸ்வரன் எழுதிய கடிதத்தில் கொல்ல உத்தரவு இருந்ததை கண்டு கொள்ளாத புரட்டுத் தர்க்கம் மிகக் கேவலமானது. தங்களுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்று காட்ட, விதவிதமாக கதை சொல்லுகின்றார். கூட்டத்துக்கு வராதவர்களை வரும்படி கடிதம் கொடுத்ததாகவும், அவர்களைக் கொன்றது ஈஸ்வரன்-சிவராம் தான் என்று, செத்துப் போனவர்களின் பெயரில் மட்டும் கூறி இருப்பவர்களை பாதுகாக்க முனைகின்ற கொலைகார அரசியலாகும்.

புளட்டை தலைமைதாங்கிய மக்கள் விரோதிகளும், கொலைகாரர்களும் தமக்கு ஏற்ற ஒரு புரட்டு வரலாற்றை சொல்ல முனைகின்றனர். இந்த வகையில் தேசம்நெற்றில் ஜென்னி புனைகின்றார். அன்று எதைக் கொலைகார புளட் சொன்னதோ, அதை மீளச் சொல்லுகின்றார். இதை நாம் எதிர்கொண்டு அம்பலப்படுத்துவது இன்று அவசியமானது. இது ஒருபுறம் இருக்க, அகிலன்-செல்வன் கொலை பற்றிய இவர்களின் புரட்டை மட்டும் இங்கு கூர்ந்து பார்ப்போம்.

கடந்த 20 வருடமாக அகிலன்-செல்வன் கொலைகாரர்கள் எம்மைச் சுற்றி புலம்பெயர் அரசியல் தளத்தில், அதை மூடிமறைத்து இயங்குவதையும் நாம் மட்டும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தவர்கள். இதை தனிநபர் தாக்குதல் என்றனர். அவர்கள் உள்ளடங்கிய செயல்பாட்டை முன்னெடுக்க சிலர் கூறினர். இன்று கொலைகாரர்களில் ஒரு பகுதியினர் இறந்த நிலையில், அவர்கள் மேல் மட்டும் இதைக் குற்றஞ்சாட்டி எழுதுவதை சுயவிமர்சனம் என்ற பெயரில், உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் கொலைகார வரலாற்றை மீள பூசி அரங்கேற்ற முனைகின்றனர். நாங்கள் இதை எழுதிய காலத்தில், இவர்கள் இன்று குற்றம் சாட்டும் இந்த கொலைக்கூட்டத்துடன், இவர்கள் ஆடிப்பாடி, கூடிக்கூத்தாடி அவர்களை பாதுகாத்தபடி தங்களை தற்காத்துக்கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த கொலைகாரக் கூட்டம்.

15.02.1985 அன்று தீப்பொறி (பின்தளத்திலும் - தளத்திலும்) வெளியேறிய பின் என்ன நடந்தது?

அவர்களை போட்டுத்தள்ள, புளட் தேடி அலைந்ததுதான் உண்மையான வரலாறு. இதுதான் பின்தளத்திலும், தளத்திலும் அன்றைய புளட் தலைமையின் செயற்பாடாக இருந்தது. இதை செய்வதுதான் தளத்தில் இருந்த ஜென்னி, அசோக், ஈஸ்வரன், பொன்னுத்துரை.. என்று பலரின் அரசியல் தெரிவாக இருந்தது. ஆம், இவர்களுக்கு அஞ்சிய தீப்பொறி, தலைமறைவாக திரிந்தது. இப்படி 15.02.1985 அன்று அமைப்பில் இருந்து விலகி தலைமறைவான அகிலன்-செல்வன், 40 நாட்களின் பின் பிடிபட்ட நிலையில் அவர்களைச் சித்திரவதை செய்து கொன்றனர்.

அன்று தீப்பொறியை தேடி வேட்டையாடிய தலைமைதான் இதைச் செய்தது. இது செத்துப் போன கொலைகாரர்களின் தனிப்பட்ட கொலையல்ல. அவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளவில்லை. செத்துப்போன இருவர்தான், இதைச் செய்ததாக ஜென்னி புலுடா விடுகின்றார். அவர்கள் இவர்களின் கொலைகார மக்கள் விரோத அரசியலுடன் முரண்பட்டும், 15.02.1985 அன்று அமைப்பை விட்டு விலகியும் இருந்தவர்கள். ஆக இவர்கள் தீப்பொறி ஆட்கள் என்று கருதியதால் போடப்பட்டனர்.

