Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

கருணாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்! (காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி)

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிந்த ராஜபக்ஸதான் தோற்கடித்தார் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இல்லையில்லை, இலங்கைப் படைகளே புலிகளைத் தோற்கடித்தன என்று சிலர் சொல்லலாம். சர்வதேச சமூகமே புலிகளைத் தோற்கடித்தது என்று சொல்வோரும் உள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்.

இந்தச் சக்திகளின் மூலமாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது முதலாவது கட்டமென்றால், இரண்டாம் கட்டமாகப் புலிகள் தோற்கடிக்கப்படுவது தமிழ்த்தரப்பினால். தமிழ் (தேசிய முலாம் புசப்பட்ட) அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசங்களில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள், தமிழ் ஊடகங்கள், அதில் பெரும்பணியாற்றும் ஊடகவியலாளர்கள், புலம்பெயர்தோர்களில் ஒரு தொகுதியினர்... என்று ஒரு பெரிய கூட்டம் இதிலுண்டு.

ஒரு பெரிய படைக்கட்டமைப்பைப்போல எல்லோரும் தங்கள் தங்கள் பங்குக்குத் திட்டமிட்டுப் புலிகளைத் தோற்கடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு, இவர்கள் எல்லோரையும் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அல்லது இவர்கள் செய்கிற வேலைகளை ஊன்றிக் கவனித்தீர்கள் என்றால், அப்படியே உண்மை புரியும். இதைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே பல சங்கதிகள் தெரியும். பலருடைய இந்த வேட்டை, விளையாட்டுகளைப் பற்றி விளங்கும்.sk

முதல் தரப்பினர் புலிகளின் நேரடி எதிரிகள். ஆகவே வெளிப்படையானவர்கள். இரண்டாவது தரப்பினர் நண்பர்களைப் போல, ஆதரவாளர்களைப்போல, விசுவாசிகளைப் போன்று நடிக்கிற எதிரிகள். இவர்கள் புலிகளின் ஆட்களைப் போல இருந்து கொண்டே புலிகளைத் தின்று ஏப்பம் விடுகிறவர்கள். இவர்கள் மாவீர்களைப் பற்றிக் கதைப்பார்கள். உயிரோடுள்ள போராளிகளைக் கவனிக்கமாட்டார்கள். அரசியற் கைதிகளைப் பற்றிப் பேசுவார்கள். கைதிகளின் விடுதலையைப் பற்றியோ, விடுதலையாகி வந்து சிரமப்படுவோரைப்பற்றியோ அக்கறைப்பட மாட்டார்கள். “படையினர் வெளியேற வேண்டும்” என்று வெளியே சொல்வார்கள். படைத்தரப்பு வெளியேறக்கூடாது என்று உள்ளே நினைப்பார்கள். “பௌத்த விகாரைகள் கட்டப்பட வேண்டாம்” என்று சத்தம் போடுவார்கள். விகாரைகள் கட்டப்படும்போது சத்தமில்லாமல் இருப்பார்கள். அடிக்கடி விடுதலைப்புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், புலிகளின் வழிமுறைகளையோ நடைமுறைகளையே பின்பற்ற மாட்டார்கள். தேவைக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயைப்போல, இவர்களுடைய அரசியலுக்கும் ஆதாயங்களுக்கும் புலிகள் ஊறுகாயாக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப் புலிகளையே பயன்படுத்தி, புலிகளைத் தோற்கடிக்கும் ஒரு காரியத்தை கிளிநொச்சியிலும் ஒரு குழு செய்து கொண்டிருக்கிறது. இவர்கள் புலிகளால் (பிரபாகரனால்) ஒரு காலம் உருவாக்கப்பட்ட ஆதரவற்ற சிறார்களுக்கான “காந்தரூபன் அறிவுச் சோலை” யின் பதிவைப் பயன்படுத்தி “SK அறிவுச்சோலை” என்ற சிறுவர் இல்லத்தை ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் சட்ட விதிகளின்படி புதிய சிறுவர் இல்லங்களைக் கண்டபடி ஆரம்பிக்க முடியாது. ஆகவே, புலிகள் தமது காலத்தில் “அறிவுச்சோலை சிறுவர் இல்லம்” என்ற பெயரில் பதிவு செய்து நடத்திய, (காந்தரூபன்) அறிவுச் சோலையின் பதிவு இலக்கத்தைத் தங்களுடைய சிறுவர் இல்லத்தை ஆரம்பிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் செல்வாக்கான வட்டாரமொன்றைப் பிடித்து, “தகிடுதித்தங்கள்” செய்தே இதைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கக் கதையை எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காந்தரூபன் மிகச் சிறுவயதிலேயே புலிகளுடன் இணைந்து விட்டார். இந்தியப் படைகளுடனான மோதல் காலத்தில் பிரபாகரனுடன் மணலாற்றுக் காட்டில் காந்தரூபனும் தங்கியிருந்தார். சிறிய  வயதிலேயே பெற்றோரை இழந்திருந்த காந்தரூபன், தனது 14 வது வயதில், ஆயுதப்பயிற்றியை முடித்துக் கொண்டு போரிடத் தொடங்கி விட்டார்.

தொண்டமானாறு காவலரணில் இலங்கைப் படைகளுடன் 1987 இன் தொடக்கத்தில் நடந்த மோதலில் இலங்கைப் படைகளிடம் உயிருடன் பிடிபடக்கூடிய நிலை ஏற்பட்டபோது சயனைட் அருந்தினார். பின்னர் காப்பாற்றப்பட்ட போதும் அது உடற் பாதிப்பை ஏற்படுத்தியது. மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த சமயத்தில் ஒரு நாள் பிரபாகரன் காந்தரூபனுடன் உரையாடிக் கொண்டிருந்த போது காந்தரூபன் சொன்னார், தான் படிக்க விரும்பியிருந்த போதும் அதற்கான வசதி தன்னுடைய குடும்பத்தில் இல்லாத காரணத்தினால், படிப்பைத் தொடர முடியாமற் போய் விட்டது. ஆகவே தனனைப்போலப் படிக்க வேண்டும் என்ற கனவுகளோடிருக்கும் பெற்றோரை இழந்த வசதியற்ற பிள்ளைகளின்  கனவை நிறைவேற்றுவதற்கு ஒரு சிறார் இல்லத்தை ஆரம்பித்து நடத்துங்கள் என்று கேட்டிருந்தார்.

1990 இல் காந்தரூபன் கடற்படையின் படகுடன் மோதி உயிர் நீத்தார். இதற்குப் பிறகு அவருடைய நினைவாக காந்தரூபன் அறிவுச்சோலையை 13.11.1993 இல் பிரபாகரன் ஆரம்பித்திருந்தார். இப்படித் தொடங்கிய காந்தரூபன் அறிவுச்சோலையை தன்னுடைய நேரடிக் கண்காணிப்பிலும் நெறிப்படுத்தலிலும் வழி நடத்தினார் பிரபாகரன். அங்கே அடிக்கடி சென்று அங்கிருந்த பிள்ளைகளுடன் உறவாடி வந்தார்.

இதனால், புலிகள் இயக்கத்திலும் பொது மக்களிடத்திலும் காந்தரூபன் அறிவுச் சோலையைப் பற்றி பெருமதிப்பு ஏற்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த மக்களும் காந்தரூபன் அறிவுச்சோலைக்காகப் பெருமளவு ஆதரவை வழங்கி வந்தனர். காந்தரூபன் அறிவுச் சோலையின் தொடர்ச்சியாகவே பின்னர் “செஞ்சோலை” என்ற பெண்சிறுவர்களுக்கான இல்லத்தைப் பிரபாகரன் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு சிறப்பு வரலாற்றைக் கொண்ட அறிவுச்சோலைச் சிறுவர் இல்லத்தை SK நாதன் அறிவுச்சோலை சிறுவர் இல்லமாக்கிய தரப்பு, இதனோடு மட்டும் நிற்கவில்லை. அதாவது காந்தரூபன் அறிவுச்சோலையின் பதிவைத் திருடியது மட்டுமல்ல, புலிகளால் கணினிப் பிரிவின் பயன்பாட்டுக்கென நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியையும் புலிகளின் பராமரிப்பிலிருந்த 14 ஏக்கர் காணியையும் கூடக் கையகப்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சி நகரிலிருந்து 1400 மீற்றர் தொலைவிலுள்ள – கிளிநொச்சி நகர அபிவிருத்திப் பகுதியிலுள்ள திருவையாறிலேயே இந்தக் காணியும் கட்டிடத்தொகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் துணையாகவும் ஆதரவாகவும் செயற்பட்டிருக்கிறார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்ற அடிப்படையில் தன்னுடைய அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, இதைச் செய்துள்ளார் சிறிதரன்.

விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலத்தில் திருவையாறு - 02 ஆம் பகுதியில் மிகப் பெரியதொரு கணினிப்பிரிவு இயங்கியது. 14 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பகுதியில் இதைப்புலிகள் நிர்மாணித்து இயக்கி வந்தனர். பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரியின் பொறுப்பிலிருந்த இந்தக் கணினிப் பிரிவு இறுதி யுத்தம் வரை இயங்கியது. யுத்தம் முடிந்த பின்னர் இந்த வளாகத்தைப் படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்தக் காணிகள் அனைத்தும் பொது மக்களுடையவை. 1973 ஆம் ஆண்டு இரணைமடுத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு ஏக்கர் வீதம் அரசாங்கத்தினால் விவசாய உற்பத்திக்கென வழங்கப்பட்டவை. கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள வளமான செம்மண் காணிகள் இவை. இதனால், அந்தக் காலத்தில் திருவையாறில் சிறப்பான விவசாயச் செய்கை நடந்தது. யுத்தம் வலுத்தபோது இந்தக் காணிகள் பலவிதமான தேவைகளுக்கென மாற்றமடைந்தன. அத்துடன் சில காணிகளின் உரிமையாளர்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தனர். இவ்வாறான ஒரு சூழலிலேயே இங்குள்ள ஏழு பேரின் காணிகளைப் புலிகள் தமது கணினிப்பிரிவுக்கெனப் பயன்படுத்தினார்கள்.

யுத்தம் முடிந்த பிறகு, படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தக் காணிகளை மீட்பதற்காக உரிமையாளர்களிற் சிலர் முயற்சித்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் தமது கோரிக்கைக் கடிதங்களைக் கொடுத்து விட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தனர். இதேவேளை இந்தக் காணியில் கண்வைத்தார் SK நாதன் என்ற கதிர்காமநாதன். இவர் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருவர்த்தகர். யுத்தத்திற்குப் பிறகு இலங்கைக்கு வந்து குதித்த இவர், தமக்கிருக்கும் நிதி வளத்தைப் பயன்படுத்தி, புலிகளின் சொத்துகளைச் சுற்றி வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். முதற்கட்டமாக, கிளிநொச்சி அறிவியல் நகரில் புலிகள் அமைத்திருந்த முதியோர் இல்லத்தைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்தார். புலிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களுடன் மேலும் சில கட்டிடங்களைக் கட்டி, இப்பொழுது இதைப் பெருப்பித்திருக்கிறார்.

இதேவேளை இந்தக் காணியைத் தமது  கிராமத்தின் பொதுப் பயன்பாட்டுக்குத் தருமாறு கிராமப் பொது அமைப்புகள் கரைச்சிப் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்தன. ஆனாலும் அது நடக்கவில்லை. இதற்குப் பதிலாக அறிவியல் நகர், மலையாளபுரம் கிராமங்களில் உள்ள சில வறிய மக்களுக்குச் சிறிய அளவிலான உதவிகளைச் செய்தார் நாதன். கூடவே சனங்களை வென்றெடுக்கும் முகமாக அந்தப் பகுதியிலிருந்த ஒரு கோயிலையும் பெரிதாக நிர்மாணித்தார்.

