Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அனுராதபுர சிறைப் போராட்டத்துக்கு இனவாத சாயம் பூசிக்காட்டும் தமிழ் இனவாதம்

  • PDF

தமிழ் - சிங்கள் கைதிகளின் ஒன்றுபட்ட போராட்டம், தமிழ் - சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடுகின்றது. எதிர்காலத்தில் தமிழ் - சிங்கள மக்கள் இணைந்த போராட்டம் தான், அரசை எதிர்கொண்டு போராடுவதற்கு இப்போராட்டம் அறைகூவுகின்றது.

சிலர் கொல்லப்படவும், பலர் காயமடையவும் காரணமாக இருந்த சிறைக்கைதிகளின் போராட்டம், அடிப்படை வசதிகளைக் கோரியது. உணவு, நீர் மற்றும் இருப்பிட வசதியை கோரிய போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒத்துழையாமை போராட்டமாகவே நடந்தது. 500 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள் முன்னின்று போராட, தமிழ் கைதிகளும் அவர்களுடன் இணைந்து நடத்திய போராட்டம் இது. இனம் கடந்து, இனவாதம் கடந்து நடத்திய போராட்டம். தமிழ் இனவாதமோ கூனிக்குறுகி, இதை இனவாதமாக காட்ட முனைந்தது.

இந்தக் கைதிகளின் போராட்டம் மீது பல மணி நேர துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பல கட்டிடங்கள் தீக்கிரையாகின. கைதிகளின் அடிப்படைக் கோரிக்கைளுக்கு, அரசு கொடுத்த பதில் இதுதான். அரசு இனவாதம் சார்ந்து மட்டும், இலங்கை மக்களை ஒடுக்கவில்லை என்பதை இது நிறுவியது. தமிழ் இனவாதிகள் இதை தமிழ் கைதிகள் மீதான, இனவாதத் தாக்குதலாக காட்ட முனைந்தனர், முனைகின்றனர். தமிழன்-சிங்களவன் இணைந்த போராட்டமா எனின் இல்லை, அது நடக்கக் கூடாது என்பதுதான் தமிழ் இனவாதிகளின் தணியாத தாகம்.

இந்தப் போராட்டத்தை சிங்கள கைதிகள் தொடங்கிய பின், தனியாக அடைத்துவைக்கப்பட்டு இருந்த தமிழ்கைதிகளும் தங்கள் பகுதியில் இருந்தபடி இப்போராட்டதில் இணைந்து கொண்டனர். ஆனால் போராட்டத்தை இடையில் கைவிட்டதாகவும், இதனால் சிங்கள கைதிகளுடன் முரண்பாடுகள் உருவானதாகவும் சில தகவல் (தமிழ் இனவாதிகள் மூலம்) வெளியாகின்றது. அதை உறுதி செய்ய முடியவில்லை.

இப்படியிருக்க இந்தப் போரட்டத்தை இரண்டு தளத்தில் தமிழ் இனவாதிகள் திரித்து, தகவல்களையும் கருத்துகளையும் வழங்கினர்.

1. இதைத் தமிழ் கைதிகள் மீதான தாக்குதலாகத் திரித்துக்காட்டினர்.

2.குற்றத்தில் ஈடுபடாத கைதிகளே, சிறையில் இருப்பதாக வேறு காட்டமுனைந்தனர்.

இப்படிக் குறுந்தேசிய தமிழ் இனவாத அரசியல், நடந்ததை இப்படித் தான் காட்டியது. இனவாத சாயம் பூசி, சிங்கள மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தனர். வேடிக்கை என்னவென்றால் அரசுடன் நிற்கின்ற தமிழ் கைக்கூலிகளை இதற்குள் குறிப்பாக்கிச் சாடுவதன் மூலமும், தமிழ் கைதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியும், இந்த அரசியல் இனவாதக் கூத்தை அரங்கேற்றினர்.

இந்த அரச ஒடுக்குமுறையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள கைதிகள் தான். அவர்கள் தான் இந்தப் போராட்டத்தை அரசுக்கு எதிராக முன்னெடுத்தனர். தமிழ்கைதிகள் அதில் இணைந்து கொண்டனர். இப்படியிருக்க தமிழ்கைதிகள் சார்ந்தும், அரசுடன் நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளை குறிப்பாக்கி குற்றம்சாட்டியும், இனவாத அரசியலை இதற்குள் விசிறி விடுகின்றனர்.

இப்படி தமிழ்மக்களை குறுகிய இனவாதம் ஊடாக சிந்திக்கத் தூண்டுகின்ற எல்லைக்குள், இந்தப் போராட்டத்தை திட்டமிட்டுக் காட்டினர், காட்டுகின்றனர். கைதிகள் இனம் கடந்து நடத்திய போராட்டம் இது. இது பலருக்கு சகிக்க முடியாது உள்ளது. கொலைக் குற்றவாளிகள் முதல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வரை, இணைந்து நடத்திய போராட்டம் இது. தமிழன் எப்படி சிங்களவனுடன் இணைந்து போராட முடியும் என்பது, தமிழ்இனவாதிகளின் அங்கலாய்ப்பு.

கடந்தகால இனவாதம் சார்ந்த பிளவுவாத பிரிவினைவாதம் இங்கு தோற்றுப்போனது. மாறாக ஐக்கியப்பட்ட போராட்டமே இங்கு மையமாக இருந்தது. இதை மறுக்க புலத்து தமிழ் தேசிய வலதுகளும் இடதுகளும் ஒற்றைக்காலில் நின்று, இதற்குள் இனவாதத்தைப் புகுத்திக்காட்டினர், காட்டுகின்றனர்.

தமிழ்சிங்கள மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை தமிழ் - சிங்கள இனவாதிகள் விரும்பவில்லை என்பதையே இந்தப் போராட்டம் பற்றிய திரிபுகள் எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் - சிங்கள் கைதிகளின் ஒன்றுபட்ட போராட்டம், ஒரு முன்மாதிரி. இலங்கையில் இனப்பிரச்சனையிலான போராட்டத்துக்கு இது வழிகாட்டுகின்றது. இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் தான், அனைத்து முரண்பாட்டையும் தீர்க்கும். அரசை தனிமைப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்தை நிறுவும். அதற்கு இந்தப் போராட்டம் முன்மாதிரியாக இனம் கடந்து நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.

பி.இரயாகரன்

25.01.2011

Last Updated on Tuesday, 25 January 2011 10:39