Sidebar

Language
Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் திருவிழா நிறைவுற இன்னம் மூன்று நாட்களே உள்ளன. இது அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய அட்டமி நவமியில், பஞசமியில் இனிதே நிறைவெய்துகின்றது. இத்தேர்தல் தற்போது தேர்த்திருவிழா கோலம் கொண்டுள்ளது.

தந்தை செல்வாவின” 113-வது ஜனன காலத்தில், சகல அரசியல் கட்சிகளினதும்; சுயேட்சைகளினதும் தலைவர்களோடு வரதராஜப்பெருமாளும், மகிந்த மன்னனும் வடம் பிடித்து தேர் இழுத்த காட்சி, இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் கண்கொள்ளாக் காட்சியே! இதை நாட்டுமக்கள் சகல ஊடகங்களிலும் கண்டு களித்தனர். இவர்கள் எல்லோரும் தேரை இழுத்துவந்து வடகிழக்கு திசையில் நிறுத்தியதில், அது தென்மேற்குப் பக்கம் பார்த்தவண்ணம் இருக்கின்றது. ஆம்! இலங்கையின் பேரினவாத-குறுந்தேசிய இனவாதக் கட்சிகள் எல்லாம், கடந்த காலங்களிலும், சமகால பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊடாகவும் இலங்கையின் அரசியலை, வடகிழக்கு-தெற்கு மேற்காகவே ஆக்கியுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பேரினவாதத் தீனி போடுகின்றார்!

மகிந்தாவின் பேரினவாதப் போக்கு

மகிந்த ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வி மிகப் பாரதூரமானதாகும். தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சமஸ்டி ஆட்சி இல்லை. அது இழிவானது, பயங்கரமானது, வடகிழக்கு இணைப்பிற்கு இடமில்லை. வடகிழக்கு மாகாண சபைகளுக்கு தற்போதைய கிராமசபைகளுக்கு உள்ள அதிகாரங்களே என்றார். அத்துடன் ஈழவாதிகள் இல்லாத பாராளுமன்றமே தேவை. கூடட்மைப்பை தடைசெய்யவேண்டும் என்ற பாங்கில் அரசின் சகல மட்டங்களும் விதந்துரைக்கின்றன.

ஓர் தேர்தல் காலத்தில், ஓரு நாட்டின் பொறுப்புமிக்க தலைவரின் வாயில் இருந்து வரக்கூடிய அரசியல் வாhத்தைகள் இதுவாக இருக்கக்கூடாது. இது அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்றதின் நீட்சியான வார்த்தைப் பிரயோகமும் நடவடிக்கையுமே இது.

இந்நாட்டில் “சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை, எல்லாமே பெரும்பான்மைதான்” என்ற பேரினவாத-அரக்க-அசுரக்குணம் கொண்ட அகங்கார வெறியில் கதைகள் சொல்லிவிட்டு, ஏப்ரல் 1-ல் யாழ் சென்று, தமிழ்மக்கள் இழந்த அனைத்தையும்  பெற்றுத்தருவேன் என தமிழ்மக்களை முட்டாள்ளகள் ஆக்க முனைந்து, அவரே (மக்கள் பேராதரவு இன்றியும்) “ஏப்ரல் பூலுடன்” திரும்பியுள்ளார்.

இராமாயணத்தில் இராவணன் சீதையை பலாத்காரமாக தூக்கிவந்துவிட்டு, ஓர் மந்திரியிடம் கேட்டானாம், சீதை என்னிடம் அன்பாயிருக்க என்ன நான் என்ன செய்யவேண்டுமென்று. அதற்கு மந்திரி சொன்னான் நீங்கள் இராமனின் வேடத்துடன் செல்லுங்கள் என்று, இராவணணும் அப்படியே செல்ல, சீதையும் அந்த அரக்கனை இனம் காண, ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் திரும்பினான் இராவணன். இந்நிலையில் தான் இந்த “இராவண மகிந்த மன்னனும்” (ஜனநாயக வேடத்துடன்) வடபகுதி சென்று ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் திரும்பி வந்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

இலங்கைத்தீவின் வட-கிழக்கு ஓரு பகுதியாகவும், தென்-மேற்கு இன்னொரு பகுதியாகவும், பிளவுபட்டுள்ளது. இதை ஜனாதிபதித் தேர்தலில், மக்களின் வாக்களிப்பு தெட்டத் தெளிவாக்கியுள்ளது என்கினறார், கூட்டமைப்பின் சம்பந்தன்.