இதில் வெற்றியடைந்த ருசியை வைத்துக் கொண்டு அடுத்த கட்டமாக சிறுவர் இல்லமொன்றை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கினார் நாதன். இதற்குரிய காணியை நாதனுக்கு உள்ளுரில் வலக்கை, இடக்கையாக இயங்கும் ஒருசிலர் அடையாளம் காட்டினர். அதன்படியே திருவையாறுக் காணி கையகப்படுத்தப்பட்டது. இந்தப் பதினான்கு ஏக்கர் நிலப்பரப்பையும் கரைச்சிப் பிரதேச செயலகம் SK நாதனிடம் வழங்கியுள்ளது. தனியொருவருக்கு இவ்வளவு காணியையும் பிரதேச செயலகத்தினால் வழங்க முடியாது. இதற்காக SK நாதன், ஒரு தந்திரோபாயத்தைக் கையாண்டார். ஏற்கனவே முதியோர் இல்லத்துக்கான காணியை எடுக்கும்போது கையாண்ட உத்தியைப்போல, உள்ளுரில் உள்ள சிலருடைய பெயர்களை இணைத்து, சிறுவர் இல்லத்துக்கும் ஒரு சபையை உருவாக்கினார் நாதன். அந்தச் சபை சிறுவர் இல்லமொன்றை அமைப்பதற்கான காணியொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்து கரைச்சிப் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் (சிறிதரன் எம்பி) போன்றவற்றிடம் விண்ணப்பித்தது. இது ஒரு சம்பிரதாயமான விண்ணப்பம் மட்டுமே. நடவடிக்கைகள் அனைத்தும் பின்கதவினால் நடந்து முடிந்தன.

SK நாதன் வெற்றிகரமாகவே திருவையாறில் 14 ஏக்கர் காணியையும் பெற்றுக் கொண்டு “அறிவுச்சோலை சிறுவர் இல்லத்தை” ஆரம்பித்தார். ஆனால், நாதன் அறிவியல் நகரில் பெற்ற வெற்றியைப்போல இது அமையவில்லை. அறிவியல் நகரில், அரசாங்கத்தின் காணியை நேரடியாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் முதியோர் இல்லத்தை அமைப்பதற்காகப் புலிகள் பயன்படுத்தியது. திருவையாறுக் காணிகள் அப்படியானவையல்ல. இவை ஏற்கனவே மக்களுக்காக அரசாங்கத்தின் காணி விநியோகத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டவை. ஆகவேதான், படையினர் கைவிட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்கள் மீண்டும் உரிமை கோரினர். ஆனால், இதைத் தடுத்த SK நாதன் தரப்பு, இந்தக் காணிகளைத் தாமே படையினரிடமிருந்து மீட்டதாகக் கூறியது. அத்துடன், “இந்தக் காணிகளை அவற்றின் முந்திய உரிமையாளர்களாகிய நீங்கள் புலிகளுக்குக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு மேல் நீங்கள் காணிக்கான உரிமைகளைக் கோரினால், புலிகளுக்கும் உங்களுக்குமிடையில் உள்ள உறவைச் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” எனக் காணி உரித்தாளர்களிற் சிலர் மிரட்டப்பட்டதாகத் தகவல். இதனையடுத்துச் சில காணி உரித்தாளர்கள் மெல்ல ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனாலும் காணி உரிமையாளர்களில் சிலர் இதற்குப் பயப்படவேயில்லை. அவர்கள் தொடர்ச்சியாகவே மாவட்டச் செயலர், பிரதேச செயலர், வடமாகாண முதலமைச்சர், மத்திய காணி ஆணையாளர் நாயகம், மாகாணக் காணி ஆணையாளர், சிறிதரன் எம்பி ஆகியோரிடம் சென்று தங்களுடைய காணியைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டனர். இதன்போது சிறிதரன் எம்பி குறித்த காணி உரித்தாளர்கள் இருவரிடம் ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார். “இந்தக் காணிகள் உங்களுடையவைதான். ஆனால், உங்கள் இரண்டு பேருடைய (திருநாவுக்கரசு பொன்னம்பலம் உள்ளிட்ட இருவரிடம்) நான்கு ஏக்கர் காணிகளையும் மீட்டுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்காக தலா இரண்டு லட்சம் ருபாய் வீதம் நான்கு லட்சம் ரூபாய்களைத் தாருங்கள்” என்று.  இதற்கு காணி உரித்தாளர்கள் சம்மதிக்கவில்லை என்று திருநாவுக்கரசு பொன்னம்பலம் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிதரன் தனது முடிவை மாற்றிக் கொண்டார். மறுமுறை காணி உரித்தாளர்கள் சிறிதரனைச் சந்திக்கும்போது, “நாதனுக்குத்தான் அந்தக் காணிகள் போகப்போகிறது. நீங்கள் அதை ஏற்கனவே யாருக்கோ விற்று விட்டதாகச் சொல்லப்படுகிறதே” என்று கூறியுள்ளார். பின்னர், SK நாதனுக்கே முழுக்காணியையும் (14 ஏக்கரையும்) வழங்குமாறு பிரதேச செயலகத்திடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் இதற்கான அனுமதியைக் கொடுத்தார். இதேவேளை இதை மாவட்டச் செயலகத்தில் இருந்த சில அதிகாரிகளும் வெளியே உள்ள சில பொது அமைப்புகளும் பொது மக்களும் இதை ஆட்சேபித்துள்ளனர். இது தொடர்பாக திருவையாறுப் பகுதியின் இளைஞர்கள், மற்றும் சில பொது அமைப்புகள் என்பனவும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின. இதற்குப் பதிலாக திருவையாறு கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு ஒரு ஏக்கர் காணியுடன் புலிகளின் கட்டிடத்தில் ஒன்றை புனரமைத்துத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் திருவையாறுப் பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இலவசமான போக்குவரத்துச்சேவைக்காக ஒரு பஸ்வண்டியும் வழங்கப்படும் என்று சொல்லி, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பஸ் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருக்கிறது. எப்போது அது இடையில் நிறுத்தப்படும் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் இந்தப் பதின்னான்கு ஏக்கர் காணியின் பெறுமதியில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான செலவே.