ஜென்னியிடம் மிகத் தெளிவாக கேட்கின்றோம், புளட் தீப்பொறியை போடத் தேடி அலையவில்லையா? வரலாற்றை திரிக்காதீர்கள். அகிலன்-செல்வனைக் கொன்று போட, கொலைகாரர் சார்பாக ஜென்னி முன்வைத்த புரட்டுக் காரணத்தைப் பார்ப்போம்.

"பின்தளத்தில் சிவராமிற்கு கிடைக்காத அங்கீகாரத்தை ஈஸ்வரன் தனது கிழக்கு மாகாண பொறுப்பாளர், மத்தியகுழு அதிகாரம் என்பவற்றை பாவித்து செல்வன் - அகிலன் - ரகு ஆகியோரை அப்புறப்படுத்தி அந்த வெற்றிடங்களை தமது கையிலிருப்பவர்களை வைத்து நிரப்பிச் செயற்பட்டார். இதற்கு உதாரணம் செல்வனை கொலை செய்ய வைத்து விட்டு தனது கட்டுப்பாட்டில் இருந்த பிரசாத் என்பவரை பொறுப்பாளராக்கியமை குறிப்பிடத்தக்கது." என்கின்றார்.

அவர்களே அமைப்பை விட்டு விலகியபின், இங்கு அதிகாரத்தை கைப்பற்ற ஈஸ்வரன் தான் போட்டான் என்று பேச்சுக்கு இடமேது! தனது ஆட்களை அதிகாரத்தில் அமர்த்த, ஈஸ்வரன் கொன்றான் என்று எழுதுகின்ற வரலாறு புரட்டாகும். கொலைகாரர்கள்

எழுதுகின்ற வரலாறாச்சே. இங்கு இவர்களுக்கு முரணான, அகிலன்-செல்வனின் மக்கள் சார்பு அரசியலை மறுக்கின்றனர். அவர்கள் அமைப்பில் இருந்து விலகி (பார்க்க தீப்பொறி வெளியீடுகளை) இருந்ததை மறுக்கின்றனர். மாறாக ஈஸ்வரன்-சிவராமின் தனிப்பட்ட அதிகார ஆசையால் நடந்த கொலையாகவே இதைத் திரித்துக் காட்டுகின்றார். அதுவும் தீப்பொறி கொலைகாரருக்கு தலைமறைவான 40வது நாள் நடந்த சம்பவத்தை, நம்புங்கள் தங்களின் இந்தப் புரட்டை என்கின்றார். கொலைகாரருக்கு எவ்வளவு துணிச்சல்.

ஜென்னி எழுதுகின்றார் தீப்பொறிக்கு பிந்தைய "அந்த நிர்வாகக் கூட்டத்திற்கு சிவராம் வந்திருந்தார். இதில் எந்த முக்கிய பொறுப்பும் இல்லாத சிவராம் வருவதை தனிப்பட்ட முறையில் நான் ஈஸ்வரனிடம் ஆட்சேபித்து இருந்தேன். இதற்கு பதிலாக வழக்கம் போல் தனது மத்தியகுழு, கிழக்கு மாகாண பொறுப்பாளர் அதிகாரத்தைக் காட்டினார். இவற்றை எல்லாம் குமரனோ, அசோக்கோ கண்டுகொள்வதில்லை. ஆனால் சிவராமை கிழக்கு மாகாணத்திற்குள் ஏதாவது ஒரு பொறுப்பில் போட ஈஸ்வரன் முயற்சித்துக் கொண்டு இருப்பதை நான் பின்நாளில் தான் அறிந்தேன். இதற்கு ஏற்றாற்போல் செல்வனும், அகிலனும் எல்லா நிர்வாகக்குழு கூட்டத்தையும் நிராகரித்தது சாதகமாக இருந்தது." என்கின்றார்.

