Mon10022023

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வன்னியில் என்ன நடக்கின்றது!?

  • PDF

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. 

1980-1983 இல் போராட்டம் தொடங்கிய போது, 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற பழமொழியை எமது தந்தைமாரும் ஊரில் வயதானவர்களும் கூறினர். ஆனால் ஆயுதத்தை வழிபட்ட எம் தலைமுறை, அதை எள்ளி நகையாடியாது, இழிவாடியது. அதுவோ இன்று எம் இனத்தையே அழித்துவிட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம் என்று, என்னதான் தொப்பியை புரட்டிப் போட்டாலும், சொந்த மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியவர்களின் அழிவு அரங்கேறுகின்றது. அவர்கள் தம் அழிவின் போது, மக்களை யுத்தமுனையில் திணித்து கொன்றுவிடுகின்ற அதே அரசியல் வக்கிரமும் அரங்கேறுகின்றது.  

 

கடந்த 30 வருடமாக மணலால் கட்டிய கோட்டையில், ஆயுதத்தைச் செருகி அதையே தமது வழிபாட்டுப் பொருளாக்கினர். எல்லாம் அவன் செயலே என்று நம்புமளவும் வீங்கியவர்கள், செயல்கள் செய்கைகள் மூலம் கற்பனையில் ஒரு விம்பத்தையே உருவாக்கினர். புலித்தேசியம் பாசிசமாக, மக்களின் சுயநிர்ணய உரிமையோ உரிமை மறுப்பாக்கியது. எதுவும் தம்மை மீறியில்லை என்ற அளவுக்கு, முழுச் சமூகத்தையும் அச்சமூட்டி பீதியடைய வைத்தவர்கள், மக்களை செயலற்றவர்களாக்கினர். இப்படி தம்மைத் தாம் மக்களில் இருந்து ஒதுக்கி, தம்மைத்தாம் தோற்கடித்துக் கொண்டனர்.    

 

மக்களையிட்டு அலட்சியத்துடன், மக்கள் அரசியலை திண்ணைப் பேச்சாக எள்ளி நகையாடினர். இன்று அந்த மக்களை தம் பணயப் பொருளாக கொண்டு, புலி தன்னை பாதுகாக்கின்ற பாசிச வக்கிரம் அரங்கேறுகின்றது. புலிகள் தமது சொந்த பாதுகாப்பிற்காக மக்களை ஒரு கேடயமாக்கி விட்டனர். மக்களுக்கான போராட்டத்தை மறுத்தவர்கள், இன்று தம்மை பாதுகாக்க மக்களையே பயன்படுத்துகின்ற கேவலமான அரசியல். எங்கும் யுத்த கோரங்கள்;. அப்பாவிகள் இதில் சிக்கி அழிகிற போது எழும் கதறல்கள்.   

 

இதனால் தினம் தினம் மரணம். உணர்வை உலுக்கும் மரணங்கள். உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் என்று, எம் மக்கள் பேரினவாதத்தின் கோரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில், புலிகளால் பலியிடப்படுகின்றனர். யுத்த முனையில் யுத்தம் செய்ய வைக்கப்பட்ட அப்பாவிகள் முதல் அஞ்சி நடுங்கி ஓடும் எம்மின மக்கள் கொல்லப்படும் அவலம்.

 

உயிர் வாழக் கூட உரிமை கிடையாது

 

சண்டை செய் அல்லது சண்டையில் சிக்கி சா. இது புலிகளின் தத்துவம்;. பேரினவாத தத்துவமோ சரணடை அல்லது தப்பியோடிச் சா. இப்படி உயிர்வாழவே அனுமதியற்ற, மனிதாபிமானமற்ற இராணுவங்கள், மக்களை தம் யுத்தத்தில் பலியிடுகின்றன.   

 

புலிப் பூசாரிகள் மக்களின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இழுத்துப் பிடிக்க, பேரினவாதம் வெட்டுகின்றது. ஒரு வேள்வி நடக்கின்றது. பலி ஆடுகளாக மக்கள் சிக்கிவிட்ட நிலையில், இவை புலித் தேசியத்;தின் பெயரில் அரங்கேறுகின்றது.

 

அரசியலை வெறுத்தவர்கள், எல்லாமே ஆயுதம் என்றவர்கள், யுத்த வெறியை பிரச்சாரம் செய்தவர்கள், ஒரு யுத்தம் மூலம் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றவர்கள், தம் எண்ணிக்கையை காட்டியவர்கள், எதையெல்லாமோ தம் பலம் என்றும் தம்மை அசைக்க முடியாது என்றவர்கள், இன்று இவை எல்லாம் இருந்தும் என்ன, தோல்வி. தம்மை கூட அவர்கள் பாதுகாக்க முடியாது போனார்கள். இன்று அவர்கள் தம்மை பாதுகாக்க, அப்பாவி மக்களை தம் பணயப் பொருளாக்கியுள்ள அவலம். இங்கு ஆயுதங்கள் உதவவில்லை. படைபலம் உதவவில்லை. பணம் உதவவில்லை.

 

மக்களை வெறுத்து அரசியல் செய்தவர்கள், மக்களை போராட்டம் மீதே வெறுப்படைய வைத்தவர்கள், இன்று தம் சொந்த பாதுகாப்புக்கு அந்த மக்களையே பணயம் வைத்துள்ளனர். மக்களை நேசிக்கவும், அவர்களிள் நலனை உயர்த்தியும், ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்த மறுத்தவர்கள், இன்று அந்த மக்களை வருத்தி அழிக்கின்றனர். மக்களால் எதைச் செய்யமுடியம் என்று கேலி செய்தவர்கள், இன்று தம் பாதுகாப்புக்கு மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட வைக்கின்ற நிலைமை மனிதத்தையே அதிரவைக்கின்றது.

 

ஆயுதங்கள், ஆட்பலம், விமானம், கடற்படை, நிர்வாகம் என்று வீம்பாக வீராப்பு பேசியவர்கள், இன்று எதுவும் செய்ய முடியாது திணறுகின்றனர். மக்கள் தம்மைவிட்டு தப்பியோடினால், தம் கதி அதோ கதி என்று எண்ணும் அளவுக்கு புலிகள் உணருகின்றமையால் தான், அவர்கள் தம்மைப் பாதுகாக்க மக்களை பணயம் வைத்துள்ளனர்.

 

தம்மை அழிப்பதானால் மக்களை பெருமளவில் கொல்ல வேண்டும் என்ற நிலைக்குள், யுத்தம் சுருங்கிவிட்டது. எண்ணங்கள், சிந்தனைகள், நடைமுறைகள் எல்லாம், இப்படியே இதற்குள்ளாகிவிட்டது. அரசியல் பேசுவதையும், மக்கள் போராட்டத்தையும் எள்ளி நகையாடியவர்கள், இன்று தம் இலக்கற்ற எதிர்காலத்தை பற்றிய கற்பனையில் நம்பிக்கை கொள்கின்றனர். இதற்காக தினம்தினம் பேரினவாத கோரப்பசிக்கு மக்களை பலியிடுகின்றனர். 

          

பி;.இரயாகரன்
22.01.2009

 

Last Updated on Thursday, 22 January 2009 08:41