ஆனாலும் அங்குள்ள இளைஞர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். “சிறுவர் இல்லங்கள் கிளிநொச்சியில் புதிதாக அமைக்கத் தேவையில்லை. ஏற்கனவே குருகுலம் (மஹாதேவ சைவச் சிறார் இல்லம்) காந்தி இல்லம், கருணாநிலைய இல்லம், செஞ்சோலை ஆகியவை இயங்கி வருகின்றன. யுத்தத்தினால் ஏற்பட்ட ஆதரவற்ற சிறார்களின் பெருக்கத்துக்காகவே அப்போது கூடுதலான சிறார் பாதுகாப்பு இல்லங்களின் தேவை இருந்தது. இனிமேல் அந்தத் தேவைக்கு அவசியமில்லை. இப்போதுள்ள இல்லங்களின் அளவே போதுமானது. ஆதரவற்ற சிறார்களின் பெருக்கத்தைக் குறைக்க வேண்டுமே தவிர, அவற்றை எந்த நிலையிலும் பெருக்கக்கூடாது. சமூகத்தின் வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போது சிறுவர் இல்லங்களின் பெருக்கம் நல்லதல்ல. சிறுவர் இல்லங்களை உருவாக்கி, குடும்பங்களில் இருந்து பிள்ளைகளைப் பிரித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, ஆதரவற்றவர்கள் என்ற நிலையை – அடையாளத்தை உருவாக்குவதற்குவது தவறு. அதற்குப் பதிலாக,  தொழில் மையங்களையே உருவாக்க வேண்டும். வேண்டுமானால், சமூகத்துக்கு உதவும் எண்ணம் நாதனுக்கு இருந்தால், அவர் அவ்வாறான தொழில் மையங்களை வேறு எங்காவது பொருத்தமான இடத்தில் உருவாக்கட்டும். இங்கே பொது மக்களின் காணியை அபகரிக்க முடியாது. எனவே SK அறிவுச்சோலை அவசியமில்லாத ஒன்று. ஆகவே, அதற்கான காணி வழங்கப்படக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.

உண்மையும் இதுதான். சிறுவர்களை ஆதரவற்றவர்கள் என்ற நிலையிலோ அல்லது வீட்டுச் சூழல் பொருத்தமில்லை என்றோ பிரித்தெடுத்து சிறுவர் இல்லங்களுக்குக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். முடிந்தவரையில் அவர்கள் தங்களுடைய வீட்டுச் சூழலில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நிலையை உருவாக்குவதே பொருத்தமானது. இது கிராமியப் பொருளாதார வளர்ச்சியோடு, குடும்பங்களின் பொருளாதார நிலையோடு சம்மந்தப்பட்டது. குடும்பங்களின் பொருளாதா நிலை சீராக இருக்குமானால், அந்தக் குடும்பங்களின் வாழ்க்கை முறையும் கல்வி பற்றிய அறிவும் வேறாக அமையும். அப்பொழுது தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்க வேணும், படிப்பிக்க வேணும் என்ற உணர்வைப் பெறுவார்கள். ஆகவே இப்போது கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பகுதிக்கு தொழில் மையங்களே அவசியமானவை.

