Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

முகப் புத்தகம்

  • PDF

மிழகத்துப் பத்திரிகையாளர் டி.அருள்எழிலன் 23.10.2010 அன்று லண்டனில் நடைபெற்ற புலிகள் ஆதரவு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு உரை நிகழ்த்திய போது “வன்னி யுத்தத்தின் போது மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோரியது அநீதி” எனவும் சொல்லியிருந்தார். இது குறித்து நான் எனது முகப் புத்தகத்தில் (Face Book) எழுதிய காட்டமான சொற்கள் பல்வேறு விவாதங்களை முகப் புத்தகக் குழுமத்தில் உருவாக்கின. எனது முகப் புத்தகத்தில் நான் அருள் எழிலன் குறித்து வைத்த விமர்சனங்களைத் தொகுத்தும் சற்று விரிவாகவும் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

 

முதலில் அருள்எழிலனை அறியாதவர்களிற்காக ஒரு சிறிய அறிமுகம்: அருள்எழிலன் ‘குங்குமம்’ வார இதழ் மற்றும் ‘இனியொரு’ இணையத்தளம் ஆகியவற்றின் ஆசிரியர்களில் ஒருவர். ஈழப் போராட்டம் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற நூலையும் கணிசமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அரசியல், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு தளங்களிலும் எழுதி வருபவர்.

அருள்எழிலனின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அவரது எழுத்துகள் மீதான ஒரு குறுக்குவெட்டுப் பார்வை தோழர்களிற்கு உதவலாம் என நினைக்கிறேன். அருள்எழிலனின் 232 பக்கங்கள் கொண்ட ‘பேரினவாதத்தின் ராஜா’ நூல் கடுமையான உழைப்புடன் எழுதப்பட்டிருக்கிறது. எனினும் அருள் எழிலனின் தவறான எடுகோள்களும் தவறான அரசியற் பார்வைகளும் அவரின் கடுமையான உழைப்பைப் பயனற்றதாக்கிவிட்டது வருத்தமே. எடுத்துக்காட்டாகச் சில புள்ளிகளை அவருடைய நூலிலிருந்து பார்த்துவிடலாம்.

1.”ஆல்பிரட் துரையப்பாவை ஏன் அழித்தொழிக்க வேண்டும்? அவர் நான்காவது உலகத் தமிழரராய்ச்சி மாநாட்டின்போது போலிஸை வைத்து ஆறு தமிழ் அறிஞர்களைச் சுட்டுக்கொன்றார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு” (பக்:32). - இது வரலாற்றுப் பிழை.

2.”வன்னிக்குள் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கை இராணுவம் நுழைந்ததில்லை. முப்பதாண்டுகளில் இராணுவத்திற்கு நேரடியாக முகம் கொடுக்காதவர்கள் வன்னி மக்கள் (பக்: 126). - இது களப் பிழை.

3.”ஈ.பி.ஆர்.எல்.எவ். என்னும் அரசியற் கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்” (பக்: 87). - இது அரசியற் பிழை.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அலங்கார ஊர்த்திப் பவனியில் வந்த ஊர்தியொன்றில் கட்டப்பட்டிருந்த உலோகத்தாலான கொடிக் கம்பம் மின்சாரக் கம்பியைத் தொட்டதால் ஊர்தியில் வந்த இருவர் முதலில் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். தொடர்ந்து மக்களிடையே பொலிசார் நடத்திய தாக்குதலில் ஏழு பொதுமக்கள் மாண்டார்கள். இந்தக் கொடூரத்திற்கு நேரடிச் சாட்சியாக நின்ற நமது மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இது குறித்துத் துயரம் தோய்ந்த வார்த்தைகளால் (’ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு’ - பக்:304) சாட்சியமளித்துள்ளார்.

தமிழறிஞர்களோ, பொதுமக்களோ கொலை கொலைதான். ஆனால் இந்தக் கொலைகளை துரையப்பாதான் செய்ய வைத்தார் என்ற அருள்எழிலனின் எடுகோள்தான் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்பதும் தமிழரசுக் கட்சிக்குக் கடும் போட்டியாளராகத் திகழ்ந்தார் என்பதுவுமே துரையப்பா கொல்லப்படுவதற்கான காரணம். அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்த்துக்கொள்வது என்ற பாஸிசக் கலாசாரத்தின் விதை துரையப்பாவின் கொலையில்தான் விழுந்தது. துரையப்பா கொலையாவதற்கு  மூன்று வருடங்களுக்கு முன்னமே / தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராமசபைத் தவைருமான வி.குமாரகுலசிங்கத்தின் மீதும் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா மீதும்  போராளிகளால் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளால்தான் துரையப்பா அழித்தொழிக்கப்பட்டார் என்ற எழிலனின் எடுகோள் சரியற்றது. இங்கே துரையப்பா “கொலை” எனச் சொல்லாமல் துரையப்பா “அழித்தொழிப்பு” என எழிலன் சொல்வதின் பின்னாலிருப்பது துரையப்பாவின் கொலையை நியாயப்படுத்தும் அரசியல் என்றே கருதுவேன்.

