Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இவ்வுலகில் போராட்டம் தவிர வேறும் பல உள்ளன –கோத்தபாய

புனர்வாழ்வு அளிப்பதன் மூலம், புலி உறுப்பினர்களுக்கு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு மையத்தில் வீட்டு மின்சாரப் பொறியியல், மேசன்வேலை, தச்சுவேலை, நீர்க் குழாய் பொருத்துதல் போன்ற பல்வேறு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 300-ற்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டள்ளன. இந் நிகழ்விலேயே கோத்தபாய மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார்.

இவ்வுலகில் போராட்டங்களைத் தவிர, இன்னும். பல உள்ளன என்கின்றார்.

அத்தோடு மட்டக்களப்பபுப் பொலிசார் 300-சோடிகளுக்கு (வி.புலிகளின்) திருமணம் செய்து வைத்துள்ளனர், புலிகள் தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்துக் கொள்வர். இதை தவிர்க்கும் நோக்கிலேயே, பெற்றோர் இப்படி செய்து வைக்க முன்வந்ததாக பொலிஸ் தரப்பார் சொல்கின்றார்கள்.

முட்கம்பி வேலிக்குள் இருந்து மீளக்குடியமர்ந்த மக்களை திரும்பிப் பார்ப்பார்கள் யாருமிலர். இந்நிலையில் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு? இப்புனர்வாழ்வின் நோக்கம் புலிகள் மீண்டும், மீள் உருவாக்கம் பெறாமல் இருபதற்கே. இச்செய்கைகளின் மூலம் எதிர்காலத்தில் இளைஞர் இயக்கங்கள், விடுதலைப் போராட்டங்கள் மீள் உருவாக்கம் பெறாதோ? இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக் காரணமாகியதற்கான, அந்த “மெய்ப் பொருள்” பற்றிச் சிந்திக்காது, அதற்கான காரண காரியங்கங்களை கணடறிந்து, அதற்கு புனர்வாழ்வுருவாக்கம் காணப்படாதவரை, உங்களின் குருட்டு மூடநம்பிகையிலான இந்த சித்து விளையாட்டுக்கள் பயன்தரமாட்டா! இவ்வுலகில் போராட்டம் தவிர இன்னும் பல உள்ளன என்று, உந்த “கலியாணம் கிலியாணம் என்ற அது இதுகளை” காட்டி கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடுகிறார், கோத்தபாயா என்றொரு கோமாளியார். “எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு போராட்டங்கள் உண்டு.” இது தவிர்க்க முடியாத சமூக வரலாற்று நியதி. உந்த “பாமர அரசியலாளர்களுக்கு இவைகள் எங்கே விளங்கப்போகின்றது.?

கோத்பாய இடி அமீனைப்போல செயற்படுகின்றார்!

கோத்தபாய இடி அமீனைப்போல செயற்படுகின்றார். உலகத்தில் இப்படியான ஓர் முட்டாள்தனமான பாதுகாப்பு செயலரை நான் கண்டதில்லை. இவ்வாறு பிபிசியில் கோத்தபாயவின் கூற்றுக்கு பதில் கருத்து கூறும் போது பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கோத்தபாய நாட்டின் உயர் நீதியரசரோ அல்லது சட்ட திணைக்கள ஆணையாளரோ அல்லர். கோத்தபாயவினால் யாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறமுடியாது. அவரது முட்டாளதனமான பேச்சிற்கு நான் நேரத்தை செலவழிப்பதே வீண். சர்வதேச விசாரணைகள் வந்தால் நான் சாட்சியம் அளிப்பேன். சில அதிகாரிகளின் கட்டளைகள் தவறானவை. அவையே படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொன்சேகா மேலும்கூறியுள்ளார். இதுநிற்க,

அனோமாவுக்கு சல்யூட் அடித்து வணக்கம் தெரிவித்த இராணுவ சிப்பாய் இடமாற்றம்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய இராணுவ சிப்பாய் ஒருவரை அரசாங்கம் திடீர் இடமாற்றம் செய்துள்ளது.

அண்மையில் பாராளுமன்ற வீதியில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு வணக்கம் செலுத்துவதற்காக அனோமா பொன்சேகா வருகை தந்திருந்தார். அந்த வேளையில் அவரை பார்த்து ஓரு இராணுவ பாதுகாவலர் சல்யூட் அடித்ததார்.

