Language Selection

பாரதிதாசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முதலில் உண்டானது தமிழ்

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை"
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?

இசை கூத்தின் முளை

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே! என் வியப்பின் வைப்பே!

இயற்றமிழ் எழல்

அம்மா என் றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
இயற்றமி ழேஎன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!

தமிழர்க்குத் தமிழ் உயிர்

வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகில் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளவிலா உவகை அடற்
றமிழேநீ என்றன் ஆவி!

சாகாத்தமிழ்

படுப்பினும் பாடது, தீயர்
பன்னாரும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!

கலைகள் தந்த தமிழ்

இசையினைக் காணு கின்றேன்;
எண்நுட்பம் காணு கின்றேன்;
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க் கின்றேன்; ஓவியங்கள்,
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண் கின்றேன்.

முன்னூலில் அயலார் நஞ்சம்

பன்னு஡று நூற்றாண் டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணு கின்றேன்.
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான, நஞ்சால்
முறித்ததும் காணு கின்றேன்!

பகைக்கஞ்சாத் தமிழ்

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கினச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்று ரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் றாலும்
தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!

வெற்றித் தமிழ்

ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!

படைத் தமிழ்

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
ஒருவனே மிதிப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm