Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிங்களமயமாக்கல் பேரினவாதம் மட்டும் செய்வதல்ல, அதற்கு எதிரான தவறான குறுகிய அரசியலும் கூட அதனைச் செய்கின்றது. இதுபோல் கடந்தகாலத்தில் புலிகளை அரசு அழிக்கவில்லை, புலிகளின் அரசியல்தான் புலியை அழித்தது. இந்த உண்மைதான், வரலாற்றுக்கு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்;. யார் இதை கற்றுகொள்ளவில்லையோ, அவர்கள் மறுபடியும் முள்ளிவாய்க்கால்களில் அதை சந்திப்பார்கள். இது தவிர்க்க முடியாதது.

 

இன்று நடப்பது இதுதான். சிங்களமயமாதல் என்ற ஓரேயொரு நிகழ்ச்சிநிரலைத் தவிர வேறு எதுவும் எம்மண்ணில் இன்று கிடையாது. அதை இல்லாமல் பண்ணுவது, தொடர்ந்தும் தமிழ் குறுந்தேசிய அரசியல் தான். இன்றைய பேரினவாத எதிர்ப்பு அரசியல், சிங்களமயமாக்கலை எதிர்கொள்ளும் ஆற்றல் அற்றது.

சிங்களமயமாக்கல் என்பது மேல் இருந்து தமிழரை உள்வாங்கித்தான் நடக்கின்றது. இதைத் தடுக்க, கீழ் இருந்து சிங்கள மக்களுடன் கட்டப்படும் ஒற்றுமையே முதன்மையான அரசியல் நிபந்தனையாகும். இதை தவிர வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.

எதிரி மேல் இருக்க, சிங்கள மக்கள் அனைவரையும் எதிரியாக காட்டும் குறுந்தேசியத்தால் சிங்களமயமாக்கலைத் தடுக்க முடியாது. கூட்டணி, புலிகள், கூட்டடைப்பு வரை, எவரும் கீழ் இருந்து சிங்கள மக்களுடனான ஒன்றிணைந்த பேரினவாத எதிர்ப்பைக் கட்டமைக்க முன்வரவில்லை. குறுந்தேசியத்தை முன்வைத்து, அதை குழிபறித்துத்தான் அரசியல் நடத்தினர்.

இந்த வகையில்தான் புலத்துப் புலிகள் முதல் தமிழ்தேசியத்துக்காக இடதுசாரியம் பேசும் புதியதிசைகள், இனியொரு, மே 18 என்று அனைத்து வகையறாக்களும் செயல்படுகின்றனர். சிங்கள மக்களுடன் ஒன்றிணைய வேண்டிய அரசியலை முன்வைத்து கிளர்ச்சியை, பிரச்சாரத்தை செய்வது கிடையாது. சிங்கள மக்களுடன் சேர்ந்துதான் பேரினவாதத்தையும் சிங்களமயமாக்கலையும் எதிர்கொள்ள முடியும் என்ற அனைத்தும் தளுவிய உண்மையை முன்வைக்காத குறுந்தேசிய சந்தர்ப்பவாதம் தான், அரசியல் ரீதியாக முன்தள்ளப்படுகின்றது.

இடதுசாரியம் பேசுகின்ற அரசியல் தளத்தில், இந்த சந்தர்ப்பவாதம் புலிக்கு பின் இடதுசாரியமாக கோலோச்சுகின்றது. தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் இன்றி, பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது.

கடந்த காலத்தில் கூட்டணி முதல் புலிகள் வரை, ஒடுக்கப்பட்ட சிங்கள் மக்களுடன் தமிழ் மக்கள் இணைவதை மறுத்து, குறுக்கி இனவாதத்தையே விதைத்;தனர். இது தான் முள்ளிவாய்க்காலில் சரணடைய வைத்தது. ஆனால் இந்த குறுந்தேசிய தமிழ் இனவாதத்தை இன்று வரை எவரும் எதிர்த்து, தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைத்துப் பிரச்சாரம் கிளர்ச்சியை முன்தள்ளவில்லை. இதை நாங்கள் மட்டும் கோருவது "தன்முனைப்பு" சார்ந்த ஒன்றல்ல. இப்படிக் ம.க.இ.க கூறியதன் பின்னணியில், அரசியல் நிராகரிப்பு நிகழ்ந்தது.