இந்த புகைப்படம் உள்ளக பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தது.

இந்த நிலையில் அவரை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிரத்தியேகமாக அழைத்து கடுமையாக கண்டித்ததுடன், பின்னர் உத்தியோகபூர்வமாக அவருக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார். அவர் தற்போது வேறு பிரதேசம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்ப டுகின்றது

அரிது அரிது மானிடராதல் அரிது, அதனிலும் அரிது மகிந்த மன்னன் போல் பிறவியெடுப்பது, அதனிலும் அரிது. கோத்தபாய என்றொரு தம்பியை நாம் அரசியல் செயலாளராக பெற்றெடுத்தது, அதனிலும் அரிது. அவர் தம் “சர்வ அதிகாரத்தில்” நாம் பெறும் பெரும்பேறுகள். பெறுபேறென்பது, பாதுகாப்பாளரும் நானே, படுகொலை செய்பவனும் நானே. “நான் அசைந்தால் அசையும் இவ்வுலகில்” அமெரிக்கா என்னடா, ஜ.நாடுகள் என்னடா, உதுகள் எல்லாம் என் காலடியில் என இறுமாப்புடன் இயம்புது. பொன்சேகாவை துஷ்ட-நிக்கிரம் செய்வது நானே. மேவின் டி சில்வா அல்ல என்குது. இப்படி தன்னிஷ்டம் போல் “அங்கொடையில் விலங்கு மாட்டியதைப் போல்” பலவற்றை சொல்லுது. சிலவற்றை செய்ய முற்படுகுது. இப்படி இதன் பெருமைதனை சொல்லவும் வேண்டுமோ?

டக்ளஸ் சொல்வதுபோல எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை!:- பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொல்வது போல எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு இந்திய – இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஜுனியர் விகடனுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைஇ மத்திய அரசு விருந்தாளியாக வரவேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலமே எனக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது! எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு பறந்திருக்கிறார் டக்ளஸ்!

இது தொடர்பாக தற்போதைய தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழங்கிய செவ்வி வருமாறு:-

கேள்வி: இந்திய – இலங்கை அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி டக்ளஸுக்கு மன்னிப்பு அளிக்கப் பட்டுள்ளது என்பது சரியா?

பதில்: 1987-ல் இந்தியஇ இலங்கை அரசுகள் உடன்பாடு செய்துகொண்டபோது தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பிவைக்கப்பட்டு, அந்த நிகழ்வில் பங்குகொண்டவன் நான். டக்ளஸ் சொல்வதுபோல அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படவில்லை. அத்தகைய பிரிவு எதுவும் அந்த ஒப்பந்தத்தில் இல்லை.

போராளிக் குழுக்கள் முன்வந்தால் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மட்டுமே அதில் ஒரு சரத்தில் வழிவகை செய்யப்பட்டது. தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால், அதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் தான் பொறுப்பு.

டக்ளஸைப் பொறுத்தவரை, சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இன்று வரை தேடப்படும் குற்றவாளிதான். எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை!

கேள்வி: டக்ளஸ் உங்களை அந்தச் சமயத்தில் சந்தித்தாரா?

பதில்: இப்போது இலங்கையில் அமைச்சராக இருக்கும் அவர் அப்போது பெரிய ஆள் இல்லை. போராளிக் குழுக்களின் சார்பில் பத்மநாபா, முகுந்தன், சிறீ.சபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்கள் எம்.ஜி.ஆரைச் சந்திக்க வருவார்கள். நான் உடன் இருப்பேன்.

80-களின் கடைசியில் ஒருமுறை டக்ளஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்டார். நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதைத் தவிர, எப்போதும் என்னை சந்தித்ததில்லை.

கேள்வி: டக்ளஸ் மீதான வழக்குபற்றி, பத்திரிகை மூலம் தான் தெரிந்துகொண்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளாரே?

பதில்: சட்டம் – ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் என்றாலும், தமிழகத்திலும் மத்திய உளவுத் துறை செயல்படுகிறது. டக்ளஸ் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை.