வடகிழக்கை இணைக்கமாட்டேன், என மகிந்தா கூறுகின்றார். அது அவருடைய அப்பன் சொத்தல்ல. அது எங்களடையது என்பதை புரியவேண்டும் என்கின்றார். தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்ததை மூலம உரிய தீர்வில்லையேல், அதன் விளைவு விபரீதமாகவே அமையும் என்கின்றார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஆயுதம் ஏந்திய குழுவாக செயற்படவில்லை. அது ஜனநாயக ரீதியாக செயற்படும் அமைப்பாகும். இந்த அமைப்பை அரசு தடைசெய்வது பற்றி எழுந்தமானமாக தீர்மானம் எடுக்கமுடியாது. நாம் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஊடாகத்தான் செயற்படுகின்றோம். இதை தடுப்பதறகு எவருக்கும் அருகதையில்லை என்கின்றார், கூட்டமைப்பின் அரியநேந்திரன்.

இப்போ தமிழ்மக்கள் அரசியலை நாடிபிடித்து சரியாகப் பேசுகின்றீர்கள். தேர்தல் முடியத்தான் தெரியும் உங்கள் (கூத்தமைப்பின்) கூத்துக்கள்.

வரதராஜப்பெருமாள்!

நான் ஒரு மந்திரக்கோலையும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ்மக்கள் மத்தியில் இருந்து சரியான தலைமைகளை புதிய தலைமுறையில் இருந்து உருவாக்கவும், தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பதற்கும், நான் மீண்டும் வந்திருக்கிறேன்.

ீங்கள் உதைச் சொல்லத்தான் இவ்வளவுதூரம் கஸ்டப்பட்டு வந்துள்ளீர்களோ? பழைய காலங்களில் மணியகாரன் உடையார் போன்ற சமூகப் பிரமுகர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஊன்றுகோலைத்தான் கொடுத்தனுப்புவார்கள்! நீங்களும் இத்தேர்தலுக்கு “உந்தச் செய்தியுடன் ஓர் ஊன்றுகோலையும்” அனுப்பியிருக்கலாமே? இது உங்கள் தேர்தல் பிரசார மேடைகளுக்கு கூடிய வலுச் சேர்த்திருக்கும். இல்லாட்டி நீங்கள் வந்தது வேறு அலுவல், சொல்லுறது உந்தச் செய்தியோ?

காங்கிரஸின் கஜேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வருகின்றது. அதற்கான காரணமாக கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூறிவருவதாக சொல்லப்படுகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து நாட்டைப் பிளவுபடுத்துவது பற்றி கருத்துக் கூறக் கூடியவர்களை கூட்டமைப்புத் தலைமை வெளியேற்றியுள்ளது. இப்போது கூட்டமைப்பில் உள்ள அதன் தலைமைகள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு வாழ்வது பற்றியே தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூட்டமைப்பு முன்வைப்பதாக அரசு கூறுவது கூட்டமைப்பினர் மீது அரசுக்கு ஆத்திரம் உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்திஇ அதன் மூலம் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி என்று தமிழ் மக்களை நம்பவைத்து கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து தமக்கு விருப்பமான கூட்டமைப்பை தேர்தலில் வெல்ல வைக்க இந்தியாவும்இ சிங்கள அரசும் கூட்டிணைந்து நாடகம் ஆடுகின்றன. இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்தும் சுயநிர்னய உரிமைக்காரர்கள் தங்கள் கட்சியிலேயே உள்ளார்கள். எனவே தங்கள் கட்சியையே தடைசெய்ய உத்தேசிக்கின்றோம் என்று. (சும்மா தேர்தல் திருவிழாப் பிரச்சாரத்திற்காக)  அரசு அறிவித்திருந்தால், பாருங்கள் எங்கள் கட்சியே தனிப்பெரும் தமிழ்ஈழக்கட்சி என்று இந்நேரத்தில கூட்டங்களில் பேசியிருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பில்லாமல் போச்சே என மகிந்த அரசை நோகின்றார், காங்கிரஸின் கஜேந்திரன். இவருக்கும் பத்மினிக்கும் பதவி கொடுக்கப்பட்டிருந்தால், இவர் இப்படியெல்லாம் சொல்வாரோ? என் செய்வது தேர்தல் படுத்தும் பாடு!

நளினியை விடுதலை செய்யமுடியாதாம்!

