Sidebar

Language
Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

புதிய கலாச்சாரம் 2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒவ்வொரு நாளும் இருநூறு கி.மீ. தூரம் வரை புகைவண்டியில் கடந்து வேகமாக சென்னைக்குள் வந்து விட்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் அதே வேகத்துடன் இன்னொரு இருநூறு கி.மீ பின்னோக்கிப் பயணித்து, இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை இருளில் உண்டு, உறங்கிக் கழித்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்து சென்னைக்கு பயணிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

காலை ஒன்பதரை மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் ஏலகிரி விரைவு வண்டி, நடைமேடையை அடைவதற்குள்ளாகவே பெட்டிகளிலிருந்து குதிப்பவர்கள், நடைமேடையில் பாதம் பட்ட உடனே கூட்டம் கூட்டமாக வாயிலை நோக்கி ஓடுகிறார்கள். வாயிலை அடைந்ததும் மாநகரப் பேருந்துகளில் திணித்துக் கொண்டு சென்னை நகரின் பல்வேறு திசைகளுக்கும் சிதறி மறைந்து போகிறார்கள். மீண்டும் மாலை 5 மணி முதல் 5.55க்குள் அனைத்துத் திசைகளிலிருந்தும் சென்ட்ரலை நோக்கிக் விரையும் கூட்டம், காலையில் வந்த அதே ஏலகிரி விரைவு வண்டிக்குள் தன்னைத் திணித்துக் கொள்கின்றது.

சென்னையில் புதிது புதிதாக எழும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்காக கொத்தனார், சித்தாள், தச்சர், பிளம்பர், பெயிண்டர் என பல்வேறு கூலி வேலை செய்பவர்களையும், தனியார், அரசு அலுவலகங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களையும் உள்ளடக்கியது தான் இந்தப் பயணிகள் கூட்டம். இவர்களில் பெண்களும் உண்டு.

ஏலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலிலிருந்து தருமபுரி மாவட்டம் திருப்பத்தூர் வரை செல்கின்றது. இந்த வண்டிப் பயணிகளில் பெரும்பான்மையினர் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வருகிறார்கள்.

சென்னை சென்டரல் நிலையம். மாலை மணி 5.50. கிளம்புவதற்கு தயார் நிலையில் நான்காவது நடைமேடையில் நிற்கிறது ஏலகிரி விரைவு வண்டி. வண்டியைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் வண்டியை நெருங்கினேன். நெருங்க நெருங்க மூத்திரம், பான்பராக், சிகரெட் அனைத்தும் கலந்த ஒரு துர்நாற்றம் ‘குப்‘ எனக் காற்றில் கலந்து வீசியதால் குமட்டிக் கொண்டு வந்தது. ‘கடும்பயணத்தின் களைப்பை இந்த போதைப் பொருட்கள்தான் நீக்குகின்றதோ ? என்னவோ ?! ‘

‘இந்தப் பெட்டியில் ஏறினால் மூச்சுக் கூட விட முடியாது போலிருக்கின்றதே !‘ என்று எண்ணியபடியே அடுத்த பெட்டியை நோக்கி நகர்ந்த போது முந்தைய பெட்டியின் கழிவறையைப் பார்க்க நேர்ந்தது. கழிவறையின் ஜன்னலில் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் இல்லையா ? அது அங்கே இல்லை. எனவே வெளியிலிருந்து பார்த்த போது கழிவறையின் உள்பக்கம் ‘பளிச்‘ எனத் தெரிந்தது. ‘சரி ! ஒரு சில பெட்டிகள் இப்படித்தான் இருக்கும்‘ என அடுத்த பெட்டியை நெருங்கினால் அங்கேயும் அதே நாற்றம், இப்பெட்டியிலும் கழிவறைக்கு ஜன்னல் பலகை இல்லை. எல்லாம் ஒன்று தான் என்று முடிவு செய்து கொண்டு ஒரு பெட்டியில் ஏறி விட்டேன். வண்டி கிளம்ப சில நொடிகளே இருந்தன. இந்த நேரத்திலும் பலர் பறந்து வந்து வண்டியில் தொற்றிக் கொண்டனர்.

ஏலகிரி விரைவு வண்டி சரியாக 5.55 க்கு கிளம்பி விடும். தாமதம் என்பது இந்த வண்டிக்கு விதிவிலக்கு. எனவே தினசரிப் பயணிகள் அனைத்தையும் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் அவர்களிடமிருக்கும் குறைவான ஓய்வு நேரத்தையும், கூடுதலான செலவையும் எடுத்துக்கொள்ளும். 5 மணிக்கு வேலை முடிந்தால் 5.10 க்குள்  பேருந்தைப் பிடிக்க வேண்டும். அடுத்து இருப்பது 45 நிமிடங்களே ! அதற்குள் வண்டிக்குள் இருக்க வேண்டும். ஏறிய பேருந்து தாமதமாகின்றது என்று தெரிந்தால் உடனடியாக ‘அடுத்து என்ன ?‘ என்று யோசிக்க வேண்டும்.