இவரைப்போல யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், மத்திய உளவுத் துறை அவர்களைக் குறித்து அறிக்கை அளிப்பது வழக்கம். பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்துவிட்டு, உளவுத் துறை கூறியதன் பேரில்தானே பின்னர் திருப்பி அனுப்பினார்கள்? எனவே உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை.

அரசுக்கு வேண்டியவர்கள் எத்தகைய தவறு செய்தாலும் அவர்களை வரவேற்பதும், வேண்டாதவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தொல்லை கொடுப்பதும் தான் இங்கே நடைமுறையாக இருக்கிறது! என்றார்.

இந்திய அரசாட்சியாளர்களின் இறந்தகால சமகால தொடர் நற்பணிகள், தேசிய-சர்வதேசிய குற்றவாளிகளுக்கு, பயங்கரவாதிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதும், மக்களைக் கொன்று குவிக்க பேருதவி செய்வதுமே! அன்று 23,000-மக்களின் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவான கொலைஞர் ஆணடர்சனை போபாலில் இருந்து தனிவிமானத்தில் கைகுலுக்கி ஏற்றி அமெரிக்காவிற்கு தப்பியோட விட்டனர்.

அமெரிக்கா உட்பட-மேற்கத்தைய நாடுகள் இந்தியாவை தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. பஞ்சபூதத்தையே பாழாக்கும், தொழில்களை-தொழிற்சாலைகளை தமது நாடுகளில் அமைக்காது, இந்தியா போன்ற நாடுகளிலேயே அமைக்கின்றார்கள். உழைக்கும் தொழிலாள மக்களைப் பற்றிக் கவலைப்படாது, அவர்களை படுகொலை செய்யும் ரசாயன ஆலைகளை, ஏனைய தொழற்சாலைகளை அமைக்கின்றார்கள்.

இது போக, கடந்தவருடம் 40,000ற்கு மேற்பட்ட தமிழ்மக்களை கொன்றொழித்த கொலைஞர் மகிந்தாவையும், அவர்தம் சேவகரையும் செம்கம்பளம் கொண்டு வரவேற்று, நேசக்கரம் நீட்டி, (கறைபடிந்த கரங்கள்) கட்டித்தழுவி, அளவளாவினார்கள். தங்கள் நாட்டில் தேடப்படும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட “சூளைமேட்டுக் கொலைஞரையும்” டெல்லியில் வைத்து கைகுலுக்கி விமானத்தில் பத்திரமாக அனுப்பியுள்ளார்கள். ஆகா! என்னே இது! குற்றவாளிகள் கொலைஞர்கள் பயங்கரவாதிகள் எல்லாம் இந்திய ஆட்சியாளர்களின் விருந்தாளிகளோ?

இப்போ வடக்கின் வசந்தமே-ஜனநாயக நீரோட்டமே, தலைவா! இதற்கு தாங்கள் என்ன சொல்கின்றீர்கள்? தங்களுக்கு எந்த ஈ.பி.கோ. சட்த்தின்படி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோ? மகிநதாவின் மன்னிப்பும் சட்டமாகுமோ?

தமிழ் செம்மொழியாக கோவையில் கலைஞர்-குடும்பத்தினரின் திருவிழாக் கொண்டாட்டம்!

தமிழ் உயர்நீதிமன்ற மொழியாக மதுரையில் “ஜெயலலிதா-வழக்கறிஞர்களின் போர் ஆட்டம்”!

