Language Selection

பி.இரயாகரன் -2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தக் கேள்வி எம்முன் தொடருகின்றது. மூடி மறைக்கப்பட்ட செயற்பாடுகள், குழுவாதங்கள், இயக்க நலன்கள் என்று எண்ணற்றவர்களின் நலன்களுடன் கூடியிருந்த கூட்டம். பிறப்பால் தலித்துகள் மற்றும் தலித் ஆதரவு போலிகள் கூடியிருக்கவே, தலித் மாநாடு நடந்தது.

உண்மையாக தலித் மக்களுடன் ஒன்றியதாக தம்மை அடையாளப்படுத்துவதில் தடுமாற்றமே மேவிநின்றது. எல்லாம் மூடு மந்திரமாகவே காணப்பட்டது. நிகழ்ச்சிகள் கூட அறிவியல் பூர்வமானவையாக, ஆளுமை கொண்டதாகவோ நடத்தப்படவில்லை. தெரிந்த பழைய சரக்கை அவித்து அரைத்துக்கொட்டுவதாகவே அமைந்தது. அனைத்தையும் தெளிவுபடுத்தும் அளவுக்கு கேள்விகள் தவிர்க்கப்பட்டன. கருத்துச் சுதந்திரத்தை, கேள்விச் சுதந்திரம் மட்டுப்படுத்த, உருப்படியற்ற நிகழச்சியால் மாநாட்டை மூழ்கடித்தனர். கருத்துச் சுதந்திரத்தை நபர்களுக்கு ஒரு சில நிமிடம் மூலம் வழங்கியவர்கள், கருத்துக்கு அதை மறுத்தனர்.

 

தலித்துக்கே உரிய, உண்மையான உணர்வுபூர்வமான செயற்பாட்டைத் தான், தலித் மாநாடு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. யார் எதிரி என்பதை தெளிவுபடுத்துவதும், நண்பனை அடையாளம் காண்பதும் அவசியமாக இருந்தது. அதை இந்த மாநாடு செய்யவில்லை. சூக்குமாகவே அதை வைத்திருப்பது மூலம், இது எதிர் புரட்சிக்கான கூறுகளை, உள்ளடகத்தில் பாதுகாத்துக்கொண்டது. தலித் மக்களின் விடுதலைக்குரிய அரசியலை முன்வைப்பது அவசியமானதாக இருந்தது. அதையும் இது நாசூக்காக செய்யவில்லை. தலித் மக்களின் விடுதலையை உள்ளடக்கியது தான், அனைத்து விடுதலையும். இதையும் தலித்மாநாடு வலியுறுத்த முனையவில்லை. எந்த இடைக்கால தீர்வும் முன்மொழிவும், நீண்டகால தீர்வின் மேலானதாக அமைவது அவசியமானது. இந்த உண்மையை தலித் மாநாடு மறுதலித்தது. இது அனைத்தும் படுபிற்போக்கான எல்லைக்குள், தலித் மக்களை ஒரு கத்திவிளிம்பில் நிறுத்தி தலித் மாநாட்டை ஒப்புவித்தனர்.

 

இதனால் போலிகளும், தலித் விரோத இயக்க மையவாதமும் மேலோங்க, தலித்மாநாடு சலசலத்தது. கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் ஒப்புக்கு தலித் ஒப்புபாடப்பட்டது. தலித் மக்களின் வாழ்வையே நசுக்குகின்ற, அவர்களை ஒடுக்குகின்ற எதிரிகளை சரியாக இனம் காண்பதே, இந்த முயற்சிக்கும் முன்நிபந்தனையானது. தலித் மக்களின் நியாயமான அடிப்படையான ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு பூர்வமான செயற்பாட்டை, சிதைக்க விரும்புகின்ற எதிரிகளோ பல வேஷத்தில் இன்று பலவாகி இதில் சலசலத்தனர்.

 

தலித் மாநாட்டையொட்டி சதிகள், சூழ்ச்சிகள், இழிவாடல்கள், தமதானதாக காட்டும் முயற்சிகள், தலைமறைவு நடவடிக்கைகள் எல்லாம் ஒருங்கே முனனும் பின்னுமாக அரங்கேறின. வெளிப்படையாக

 

1.மிக கடுமையான அவதூறுகளை, புலிகளின் சில தளத்தில் செய்தனர்.

2. தலித் மாநாட்டை புலியெதிர்ப்பு மாநாடாக காட்ட, புலியெதிர்ப்புக் கும்பல் முனைப்பு பெற்றது. ரீ.பீ.சீ வானொலி உட்பட, ஈ.பி.ஆர்.எல்.எப் தனதாக காட்டவும் கூட முயன்றது.

 

இதன் பின்னனியில் தலித் உணர்வு, தலித் மக்களின் விடுதலை என்ற அம்சம் மேலோங்கி இருக்கவில்லை. நான் தலித் என் ஒர்மம், உறுதி இருக்கவில்லை. கண்ட கண்ட நாய்கள் எல்லாம், எப்படியும் பேளலாம் என்று விடப்பட்டு இருந்தது. இதற்குள் இயக்க மையவாதமும், குறுகிய உள்நோக்கத்தையும் அடிப்படையாக கொண்ட செயல்பாடுகள். வேடிக்கை என்னவென்றால் இந்த இயக்க மையவாதம், உள்ளடகத்தில் தலித்துக்கு எதிரானது என்பது தான். அவர்கள் இதற்கு ஆதரவு என்று கூறும் போலித்தனத்தின் மேல் தான், தலித்மாநாடு களைகட்டியது. தலித் ஒழுங்கமைப்பாளர் கடந்தகாலத்தில் இருந்த இயக்கம், எந்தவிதத்திலும் தலித்தியத்துக்கு உதவாது என்ற சுயவிமர்சனத்தைக் கூட அவர்கள் செய்யவில்லை. இன்று இதனாலும், அதனுடன் இல்லை என்பதை தெளிவாக்கவில்லை. ஒரு சூக்குமம், பலர் மத்தியில் சந்தேகமாகவே தொடருகின்றது. உண்மையில் தலித்திய விடுதலைக்காக உணர்வு ப+ர்வமாக இயங்கின், இந்த தெளிவுபடுத்தல் இன்மை என்பது தலித்தியத்தில் உண்மையான விடுதலைக்கு பாதகமானது.

 

இந்த பிரதான போக்கை, சரியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை, எம்முன்னுள்ள கடமையாக இருந்தது, இருக்கின்றது. இந்த நிலையில், இதை நடத்திவர்களின் கடந்தகால நிகழ்கால அரசியல் நிலை காரணமாக, நாம் எச்சரிக்கை கலந்த உணர்வுடன் அணுகினோம், அணுகுவோம். தலித் மக்களின் உண்மையான உணர்வுடன் செயற்படத் தூண்டும் அரசியல் உணர்வை உருவாக்க வேண்டிய, பொறுப்புணர்புடன் நாம் அணுகினோம், அணுகுகின்றோம்.

 

எமது அனுபவமும், கடந்த கால வரலாறு என்பவற்றின் ஊடாகவும், இணக்கமாக இணங்கி நின்று அணுக முற்பட்டோம், முற்படுகின்றோம் தலித் மக்களுடன் உண்மை உணர்வுடன் இணைந்து நிற்கக் கூடிய வகையில், அவர்களின் முன்முயற்சி ஊக்குவிக்க வேண்டியிருந்தது. அதை நோக்கியும், நாம் எமது கருத்தை முன்வைத்தோம், வைக்கின்றோம். சந்தர்பவாதமும் வழுவழுப்பும் கொண்ட, கறாரற்ற தன்மைக்கு ஊடாக நகருகின்ற போக்கை, உடைக்க வேண்டியிருந்தது, வேண்டியிருக்கின்றது.

 

தலித் மக்களுடன் இணைந்து நிற்கின்ற உணர்வு பூர்வமான செயற்பாட்டையே, தமது அரசியல் பாதையாக தெரிவு செய்யவேண்டிய வரலாற்றுத் தேவையை அங்கும், நாம் சுட்டிக்காட்ட முற்பட்டோம்.

 

இதற்காக எமக்கு கிடைத்த அல்லது தரப்பட்ட நேரம் 5 நிமிடங்கள் தான். முற்றாகவே மாற்றுக் கருத்தைக் கொண்ட எனக்கு வழங்கிய நேரம் இது. கருத்துச் சுதந்திரத்தின் மகிமை இது. மிகக் குறுகிய நேரத்தில், அதைக்கொண்டு இந்த பொது தளத்தின் பிழையான பிற்போக்கு சக்திகளின் நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. கிடைத்த நேரத்தில் ஒரு சில பகுதியை சுக்குநூறாக உடைத்துப் போட்டோம். இதை நாம் துல்லியமாக செய்ததன் மூலம், இந்த மாநாட்டை புலியெதிர்ப்பு மாநாடாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் மாநாடாகவும் கூட்டி அள்ளிச்செல்ல முயன்ற முயற்சிகளை முறியடித்தோம். தலித் மக்களின் விடுதலையை, புலியெதிர்ப்பு என்ற பொதுக் கோசத்தில் இயங்கும் எந்தக் குழுவாலும் பெற்றுத்தர முடியாது என்பதையும், அவர்கள் தலித் மக்களின் முதன்மையான எதிரிகள் தான் என்பதை தோலுரித்துக் காட்டினோம். தலித் மக்களைச் சார்ந்து நின்ற நாங்கள், மற்றவர்களும் தலித் மக்களை சார்ந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தினோம்.

 

பி.இரயாகரன்
26.10.2007