Language Selection

பி.இரயாகரன் -2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனைவியும் கணவனும் தனித்தனியான உலகில் தமக்கிடையான முரண்பாட்டுடன் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் என்ன நடக்கும். குழந்தையும் அப்படியே தனித்தனியாகவே வாழத் தொடங்குவதை பல பெற்றோர் உணருவதில்லை.

இப்படிப்பட்ட குழந்தைகள் தாய் தந்தையுடன் வீட்டில் இருக்கின்றனர் என்றால், அது குழந்தையின் சொந்த விருப்பமல்ல. குழந்தை விரும்பியோ விரும்பாமலோ, பெற்றோரின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வதால் இந்த நிலை.

 

கணவன் அல்லது மனைவி சதா நச்சரிப்புக்குள்ளும், சண்டை சச்சரவுக்குள்ளும் சிக்கி குடும்பமே சிதைகின்ற போது, அதே எல்லைக்குள் இயல்பாக குழந்தையும் சிக்கிவிடுகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் குடும்பத்தில் இருந்தும் அன்னியமாகி விடுகின்ற நிலை ஒருபுறம். மறுபக்கம் குழந்தையை பக்குவமாக கையாள வளர்க்க பெண்களுக்கு தெரிவதில்லை. தாய் குழந்தை உறவு என்பது, அதே நச்சரிப்பும், திட்டுதலும், சண்டையும் இன்றி, குழந்தைகள் தாயின் பராமரிப்பை பெறுவதில்லை.

 

குழந்தை குடும்பத்தில் இருந்தும் அன்னியமாகி, விலகி வாழத் தொடங்குகின்றது. குழந்தை தன்னளவில் விகாரமாகிவிடுகின்றது. சமூக அடிப்படையற்ற சிந்தனை, செயல்களை நோக்கி விலகிச் செல்லுகின்றது. குழந்தைகள் வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளிப்படையாக கூறிய படி, வீதிக்கு வருகின்றனர். இப்படி நிலைமை அத்துமீறுகின்ற வகையில், சொந்த வக்கிரங்களை தாய் தந்தை சிறுக சிறுக குழந்தை மீது நஞ்சாகத் திணிக்கின்றனர். உண்மையில் குழந்தையை வழிகாட்ட அவசியமான எல்லைக்குள்ளான சமூகக் கட்டுப்பாட்டை, தாய் தந்தை இழந்து விடுகின்றனர்.

 

படிப்படியாக அதாவது அவசியமான வழிகாட்டலை கூட குழந்தை நிராகரிக்கத் தொடங்குகின்றது. தனது நிம்மதி இழந்த விட்டதாக கூறி வீட்டுக்கு வெளியில் சென்றுவிடுகின்றனர்.

 

குழந்தைகள் ஒரு இரகசியமான தனியான வாழ்க்கையை உருவாக்கி கொள்கின்றனர். தனக்குள் தனியுலகங்களாகி மூலைக்கு மூலை ஆங்காங்கே கூடு கட்டத் தொடங்குகின்றனர். குழந்தை இரகசியமான கள்ளத்தனமாக, பெற்றோருக்கு தெரியாத பலவற்றை திட்டமிட்டு செய்கின்ற உலகில் புகுந்து விடுகின்றனர். இப்படி வீட்டுக்கு வெளியில் அல்லது தொலைபேசியில், அல்லது இணையம் (இன்ர நெற்) என்று பல வழிகளில், அவசியமான வழகாட்டலின்றி சீரழிவுக்குள் சென்று விடுகின்றனர்.

 

குழந்தை இதையும் தாய் தந்தையின் முரண்பாட்டுக்குள் தான் புகுத்தி செய்கின்றது. தாய் தந்தையின் முரண்பாட்டை பயன்படுத்தி, மற்றவருக்கு எதிராக ஒருவரைச் சார்ந்து நின்று இதை பயன்படுத்த முனைகின்றது. இந்த நுட்பத்தை குழந்தை தெரிந்து கொள்வதால், அதை பெற்றோருக்கு எதிராகவே பயன்படுத்தி விடுகின்றனர். பெற்றோரின் இணக்கமற்ற நடைமுறைகள், பிள்ளையின் தவறுக்கு வழி காட்டுகின்றது.

 

தாய்க்கு எதிராக தந்தையையும், தந்தைக்கு எதிராக தாயையும் கொண்டு, குழந்தைகள் தமது மறுவுலகை நிர்ணயம் செய்கின்றனர். குழந்தையின் தவறு கண்டறியப்படும் குடும்பத்திலும், இந்த விடையத்தின் உள்ளார்ந்த அம்சம் கண்டறியப்படுவதில்லை. இதனால் இதுவே குடும்பத்தின் புதிய பிரச்சனையாக மாறிவிடுகின்றது. குழந்தையை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சூழல் என்பதில், குடும்ப சூழலுக்கு உள்ள பங்கு முக்கியமானது. குடும்பத்தினுள் பெற்றோர் தமக்கு இடையிலான ஜனநாயகமற்ற தன்மையும், பெற்றோர் குழந்தையுடன் கொண்டுள்ள ஜனநாயகமற்ற சூழலும் இதை தூண்டுகின்றது. எதையும் இணக்கமான வழியில் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையும், ஜனநாயக மனப்பாங்கும் குடும்பங்களில் இருப்பதில்லை. ஒரு அதிகார முறைமை ஊடாக, குடும்பத்தை நிர்வகின்ற அதிகார மனப்பாங்கே குடும்ப உறுப்புக்கிடையே ஆட்சி புரிகின்றது.