வேறு பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ மாறி ஓட வேண்டும். இந்த நிமிடக் கணக்கில் ஏற்படும் தாமதத்தால் ஏலகிரியைத் தவற விட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்து அந்தத் திசையில் எந்த வண்டி கிளம்புகிறதோ அதில் தான் போக வேண்டும். அது 7 மணிக்கும் இருக்கலாம்; 8 மணிக்கும் இருக்கலாம். ஏலகிரியில் போனாலே சாப்பிட்டுவிட்டு தூங்க 12 மணி ஆகி விடும். அடுத்த வண்டி  என்றால் அதுவே 1 அல்லது 2 மணியாகலாம். ஆனால் காலையில் எழும் நேரம் அதே 4 அல்லது 4.30 மணி தான்.

 

சரியாக 5.55 க்கு வண்டி நகர்ந்தது. நாங்கள் வாசலில் நின்று கொண்டிருந்தோம். வேகமெடுத்து ஓடிய அடுத்த சில நிமிடங்களில் பெரம்பூரை வந்தடைந்தது வண்டி. அங்கே மேலும் நூற்றுக்கணக்கானவர்களை நிரப்பிக்கொண்டு மேலும் வேகமெடுத்தது. பெட்டியில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது என்பதல்ல விசயம்; முழுப் பெட்டியுமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெட்டியின் முன் வாசல் படிக்கட்டில் துவங்கி பின் வாசல் படிக்கட்டு வரை உட்கார்ந்திருக்கிறார்கள், அதே போல எதிர்ப்பக்கமும். படிகளை தாண்டி பெட்டிக்குள்ளே பார்த்தால் இடைவெளியின்றி வரிசையாக நூற்றுக்கணக்கில் நிற்கிறார்கள்.

சென்னையிலேயே குடியிருக்க போதிய வருவாய் இல்லாததால் தான் இவர்கள் இந்த சாகசப் பயணத்தைத் தினசரி மேற்கொள்கிறார்கள். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தினந்தோறும் சந்தித்துக் கொள்வதால் இயல்பாக ஒருவருக்கொருவர் நண்பர்களாகி விடுகிறார்கள். தங்களுக்குள்ளேயே அரையட்டையடித்துக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டும், சொந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டும் பயணிக்கிறார்கள். தினசரிப் பயணம் என்பதால் புகைவண்டியில் தின்பண்டங்களை விற்பவர்களும் இவர்களுக்கு நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவர்களில் யாராவது ஒரு சிலர் வாங்கி வரும் செய்தித்தாள்கள் வண்டிக்குள் வந்த மறுகணமே அனைவருக்குமானதாகி விடுகின்றது. அதே போல தாம் எடுத்து வரும் தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு யாராவது கேட்டுவிடுவார்களோ என்று அற்பத்தனமாக சீட்டுக்கடியில் சொருகாமல் அதை அனைவருக்குமானது என்று பொது இடத்தில் எல்லோரும் வைக்கிறார்கள்.

படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருந்த ஒருவர் நிற்பதற்காக எழ நான் அதில் அமர்ந்து கொண்டேன். எனக்கருகில் அமர்ந்திருந்தவர் வெங்கடேசன். தினமும் சோளிங்கரிலிருந்து சென்னைக்கு  கடந்த ஓராண்டாக வந்து செல்கிறார்.

‘இதுக்கு முன்னாடி பதிமூணு வருசமா சோளிங்கர்ல இருக்கிற டி.வி.எஸ் ல வேல செஞ்சேன் சார். 55 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து பதிமூணு வருசத்துல 320 ரூபா தான் சம்பளம் உயர்ந்துச்சு. நிரந்தரமாக்கச் சொல்லி தொழிலாளிங்க எல்லாம் கேஸ் போட்டோம். அவன் நிரந்தரமா எங்கள வீட்டுக்கு அனுப்பிட்டான். அதுக்கப்புறம் இந்த வேலைக்குத் தான் வர்றேன். சோளிங்கர்ல இருந்து எங்க ஊரு ஆறு கி.மீ. சோளிங்கர்ல இறங்கி அங்கயிருந்து சைக்கிள மிதிச்சிருவேன். எட்டர ஒம்பது மணிக்கு வீட்டுக்குப் போனா, சாப்பிட்டு தூங்க பதினோரு மணியாகிடும். காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து கௌம்பிருவேன். 7 மணிக்கு வண்டி. அந்த வண்டிய பிடிச்சு திருவள்ளூர்ல இறங்கி, அங்கிருந்து அடுத்து பட்டாபிராமுக்கு லோக்கல் ட்ரெய்ன்ல ஏறி 9 மணிக்கு வேலைக்கு எடுக்குற இடத்துல நிக்கணும். அப்படி கரெக்டான டைமுக்கு நின்னா தான் வேலை. இதுல எங்கையாச்சும் லேட்டாச்சுன்னா பாதி நாள் வேலை தான் கணக்கு‘ என்றார் வெங்கடேசன்.

