Language Selection

பி.இரயாகரன் -2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

7.5.2007 அன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. எனது வீட்டின் அருகில் வீட்டை அண்டி நின்ற ஒரு பெரிய லொறிக்கு தீ வைக்கப்பட்டதன் மூலம், இந்த நிகழ்வு அரங்கேறியது. இந்த தீயில் இருந்து நாம் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான்.

 

 

 

1. இந்த தீயை உரிய நேரத்தில் பொலிஸ் உட்பட தீயணைப்பு படையினர் கண்டறிந்தன் மூலம், தீ மேலும் பரவாது தடுத்து அணைக்க முடிந்தது.

 

2. காற்று வீசிய திசை வீதியை நோக்கியும், வீட்டின் திசைக்கும் நடுவாக வீசியதால் குறித்த நேரத்தில் முழுமையாக வீடு எரிவது தடுக்கப்பட்டது.

 

குறித்த தீ எமது வீட்டுக்கு மேலாகவே எழுந்து எரிந்தது. இந்த நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். பொலிசார் வந்து எம்மை அவசரமாக நித்திரையில் இருந்து எழுப்பும் வரை, இதை நாம் அறிந்திருக்கவில்லை. இப்படி அங்கு வசித்த மற்றொரு குடும்பமும் வெளியேற்றப்பட்டது. மற்றைய வீடுகளில் ஆட்கள் இருக்கவில்லை.

 

நாம் வீட்டை விட்டு வெளியேறிய பின், இரண்டு மணித்தியாலங்களாக தீயை அணைக்க கடுமையான போராட்டத்தை தீயணைப்பு பிரிவினர் நடத்தினர். பொலிசார் மற்றும் தீயணைக்கும் படையினர் வீடு எரியலாம் என்று கருதி, பலமுறை பூட்டப்பட்டிருந்த (ஆட்கள் எவரும் அன்று இருந்திராத வீட்டில்) வீட்டில் யாரும் ஆட்கள் அகப்பட்டிருக்கின்றனரா என்பதை பலமுறை சோதிக்க முற்பட்டனர்.

 

தீ பரவுவதை தீயணைக்கும் பிரிவு கட்டுப்படுத்தியதன் மூலம், எமது வீட்டு யன்னல் ஒன்று மட்டுமே எரியுண்டதோடு நின்று போனது. வேறு சில வீடுகளின் வீட்டு யன்னல்களும் தீயால் எரியுண்டது.

 

இந்த நிகழ்வின் பின்னணி, ஒரு அரசியல் படுகொலை முயற்சியா என்று எம்மை சந்தேகிக்க வைத்துள்ளது?

 

பொதுவாக தேர்தலின் பின் எழும் தேர்தல் வன்முறையை சாதகமாக பயன்படுத்தி இந்த தீ வைப்பு அரங்கேற்றப்பட்டதா என்ற சந்தேகம் எம்முன் உள்ளது. இது வெளிப்படையானது. இந்த சந்தேகம் புலிகளை நோக்கி எழும்பியுள்ளது. இந்த வகையில் இதன் அடிப்படையிலேயே சம்பவத்தை பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

 

பொதுவான தேர்தல் வன்முறை எம் பகுதிகளில் நடப்பது இல்லை என்பதும், இது போன்ற சூழல்களை பயன்படுத்தி அராஐகம் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பது, எமது சந்தேகத்தை முன்வைக்க போதுமான காரணமாகும். சாதாரண விபத்து போல் சித்தரித்து கொலைகளை நடத்துவதில், புலிப் பாசிட்டுகள் கைதேர்ந்த திறமைசாலிகள்.

 

இது போன்ற சம்பவங்களை பாரிசில் அரசியல் ரீதியாக புலிகள் செய்தவர்கள். குறிப்பாக 1990க்கு முன்பு புலியல்லாத அலுவலக வாசல்களில், இரவில் புலிகளால் தீ வைக்கப்பட்டது. பாரிசில் புலிகள் நடத்திய படுகொலைகள் ஈறாய் பல சம்பவங்கள் இப்படி நடந்தேறியுள்ளது.

 

ஒரு விடையத்தில் தாம் சம்பந்தப்படாத வகையில் அதைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். மாபியா குழுவுக்குரிய, இரகசிய சதிக் கொலைகளை செய்வதில், அவர்கள் நன்கு பழக்கப்பட்டவர்கள். இயற்கை மரணமாக காட்டுவது அல்லது தாம் செய்யாத கொலையாக பின்னணிகளைச் சோடிப்பது அல்லது விபத்தாக உருவாக்குவது உட்பட, படுகொலைகளைச் செய்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள். இந்த வகையில் புலிகள் இந்த தீ வைப்பில், சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களின் படுகொலை அரசியல் எமக்கு உருவாக்கியுள்ளது.

 

இந்த வகையில் நாம் தீ வைப்புக்கு எதிரான பொது முறைப்பாட்டில், பொலிசாரிடம் எமது சந்தேகத்தைக் குறிப்பிட்டுள்ளோம்.

 

புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பது என்பது எமது மரணங்களை தவிர்த்து அல்ல. மரணங்களின் நிழலை சதா முத்தமிட்டபடிதான், புலிகளின் மக்கள் விரோத பாசிச மாபியா நடத்தைகளை விமர்சிக்கின்றோம. அவர்கள் எம்மை பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படையானது. அவர்களைப் பொறுத்தவரையில் நாம் கொல்லப்பட வேண்டியவர் பட்டியலில் உள்ளவர்கள். அது எப்படி எங்கே என்பது தான், அவர்களின் தேர்வுகுட்பட்ட ஒன்றாகவுள்ளது.

 

பலமான இடைவிடாத இந்த கொலை முயற்சியில் இருந்து தப்ப, நாம் இடைவிடாது உணர்வு ரீதியான எச்சரிக்கையுடன் போராட வேண்டியுள்ளது. பல நெருக்கடிகள் ஊடாக, நாம் மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடவேண்டியுள்ளது. இது எம் போன்றவர்களின் தவிர்க்க முடியாத வாழ் நிலையும் கூட. புலிகள் விரும்புவது நடந்துவிட்டால், அந்த மக்களுக்காக எமது மரணத்தை முத்தமிடத் தயாராகவே நாம் உள்ளோம். போராட்டம் தான் மகிழ்ச்சியானது. இதை விடுத்து கோழையைப் போல் ஓடுங்கி நசிந்து நாயிலும் கீழாக, ஒரு அடிமையாக வாழ்வது ஒரு வாழ்வா. உயிர் உள்ள வரையும் நிஜத்திலும், மரணத்தின் பின் மக்கள் மனங்களில், அவர்களின் சிந்தனை முறைகளில் இருந்து நாம் போராடுவோம். உண்மையை, மக்களின் உரிமையை கொலைகாரர்களால் தடுத்து நிறுத்தவே முடியாது.

பி.இரயாகரன்
08.05.2007