தவிரவும் இந்த ‘ஆறு தமிழறிஞர்கள் கொலை’ என்ற வதந்தியை எழிலன் எங்கிருந்து கண்டுபிடித்தார் எனத் தெரியவில்லை. துரையப்பா கொலை குறித்துப் பல்வேறு வதந்திகளைக் கேட்டு ஈழ மக்கள் பழக்கப்பட்டவர்கள்தான் என்றாலும் இவ்வாறான ஒரு வதந்தியை அவர்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது வதந்திகளின் ராஜாவாகவல்லவா இருக்கிறது. ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வதைக்காட்டிலும் ஆறு தமிழறிஞர்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்வது அதிகமாகத் தமிழுணர்வைத் தட்டி எழுப்பக் கூடியது என வதந்தியை உருவாக்கியவர்கள் கருதியிருக்கலாம்.

‘முப்பது வருடங்களாகவே வன்னிக்குள் இலங்கை இராணுவம் நுழையவில்லை’ எனத் தனது நூலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எழிலன் குறிப்பிட்டிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. கடந்த முப்பது வருடங்களாக வன்னியில் இராணுவம் நடத்திய மனிதப் படுகொலைகளை அவர் அறிந்திருக்கவில்லை என்பதை விட புலிகள் நடத்திய மாங்குளம் இராணுவ முகாம் தாக்குதல், முல்லைத்தீவு முகாம் தாக்குதல் போன்ற பாரிய தாக்குதல்களைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது கொஞ்சம் வியப்பானதுதான். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில்கூட மாங்குளத்தில் இலங்கை இராணுவம் குண்டு வீசுவதாகக் காட்டியிருந்தார்கள்.

‘ EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட்சக் கொலை இலக்காகவே இருந்தார். இதிகாசப் பெருமாளுக்காவாது 14 வருட அஞ்ஞாதவாசம். இந்தப் பெருமாள் 15 வருடங்கள் அஞ்ஞாதவாசமிருக்க நேரிட்டது. வரதராஜப் பெருமாளை வெறுமனே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மையெனச் சித்திரிப்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்த நோக்குக் கிடையாது.

இலங்கை - இந்திய உடன்படிக்கை இந்திய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். எனினும் இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்ததாலும் யுத்தம் செய்ததாலும் நாம் பெற்றது என்ன, இழந்தது என்ன? சிறு துரும்பைக் கூட நாம் பெற்றுக்கொள்வில்லை. ஆனால் எல்லாவற்றையுமே நாம் இழக்க நேரிட்டது. “ஆனால் மானத்தை இழக்கவில்லையே” என இந்தக் கட்டுரையை மேற்கு நாடொன்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் மீசையை முறுக்கியபடியே முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. கவரிமான்களோடு எனக்குப் பேச்சில்லை. நான் இரத்தமும் ஆன்மாவும் உள்ள மனிதர்களிடமே பேச விரும்பகிறேன்.

பல தசாப்த இனப் பிரச்சினையை, அதன் சிக்கலான பரிமாணங்களை, ஏற்ற இறக்கங்களை, விட்டுக்கொடுத்தல்களை, பேரங்களை, சமரசங்களைப்  புரிந்துகொள்ள  முயலாமல் ‘துரோகி’, ‘கைக்கூலி’, ‘உருவாக்கப்பட்ட பொம்மை’ போன்ற முத்திரை குத்தல்களால்  பிரச்சினையை எழிலன் எதிர்கொள்வது நியாயமற்றது.