தமிழக அரசு, நளினி வழக்கை முடிவிற்கு கொண்டுவர, நீண்டகாலமாக நீதிமன்றத்திற்கு, ஆதாரங்கள் கொடுக்காது, இழுதடித்து வந்தது. கடைசியாக கடுமையான நீதிமன்ற உத்தரவின் பேரில், ஏதோ எட்டுக்காரணங்களை முன்வைத்து, நளினியை விடுதலை செய்யக்கூடாதென, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

இவ்வழக்கு சட்டப்பிரச்சினைகளுக்கு அப்பால், மனிதாபிமானக் கண்கொண்டு பார்க்கப்படவேணடுமென பல மனிதஉரிமை அமைப்புக்கள் சொல்லியுள்ளன. அத்துடன் சில தமிழக எழுத்தாளர்களும் தம் வெளியீடுகளில் சொல்லியுள்ளார்கள். இவ்வெளியீடுகளில், பூங்குழலி எழுதிய “தொடரும் தவிப்பு”என்ற நூலில் இருந்து சில சித்திரவதைக் குறிப்புக்கள்:

நளினியை அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தாக்குதல்கள், மனரீதியான சித்திரவதைகள், போன்றவற்கு உட்படுத்தியே ராஜீவ்காந்தி கொலை வழக்கின்  குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. இதை அவ்வழக்கின் விசாரணைக் குழுவுpற்கு தலைமைதாங்கிச் செய்தவர் கார்த்திகேயன். அவருக்கு “பத்மவிருதுப் பரிசு” நளினிக்கு ஆயுள்த்தண்டனை. நளினி உள்ளிட்ட பெண் கைதிகளை குற்றத்தை ஓப்புக்கொள்ளச் செய்வதற்கு கார்த்திகேசன் கும்பல் கையாண்ட கீழ்த்தரமான சித்திரவதைகள் ஏராளம்.”

“நளினி சிறைக்குச் செல்லும்போது, அவர் இரண்டுமாத கர்ப்பினி. கர்ப்பவதி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தப்பட்டார். கணவன் மனைவி இருவரையும் நிர்வாணமாக்கி தாக்கினார்கள். கணவன் முன்னாலேயே நளினியை பாலியல் வல்லுறவுக்கு முனைந்தவர்கள்தான், கார்த்திகேசன் குழுவினர். நளினியின் குழந்தையை கருவிலே அழிக்க முற்பட்டவர்களும் இவர்கள்தான”.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே, வேலூர் மாவட்டக் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆக்குழுவில் பெரும்பானமையோர் நளினி விடுதலை செய்யப்படுவதையே விரும்பினர். இது கலைஞருக்கும் தெரியும். அது நடைமுறைக்கு வராமல் செய்ததில், தமிழக  அரசிற்கும் பெரும் பங்குண்டு.

கலைஞர் அடிக்கடி கரகரத்த குரலில் கரைவார், நான் தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினையில் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன் என்று. ஆனால் இப்போ அவரின் பிரதான வேலை, குடும்ப அரசியலையும், தன்  தமிழக அரசையும் பாதுகாக்க வேண்டும். என்பதே. குடும்ப அரசியலில், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி போன்றவர்களின் (வேடிக்கை அரசியலை) தீர்த்து வைப்பதும்,  தமிழக அரசியலில், தமிழக காங்கிரஸையும், மத்தியில் சோனியா குடும்பத்துடன் உறவு பேணலுமே!  இப்பேர்ப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிப்பவரிடம் போய் நளினி பிரச்சினையைப் பார் என்றால் அவர்pன் அரசே இல்லாமல் போய்விடும் அல்லவா? அவருக்கு நளினியா? தன் அரசா முக்கியம்.

தேர்தல் திருவிழாக்கால் காசோலைகள் செல்லுபடியாகுமா?

வன்னிப்போரில் சிக்குண்டு வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக உலகநாடுகள், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களால், நிவாரணமாக கொடுக்கப்பட்ட பொருட்கனை,- கிடப்பில் போட்டுவைத்த பொருட்களை, வன்னிமாவட்டத்தில் அரசுசார்பில் போட்டியிடும் ரிசார்ட் பதியுதீன்  வன்னி மக்களுக்கு வழங்கி வருகின்றாராம். அத்துடன் தேர்தல் தினத்திற்கு பின்பான திகதியிட்ட காசோலைகளும் வழங்கப்படுகின்றன.