ஆக குமரனோ, அசோக்கோ கண்டுகொள்ளாத, கொலைகாரர்கள் கூடி நடத்திய சதிக் கூட்டம். முன்கூட்டியே, கொல்வது என்ற அமைப்பின் தீர்மானத்தை கண்டுகொள்ளாத குமரனுக்கோ, அசோக்குக்கோ இந்த கொலையில் ஆட்சேபனை இருக்கவில்லை. இதில் "செல்வனும், அகிலனும் எல்லா நிர்வாகக்குழு கூட்டத்தையும் நிராகரித்தது சாதகமாக இருந்தது" என்ற சப்பைகட்டும் கொலைகார தர்க்கம் அர்த்தமற்றது. அவர்கள் 15.02.1985 அமைப்பில் இருந்து விலகியதும், அதற்கு முன் முரண்பட்டு நின்றதும், இந்தக் கொலைகார வாதத்துக்கு நியாயப்படுத்த எதுவுமில்லை. ஆம் அவர்கள் புளட் அமைப்பில் இருந்து முன்கூட்டியே விலகியிருந்தனர். இந்தக் கொலைகார அரசியலுடன் முரண்பட்டு, அவர்கள் கூடும் கூட்டத்தில் அவர்கள் வராதது பற்றிய தர்க்கம் கேலிக்குரியது. இந்தக் கொலைகளுக்கும் அதற்கும் என்ன சம்மந்தம்? கூட்டத்துக்கு வராவிட்டால் கொல்லலாம் என்ற தர்க்கமா? இதுவா உங்கள் சுயவிமர்சனம். அவர்கள் தீப்பொறியின் ஆட்கள் என்று அடையாளம் கண்டால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? சரி தீப்பொறி ஆட்களை நீங்கள் கண்டு இருந்தால், நீங்கள் கொண்டு திரிந்த துப்பாக்கி மூலம் என்ன செய்திருப்பீர்கள்!? தீப்பொறி வெளியேறியதற்குப் பிந்தைய கொலைகார மத்தியகுழு, தீப்பொறியை என்ன செய்வது என்று முடிவு எடுத்தது? கொலை செய்ய முனையவில்லையா? கொலை செய்ய ஏவவில்லையா? அதை செய்ய நீங்கள் அலைந்து திரியவில்லையா? சொல்லுங்கள். விபுலுக்கு ஏன் அடி உதை சித்திரவதை நடந்தது? நேசன், பாண்டி மேல் சோடித்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என்ன நோக்கம் கொண்டது?

செத்துப் போனவர்களான, இன்று நீங்கள் குற்றஞ்சாட்டும் அந்த ஈஸ்வரனும்-சிவராமும், அவர்களை கொன்றிருக்க மாட்டார்களா? அதற்கு உடந்தையாக நீங்கள் இருந்து இருக்கமாட்டீர்களா? சொல்லுங்கள்! தீப்பொறி யாருக்கு தலைமறைவாக இருந்தது? உங்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கும் தலைமறைவாக இருக்கவில்லையா?

சரி உங்கள் வாக்குமூலத்தின் படி பார்ப்போம்;. "ஏற்கனவே கழகம் குழம்பியதான சூழலில் சிவராம் யார்? இவர் பின்ணணி என்ன? எனக்கு சரியாக கணிக்க முடியாததால் இவரின் அரசியல் நகர்வையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனெனில் கழக மகளீரமைப்பு அன்றைய காலகட்டத்தில் ஒரு தேசிய விடுதலைக்கூடாக பெண் விடுதலையை முன்னெடுத்தது. இதில் பெண் விடுதலை உட்பட எந்தச் சமூக முரண்பாட்டையும் தனியே பிரித்து பார்த்து அரசியலை செயற்படுத்தவில்லை. எனவே மகளீருக்கான அரசியல் வகுப்புக்களும் தனிப்பட்ட பெண் விடுதலையை கூர்மைப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்லி சமூக மட்டத்திலான குழப்பங்களை உண்டு பண்ண அனுமதிக்க முடியாது என்ற எண்ணம் கழகத்திடமும் என்னிடமும் இருந்தது." என்று கூறும் நீங்கள், அகிலன்- செல்வன் கொலை உங்கள் கண்காணிப்பின்படி சரியாக இருந்திருக்கின்றது. ஆம் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருந்தவர்கள். நீங்கள் கண்காணித்தது, சிவராம் பேசிய மார்க்சியம் பற்றியது உங்கள் கண்காணிப்பு. அதாவது உண்மையான மார்க்சியத்தை கருவறுக்க, போலியான மார்க்சியத்தை பயன்படுத்தல் சரியாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தான் கண்காணிப்பு. ஆக மார்க்சியம் பேசியவர்களைக் கண்காணித்து, அவர்களைப் போட்டுத் தள்ளும் கொலைகார எடுபிடித்தனம் தான் உங்கள் கண்காணிப்பு அரசியல். இதுதான் அகிலன் - செல்வன் படுகொலையைச் செய்தது. "அரசியல் நகர்வையும் கவனிக்க வேண்டியது"ம், என்பது அவர்களைப் போட்டுத்தள்ளுவதற்கு தான், உமாமகேஸ்வரன் ஒட்டுக்கேட்கும் கருவியை உங்களிடம் தந்திருந்தார். இந்தக் கண்காணிப்பில் சிவராம் அகிலன்- செல்வனை முன்னின்று போட்டது, பிரச்சனையாக இருக்கவில்லை.