“நாதனுடன் இணைந்திருப்போர், இந்த இடத்தில் சரியான முறையில் வழி காட்டியிருந்தால் அவர் இதை – தொழில் மையங்கள் உருவாக்குவதை -  செய்திருப்பார்” என்கின்றனர் நாதனின் நெருங்கிய நண்பர்கள். அவர்களைப் பொறுத்தவரை உள்ளுர்வாசிகளே நாதனைத் தவறாக வழிநடத்தியிருக்கின்றனர் என்று நம்புகிறார்கள். இதில் ஓரளவு உண்மையுமுண்டு. ஏனெனில் வசதியற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நாதன் மாதாந்த உதவிகள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறார். நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கான மருத்துவ உதவிக்காக  குறிப்பிடத்தக்க அளவு நிதிப் பங்களிப்புச் செய்திருக்கிறார். இதைப்போல சமூகத்தின் மெய்யான தேவையைப் பற்றி விளக்கி எடுத்துச் சொல்லியிருந்தால், அவர் பொருத்தமான முறையில் சில தொழில் மையங்களை உருவாக்க முயற்சித்திருப்பார் என்கின்றனர் இவர்கள்.

ஆனாலும் இதையெல்லாம் மீறித் தற்போது SK அறிவுச்சோலை சிறுவர் இல்லம் இயக்கப்படுகிறது. இந்தச் சிறுவர் இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக பல கிராமங்களில் ஆட்சேர்ப்பை நாதனுக்கு ஆதரவான உள்ளுர்வாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். வறிய குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று, “உங்களுடைய பிள்ளைகளை சிறுவர் இல்லத்துக்கு அனுப்புங்கள். அங்கே உங்களின் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு, உடுப்பு, சப்பாத்து, படிப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும் என்று கூறிப் பிள்ளைகளை அழைக்கின்றனர்.

அத்துடன், குடும்ப வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோக முயற்சி போன்ற காரணங்களினால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும் பிள்ளைகளைப் பொறுப்பேற்பதற்கான விண்ணப்பத்தையும் புத்திசாலித்தனமாக SK அறிவுச்சோலை சிறுவர் இல்லத்தினர் விடுத்திருக்கிறார்கள். அதன்படி அங்கே  சில பிள்ளைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மிகப் பெரிய அளவில் கட்டிடங்களைப் புனரமைத்தும் புதிதாக உருவாக்கியும் வருகிறார் நாதன். இந்த வளாகத்துக்கு அமைக்கப்படும் மதிற் சுவருக்கே லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தக் காணி உரித்தாளர்கள் தமது காணி தமக்கே மீள வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். இதனையடுத்து இவர்களுக்கு கரைச்சிப் பிரதேச செயலர் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், SK அறிவுச்சோலைக்கு குறித்த காணிகள் தற்காலிகமாகவே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அங்கே நடக்கின்ற நிர்மாணப் பணிகளோ நிரந்தக் கட்டிடத்துக்குரியவை. இதை ஆட்சேபித்தனர் திருவையாறுப்பகுதி இளைஞர்களும் காணி உரித்தாளர்களும். இது தொடர்பாக அவர்கள் பிரதேச சபைக்கும் அறிவித்திருந்தனர். பிரதேச சபையின் அனுமதியில்லாத நிலையிலேயே இந்த நிர்மாணப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக வழங்கப்பட்ட காணிக்கு கட்டிட அனுமதியை வழங்க முடியாது என்பது சட்டவிதியாகும்.

அத்துடன், இந்தக் காணியை பிரதேச செயலகம் இப்படி வழங்கியிருக்க முடியாது என்கிறார் காணித்திணைக்கணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர். அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீளப் பெறுவதாக இருந்தால், அதற்குரிய நிர்வாக முறைகளின் அடிப்படைகளை மேற்கொண்டே அவற்றைப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பெற்றுக் கொண்டாலும் அந்தக் காணிகளை மீள யாருடைய பயன்பாட்டுக்காவது கொடுப்பதாக இருந்தால் காணிப்பயன்பாட்டுக்குழு, மாகாணக் காணி ஆணையாளர் போன்றோருடைய அனுமதியும் ஆலோசனையும் தேவை. இங்கே இந்த நடைமுறை எதுவுமே கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே இது தவறு என்றார் அவர்.

