Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவந்தவர்களான அளவெட்டியைச் சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் கொலைகள் புளொட்டினால் உரிமை கோரப்படாத கொலைகளாகவே தொடர்ந்து வந்ததுடன், இறைகுமாரன், உமைகுமாரன் கொலைபற்றி புளொட்டுக்குள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இறைகுமாரன், உமைகுமாரன் கொலைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றே பகிரங்கமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

(சுந்தரம்)

இதேவேளை புளொட்டின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் இறைகுமாரன், உமைகுமாரன் கொலைகள் புளொட்டின் உறுப்பினர்கள் சிலரால்தான் மேற்கொள்ளப்பட்டதென்றும், ஆனால் அக்கொலைகள் தலைமையின் முடிவின்றியே மேற்கொள்ளப்பட்டதென்றும் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து கருத்தளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று தம்மை வெளிக்காட்டிக் கொண்டிருந்த புளொட், தமிழீழ விடுதலைப் புலிகளின் அதே நடைமுறையைப் பின்பற்றி இறைகுமாரன், உமைகுமாரன் கொன்றொழித்ததோடு, அக்கொலைகளுக்கு உரிமை கோரவும் தவறியிருந்ததுடன், அக்கொலைகள் புளொட்டினால் மேற்கொள்ளப்படவில்லை என்று பகிரங்கமாகவே கருத்து தெரிவித்ததிலிருந்து தாம் செய்த தவறுகளை மூடிமறைக்கும் தவறான போக்கு புளொட்டுக்குள் ஆரம்பமாகி விட்டிருந்தது.

இத்தகைய தவறான போக்குகளை நான் புளொட்டில் இணைந்தபோது இனம் காணத் தவறியிருந்ததுடன், நான் புளொட்டில் இணைவதற்கு முன்பு நிகழ்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் கொலைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பத் தவறியிருந்தேன். ஈழ விடுதலைப் போராட்ட அலையும் தளத்தில் செயற்பட்ட புளொட்டின் முன்னணி உறுப்பினர்கள் மீதான அதீத நம்பிக்கையும் இறைகுமாரன், உமைகுமாரன் கொலைகள் குறித்த கேள்விகளை எழுப்புவதிலிருந்து என்னைத் தடுத்திருந்தது.

இனவாத அரசினால் தடைசெய்யப்பட்ட "காந்தீயம்" அமைப்பு

உமாமகேஸ்வரன், கண்ணன் ஆகியோர் இந்தியாவில் சிறையிடப்பட்டிருந்தவேளை சந்ததியார் தளத்தில் புளொட்டின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தார். புளொட்டினுடைய செயற்பாடுகள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு வடிவமாக அல்லாமல் தனிநபர்களுக்கிடையிலான அல்லது பிரதேசப்பொறுப்பாளர்களுக்கிடையிலான தொடர்புகளாகவும், ஒரு குழுவடிவம் கொண்டதுமாகவே இருந்து வந்தது.

(கண்ணன் )

(உமாமகேஸ்வரன்)

சுந்தரம் கொலையின்பின் புளொட்டின் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசபடையினர் மீதான தாக்குதல், வவுனியாவில் விமானப்படையினர் மீதான தாக்குதல் போன்ற சிறு தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர்.

புளொட்(தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்) ஒரு தலைமறைவு இயக்கமாகவும், தமிழீழ விடுதலைக் கழகம் ஒரு பகிரங்க, வெகுஜன இயக்கமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்ததுடன், "காந்தீயம்" அமைப்பையும் அதன் அலுவலகங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் தலைமறைவு இயக்கமான புளொட்டும், வெகுஜன இயக்கமான தமிழீழ விடுதலைக் கழகமும் உபயோகப்படுத்திய வண்ணமிருந்தனர்.

புளொட்டின் வெகுஜன இயக்கமாக விளங்கிய தமிழீழ விடுதலைக் கழகத்தால் 1982 மேதின எழுச்சிக் கூட்டம் மட்டக்களப்பில் இரா வாசுதேவா தலைமையில் நடைபெற்றிருந்தது. இவ்வெழுச்சிச் கூட்டத்திற்கு பார்த்தன், கேதீஸ்வரன், அசோக், ஈஸ்வரன் போன்றோர் இரா வாசுதேவாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததோடு திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களிலுமிருந்து பலர் மட்டக்களப்பு சென்றிருந்தனர். அத்துடன் பல பெண்கள் பங்குபற்றிய இந்த மேதின எழுச்சிக் கூட்டத்தில் காந்தீயத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சரோஜினி (பின்னாளில் புளொட் மத்தியகுழு உறுப்பினர்), பிலோமினா லோரன்ஸ், யூலி(ராதா), ரஜனி(ஜென்னி), ஜெயவாணி(துளசி), கருணாவதி, பவானி, ஜெகதீஸ்வரி, ரஜி ஞானப்பிரகாசம் போன்ற பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(இரா வாசுதேவா)