இந்த இடத்தில் அகிலன் - செல்வன் தனிப்பட்ட நட்பு உங்கள் அரசியல் கடந்து உங்களிடம் இருந்து இருந்தால், அந்த கொலையை அறிந்தவுடன் அமைப்பில் இருந்து ஓடிஒளித்து இருப்பீர்கள். அந்தக் கொலைகாரருடன் தொடர்ந்து புலம்பெயர் நாடு வரை கூடி லூட்டியடித்து இருக்கமாட்டீர்கள். நீங்கள் தானே கொல்ல அனுப்பிய கடிதத்தையே படித்ததாக வேறு கூறுகின்றீர்கள்.

அந்தக் கொலைகார அமைப்பில் இருந்தவர் தீப்பொறி நேசனின் உணர்வையே தானும் கொண்டு இருந்ததாக கூறுவது நகைப்புக்குரியது. அகிலன்-செல்வன் கொல்லப்பட்ட பின் கொலைகார கூட்டத்துடன் கூடி நின்றவர் எழுதுகின்றார் "நேசன் கழகத்தை விட்டு விலகி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்தார். நேசனின் அதே உடைவுகளுடனும் உணர்வுகளுடனும் தான் நானும் மெண்டிஸ்ம் இருந்தோம். ஆனால் எங்களால் வெளியேற முடியவில்லை. மெண்டிஸ் தள ராணுவத்தையும், திரும்பிப் போக முடியாத கிழக்குப் பயிற்சியாளர்களையும் தனது பொறுப்பில் வைத்திருந்ததும், அதேபோல் தளமகளீரமைப்பு பொறுப்பு என்னிடம் இருந்ததும் அதற்கு முக்கிய காரணம். கிழக்கு மகளீர்கள் என்னுடைய காலத்தில் இருந்து அந்த நிமிடம்வரை எனது நேரடித் தொடர்பில் இருந்தனர். மகளீர் பலர் தமது பாதுகாப்பு கருதி மாறிமாறி மற்றைய மாவட்டங்களில் முழுநேர பங்காளராக ஓடித்திரிந்து வேலை செய்துகொண்டு இருந்தனர். இவர்களை எல்லாம் அந்தரத்தில் விட்டுவிட்டு கழகத்தைவிட்டு வெளியேற முடியவில்லை." என்று புதுப் புலுடா விடுகின்றார். இந்திய உளவு அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் இல் இருந்ததற்கு, அசோக் இதே போன்ற காரணத்தைத்தான் சொன்னவர்.

இப்படியிருக்க அன்று தீப்பொறியை வேட்டையாட முன்னின்று தேடியவர்கள் மெண்டிஸ்சும் ஜென்னியும் தான். புளட்டை விட்டு விலகிய பெண்கள் ஜென்னியைக் கண்டு ஓடி ஒளித்தனர். பலர் அமைப்பில் இருந்து ஒதுங்கினர். இதுதான் அன்றைய நிலை. தீப்பொறியை வேட்டையாட நீங்கள் அலையவில்லை என்றால், யார்தான் அதை செய்ய முனைந்தனர்? சொல்லுங்கள். தீப்பொறிக்கு பிந்தைய கொலைகார அமைப்பை வழிகாட்டிய அசோக், ஈஸ்வரன், பொன்னுத்துரை உள்ளடங்கிய நீங்கள் தான் தீப்பொறியை கொல்ல அலைந்தீர்கள். 15.02.1985 அன்று அமைப்பில் இருந்து விலகிய அகிலன்-செல்வன் கொல்லப்பட்ட காரணமே, அவர்கள் தீப்பொறி என்பதால் தான். இதை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொன்றது மட்டுமின்றி, அதை கூட்டாக மறுத்து வந்தவர்களும் நீங்கள் தான். இன்று உங்கள் கூட்டாளிகளில் இறந்துபோன இருவரும் தான், இதற்கு காரணம் என்று அதை தனிப்பட்ட அதிகாரத்துக்கான கொலை என்றும் இன்று இட்டுக்கட்டுகின்றனர் கொலைகாரர்கள்.