ஈழப் போராட்டத்தைத் தமிழகத்திலிருந்து ஆய்வு செய்து எழுதும் ஒருவரிடம் இத்தகைய வழுக்கள் இருப்பதையும் கள அறிவில் போதாமைகள் இருப்பதையும் புரிந்துகொள்ளக் கூடியதாயிருப்பினும் இந்த வழுக்களிலிருந்து அவர் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கட்டமைப்பதும் அந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவருவதும்தான் துன்பமானது. எழிலனின் நூல் துரோகிகள் x மாவீரர்கள் என்ற தர்க்கத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவர்  புலிகளிடமிருந்து அல்லாமல் பெரும்பாலும் ‘துரோகி’களிடமே தேடிக்கொண்டிருக்கிறார். புலிகளின் ஒவ்வொரு செயலும் ‘துரோகி’களை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்படுகிறது.  மாத்தையா கொலை உட்பட.

இந்த ‘துரோகிகள் x மாவீரர்கள்’ அரசியலை நம்மிடையேயிருந்து அகற்றாமல் தமிழ் மக்களிற்கு விடிவு கிடையாது. அரசியல் வேறுபாடுகளை எதிர்கொள்ள ‘துரோகி’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட புலிகளின் கொலை அரசியலுக்குப் புலிகளின் அழிவுடனாவது நாம் முடிவுகட்ட வேண்டும். அந்தக் கொலை அரசியலைத் தூக்கி நிறுத்தும் எவரையும் நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. சுந்தரம், சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ராஜினி திரணகம, கோவிந்தன், செல்வி, கேதிஸ் என நாம் கொடுத்த ஆயிரக்கணக்கான பலிகள் போதும். இப்போது அருள்எழிலனுடன் ‘இனியொரு’ ஆசிரியர் குழுவில் பங்களிக்கும்
அசோக் யோகன் (PLOTEன் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர் - ENDLFன் நிறுவனர்களில் ஒருவர்) சபா. நாவலன் ( முன்னாள் TELO உறுப்பினர்) ஆகிய இருவரும் கூடப் புலிகளின் பார்வையிலே ‘துரோகிகள்’ என்பதும் அவர்கள் புலிகளுக்கு அஞ்சியே புலம் பெயர்ந்து வந்தார்கள் என்பதும் கூட அருள்எழிலனுக்கு உறைக்காமலிருக்கிறதே.

இப்போது எழிலனின் கட்டுரைகளுக்கு வருவோம். இந்திய அகதி முகாம்களிலுள்ள ஈழத்து அகதிகளின் துயரநிலை குறித்தெல்லாம் மிக முக்கியமான கட்டுரைகளை எழுதியவர் எழிலன். ஆனால் அவர் ஈழப் போராட்டத்தின் துரோகிகளைத் துப்பறிகிறேன், உளவாளிகளை உரித்துவிடுகிறேன் என்றரீதியல் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகள்தான் வெறும் அவதூறுக் கட்டுரைகளாவே எஞ்சிவிடுகின்றன. எடுத்துக்காட்டுக்கு அவரின் ‘புலி எதிர்ப்பு - முதலீட்டில்லா லாபம்’  என்ற கட்டுரையில் அவர் சென்ற வருடம் திருவனந்தபுரத்தில் புலம் பெயர்ந்த இலங்கையர் அமைப்பு நடந்திய மாநாடு (இந்த மாநாட்டில் எஸ்.வி.ராஜதுரை, ஆதவன் தீட்சண்யா போன்ற தமிழகத்து எழுத்தாளர்களும் கலந்துகொண்டார்கள்) இலங்கை அரசின் நிதி வழங்கலோடு செய்யப்பட்டது என்கிறார்.

அந்தப் புலம் பெயர்ந்த இலங்கையர்களின் அமைப்பான INSD மகிந்த ராஜபக்ச அரசின் மிகக் கடுமையான எதிரிகள். ‘சனல் 4′ வெளியிட்ட யுத்தக் குற்ற ஆவணத்தை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே ‘சனல் 4′  தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்தார்கள் என்பது பரகசியம். இது தொடர்பாக INSDயை இலங்கை அரசு நேரடியாகச் குற்றம்சாட்டியது. புகலிடத்தில், INSD அமைப்பு புலிகள் ஆதரவு அமைப்பென புலி எதிர்ப்பாளர்கள் சிலரால் குற்றமும் சாட்டப்படுகிறது.

