Sidebar

Language
Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை

புளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - மத்தியகுழு என்று சொல்லப்பட்ட குழுவிலும் கூட. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புளொட் தலைமையில் இருந்த பெரும்பான்மையானோர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வித்தியாசமான போக்கை கொண்டவர்களென்றும், மார்க்சிய சிந்தனையாளர்கள் என்றும், எமது போராட்டத்தினூடாக "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து" சமத்துவ சமுதாயம் படைப்போம் என்றும் கூறிக் கொண்டனரே தவிர, அதற்கான தத்துவார்த்த வழிகாட்டலையே, அரசியல் அறிவையோ கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

 

 

 

இந்த உண்மை நாம் புளொட்டிலிருந்து வெளியேறி "தீப்பொறி" க் குழுவாக செயற்படத் தொடங்கியபோது புளொட்டின் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தவர்களான "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்), காந்தன்(ரகுமான் ஜான்), கண்ணாடிச் சந்திரன் மூலமும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் தெட்டத் தெளிவாகியது.

 

 

 

"புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்)

 

தோழர் தங்கராசா, "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்) போன்றோருக்கு இடதுசாரி அரசியலில் இருந்த பரிட்சயமும், ஓரளவு தெளிவும் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக வெளிக்காட்ட உதவியாக இருந்தது என்று கூறலாம். ஏனைய சில மத்தியகுழு அங்கத்தவர்களைப் பொறுத்தவரை இடதுசாரித்தத்துவத்தின்பால் பெரிதும் கவரப்பட்ட, சமுதாய மாற்றத்தில் அக்கறை கொண்டோராக காணப்பட்டபோதும் கூட வெறும் கோசங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். இன்னும் ஒரு பகுதி மத்தியகுழு உறுப்பினரோ கண்மூடித்தனமான தலைமை விசுவாசம் மட்டுமே, போராளியாய் இருப்பதற்கான முன்நிபந்தனை என்று கருதினர்.

மார்கழி 1983 காந்தன் (ரகுமான்ஜான்) இந்தியா சென்ற பின்னர் ரகுமான் ஜானின் நண்பனான சலீம் தள நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் புளொட்டினுடைய தவறான போக்குகள் குறித்து (சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள், அரசியல் ரீதியில் தவறான போக்குகள்) விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை முன்வைத்ததில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனுமாவார். இதனால் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களிடையே ஒருவகையான " குழப்பநிலை"யும். "தளர்வு" மனப்பான்மையும் காணப்பட்டது. இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பேசுவதற்கும், பிரச்சனைகளைக் கையாளுவதற்கும் என்று சந்ததியார் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

சந்ததியார்

 

முன்னணி அங்கத்தவர்கள் பங்குபற்றிய கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இதில் சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன், பார்த்தன், பெரியமுரளி, பொன்னுத்துரை, ஈஸ்வரன், யக்கடயா ராமசாமி, ராமதாஸ், கண்ணாடிச் சந்திரன், சலீம், முத்து (வவுனியா) போன்றோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன; பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன; ஆனால் பிரச்சனைகள் உரியமுறையில் தீர்வு காணப்படவில்லை. மாறாக, அனைத்து அங்கத்தவர்களையும் நம்பிக்கையுடன் செயற்படுமாறு சந்ததியார் கேட்டுக் கொண்டார். சந்ததியார் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்ற குறுந்தேசியவாத தீவிர வலதுசாரி அரசியலில் இருந்து இடதுசாரி அரசியலை நோக்கி வந்த ஒருவர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது JVP உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. JVP உறுப்பினர்களுடனான கருத்து பரிமாற்றங்கள் சந்ததியாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. சந்ததியார் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் போது இடதுசாரி போக்கின் மேல் ஆர்வம் கொண்டவராக, இடதுசாரிய சிந்தனை உடையவராக காணப்பட்டார். இவரது இந்த இடதுசாரி போக்கானது ஒரு முழுமையான இடதுசாரிய சிந்தனையை கொண்டிராத போதும் கூட, அதை நோக்கிய தேடலாக, அதை நோக்கிய வளர்ச்சியாக, அதை பிரநிதித்துவப்படுத்துவதை நோக்கியதாக இருந்தது. சந்ததியார் சிந்தனையளவில் மட்டும் முற்போக்காளராக இருக்கவில்லை; உதட்டளவில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடவில்லை; அவர் நடைமுறையில் காந்தீயம் என்ற அமைப்புக்கூடாக இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம்பெயந்த அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு கடுமையாக உழைத்தவர்.

கடின உழைப்புக்கு முன்னுதாரணமாக விளங்கிய சந்ததியார் நேர்மையும் எளிமையும் கொண்ட ஒரு போராளியாக புளொட்டுக்குள் விளங்கினார். ஆனால் சந்ததியாரின் இத்தகைய நல்ல பண்புகள் எதுவுமே ஒரு அமைப்புக்குள் தோன்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஏதுவாக அமையவில்லை. காரணம், ஒரு புரட்சிகர அமைப்பானது சரியான தத்துவார்த்த அரசியல் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட, அமைப்புக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். புளொட் அமைப்பு அன்று அப்படி இருக்கவில்லை. சிறுகுழு என்ற நிலையில் இருந்த புளொட் ஜூலை 1983 இன அழிப்பு தொடர்ந்து திடீர் வீக்கத்தை கண்டிருந்தது. இதனால் சந்ததியார் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாகவும், நேர்மையானவராகவும், எளிமையானவராகவும் இருந்த போதும் கூட, முரண்பாடுகளின் தோற்றுவாய்களை இனங்காண்பதில், முரண்பாடுகளை கையாளுவதில் வெற்றிபெற முடியவில்லை.

இச்சந்திப்பின் பின்னர் முன்னணி அங்கத்தவரான கேதீஸ்வரன் புளட்டின் செயற்பாடுகளில் நம்பிக்கையற்றவராக அதிருப்தி அடைந்தவராக காணப்பட்ட போதும், அன்றைய சூழலோ மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இனவாதத்திற்கெதிரான போராட்டத்தின் தேவை, அதற்கெதிராக ஏதாவது ஒருவழியில் போராட வேண்டும் என்ற நிலை, மக்கள் மத்தியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் தோன்றியிருந்த மனோநிலை போன்றவை, எவரையுமே ஏதாவது ஒரு அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தூண்டியது. இதுவே அன்றைய பொதுப் போக்காகவும் இருந்தது. கேதீஸ்வரனுடனான மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கூடாக அவர் மீண்டும் புது ஆற்றலுடன் செயற்படத் தொடங்கினார். இயக்கங்களின் வளர்ச்சி கண்டு அரசபடைகள் உசாரடைந்தன. இயக்கச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை வேட்டையாடும் முயற்சிகள் தொடங்கின.

தலைமறைவு" அமைப்பு என்ற நிலையிலிருந்து பகிரங்க" அமைப்பு என்ற நிலைக்கு வரும்போது தவிர்க்கமுடியாமல் எமது செயற்பாடுகள் குறித்து எதிரி அறிந்து கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கும் என்பதை அப்போது நாம் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதுவும் புளொட் சிறுகுழு என்ற நிலையிலிருந்து மக்கள் தழுவிய, மக்கள் அமைப்புக்களைக் கொண்டதாக மாற்றமெடுத்த காலகட்டமாக இருந்தது. இதனால் எமது செயற்பாடுகளை எதிரியால் மிகவும் சுலபமாக கண்காணிக்கக்கூடியதாய் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

