Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

 

இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்
கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!

“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…

நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றை
குழிதோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.
நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்!

இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…

எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…
அக்டோபர் மீண்டும் மலர்கிறது…
*

http://porattamtn.wordpress.com/