இந்த அமைப்பினர் கடந்த மாதம் ஜெர்மனியில் நடத்திய கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியவர் ராஜபக்ச அரசினால் கடத்திக் காணாமற் செய்யப்பட்ட ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னாலிகொடயின் மனைவி சந்தியா. அங்கே அவர் கண்ணீருடன் ராஜபக்சவிடம் நியாயம் கேட்டு நெகிழ வைக்கும் ஓர் உரையை நிகழ்த்தினார். அந்தக் கருத்தரங்குக்கு வந்திருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிகேவா மகிந்தரின் புதிய அரசியல் சாசனம் குறித்துத் தும்பு தும்பாகக் கிழித்துத் தோரணம் கட்டினார். தொழிற்சங்கவாதி சமன் சமரசிங்க, ஊடகவியலாளார் லாகிர் இருவரும் இலங்கையில் சனநாயகமே அற்றுப்போய்விட்டதெனக் கொதிப்புடன் உரை நிகழ்த்தினார்கள்.

இலங்கை அரசைக் கடுமையாக எதிர்க்கும் தமிழ் - சிங்கள - இசுலாமிய உறுப்பினர்களைக்கொண்ட  இந்த அமைப்புக்கு இலங்கை அரசு பணம் வழங்குகிறது என்றால் வேடிக்கையாயில்லையா! இலங்கை அரசு இந்த அமைப்புக்குப் பணம் வழங்குகிறது என்ற எழிலனின் குற்றச்சாட்டுக்கு அவர் முன்வைக்கும் ஆதாரமென்ன? எதுவுமேயில்லை. இவ்வாறான போலியான குற்றச்சாட்டின் மூலம் அவர் இலங்கை அரசின் உறுதியான எதிர்ப்பாளர்களை அவமதிக்கிறார். INSD அமைப்பு ஜெர்மனிய தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உதவியில் தங்கியிருக்கிறது என்று விமர்சிப்பது எழிலனின் உரிமை. ஆனால் இலங்கை அரசின் நிதியைப் பெறுகிறார்கள் என ஆதாரமேயில்லாது பொரிந்து தள்ளுவது அவதூறே. அப்படியானால் எழிலன் ஏன் இந்த மாநாட்டின் மீது அவதூறைப் பொழிய வேண்டும். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் கடுமையாகப் புலிகளை விமர்சிப்பவர்களுமிருந்தார்கள். அவ்வளவே. புலிகள் கருத்தைத் துப்பாக்கியாலும் எழிலன் கருத்தை அவதூறுகளாலும் எதிர்கொள்ளும் சூக்குமம் இதுவே.

அருள்எழிலன் ஆசிரியராகப் பங்களிக்கும் ‘இனியொரு’ இணையத்தளம் அ. மார்க்ஸின் இலங்கைப் பயணம் குறித்து இவ்வாறு எழுதியது:

“தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றிகொண்ட பின் தமிழகத்து எழுத்தாளர்கள் இலங்கை அரச அமைப்புக்களின்  அனுசரணையுடன் இலங்கைக்கு வருகை தருவது தற்போது அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (எஸ்.எல்.டி.எப்)  முக்கிய பிரமுகருமான ரங்கன் தேவராஜனின் பயண ஏற்பாட்டில் தமிழ் நாட்டு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இலங்கை வந்து சென்றது குறிப்படத்தக்கது. (இனியொரு/ 08.03.2010)

அ.மார்க்ஸ் ஒரு இஸ்லாமிய அமைப்பின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். ஆதவன் மலையக இலக்கிய அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் சென்றிருந்தார். இருவருடைய பயணத்திற்கும் இலங்கை அரசுக்கும் எதுவித தொடர்புமில்லை. அதைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை! அ.மார்க்ஸும் ஆதவன் தீட்சண்யாவும் புலிகளை விமர்சிப்பவர்கள், எனவே எந்த வகையிலாவது அவர்கள்மீது பழி சுமத்த வேண்டுமென்பதே இவர்களது ஒரே குறிக்கோள். ஆதவன் தீட்சண்யா ‘இனியொரு’வுக்கு மறுப்பும் அனுப்பியிருந்தார். அது குறித்தெல்லாம் அவர்களிற்கு அக்கறையில்லை. அவதூறு சொல்வது மட்டுமே அவர்களது பணி. லண்டன் வந்திருந்தபோது வெளிநாட்டுப் புலிகளால் நடத்தப்படும் GTV தொலைக்காட்சியில் எழிலன் ஒரு நேர்காணலைக் கொடுத்திருந்தார். அந்த நேர்காணலிலும் ‘உளவாளிகள் ஜாக்கிரதை’, ‘துரோகிகள் கவனம்’ என்றே அவர் புலம் பெயர்ந்த மக்களுக்கு வகுப்பெடுத்தார்.