கோவையில் நடைபெறப்போவது உலகத்தமிழ் மாநாடல்ல., கலைஞர் குடும்பத்தினரின் திருவிழாக் கொண்டாட்டமே. கடந்த வருட பிற்பகுதியில் 9-வது உலகத் தமிழ்மாநாடு நடைபெறுமென கலைஞர் அறிவித்தார். இரு மாத கால அவகாசத்தில் ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்து வாசிப்பது சாத்தியமல்லவென, சகல தரப்பிலும் இருந்து எதிர்ப்புக்கள் வந்தன. ஏன் இவ்வளவு அவசரமாக இம் மாநாட்டை நடாத்த வேண்டும் என்கின்ற கேள்வியும் எழுந்தது. உலகத் தமிழ் மாநாட்டை நடாத்துவதற்கென்று ஓர் உலகளாவிய அமைப்பு இருக்கின்றது. அதன் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த மொழி அறிஞர் நொபாரு கராஷிமா இருக்கின்றார். இந்த அமைப்பும், அதன் தலைவரும் தான் உலகத்தமிழ் மாநாட்டை நடாத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிடவேண்டும். நடாத்திக் கொடுக்கும் வரவேற்புக் குழுவாக தமிழக அரசு இருக்கலாம். என பல உலகத்தமிழ் மாநாட்டு–சர்வதேச உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை கலந்தாலோசனை செய்யாமலே, கலைஞர் தன்னிச்சையாகவே மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இது ஓர் மரபு மீறலென சர்வதேசரீதியாக அந்த அமைப்பைச் சேர்ந்த பல அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கருத்தைச் சரியென வலியுறுத்திய, அறிஞர் கராஷிமாவும் வேண்டுமானால் 2011-ல் இம்மாநாட்டை தமிழகத்தில் நடாத்தலாம். இப்போது வாய்ப்பிலலையெனவும் சொன்னார். ஆனால் கருணாநிதிக்கோ தான் முதல்வராக இருக்கும் காலத்தில், தன் தலைமையில் ஓர் மாநாடு நடந்ததாக வரலாறு பேசவேண்டும் என்ற பேராசை நோக்கிலிருந்து, அவசரக்கோலம் கொண்டு, உற்பத்தியாக்கப்பட்டதே இச் செம்மொழி மாநாடு. எனவே உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை கைகழுவி விட்டுவிட்டு, கருணாநிதி அவர்களால், அவரின் புகழ்பாட, அவராலும் அவர் குடும்பத்தாலும் நடாத்தப்படும் திருவிழாவே, கோவை செம்மொழி மாநாடு. இது அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் ஒத்திக்கையே!

இரு திராவிட “பின்னேற்றக்” கழகங்களின் அடுத்த தேர்தல் தயாரிப்புக்கள்

இந்நிலையில் ஜெயலலிதாவும், தன் கூட்டணி கொண்டு, அடுத்த தேர்தலுக்கு தயாராகி விட்டார். அதன் முதற்கட்ட ஒத்திக்கையே, வழக்கறிஞர்களின் தமிழ் நீதிமன்றப் போராட்டம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலுயுறுத்தி, மதுரையில் சில நீதிமன்ற வழக்கறிஞர்களை உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர், இதை வை.கோவும், ஜெயா தொலைக்காட்சியும், மாக்சிஸ்ட் கட்சியும் பெரும் போராட்டமாக காட்டினர். காட்டுகின்றனர். வழக்கறிஞர்களின் தமிழ் மொழிப் போராட்டத்தின போது, இவர்களது, பேச்சுக்களையும், பிரச்சார உத்திகளையும், அதனூடான் பீடிகைகளையும் உற்றுநோக்கினால், இவர்களே இப்போராட்டச் “சினிமாவின்;” திரைக்கதை வசனகர்த்தாக்கள், தயாரிப்பாளர்கள், டைரக்ஷன் பின்னணிப் பாடகர்கள் என்பதை வலு எளிதாக காணமுடியும்.

அத்தோடு ஜெயலலிதா கடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தலின் போது, கதிரைகளைப் பிடிப்பதற்கு ஓர் புது உத்தியைக் கையாண்டார். ஈழத் தமிழர்களுக்கு “தனிஈழம் என்றார். தன்னாட்சி வந்திட்டால் இந்தியப்படையே இலங்கை செல்லுமென்றார். இதை நம்பிய எம்மவர் வெங்காயங்களும் உண்டு. ஆனால் தமிழக மக்கள் ஜெயலலிதாவின் இந்தச் “சினிமாவை” கண்டுகொள்வேயில்லை. தேர்தலின் பின் வெகுகாலம் ஈழத்தமிழ் மக்கள் பற்றிய பேச்சே இல்லை. வெகுநாளைய ஓய்விற்குப் பிற்பாடு, தற்போது தமிழ் மக்கள் புராணம் பாட ஆரமபித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க 18-திட்டமாமாம். 25,000-யிரம் சீனத் தொழிலாளர்களளின் இலங்கை வருகை, ஈழத் தமிழருக்கும், இந்தியாவிற்கும் ஆபத்தாம். இது அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் (ஆதரவு) பற்றிய கருணாநிதியின் பிரச்சாரத்திற்கு, இப்புராணப் பாடலால்களால் சமாளிக்கலாம். அடுத்தது உங்கள் தமிழ் உயர்நீதிமன்றப் போராட்டம்.