தமிழ் தேசியத்தைச் சுற்றி, இடதுசாரிய சந்தர்ப்பவாதமே கோலோச்சுகின்றது. ம.க.இ.க இறுதி யுத்தகாலத்தில் புலிகளை விமர்சனம் செய்யாத அரசியல் நிலை எடுத்தார்கள். தங்கள் இந்த நிலையை தக்கவைக்க, தவறான புலிசார்பு தகவல்களை முன்னிறுத்தினர். இப்படி நகர்த்திய அரசியல், இறுதியாக புலிகளை விமர்சிக்காத சந்தர்ப்பவாத அரசியலாகியது. இன்றுவரை உண்மைகளை வெளிப்படையாக பேசுவதை தவிர்த்து, குறுந்தேசியத்தின் பின் நிற்பதன் மூலமான அரசியலையே நகர்த்தினர். புலிகளின் அரசியல்தான், புலிகளை தோற்கடித்தது என்பதை ம.க.இ.க வெளிப்படையாக தமிழக மக்கள் முன் எடுத்துச்செல்லவில்லை. சரி யார் எடுத்துச் செல்வது?

அவர்களின் இந்த நிலையை நாம் பின்பற்றுவது தற்கொலைக்கு சமமானது. எமது பிரதான முரண்பாடு சார்ந்த மைய அரசியல் இதுவாக இருப்பதால், மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் கொண்ட இனவாதம், மக்கள் மத்தியில் பிளவுவாதத்தையே தொடர்ந்தும் பிரச்சாரம் செய்கின்றது.

இன்று தமிழ் சிங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியத்தை முன்வைத்து பிரச்சாரத்தையும், குறுகிய இனவாதத்தை எதிர்த்து, இடதுசாரியத்தை முன்வைத்து பேசுகின்ற யார் தான் உள்ளனர்?

இன்று மேல் இருந்து முன்தள்ளப்படும் மீள்கட்டமைப்பு அரசியல், அபிவிருத்தி அரசியல், மனிதாபிமான அரசியல் என்று எதைக் கண்டித்தாலும், கீழ் இருந்து சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஐக்கியத்தைக் கோராத அரசியல் எத்தகையது? ஐக்கியத்துக்கு தடையான இன்றைய அரசியலைக் கண்டிக்காத அரசியல் எத்தகையது? அனைத்தும் குறுந்தேசிய புலி அரசியல்தான்.

இன்று இப்படித்தான் குறுந்தேசியம் சந்தர்ப்பவாத இடதுசாரியமாக புளுக்கின்றது. பேரினவாதம் முன்தள்ளும் மீள் கட்டமைப்பு அரசியலை, இப்படித்தான் இடதுசாரிய புலி அரசியல் பாதுகாக்கின்றது

பேரினவாதம் இந்த அரசியல் தளத்தில் தான், தமிழ் மக்களை தனக்குள் உள்வாங்கி அழிக்கின்றது. இந்த அரசின் பின் இயங்கும் அரசியல்வாதிகள் முதல் மக்கள் சேவையை தாங்கள் செய்வதாக கூறிக்கொண்டு செல்வோர் தவிர, வேறு நிகழ்ச்சி நிரல் இன்று இல்லை. இந்த வகையில் சிங்களப் பெரும் தேசியம் எல்லாத்தளத்திலும் சுதந்திரமாக தன்னை நிலைநிறுத்தும் வண்ணமே, குறுந்தேசிய எதிர்ப்பு அரசியல் காணப்படுகின்றது.

மொழிரீதியாக தமிழ் சிங்கள மக்கள் வாழ்கின்ற இலங்கையில், தமிழ் இனத்தை மேல் இருந்து அழிக்கின்ற நிகழ்ச்சிநிரல் மட்டும் தான் காணப்படுகின்றது. தமிழ் சிங்கள மக்கள் கீழ் இருந்து ஒன்றுபடுதல் என்பதை தமிழ் குறுந்தேசியம் தடுக்கின்றது. இதனால் சிங்களமயமாகும் ஒரு அழிப்பு நிகழ்ச்சிநிரலை மட்டும் அடிப்படையாக கொண்ட இனவழிப்பு தான், இன்று தமிழ் குறுந்தேசியம் மூலம் முன்தள்ளும் அரசியலாகும்.

இதற்கு மாறாக தமிழ் குறுந்தேசியத்தை எதிர்த்து, தமிழ் சிங்கள் மக்கள் கீழ் இருந்து ஒற்றுமைப்படுதல் மூலம் தான், மேல் இருந்து நிகழும் சிங்கள மயமாக்கும் அழித்தொழிப்பு நிகழ்ச்சிநிரலை தடுக்கமுடியும். இதுதான் இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக கையாளக் கூடியே ஒரே ஒரு சரியான அரசியல் வழிமுறையாகும்.

பி.இரயாகரன்

13.01.2011