கேதீஸ்வரன்)

சந்ததியார் காந்தீய அமைப்புச் செயற்பாடுகளுடன் புளொட்டின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தமை, புளொட் இராணுவப் பிரிவின் செயற்பாடுகள், புளொட்டின் வெகுஜன அமைப்புச் செயற்பாடுகள் அனைத்தும் இவ்வமைப்புக்களை ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாதளவுக்கு குழப்பகரமான தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டிருந்தன.

இதனால் இலங்கை அரசின் பார்வை காந்தீயத்தை நோக்கி திரும்பியிருந்தது. பாராளுமன்ற ஆசனங்களை மட்டுமே குறிவைத்து செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மற்றும் இனவாத ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் போன்றவற்றின் கடுமையான எதிர்ப்புகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில், 1977 இனக்கலவரத்தின் பின் அகதிகளான மலையக மக்களை குடியேற்றி மறுவாழ்வளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வடக்கு-கிழக்கில் பல குடியேற்றத் திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்ட "காந்தீயம்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு, காந்தீயத்தின் தலைவர் அருளானந்தம் டேவிட் (டேவிட்ஜயா) அவர்களும், அதன் செயலாளர் டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களும் கைது செய்யப்பட்டதுடன், காந்தீயம் வவுனியா தலைமையகம் சீல் வைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

1977 இனக்கலவரத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிராத, ஆனால் அதன் தாக்கத்திற்குட்பட்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களும் அவரது மனைவி டாக்டர் சாந்தி காராளசிங்கம் அவர்களும் இலங்கை வந்து மலையக மக்களை மீள்குடியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே "காந்தீயம்" அமைப்பாகும்.

(இடமிருந்து வலம் டாக்டர் இராஜசுந்தரம், குட்டிமணி,  தங்கத்துரை)

"காந்தீயம்" அமைப்பின் தலைவர் பொறுப்பை அருளானந்தம் டேவிட் (டேவிட்ஜயா) அவர்களும், செயலாளர் பொறுப்பை டாக்டர் இராஜசுந்தரம் அவர்களும் வகித்த அதேவேளை அதன் ஏழுபேர் கொண்ட நிர்வாகக் குழுவில் டாக்டர் சாந்தி காராளசிங்கம், சந்ததியார், சுந்தரம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

1978 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட "காந்தீயம்" அமைப்பு, ஆயிரக்கணக்கான மலையக மக்களை வடக்கு- கிழக்கில் குடியேற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துக் கொண்டிருந்தவேளையில் 1983 சித்திரை மாதம் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டு அதன் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டன. "காந்தீயம்" அமைப்பில் செயற்பட்டு வந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் அரச படைகளின் தேடுதலுக்கும் கண்காணிப்புக்கும் உள்ளானார்கள்.

இக்காலகட்டத்தில் 1983க்கு முன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்களை தனது முற்போக்கு கருத்துக்களாலும், கடின உழைப்பாலும், மிகவும் எளிமையான வாழ்வு முறையாலும் வென்றெடுத்து பல இளைஞர்களையும் யுவதிகளையும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தி புளொட்டின் செயற்பாடுகளை தளத்தில் வழிநடத்திவந்த சந்ததியார் இந்தியா செல்கையில் புளொட்டின் தளநிர்வாகத்தை ரகுமான்ஜானிடம்(காந்தன்) கையளித்துச் சென்றார்.

(சந்ததியார்)

"காந்தீயம்" செயற்பாடுகள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டு அதன் முன்னணி உறுப்பினர்கள் இலங்கை அரசபடைகளால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், சந்ததியாரால் மிகவும் தீவிரமான, துணிச்சலான இளைஞன் என அடையாளம் காணப்பட்டிருந்த பார்த்தன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் 1983 மேதின எழுச்சிக் கூட்டத்தை நெருக்கடியான சூழ்நிலையிலும் மிகுந்த துணிச்சலுடன் ஒழுங்கு செய்திருந்தார்.