இப்போது அருள்எழிலன் அவரது முகப் புத்தகத்தில் “கே.பிக்கு, டக்ளஸுக்கு, ராஜபக்சேவுக்கு அடிமையாகவும் அடிவருடிகளாகவும் இருப்பவர்கள் அடிமைப் புத்தி குறித்துப் பேசுவதுதான் டமாஸ்” என்றொரு செய்தியைப் போட்டிருக்கிறார்.  இதுதான் ஆகப் பெரிய டமாஸ்.

வெளிநாட்டுப் புலிகளுக்குள் பல குழுக்கள் இருந்தாலும் நெடியவன் குழுவும் ‘நாடு கடந்த அரசாங்கம்’ குழுவுமே பெரிய குழுக்கள். இந்த நாடு கடந்த அரசாங்கக் குழுவினரின் ஞானத்தந்தை கே.பி. இந்தக் குழுவினர் இன்றுவரை கே.பி.மீது விமர்சனம் வைத்ததில்லை. கே.பி. குற்றமற்றவரென்பதும் சூழ்நிலையின் கைதியென்பதும் இவர்களது நிலைப்பாடு. இந்தக் குழுவினரின் வசமுள்ள ஊடகங்கள் கே.பியை ஆதரித்து எழுதுவதும் அந்த ஊடகங்களை நெடியவன் ஆதரவு ஊடகங்கள் கடித்துக் குதறுவதும் வாராவாரம் நடக்கும் ஒரு டமாஸ். இந்தக் கே.பி. ஆதரவுக் குழுவினர்தான் அருள்எழிலன் கலந்துகொண்ட அந்த மாநாட்டை நடத்தியவர்கள். மற்றவர்கள் அங்கே நிதி பெறுகிறார்கள், இங்கே நிதி பெறுகிறார்கள் எனச் சதா குற்றம் சொல்லும் எழிலன் இந்தக் கே.பி. ஆதரவுக் குழுவினரின் பணத்திலேயே லண்டன் வந்து சென்றார். இப்போது யார் கே.பிக்குக் கால் கழுவுகிறார்கள் என எழிலனே சொல்லட்டுமே.

இதைக் கேளுங்களேன்! “நான் உடல் வருத்தி உழைத்த பணத்தில் பயணம் செய்து அரசியல் பேசுகிறேன், ஆனால் அருள்எழிலன் யாரோ கொடுக்கும் பணத்தில்  லண்டன் வந்து அரசியல் பேசுகிறார்” என நான் முகப் புத்தகத்தில் ஒரு கொமன்ட் போட்டவுடன் அருள் எழிலன் “ஆம் நான் புலிக் காசில்தான் போனேன், இனியும் போவேன்” என நக்கலாக எழுதினார். அது என்ன புலிக்காசு? புலிகள் காடு வெட்டிக் கழனி செய்து கதிரறுத்துச் சம்பாதித்த பணமா அது? இசுலாமியர்களை வடக்கிலிருந்து விரட்டி அவர்களிடம் கொள்ளையடித்த பணமது. கிழக்கில் இஸ்லாமியர்களின் நிலங்களைத் திருடி வந்த பணமது. மக்களிடம் முட்டைக்கும் முட்டைபோடும் கோழிக்கும் வரிவாங்கிச் சேர்த்த பணமது. வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்குச் சென்ற மக்களை ‘நந்தவனம்’ அலுவலகத்தில் வைத்து மிரட்டிப் பறித்த பணமது. சர்வதேசமெங்கும் போதைப் பொருள் கடத்திச் சேர்த்த பணமது. புலம்பெயர் தேசங்களில் மக்களிடம் மிரட்டிப் பறித்த பணமது. அது குறித்து எழிலனுக்குக் குற்றவுணர்வு வராமல் நக்கல் வருவதை சுரணையற்றதனம் என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளால் நான் சொல்வது!

எனது முகப் புத்தகத்திலே அருள்எழிலன் தி.மு.க.தலைவரின் குடும்பப் பத்திரிகையான குங்குமத்தில் ஆசிரியப் பணியாற்றுவதையும் சாடியிருந்தேன். நான் வணிகப் பத்திரிகைகளில் வேலை செய்பவர்களைச் சாடுவதாக எதிர் கருத்துகளும் வந்தன. வணிகப் பத்திரிகைகளில் வேலை செய்பவர்களைச் சாடுவதல்ல எனது நோக்கம். நானே வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவன்தான். இலக்கியவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் வணிக இதழ்களில் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முடிந்தளவு நமது கருத்துகளை வெகுசனப் பரப்பிற்கு எடுத்துவர வேண்டும் என்கிற கருத்துடையவன் நான். என்னுடைய வணிகப் பத்திரிகைப் பிரவேசம் எட்டு வருடங்களிற்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ நேர்காணலொன்றோடு  ஆரம்பித்தது. அந்த நேர்காணலைச் செய்தவர் இதே அருள்எழிலன் என்பதும் ஒரு சுவையான தகவலே.