ஆகவே Sk அறிவுச்சோலைக்கு இந்தக் காணி வழங்கப்பட்டதும் தவறு. சிறார் இல்லத்துக்கான அவசியமும் தற்போதில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

இதேவேளை இந்தக் காணி உரித்தாளர்களில் இரண்டு குடும்பத்தினர் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் இந்தக் காணி தொடர்பாக வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் தமக்கு விடப்பட்ட மிரட்டல் தொடர்பாக கிளிநொச்சி பொலிசிலும் முறைப்பாட்டைச் செய்திருப்பதாக தெரிவித்தார் காணி உரிமைக்கோரிக்கையாளர்களில் ஒருவரான திருநாவுக்கரசு பொன்னம்பலம் என்பவர். மற்றக்காணி உரித்தாளர், கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம். இந்த வழக்கு விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகும். அதன்போது மேலும் பல விடயங்கள் வெளியே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

இதேவேளை காந்தரூபன் அறிவுச்சோலையில் முன்னர் தங்கியிருந்த படித்தவர்களில் பலர் இந்த விடயங்களைக் குறித்து அறிந்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். காந்தரூபன் அறிவுச்சோலை புதுக்குடியிருப்பில் இயங்கிய காலத்தில் அங்கே தங்கியிருந்து படித்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். அவர்களில் பலர் வன்னியில் வெவ்வேறு நிலைகளில் உள்ளனர். எல்லோரையும் அன்று பிரபாகரனே நேரடிக் கண்காணிப்பில் வளர்த்து ஆளாக்கியிருந்தார். யுத்தத்தின் பிறகு அவர்களில் பலரும் வெவ்வேறு திக்குகளில் வாழ்ந்தாலும் உயிர்ச்சோலை என்ற அமைப்பின் வழியாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள். சிறியவர்களாக இருந்தவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர், வவுனியா, மன்னார் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டு, தற்போது சுயவாழ்க்கையிலும் மேற்படிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் அறிவுச்சோலைக்கு நடந்த கதியை அறிந்து குமுறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில்(?) புலிகளை வைத்து நடக்கிற, நடத்தப்படுகிற கூத்துகளுக்கு அளவேயில்லை. “ஒரு தலைவர் இல்லையென்றால் என்ன குறைந்தா போச்சு? இதோ இருக்கிறோமே நாங்களெல்லாம் தலைவர்களே” என்று ஆளாளுக்குப் படங்களுக்குப் போஸ் கொடுப்பதும் பிரபாகரனைப் போல சுடரேற்றுவதும் புலிகளின் சொத்துகளுக்கு உரிமை கோருவதும் அவற்றை ஆண்டனுபவிப்பதும் என புலி அடையாளத்தைப் போர்த்திக் கொள்ள முயற்சிப்பதும் என பெரிய கொமடியாகவே உள்ளது. ஆனால், இது சிரிக்கும் விடயமல்ல. சீரியஸாகவே நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தையும் அதில் நம்பிக்கையோடு களமாடிச் சாவடைந்தவர்களையும் தங்களை அர்ப்பணித்தவர்ளையும் எந்த வகையிலும் இந்தக் கொமடியன்கள் அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. காசு, பணம், அந்தஸ்து, புகழ், செல்வாக்குகளுக்குப் பின்னே இழுபடுவதும் தேவையேற்படும்போது புலிகளைக் கொண்டாடுவதும் அருவருப்பான சங்கதிகளே. ஆனால், இப்படித்தான் ஏராளம் தலைவர்கள் எல்லா இடங்களிலும் முளைத்திருக்கிறார்கள். மழைக்கு முளைக்கிற காளான்களின் தொகையை விடவும் கூடுதலாக.

ஒரு புறத்தே காந்தரூபன் அறிவுச் சோலையை SK அறிவுச்சோலையாக்கி, அடையாள அழிப்புச் செய்கிறார்கள். மறுபுறத்தே மாவீர்நாளைக் கொண்டாடுவதற்கு ஆலாய்ப்பறக்கிறார்கள். எல்லாமே லாபத்துக்காகத்தான். ஆமாம், அரசியல் ஆதாயத்துக்காகவே.

00 (யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் “தீபம்“ வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரை)

http://www.thenee.com/011217/011217.html