உண்மையில் இப்போராட்டத்தின் தாற்பரியம்தான் என்ன? கருணாநிதி கோவை மாநாட்டில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்றொரு தீர்மானம் கொண்டு வந்தால், தமிழ் உயர் நீதிமன்ற மொழியாகிவிடும் எனக் கருதி போராடுகின்றார்களோ? இந்த “ஜெயலலிதச் சட்ட வல்லுனர்கள்” இந்தியா சுதந்திரம் அடைந்து, அரசியல் சாசனம் எழுதப்பட்டு, 60-ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. அன்றிலிருந்தே பல மாநிலங்களில், அம்மாநில மொழிகளே உயர் நீதிமன்ற மொழிகளாக உள்ளன. இது எப்படி சாத்தியப்பாடாயிற்று? எப்படி சாத்தியப்படுத்தினார்கள். சட்டத்தரணிகளின் பின்னாலிருந்து, போராட்டம் நடாத்தும் “ஜெயாச் செல்வி” கூட பல தடவைகள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். அக் காலங்களில் கூட இந்த தமிழ் உயர்நீதிமன்ற மொழியாக்குவது பற்றி சிந்திக்கவில்லையே? இதைப்போய் இப்போ கருணாநிதியிடம் கேட்பது அரசியல் பாமரத்தனமே! கருணாநிதியின் மைந்தனுக்கே பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியாதநிலை. அதற்கே அவர் பிராயச்சித்தம். செய்யமுடியாமல் தவிக்கின்றார். அவரிடம்போய்………?

கருணாநிதியைவிட தமிழுக்குப் போராடியவர்கள் கம்யூனிஸட்டுக்களே!

சென்னை மாகாணம் என இருந்ததை, தமிழ்நாடு எனப் பெயரிடக் கோரி, அதைப் போராடிப் பெற்றவர், மறைந்த தியாகி சங்கரலிங்கனார். அதற்காக 64-நாட்கள் உண்ணாவிதம் இருந்து, தான் இறந்தபிறகு தன் சடலத்தை கம்யூனிஸட்டுக்களிடம் தான் ஒப்படைக்க வேண்டுமென்று சொல்லி மறைந்தார் அத்தியாகி. சட்டமன்றத்தில் முதன்முதலாக தமிழில் பேசுவோம் எனப் போராடி தமிழில் பேசிய தலைவர்கள். ஜீவானந்தம், இராமமூர்த்தி, போன்ற பொதுவுடமைவாதிககள். தமிழநாட்டில் முதன்முதலில் தமிழில் தந்தி கொடுத்தவர், பொதுவுடமைவாதியான நல்லசிவன். உண்மையில் இவர்கள் எல்லோரும் தமிழுக்காக இதயசுத்தியுடன் போராடியவர்கள். ஆனால் எந்தப் புகழையோ, பட்டத்தையோ எதிர்பார்க்காதவர்கள் ஆவர்.

உண்மையில் இன்றைய தமிழக அரசியலில், இரு திராவிட “பின்னேற்றக்” கழகங்களும், தமிழை செம்மொழியாக்கவோ, அல்லது உயர்நீதிமன்ற மொழியாக்கவோ விரும்பவில்லை. கலைஞர் தன் குடும்பாட்சியை தொடரவும், “ஜெயச்செல்வி தன் ஆணவ அரசாங்கத்தை” எதிர்காலத்தில் அமைத்திடவும் படாத பாடுபடுகின்றார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கிடையில், எது அகப்பட்டாலும் அதைக் கையில் எடுப்பார்கள். தற்போதைக்கு கலைஞருக்கு செம்மொழிமாநாடும், ஜெயாவிற்கு வழக்கறிஞர்களின் போராட்டமும் போதுமானதே! எதிர்காலத்தில் இதுபோன்ற துரும்புச் சீட்டுக்கள் வராமலா போகும்? தொடரட்டும் உங்கள். கழகங்களின் கடமை– கண்ணியம்–கட்டுப்பாடுகள்.