கொடுக்கப்படுவதோ குப்பைத்தொட்டியில் எறியக்கூடிய தரமற்ற உணவு., கொடுக்கப்படும் காசோலைகளும் மக்கள் கைக்கு காசாக வருமா? உண்மையில் இது காசோலைதானோ? அல்லது ஏதாவது விசேட தினங்களுக்கு வங்கிகளால் வெளியிடப்படும் (10-50-100ருபா) பண நோட்டுக்கள் போன்றதோ என மக்கள் அங்கலாய்கின்றார்களாம். இவ்வேட்பாளர் வன்னிமக்கள் குடியேறிய பகுதிகளுக்கு சென்று இதைச் கொடுத்துவிட்டு, அகதிமுகாம்களில் உள்ள மக்களிடம் சென்று அரசிற்கு வாக்களிக்க வேண்டும், இல்லையேல் தொடாந்தும் உங்கள் வாழ்வு முகாம் வாழ்வுதான் என மிரட்டுகின்றாராம். “சகல மக்களினதும் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதே தமது இலக்கு” என்கின்றார் மகிந்தா இச்சிந்தனையை வன்னிமக்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப பிரயோகிக்கின்றார் இவ்வேட்பாளர்!

ஐ.நாவின் விசேட நிபுணர்குழு போர் நிறுத்தம் தொடர்பாக விசாரணை செய்யாதாம்?

இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, ஐ.நா. செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இவ்வறிப்பு”  குரங்குகளின் கையில் அகப்பட்ட மாலையாகியே விட்டது! முதலில் அணிசேரா அமைப்பு,; இந்தியா-சீனா-ரஸ்யா போன்ற எல்லா “உதுகளும்;” எதிர்ப்பும் – வீட்டோவும் என்றார்கள். பிறகு முதலிரண்டுகள் இதற்கு இடையூறு இல்லாமல் வழிவிடுகிறோம் என்றன. பிறகு எல்லோருமே ஓ. கே என்றார்கள்

இந்த எல்லாக் கோமாளிகளின் “குரங்குச் சேட்டையால்” பூமாலையில், பான் கீ மூனுக்கு மிஞ்சியது, வெறும் நார் மாத்திரமே! இந்த நாரை வைத்து அவர் என்ன செய்வது? அதனாலேயே விசாiணையே இல்லையென்று சொல்லிவிட்டார். ஐ.நாடுகள் சபையென்பது, இலங்கையைப் பொறுத்தவரை வடிவேலுவின் “வரும் ஆனால் வராது” என்ற நகைச்சுவைபோல் உள்ளது. உண்மையில் ஐ.நா.சபை என்பது உலக அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளினதும் மக்களினதும் ஐக்கியத்திற்கெதிரான, ஆதிக்க சக்திகளின் கூடாரமே!

வயிற்றுவலியால் தமிழ்ப்பெண் தற்கொலையாம்!

கருணாநிதியின் காவலர்கள் சொல்கின்றார்கள்

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கருர்ப்பகுதியில் கலைஞரின் பொலிஸ் காவலர்களின் காமப்பசிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி ஒருவர் இரையாகினார். இதனால் மனமுடைந்த அப்பெண்மணி தனக்குத் தானே எண்ணெய் ஊற்றித் தீமூட்டித் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண்ணுக்கு மருத்துவச் சிகிச்சைகள்  பலனளிக்காத நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இப்பெண்மணிக்கு ஏற்பட்ட மரணத்திற்கு வயிற்றுவலிதான் காரணமென கருர் காவல்த்துறையினர்  சொல்கின்றனர். அததுடன் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாகவே, இப்பெண்ணின் உடலை காவல்த்துறையினர் தகனம் செய்துள்ளனர்.

இப்பெண்மணி உயிரிழப்பதற்கு முன்பாக, மனித உரிமைவாதியும், பெண்நிலைவாதியுமான ஒருவரிடம் தனது இறுதி வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அதில் தன் தற்கொலை முயற்சிக்கு பொலீசாரின் பாலியல் வன்முறையே காரணமெனத் தெரிவித்துள்ளார்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமென்பார்கள். ஆனால் பொலீசாரோ தென்னை மரத்தில் ஏறி புல்லுப் புடுங்கினவனின் கதைபோல், கதை சொல்கின்றார்கள். கருணாநிதியின் புலுடா அரசியலாட்டம், அவரின் அரசு இயந்திரமும் புலுடாதான் விடுகிறது.

http://www.psminaiyam.com/?p=4102