ஆனால் தமிழக முதல்வரது குடும்பத்தினரின் ஊடகங்கள் வெறும் வணிக ஊடகங்கள் மட்டும்தானா? அவை ஒரு கட்சியின், ஒரு குடும்ப ஆட்சியின் நலன்களை நோக்கில் கொண்டு நடத்தப்படுபவையல்லவா. அந்த ஊடகங்கள் ஈழத்தில் யுத்தத்தை நடத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஊறு நேராமல் செய்திகளைப் பக்கச் சார்பாகத் தருபவையல்லவா. அந்த ஊடகங்களில் ஊதியத்திற்காக ஒருவர் பணி புரிவதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் தன்னை அரசியற் போராளியாகவும் அறச் சீற்றமுள்ள எழுத்தாளனாகவும் துரோகிகளைத் துப்பறிபவனாகவும் கட்டமைத்துக்கொள்ளும் ஒருவர் அவருக்கு முற்றிலுமே அரசியல் எதிர்க் கருத்து நிலையிலிருக்கும் ஒரு ஊடக மாபியாக் குழுமத்தில் பணிபுரிவதை எவ்வாறு புரிந்துகொள்வது? இது தகிடுதத்தம் அல்லவா

எடுத்துக்காட்டாக எனக்கு EPDP யின் ‘தினமுரசு’ பத்திரிகையில்ல் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். “எனக்கும் EPDPக்கும் எந்தத் தொடர்புமில்லை, நான் ஊதியத்திற்காக மட்டுமே அங்கேயிருக்கிறேன்” என ஷோபாசக்தி சொல்வது அழகா? அவ்வாறு நான் சொன்னால் நீங்கள் என்னைக் கல்லால் அடிக்கமாட்டீர்களா? எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும்  மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. ஒரு அரசியல் போராளிக்கு அரசியல் நிலைப்பாட்டை விட வயிற்றுப்பாடுதான் முக்கியமானது எனில் அந்த நிலைக்கு வேறு பெயர். ம.க.இ.க.வினரிடம் ஒரு சொல்லைக் கடன் பெற்றுச் சொன்னால்… ‘பிழைப்புவாதம்’! இத்தகையதொரு பிழைப்புவாதிக்கு அடுத்தவன் மீது ஆதாரமேயில்லாமல் அங்கே பணம் வாங்கினான், இங்கே பணம் வாங்கினான், அம்சாவிடம் விலைபோனான் எனச் சொல்வதற்கு என்ன தார்மீக அறம் இருக்கிறதென்று நான் கேட்பேனா மாட்டேனா?

லண்டன் ஊடக மாநாட்டில் எழிலன் “வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” எனப் பேசியிருக்கிறார். அங்கிருந்த அத்தனை குரங்குகளும் அதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றன. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கவிஞர் சேரன் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் “அவ்வாறு புலிகள் மக்களைத் தடுத்து வைத்தது தவறு” எனச் சொல்லியிருந்தார். எழிலனின் இந்தப் பிரகடனத்திற்கு அவர் என்னவிதமாக எதிர்வினையாற்றினார் என்பது தெரியவில்லை. மாநாட்டில் கலந்துகொண்ட எழுத்தாளர் நாகார்ஜுனனும் இதற்கு என்னவிதமாக எதிர்வினையாற்றினார் என்பதும் தெரியவில்லை.   ஒருவேளை அவர்கள் மவுனமாக இருந்திருப்பின் ஒரு சக இலக்கியவாதியாக நான் நிர்வாணத்தை உணர்கிறேன்.

லண்டன் மாநாட்டில் தான் பேசியது மிகச் சரியே என முகப் புத்தகத்தில் அறிவித்த எழிலன் கூடவே “கிளிநொச்சி
வீழ்ந்த போது மக்கள் விருப்பத்துடனேயே புலிகளுடன் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தார்கள்” என்று புதியதொரு நச்சுக் குண்டையும் வீசினார். இதையெல்லாம் எழிலன் சொல்லி நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியிருப்பது எங்களது தலைவிதியல்லாமல் வேறென்ன!