(பார்த்தன்)

திருகோணமலை சின்னமுற்றவெளியில் பார்த்தன் தலைமையில் நடைபெற்ற மேதின எழுச்சிக் கூட்டத்திற்கு கிருபாகரன்(செல்வன்), கேதீஸ்வரன், ஜெயகாந்தன், ராதாகிருஷ்ணன், வசந்தன்(கிறிஸ்டி), பிரதீபன், நந்தன், பவன் உட்பட பலர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அத்துடன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து மேதின எழுச்சிக் கூட்டத்திற்கு உறுப்பினர்கள் சென்றிருந்தனர். மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும், யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த பொன்னுத்துரை(குமரன்) தலைமையிலும், முல்லைத்தீவுப் பொறுப்பாளராக இருந்த நவம் தலைமையிலும், கிளிநொச்சிப் பொறுப்பாளர் கண்ணன் தலைமையிலும், பலகுழுக்களாக திருகோணமலை மேதின எழுச்சிக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

மேதின எழுச்சிக் கூட்டங்கள், "காந்தீயம்" அமைப்புக்கூடாக மக்கள் மத்தியிலான செயற்பாடுகள், இடதுசாரியக் கருத்துக்கள், சிந்தனைகள் என்பனவற்றுடன் விளங்கிய புளொட் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைககளிலிருந்து துண்டித்துக் கொள்ள முடியாததாகவும் வளர்ச்சி பெற்று வந்தது.

1983 யூலை இனஅழிப்பு நடவடிக்கையும் அதனைத் தொடர்ந்த இனக்கலவரத்தையும் அடுத்து இந்திய அரசினால் ஈழவிடுதலை இயக்கங்களை நோக்கி நீட்டிய " நேசக்கரம்" புளொட்டுக்குள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. இந்திய அரசின் "நேசக்கரமும்" தமிழ் மக்கள் மத்தியில் (குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்) தோன்றியிருந்த பேரினவாத அரசுக்கெதிரான அதிருப்தியும் புளொட்டின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியிருந்தது.

தளத்தில் புளொட்டுடன் இணைய முன்வருபவர்களை இனம்கண்டு இணைத்துக் கொள்வதற்கு அல்லது அவர்களை அமைப்பாக்குவதற்கான பொறிமுறைகள் எதுவும் புளொட்டிடம் இருந்திருக்கவில்லை. அரசியல் ரீதியான கொள்கைத் திட்டமோ அல்லது வேலைத்திட்டங்களோ புளொட்டிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் உண்மையான விடுதலை உணர்வோடும், அர்ப்பணிப்புடனும் பலர் புளொட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்ததோடு, புதியவர்களும் புளொட்டுடன் இணைந்து செயற்பட முன்வந்திருந்தனர்.

புளொட்டுடன் இணைந்துகொள்ள முன்வந்தவர்களில் ஒரு பகுதியினர் இராணுவப் பயிற்சியை மட்டுமே முதன்மைப்படுத்தியவர்களாகவும் மற்றொரு பகுதியினர் புளொட்டினுடைய கொள்கை என்ன ? புளொட்டினுடைய வேலைத்திட்டங்கள் என்ன? என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருந்தனர். அத்துடன் புளொட்டுடன் இணைய முன்வருபவர்களை எப்படி அணுகுவது? அவர்களை எப்படி அமைப்பாக்குவது போன்ற பல கேள்விகள் எம் அனைவர் முன்னும் எழுந்து நின்றது.

இத்தகையதொரு சூழலில் புளொட்டில் அங்கம் வகித்தவரும், இடதுசாரி அரசியலில் அறிவும், அனுபவமும் மிக்க ஒரு கிளர்ச்சியாளரான தோழர் தங்கராஜா முன்னணிக்கு வந்தார். புளொட்டில் அங்கம் வகித்தவர்களையும், புளொட்டில் புதிதாக இணைய முன்வந்தவர்களையும் ஒன்றிணைத்து அரசியல் பாசறைகளை மேற்கொண்டுவந்த தோழர் தங்கராஜா, அரசியல் பாசறைகளில் பங்குபற்றியவர்களை மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்யும்படி ஊக்கிவந்தார்.

தளத்தில் சரியான அரசியல் வழிகாட்டலும், முறையான அமைப்புவடிவமுமற்றுச் செயற்பட்டுக் கொண்டிருந்த புளொட்டின் செயற்பாடுகளுக்கு அரசியல் வழிகாட்டலையும் ஒரு அமைப்பு வடிவத்தையும் உருவாக்கிக் கொடுத்திருந்ததோடு, மக்கள் மத்தியில் அமைப்பு வேலைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருந்தார் தோழர் தங்கராஜா. தோழர் தங்கராஜாவின் அரசியல் கருத்துக்கள் புளொட்டின் கருத்துக்களாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர் தங்கராஜாவின் அரசியல் கருத்துக்களாலும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்பு வடிவங்களுக்கூடாகவும் புளொட்டில் இணைபவர்கள் அமைப்பாக்கப்பட்டனர்.