"அன்றைய சூழலில் பின்தளத்தில் நடந்து கொண்டு இருக்கும் உரிமை கோரப்படாத கொலைகள், விமர்சனங்கள் அலட்சியப்போக்கு உட்பட்ட பின்தளத்திற்கும் தளத்திற்கும் நடக்கும் அரசியல், ராணுவ முரண்பாடுகள் என்பவற்றினால் இந்தக் கொலையில் பின்தளம் சம்பந்தப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஈஸ்வரனால் திட்டமிடப்பட்டசதி என்றாலும் அதை செவிமடுக்க யாரும் இல்லை." என்று ஜென்னி திரிக்கின்றார். கொல்லக் கொடுத்த கடிதத்தை படித்தவர் தான், இப்படிக் கூறுகின்றார். கொன்ற பின்பு, இந்த கொலைகார அமைப்பில் தொடர்ந்தவர் தான் இப்படிக் கூறுகின்றார். 25 வருடமாக கொலைகாரர்களை பாதுகாத்தவர் தான் கூறுகின்றார். தீப்பொறியை கண்ட இடத்தில் போட்டுத்தள்ள, துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் திரிந்த தன் கதையை மூடிமறைத்துதான், இதைச் சொல்லுகின்றார். செல்வன்-அகிலன், தீப்பொறி தலைமறைவான அன்று, அமைப்பில் இருந்து விலகி தலைமறைவாக இருந்தவர்கள். அவர்களைக் கொன்று போட்டதை, தனிப்பட்ட பிரச்சனையாகக் காட்டி கொலைகார கூட்டம் தனக்கு இன்று மூகமுடி போடமுனைகின்றது.

"செல்வன், அகிலன் மூதூர் முக்கிய பொறுப்பை மேற்கொண்டு இருந்தும் வடமாகாணத்தில் நடக்கும் எந்த அமைப்பு கூட்டத்திற்கும் இவர்கள் வராததையும் சுட்டிக்காட்டி அடுத்தடுத்த கூட்டத்திற்காவது வரச் சொல்லியும் அறிவிப்பேன" என்று கூறுகின்ற போது, ஆம் அவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து போட்டுத்தள்ளவே முனைந்தனர். அவர்களின் சொந்த ஊரில் போட்டு அம்பலமாவதைத் தடுக்கவே, யாழ்ப்பாணத்தில் வைத்து போடுவது அவர்களின் தெரிவாக இருந்தது. அவர்கள் இவர்களுக்கு தலைமறைவான நிலையில், கிழக்கில் வைத்தே போட்டனர். இது தான் நடந்தது. ஜென்னி அவர்களை யாழ்ப்பாணம் வரவழைக்க முனைந்த கதையும் இதுதான். "தயவு செய்து உடனடியாக நீர் வவுனியாவிற்கோ, யாழ்ப்பாணத்திற்கோ ஒரு தடவையாவது வந்து செல்லும். உங்களை சந்திக்க நீங்கள் சொல்லுமிடத்திற்கு நான் வருகின்றேன். ஆனால் மட்டக்களப்பு - திருமலை பகுதியிற்கு பாதுகாப்பு கருதி என்னால் வரமுடியாது." என்ற கூறுகின்ற சதியின் உள்ளடக்கம் அவர்கள் வரவழைத்து கொல்வதுதான். மக்கள் விரோத கொலைகார புளட்டை எதிர்த்து நின்றது தான் அவர்கள் செய்த குற்றம். அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டனர்.

பி.இரயாகரன்

02.03.2011

Last Updated on Wednesday, 02 March 2011 10:01