இராணுவத்தால் கொக்குவில் சுற்றிவளைப்பு

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்படுகின்ற நிலவரம் அன்றிருந்தது. வவுனியா நகுலன், மன்னார் பொறுப்பாளர் நகுலன், கொக்குவிலில் இருந்து "புதியபாதை" பத்திரிகையை விநியோகிக்க வவுனியாவுக்கு எடுத்து சென்ற வவுனியா சிவகுரு, போன்ற பலர் இராணுவத்தினரிடம் பிடிபட்டதையடுத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 1984 மாசி மாதம் இந்தியாவுக்கு பயிற்சிக்கு இளைஞர்களை படகு மூலம் சுழிபுரத்திலிருந்து அனுப்பிவிட்டு திரும்பும் வழியில், சண்டிலிப்பாயில் வைத்து கொக்குவில் யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். கொக்குவிலில் புளொட்டினுடைய செயற்பாடுகள் பெருமளவுக்கு பகிரங்கமாக நடைபெற்று வந்ததாலும், லவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் இருந்த கொக்குவில் பற்றிய குறிப்புக்களாலும் இராணுவம் கொக்குவிலைக் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தது. இதை உணர்ந்து கொள்ள முடியாதிருந்திருந்த நாமோ கொக்குவிலையே எமது தொடர்புகளுக்காகவும், சந்திப்புக்களுக்கான மையமாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். கொக்குவில் இனிமேலும் எமது சந்திப்புக்களுக்கும், தொடர்புகளுக்கும் மையமாகவும் பாவிப்பதற்கு உகந்த இடமல்ல என்று சில மத்தியகுழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். இது எதிரி பற்றிய எமது சரியான கண்ணோட்டம் இன்மையையும், எமது அசமந்தப் போக்கையும் காட்டியது.

யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியிருந்து. சலீம் அவர் திருநெல்வேலியில் தங்கியிருந்த அறையில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது. சலீம் 1983 மார்கழி மாதம் பிற்பகுதியிலிருந்து 1984 பங்குனி மாதம் அவர் கைது செய்யப்படும் வரை மூன்று மாதம் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டவர். சலீம் கைதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று நாம் சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம் இராணுவம் வெகு நிதானமாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் எம்மை குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை. சலீமின் கைதையடுத்து அன்று மாலை மீண்டும் அனைவரும் கொக்குவிலில் ஒன்று கூடுகின்றனர்.மத்திய குழு உறுப்பினர்களான பார்த்தன், கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கொக்குவிலில் எமது செயற்பாடுகளை நன்கு அறிந்த சலீம், யோகராஜா, லவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேலும் கொக்குவிலை சந்திப்பதற்கான மையமாக பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று முடிவெடுத்தனர். இந்த முடிவையடுத்து கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா, ஜீவன் ஆகியோர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். எமது காலந்தாழ்த்திய முடிவால் இராணுவம் எம்மை சுற்றி வளைத்து கொண்டது. இராணுவம் யோகராஜா, லவன் கைதானதிலிருந்து ஒரு மாதகாலமாக தகவல் சேகரித்து, நன்கு திட்டமிடப்பட்டு CORDON & SEARCH என்ற கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்தது.

இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் எமக்கு தெரிந்த திசைகளில் ஓடினோம். ஆனால் இராணுவம் மேற்கொண்ட மிகப் பெரியளவிலான சுற்றிவளைப்பில் ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். யாழ் மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட சத்தியமூர்த்தியும், பார்த்தனுடன் இராணுவப் பிரிவில் செயற்பட்டு வந்த கொக்குவில் சிவாவும் இவர்களுடன் கூட பல அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் (நேசன்)உட்பட பார்த்தன், கொக்குவில் ஆனந்தன் ஆகிய மூவர் மட்டுமே தப்பி வெளியேற முடிந்தது. தளத்தில் செயற்பட்ட மத்தியகுழு உறுப்பினரான குமரன் (பொன்னுத்துரை) இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததாலும், பெரிய முரளி, கண்ணாடி சந்திரன் ஆகியோர் சென்னைக்கு புளட்டினால் கொள்ளையிடப்பட்டிருந்த கிளிநொச்சி வங்கி நகைகளின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்க சென்றிருந்ததாலும் இந்த இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து கொண்டனர். யோகராஜா, லவன் கைதானதை அடுத்து லவனிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட டயரியில், இருந்த பெறப்பட்ட விளக்கமான தகவல்களின் அடிப்படையில் தான் கொக்குவில் மீதான இராணுவ சுற்றிவளைப்பை இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொக்குவில் சுற்றிவளைப்புக்கு முன், எவருக்குமே தெரியாமல் மிக இரகசியமாக திருநெல்வேலியில் பாதுகாப்பாக சலீம் தங்கியிருந்த இடத்தை துல்லியமாக அறிந்து இராணுவத்தினர் சலீமை கைது செய்தது எவ்வாறு என்பது, இன்று வரை கேள்வியாகவே உள்ளது.

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5