இக்காலப் பகுதியில் உமாமகேஸ்வரன், சந்ததியார், கண்ணன் போன்றோர் இந்தியாவில் தங்கியிருந்தனர். இந்திய அரசின் "நேசக்கரம்" ஈழவிடுதலைப் போராளிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதை நோக்கி நகர்ந்தது. புளொட் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈரோஸ் அமைப்புகளுக்கு இந்திய அரச அதிகாரிகள் இராணுவப் பயிற்சி அளிக்கத் தொடங்கியிருந்தனர்.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி குறித்து "வங்கம் தந்த பாடம்" கையடக்கத் தொகுப்பை வெளிகொணர்ந்திருந்த புளொட் முன்னணி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும், கீழணி உறுப்பினர்களும் கூட எந்தவித கேள்வியையோ அல்லது விமர்சனத்தையோ கொண்டிருக்கவில்லை. ஒருவகையில் இந்தியாவின் இராணுவப் பயிற்சியும் இந்திய அதிகாரிகளுடனான நெருக்கமான உறவும் "இந்தியா எம்மைத்தான் அங்கீகரித்துள்ளது" என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாக பெரிதும் வரவேற்கப்பட்டிருந்தது.

புளொட்டில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்தவர்கள் உட்பட புதிதாக புளொட்டுடன் இணைய முன்வந்தவர்களுக்கும் இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கென அனுப்பி வைத்தல் ஆரம்பமாகியது. தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறைகளுடன் அமைப்புவேலைகளும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட அதேவேளை "புதிய பாதை" பத்திரிகை தளத்தில் புரட்சிகரக் கருத்துக்களுடன் வெளிவரத் தொடங்கியிருந்தது.

1983 மட்டக்களப்பு சிறையுடைப்பினையடுத்து அச்சிறையிலிருந்து தப்பி வெளியேறிய ஞானவேல்(பாண்டி), காந்தீய இயக்கத்தின் தலைவர் அருளானந்தம் டேவிட்(டேவிட்ஐயா), வாமதேவன், புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர்களான பரந்தன்ராஜன்(ஞானப்பிரகாசம் ஞானசேகரன்), மாணிக்கம்தாசன்(நாகலிங்கம் மாணிக்கம் தாசன்), அற்புதன், பாபுஜி உட்பட அனைவரும் பாதுகாப்பாக இந்தியா சென்றடைந்திருந்தனர்.

மட்டக்களப்பு சிறையுடைப்பிலிருந்து தப்பி வெளியேறியவர்களை மட்டக்களப்பிலிருந்து பல்வேறு வழிகளால் மிகவும் பாதுகாப்பாக இந்தியா அனுப்புவதற்கு பார்த்தனின் தலைமையில் பல புளொட் உறுப்பினர்கள் பெரும் பங்காற்றியிருந்த போதிலும், மட்டக்களப்பு சிறையுடைப்பு நடவடிக்கையானது சிறைக்குள் இருந்த புளொட் உறுப்பினர்கள் உட்பட ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களினதும் திட்டமிட்ட ஒரு கூட்டு நடவடிக்கையாகவே அமைந்திருந்தது.

ஆனால் வெற்றிகரமான மட்டக்களப்பு சிறையுடைப்பின் பின்னான சம்பவங்கள் ஆரோக்கியமாக அமைந்திருக்கவில்லை. மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு உரிமை கோரும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகள் புளொட்டாலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராலும் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு உரிமை கோரும் சுவரொட்டிகள் புளொட்டாலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராலும் யாழ்ப்பாண குடாநாட்டில் ஒட்டப்பட்டன.

மட்டக்களப்பு சிறையிலிருந்த அனைத்து இயக்கப் போராளிகளின் பங்கேற்பினால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சிறையுடைப்பு நடவடிக்கை குறுகிய அரசியல் இலாபம் கொண்ட "சுவரொட்டிப் போராட்டமாக" புளொட்டுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இடையில் ஆரம்பமானது.

"மட்டுநகர் சிறைச்சாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால்(PLOT)தகர்க்கப்பட்டது" என உரிமை கோரும் துண்டுப் பிரசுரத்தையும் புளொட் வெளியிட்டிருந்தது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் நடந்த உண்மையை புளொட்டோ அல்லது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரோ ஒருபோதும் ஏற்றுக்க கொள்ளத் தயாராக இருந்திருக்கவில்லை.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36