நான் முகப் புத்தகத்தில் வரலாற்றை எழிலனுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. 1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கியபோது தமக்கு அரணாக மக்களையும் ஓட்டிச் சென்றார்கள். அவ்வாறு வர மறுப்பவர்கள் ‘தேசத்துரோகிகள்’ எனவும் ‘தண்டனைக்குரியவர்கள்’ எனவும் ஒலிபெருக்கியில் வீதிவீதியாக அறிவித்தார்கள். 2006 ல் யுத்தம் தொடங்கியவுடனேயே வன்னி பெருநிலப் பரப்பின் கதவுகள் புலிகளால் மூடப்பட்டன. சிறுவர்களைக் கண்மூடித்தனமாகக் கட்டாயமாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்கள். பணம் படைத்தவர்கள் புலிகளிடம் பணம் செலுத்தி ‘பாஸ்’ பெற்று யுத்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற, துணிந்தவர்கள் காடுகளுக்குள்ளால் தப்பி ஓடினார்கள். புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இரகசியமாக அழைத்துச் சென்று விடுவதற்கு வன்னியில் ஏஜெண்டுகளே இருந்தார்கள். புலிகளின் கையிலிருந்த கடிவாளக் கயிறு மரணக் கயிறாக மக்களின் கழுத்திலிருந்தது. முள்ளிவாய்க்காலில் சரணடையும் முடிவை எடுக்கும்வரை புலிகள் அந்தக் கயிற்றை விடவேயில்லை. எழிலனோ மக்கள் இயல்பாகவே புலிகளுடன் சென்றார்கள் என வாய் கூசாமற் சொல்கிறார்.

இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் மக்கள் புலிகளிடம் பட்ட கற்பனைக்கும் எட்டாத துயரங்களையும் புலிகளின் மிருகத்தனமான கொடூரங்களையும் குறித்து நிறையப் பேர்கள் சாட்சியமளித்துவிட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் எழிலன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து த. அகிலன் சொன்னார். புலம் பெயர் நாடுகளிலிருந்து நாங்கள் சொன்னோம். எதையும் எழிலன் நம்ப மறுக்கிறார். தனது வழக்கப்படி இவ்வாறு சொல்பவர்களை ‘அம்சாவின் அடிவருடிகள்’ என்று அழைக்கவும் அவர் தயங்கமாட்டார். ஆனால் ‘புதிய ஜனநாயகக் கட்சி’யின் தலைவர் சி.கா. செந்திவேல் சொன்னால் எழிலன் நம்பக்கூடும் என நினைக்கிறேன். ஏனெனில் எழிலன் ஆசிரியத்துவம் செய்யும் ‘இனியொரு’ இணையத்தோடு செந்திவேல் நெருங்கிய தோழமையுள்ளவர். அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ம் தேதி பாரிஸில் செந்திவேல் ஒரு கருத்தரங்கிலும் கலந்துகொள்கிறார்.

02 ஒக்டோபர் 2010ல் கனடாவில் நடந்த கருத்தரங்கொன்றில் சி.கா. செந்திவேல் நிகழ்த்திய உரையின் சிறுபகுதியிது:

“நமது தோழர்கள் சிலர் வன்னிக்குச் சென்றோம். கண்கொண்டு பார்க்க முடியாத கோலத்தில் வன்னி இருந்தது. அங்கிருந்த பலருடன் உரையாடினோம். இது இங்குள்ள பலரால் உள்வாங்கிக் கொள்ள முடியாதது.  இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளைச் சொன்னவர்கள் தம்மைப் பலாத்காரமாக புதுமாத்தளன் வரையிலும் இழுத்துக்கொண்டு போனவர்கள் செய்த கொடுமையையும் அவர்கள் சொன்னார்கள். சுட்டிருக்கிறாhகள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கிறாhகள். பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போனபோது வாகனத்தின் முன் படுத்துக்கிடந்து தடுத்த தந்தையின் தலைக்கு மேலால் வாகனத்தை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள்
இவ்வாறு தமது மக்களையே கொன்றொழித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை இயக்கம் என்று எப்படிச் சொல்வது?” -(matrathu.com - 09.10.2010)

