Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க.

பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க.

  • PDF

"கிழக்கு மண் முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கியதோ அல்ல மகிந்தாவின் பேரில் இந்திய நலன்கள் ஆக்கியதோ என்ற பட்டிமன்றத்தை"க் கடந்து...

லங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும் அதை அண்டிய மகிந்தாவின் கட்சியாதிக்கப் பிடிவலுக்கின்ற தமிழ் மக்கள் சமுதாயத்தில் புலிகளுக்கு நிகரான பாசிச அடக்குமுறை ஜனநாயமெனுங் கருத்தாளுமையோடு

 கட்டியமைக்கப்பட்டு வருகிறது.யாழ்மாவட்டத்தில் புலிகளை அடித்து வெருட்டிய இலங்கை அரச ஆதிக்கமானது மிக நிதானமாகவே இந்தியத் திருவிளையாடலுடன் சிங்கள ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னெடுக்கிறது.அங்கோ,எந்த"சபையையும்" உருவாக்காது கிழக்கில் மட்டும் திடீர் தேர்தல்-திடீர் முதலமைச்சர்-திடீர் மாகாணசபை,அமைச்சர்களென ஒரே அசுர வேகத்"தீர்வு"அம் மாகாண மக்களுக்கு ஒப்புவிக்கப் படுகிறது.அங்கே, சகோதரத்துவமும்,மனித கெளரவமும் செழித்தோங்கி வளரும் சூழலைப் பிள்ளையான்-ஞானம் கைக்கூலிகள் கொணருந் தருணத்தில், கிழக்கு மாகாணம் வடக்குக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.இத்தகைய சந்தர்ப்பம் மெல்லத் தோன்றும்போது திரு.டக்ளஸ் அவர்களும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, இலங்கையில் வாழும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் சமாதான வாழ்வை வழங்கும் பொற்காலமொன்று புலம்(ன்)பெயர்ந்த அரசியல் நோக்கர்களிடம் முன்தோன்றி, முயற்சியில் இறங்க வைக்கின்றது!-வாழ்க இ-இ அரசியல் தெரிவுகள்-தீர்வுகள்,தாங்கும் தகுதி தமிழருக்கானது.விதையும்,விதைப்பும் எம் மண்ணிலாக இருக்கும்.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இதற்கு நல்ல எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டுத் தனியான அரச ஆதிக்க அலகு ஏற்படுத்தப்படுவது.இது எல்லாக் காலத்துக்குமானவொரு அரசியல் வியூகமாக இருக்காது.குறிப்பிட்டவொரு புறநிலையை(வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் முரண்பாடு-பிரதேச வாதம்) உருவாக்கியபின் அது முழுமொத்த இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆளுமைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இப்போதைக்குப் பிள்ளையான் அன்ட் ஞானம் முகவர்கள்.

அந்நியச் சக்திகளுள் பற்பல நலனகளைப் பேணும் தேசங்கள் தத்தமது முகவர்களுக்கூடாக இலங்கையில் எடுத்திருக்கும் யுத்தம் குறிப்பிட்ட தெரிவுகளில் யுத்தமாகவும்-தீர்வாகவும் மக்களரங்குக்கு வருகிறது.அதிலொன்று கிழக்கை நெருங்குகிறது.மற்றது, யுத்தமாகப் புலிகளால் நடாத்தப்படுகிறது.ஒன்றின்னொன்றை வேட்டையாட வைப்பதே அந்நியச் சதிகளின் தெரிவாக இருக்கிறது.இதற்குக் கிழக்குக்கு "ஜனநாயகம்" எனுங் காரணத்தைக் கூறுவதும் அத்தகைய அரசியலின் தெரிவே.புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை பூண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் வியூகமானது "கிழக்குக்குத் தனி நிர்வாக அலகு-ஜனநாயம்"வடிவில் நம்மிடம் வருகிறது.

கடந்த காலத்தில் ஆயுதக் குழுக்களிட்ட-குறிப்பாகப் புலிகள் உறுமிய "மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டும்" என்ற கோசங்களும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது! அது,முற்றுமுழுதுமாகவின்று சீரழிந்து ஆயுதக் குழுக்களின் பாசிசமாக வளர்ந்து தம்மையழிப்பதன் தெரிவில் மக்களைப் பலியெடுத்து வருகிறது.இதை, இன்னும் ஊக்கப்படுத்தும் உந்துதலைச் செய்வதற்கான அரசியல் காய் நகர்த்தலை இந்தியா மிக நேர்த்தியாகச் செய்து வருகிறது.இதற்கு மகிந்தா தலைமை தாங்குகிறார்.



இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் இலங்கைக்குச் சொந்தமானதல்ல.அது, முற்றுமுழுதும் இந்தியாவின்-அமெரிக்காவின் சதியோடு சம்பந்தப்பட்டது-இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நிய உறவோடு மிகவும் பிணைந்தது.



இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.குறுகிய "தீர்வுகள்"(கிழக்குக்கு மாகாணசபை,தனி மாகாணம்...)எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும்.இதைத்தாம் இன்றுவரையான எமது போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது.இதற்கு ஜனநாயகச் சாயம் பூசப் பாரீசிலிருந்து ஞானமும் இன்னும் எத்தனையோ கொடூமுடிகளும் முனையலாம்.ஆனால்,மக்கள் வெறும் மண்ணாங்கட்டிகள் இல்லையென்பதைக் காலம் உணர்த்தம்.


"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.இதற்காகக் கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டு அங்கே செயற்கையான முரண்பாடுகளை உருவாக்கித் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதையே கேலிக்குரிய கோசமாக உணர வைக்கப்படுகிறது.இத்தகைய உணர்வு,கிழக்கைத் தனித்த மக்கட்டொகுதியுடைய மாகாணமாக்கிக் கிழக்குக்கான தனி இன அடையாளத்தைப் போர்த்துகிறது.இதைப் பிள்ளையானு}டாகச் செய்து முடிக்கும் தகுதியிலேயேதாம் பிள்ளையானின் அரசியல் வரலாறிருக்கிறது.அவரை நீடூழி வாழப் புலிகள் பிராத்தனை செய்யலாம்.அங்ஙனம் பிள்ளையான் இருக்கும்போது புலிகளின் "தேசிய விடுதலை"க் கோசம் தமிழ் மக்களிடம் மறுவுருவாகஞ் செய்தக்கதே.


தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் "ஜனநாயகம்" பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம், இன்றுவரை மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடும் இந்தப் போர்களுக்கு எப்போதும் தோதானவொரு அரசியலையே முன்னெடுக்கிறது.இத்தகைய "தீர்வுகள்"இலங்கையின் இன முரண்பாட்டை ஒருபோதும் முடிவுக்குக் கொணர முடியாது.ஏனெனில், யுத்தமில்லையெனில் இலங்கை அரசும், புலிகளின் இருப்பும் ஆட்டங்காணும்.அங்கே,உலகப் பொருளாதார ஆர்வங்களின் முரண்பாடுகள் மேலெழ நாட்டின் வறுமை மக்களை"அரிசி"யுத்தஞ் செய்த் தூண்டும்.இது, தவிர்க்க முடியாது தமிழ்-சிங்கள மக்களை ஒன்று படுத்தும் அபாயத்தை இந்தியா நன்றாகவே உணர்கிறது.அவ்வண்ணமே இலங்கை ஆளும் வர்க்கங்கள்.எனவே,பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க மற்றும் அவர்களின் அடிவருடும் "ஜனநாயக-தேசியவிடுதலை" ஆலோசகர்கள் வாழ்க!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.2008