Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்பில்லா இறைவனுக்கு!
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்…

பாவம்,புண்ணியம்
இன்பம்,துன்பம்
நன்மை,தீமை
இவையெலாம்
உன் பார்வைக்கு
உட்பட்டவையே

நீதான் உயிர்களை
படைப்பதாய்
புராணமும் தன்
புழுகலை
காலத்தின் மீது
தடவிக்கொண்டே வருகிறது

பின் ஏன்
நல்லவன்,கெட்டவன்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
ஏழை,பணக்காரன்
நோயாளி,சுகவாசி
என்ற
துருவ வித்தியாசங்கள்?

படைக்கும் போதே
நல்ல ஜீன்களை
விதைத்து
கெட்ட ஜீன்களை
விடுக்கும்
வித்தை தெரியவில்லையா
உனக்கு?

எத்தனையோ யுகங்கள்
கழிந்த பின்னுமா
உன்
விஞ்ஞான அறிவில்
விருத்தியில்லை?

உன் பெயர்
சொல்லித்தானே
நீ படைத்த உயிரை
நீ படைத்த உயிரே
கொன்று குவிக்கிறது
இதுதான் உன்
படைப்பிலக்கணமா?

நீ மட்டும்
நினைத்த போதெல்லாம்
அவதாரம் எடுத்து
அற்புதம் நிகழ்த்தி
அசத்தல் நாயகனாய்
அச்சேறிவிட்டாய்..

காதல்,காமம்
கேலி,கிண்டல்
என
சுவாரஸ்ய வாழ்வை
தொடர்கதையாக்கினாய்

ஆனால்
உன்
தொண்டர்கள் மட்டும்
நிறைந்த ஏக்கங்களோடு
கிழிந்த கோவணங்களாய்

நடிகனுக்கும் உனக்கும்
என்ன வித்தியாசம்?
நடிகனின்
அவதாரத்தை
ரசிகன் ரசிக்கிறான்
தன் மானம் கிழிந்ததை
மற்றையோர்
ரசிப்பதுகூட தெரியாமல்

உன் தொண்டர்களும்
அப்படியே…
இருப்பினும்
நடிகன் என்பவன்கூட
நிஜமாகிறான்
கண்கூடாய் சில
நல்லவை செய்வதால்

ஆனால் நீயோ
இல்லாதவன் என்று
தெரிந்தபோதும்
இருப்பதாய்த்தானே
இலக்கியம் விரிகிறது

ராமராகவும்
யேசுவாகவும்
நபிகளாகவும்
புத்தராகவும்
என் அவதாரங்கள்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கும் எனும்
உனது
கட்டுக் கதைகளை
இனி நம்பத்
தயாராக இல்லை

இது கலியுகம் அல்ல
பலியுகம்
உணர்வுகள் பிதுங்கிய
வலி யுகம்
உன்னை நினைக்கும்
அந்தக்
கணங்களில்கூட
எங்கள்
கால்களின் கீழே
குண்டுகள் வெடிக்கக் கூடும்

ஆதலால்
எங்கள்
கவனம் முழுதும்
எச்சரிக்கை நோக்கியே

ஆலயங்கள் தோறும்
அபாயங்கள்
இருப்பதாய்த்தான்
எங்கள் குழைந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள்

மத அடயாளங்கள்
மரணத்தின்
வாசற் கதவுகள்
என்பதைப்
புரிந்துகொண்டுவிட்டோம்

ஆதலால்
ஒன்று செய்..
ஒன்று
நல்லதோர்
உலகைக் கொடு
இல்லையேல்
உன் ராஜினாமாவை
நீயே பகிரங்கப்படுத்து.

ஆம்!
ஒட்டுமொத்த உயிர்களும்
உன் மீது
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
கொண்டுவரும் நாள்
வெகு தொலைவில் இல்லை…

-ஷான் சிவா

http://www.vinavu.com/2009/09/05/saturday-poems-3/