 

மறுபக்கத்தில் தனது குழந்தை தவறு இழைக்க மாட்டாது என்ற பெற்றோரின் மனப்பாங்கு, குழந்தையை தவறாக வழிநடத்துகின்றது. இப்படி அவசியமான சமூக கண்காணிப்பை கைவிடுகின்ற பெற்றோர், தவறான குழந்தை வளர்ப்பின் ஊடாக பாரிய சுமையை சந்திக்கின்றனர். தந்தை அல்லது தாய் அல்லது இருவரும் தனது குழந்தை தவறு இழைக்கமாட்டாது என்று கருதினால், குழந்தை அதைப் பயன்படுத்தி சீரழிகின்றது.

 

குழந்தையின் தவறுக்கு பெற்றோர் இணங்கிக் போகும் சூழல்


குழந்தை தவறு விடுகின்றது என்று கருதுகின்ற பெற்றோரின் அணுகுமுறை என்பது சிக்கலுக்குரியது. தவறு இனம் காணப்பட்டால், அதை உணர்ந்தால், கணவன் மனைவிக்கு இடையில் வேறுபட்ட அணுகுமுறை ஒரு நாளும் இந்த விடையத்தில் கையாளப்படக் கூடாது. மாறுபட்ட அணுகுமுறை அதை மேலும் தூண்டும் குழந்தையின் குறுக்கு வழிக்கே சாதகமானது.

 

தவறுக்கு எதிராக பெற்றோர் தமது அறிவுக்கு ஏற்ப அதை சரியாக கையாண்டலும் சரி, தவறாக கையாண்டலும் சரி, இதில் மாறுபட்ட அபிப்பிராயம் ஒருநாளும் இருக்கக் கூடாது. அது மட்டும் தான் குழந்தையை மாற்றும். குழந்தையின் முன் ஒரேவிதமான ஒரே அணுகுமுறை அவசியமானது. ஒரு முடிவையே இருவரும் அமுல்செய்ய வேண்டும். ஒரேயொரு விடையத்தை மட்டும் பிள்ளைக்கு விளக்க வேண்டும். தாய் தந்தை முரண்பட்ட வகையில் எக்காரணம் கொண்டும், வேறுபட ஒருநாளும் அணுகக் கூடாது.

 

குழந்தையின் தவறு பற்றி பெற்றோருக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இருக்கக் கூடாது. இதில் மாறுபாடு இருப்பின், அதை பற்றி தமக்குள் கூடி பேசி ஒரு முடிவுக்கு வருவது அவசியம். இது தொடர்பாக அந்த குழந்தையின் முன், வாதப்பிரதிவாதம் இருக்கவே கூடாது. இதில் கூடி தமக்கு இடையில் ஒரு முடிவு எடுக்க முடியாவிட்டால், அந்த விடையத்தில் ஒருவரின் முடிவுக்கு மற்றவர் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும். ஆனால் அவருடன் தொடர்ந்து இது பற்றி கதைக்க முடியும். ஆனால் இது பற்றி நிச்சயமாக குழந்தையுடன் அல்லது குழந்தையின் முன்னால் அல்ல. பொதுவாக எமது பெற்றோர் இதைச் செய்வது கிடையாது. குழந்தை முன்பே அதைச் செய்கின்றனர். மற்றவர் பற்றி குழந்தை முன்பே குற்றம் காண்கின்றனர். இப்படி குழந்தை தொடர்ந்து தவறு செய்யும் வழியில், அதற்குரிய வழிவகைளை பெற்றோர் தமக்கிடையிலான முரண்பாட்டின் ஊடாகவே தாமே உருவாக்கிக் கொடுக்கின்றனர்.

 

இதைக் கையாளும் விடையத்தில் நாங்கள் (நான் அல்ல) செய்தது தவறு என்றால், அதைச் சொல்லும் உரிமை அந்தக் குழந்தைக்கு உண்டு என்பதை குழந்தைக்கு உணர்த்தி, குழந்தையை விவாதிக்க தூண்ட வேண்டும். அதை அக் குழந்தை இலகுவாக வெளிப்படுத்தும் வடிவங்களை உருவாக்க வேண்டும். குறித்த விடையம் தொடர்பாக மனந்திறந்து பேசும் மனநிலையை உருவாக்க வேண்டும். குழந்தையை சிறு பராயத்தில் இருந்தே திட்டி தீர்த்து மலடாக்கி வளர்த்தால், குழந்தை எதையும் வெளிப்படையாக பேசுவதற்கான சூழலே மறுதலிக்கப்பட்டுவிடும். வெளிப்படையாக எதற்கும் அஞ்சி வாழ்கின்ற குழந்தைகள், இரகசியமாக அச்சமின்றி வாழ்வதற்கு பழகிக் கொள்கின்றனர். குழந்தையின் தவறுகள் இப்படி இதற்குள்ளாக வளர்ச்சியுறுகின்றது.

பி.இரயாகரன்
15.07.2007

மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1. போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2. மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

3. பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4. சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5. கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.

7. குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?

தொடரும்