புலிகளிடம் பணயக் கைதிகளாக, மனிதக் கேடயங்களாக அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கும்படி அய்.நா. கேட்டது, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கேட்டது, யுனிசெப் கேட்டது, சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டது,  செஞ்சிலுவைச் சங்கம் கேட்டது, மனிதவுரிமையாளர்கள் கோரினார்கள், எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கோரினார்கள்,  புலிகளிடம் அகப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் கோரினார்கள். இவையெல்லாம் எழிலனுக்கு அநீதியாகத் தெரிகிறது. அப்போது எதுதான் நீதி? புலிகளிடமிருந்து தப்பி ஓடிய மக்களைப் புலிகள் முதுகில் சுட்டு வீழ்த்தியதும், தப்பியோடும்போது பிடிபட்டவர்களை மக்கள் மத்தியில் கட்டி வைத்துச் சுட்டுக்கொன்றதும், புலிகள் பிடிக்க வருகிறார்கள் என்றவுடன் கடற்கரைக்கு ஓடிச்சென்று தங்களைப் பாயாலோ சேலையாலோ சுற்றிக்கொண்டு மலம் கழிப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த சிறுமிகளைப் புலிகள் பச்சை மட்டையால் அடித்து இழுத்துச் சென்றதுமே நீதியென அருள்எழிலன் சொல்லக் கூடும்.

இவ்வளவிற்கும் “எல்லாம் கை நழுவிப் போன சூழலில் நடேசன் ஏந்தியதாகச் சொல்லப்பட்ட வெள்ளைக்கொடி என்பது என்ன? அது அய்ம்பது ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கடைசியாகப் பறக்கவிடப்பட்ட சமாதானக் கொடியா? ஏன் இந்தக் கொடியை நம்மால் மக்கள் படுகொலையாவதற்கு முன்னால் ஏந்த முடியாமல் போனது” எனக் கேட்டுத் தனது நூலில் (பக்:153) சென்ற வருடம் எழுதியவர்தான் எழிலன். இதே எழிலன் இந்த வருடம்  லண்டன் வந்து “மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே” எனச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது! ‘நக்குண்டார் நாவிழந்தார்’ எனச் சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை.

ஏனெனில் எழிலனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பத்திரிகைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நாங்கள் நண்பர்களாயிருந்தோம். இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போன்ற விடயங்களில் மிகுந்த முனைப்போடு எழுதக் கூடியவர்தான்  எழிலன்.  கடந்த சில வருடங்களாகவே அவரது தீவிர புலி ஆதரவு நிலைப்பாட்டை நான் கவலையோடு கவனித்து வந்தாலும் தமிழகத்திலிருக்கக் கூடிய சராசரி - குறிப்பாகத் திராவிடக் கருத்துகளில் பற்றுறுதி கொண்ட - ஒரு இளைஞரது மனநிலை அது என நான் புரிந்து வைத்திருந்தேன். அந்தப் புரிதல் இல்லாத பட்சத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பு இளைஞர்களிடமும் நான் தொடர்ந்து ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருப்பது சாத்தியமாகியிருக்காது. எல்லாவித நவீனத்துவமும் அமைப்பியல்வாதமும் மார்க்ஸியமும் கற்ற பேராசிரியர் தமிழவனே சி.என்.அண்ணாத்துரையையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு ‘லூட்டி’ அடித்துக்கொண்டிருக்கும்போது, நவீன கவிதையைக் கரைத்துக் குடித்த சி.மோகன் அண்ணனே “பிரபாகரா ஒளி கொண்டுவா” என உணர்ச்சிப் பாவலராக மாறிவிடும்போது, இந்த இளைஞர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை என்றே நான் நினைத்திருந்தேன்.

ஆனால் அருள்எழிலன் அணிந்திருக்கும் மானிட நேயமிக்க ஊடகவியலாளன் என்ற முகமூடிக்குப் பின்னேயிருக்கும் முகத்தில் புலியின் வரிகள் அழுத்தமாகப் பதிந்திருப்பதை லண்டன் ஊடக மாநாட்டில் அவர் பேசிய பேச்சு எனக்குப் புரிய வைத்துள்ளது. தவறுக்கு மேலே அவர் தவறு செய்துகொண்டே போகிறார். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்ததை நியாயப்படுத்த கிளிநொச்சியில் மக்களைப் புலிகள் கட்டுப்படுத்தவில்லை என்கிறார். அதை நியாயப்படுத்த ‘ நான் புலிக் காசில் பயணம் செய்தால் உனக்கென்ன?’ எனக் கேட்கிறார்.

இனி அருள்எழிலனுக்குச் சொல்வதற்கு ஒரு சீனப் பழமொழி  மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளது:
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்!

 http://www.shobasakthi.com/shobasakthi/?p=760

Last Updated on Tuesday, 02 November 2010 12:28