போர்க்குற்ற விசாரணைகள் குறித்து ஐ.நா.வுக்கு அளித்த உறுதியை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரிட்டிஷ் அமைச்சர்

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. மன்ற பொதுச் செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் குழு விவாதம் நடைபெற்றபோதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். விவாதத்தைத் தொடக்கிவைத்து பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் மிக்டொனால்ட் அவர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்களையும், சனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றை ஆதாரம் காட்டிப் பேசினார். போர் குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் குறித்த சாட்சியங்களை அழிக்கும் பணியைச் செய்ய ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடக தகவல்கள் மூலம் தான் அறிந்ததாக கூறினார்.

இதற்கு “பிரபு கோத்தபாய இப்படி இயம்புகின்றார்”

இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவற்றை இலங்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அவற்றின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்குச் சவால் விட்டுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழு ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பணிப்பாளர் கொழும்பு செல்லவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை படையினர் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்குமானால்இ இலங்கையின் நீதித்துறைக்கு முன்பாக அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் காணொலிகளை வழங்கி வருவது பயனற்ற செயல். இலங்கையில் நீதித்துறை உள்ளது. அந்த கட்டமைப்பிற்கு முன்னால் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது பொலிஸாரிடம் கூட சென்று முறையிடலாம் என்று கோத்தபாய சிங்கள ஊடகமான லங்காதீபவுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம் என்று கோத்தபாய ராஜபக்ச பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்றச் சர்வதேச விசாரணை இலங்கை அரசு இரட்டை வேடம் ஐ.நா. அதிகாரி அல்ஸ்டன் குற்றச்சாட்டு


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை இலங்கையில் நடத்தப்படக்கூடாது எனவும், பலஸ்தீன நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசு வலிறுத்தியுள்ளதன் மூலம் அதன் இரட்டை வேடம் அம்பலமாகின்றது. இவ்வாறு ஐக்கிய நாடுகளின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்றும், குறித்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் நியமனம் தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது என்றும் அவரதெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு.

பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது. குறித்த விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்புக்கும் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியே நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இலங்கை மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட யுத்தக் குற்ற விவகாரங்கள் சர்வதேச ரீதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. இலங்கை இந்த விடயத்தில் அதன் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை, பாரபட்சமற்ற செயற்பாடு ஆகியன குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனம் தொடர்பாக திருப்தி கொள்ள முடியாமல் உள்ளது.

ஆனால் அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ, அல்லது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவோ ஒரு வார்த்தையேனும் இல்லை. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.
எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த காலக் குற்றச் செயல்கள் உதாசீனம் செய்யப்படும் என்பதா அதன் அர்த்தம்?. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுஇ சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக செயற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகிறனவா என்பதும் சந்தேகமே. இப்படி அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். இலங்கையில் நீதித்துறை உள்ளதாம், அது உண்மையைக் கணடறியுமாம், அதற்கு முன்னால் சகலதையும் சமர்ப்பிக்கலாமாம். ஆகா! இதைச் சொல்கின்ற போதினிலே இன்பத் தேன் வந்த பாயுது காதினிலே, நீங்கள் சொல்ல, இதை உலகம் நம்பவும் வேண்டும். அட தேசிய ரீதியில் இப்படியொரு “ஜோக்” என்றால், சர்வதேச ரீதியில் இஸ்ரேலுக்கு எதிரான விசாரணை வேண்டுமாம். அதுவும் தங்கள் ஐ.நா,வுக்கான பிதிநிதியின் தலைமையில். நடப்பில் உள்ள தீர்மானம் இலங்கை-இஸ்ரேல் சமபந்தப்பட்ட யுத்த குற்ற விவகாரங்களிலான சர்வதேச விசாரணை, இந்நிலையில் இவர்கள் இஸ்ரேலை விசாரிக்கப் போகின்றார்களாம். மூஞ்சூறு தான் போக வழியைக் காணாமல், விளக்குமாத்தையும் தூக்கிப்போக முற்பட்டதாம். இந் நிலையில்தான் உள்ளது இலங்கையின் “அதிபுத்திசாலித்தன அரசியல் விவேகம்.”

அகிலன் – 21/06/2010


 http://www.ndpfront.com/?p=6911