அருகில் அமர்ந்து கொண்டிருந்த கந்தன் என்பவரும் சோளிங்கரிலிருந்து தான் வருகிறார். இவர் வரும் போது காலை 5 மணிக்கு சோளிங்கரில் நிற்கும் காவிரி விரைவு வண்டியில் ஏறி ஏழு மணிக்குள் பட்டபிராமில் இறங்க வேண்டும். ‘அங்கே எந்த இடத்தில் வேலை‘ என்றதும், ‘மார்க்கெட் இருக்கு சார். அங்க தான் வேலை‘ என்றார். ‘என்ன மார்க்கெட்? காய்கறி மார்க்கெட்லயா வேலை‘ என்றதும் ‘இல்ல சார், அது வேலைக்கு ஆள் எடுக்குற மார்க்கெட். அங்க நிறைய புரோக்கர், காண்ட்ராக்ட் காரங்க எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க வருவாங்க. என்னென்ன வேலைக்கு ஆள் தேவையோ எல்லாத்தையும் கூட்டிட்டு எட்டு மணிக்குள்ள வேலை இடத்துக்கு கூட்டிட்டு போய்டுவாங்க. அதனால ஏழு மணிக்குள்ள போனா தான் வேலை கிடைக்கும்‘ என்று பேசிக்கொண்டே எழுந்தார். அடுத்து நிறுத்தம் வந்து விட்டது. ‘வர்றேன் சார்‘ என்று சோளிங்கரில் இறங்கிக் கொண்டார் கந்தன்.

 

கூட்டத்திலிருந்து சற்று தலையை உயர்த்தி கழிவறைப் பக்கம் எட்டிப் பார்த்த போது இரண்டு கழிவறைகளில் ஒன்றின் கதவு மட்டும் உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. திறந்திருந்த மற்றொரு கழிவறையின் வாசலிலிருந்து கழிவறையில் மலம் கழிக்க கால்களை வைக்கும் மேடை வரை மொத்தம் ஆறு பேர் உட்கார்ந்திருந்தனர். அப்போது தான் கழிவறை ஜன்னல் பலகைகளின் பயன்பாடு என்ன என்பதைப் புரிய முடிந்தது. அந்தப் பலகைகள் தான் நமது மக்களுக்கு கழிவறைக்குள் அமரும் இருக்கையாக பயன்படுகிறது. திறந்த ஜன்னல் வழியாக சுவாசிக்க கொஞ்சம் காற்றும் கிடைக்கிறது.

அப்படி அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் வாலாஜாவிலிருந்து கட்டிட வேலைக்கு வரும் ரவி. அவரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களும் அவருடன் வேலைக்கு வந்தவர்கள் தான். அவர்களுக்கு அருகிலேயே எனக்கும் அமர இடம் கொடுத்தனர். இந்த வண்டியில் வரும் பெரும்பான்மை கூலித்தொழிலாளர்களின் மாதிரியாக ரவியை எடுத்துக் கொள்ளலாம். ரவிக்கு சொந்த ஊர் வாலாஜாவுக்கு அருகிலுள்ள நீலகண்டராயன்பேட்டை. வயது நாற்பத்தெட்டு. இரண்டு பிள்ளைகள். சில மாதங்களுக்கு முன்பு தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் பத்தாம் வகுப்பில் தோல்வி. மனைவி அவ்வப்போது கிராமத்திலேயே கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் செல்வாராம். குடும்பத்தின் முதன்மையான வருவாய் இவரை நம்பியே உள்ளது.

சென்னையில் புதிய கட்டுமானம் நடக்கின்ற இடங்களில் பொறியாளர் சொல்லுகின்ற வடிவத்தில் கட்டிடத்தை  எழுப்பும் நூற்றுக்கணக்கானவர்களில் ரவியும் ஒருவர். சித்தாள் அடுக்கும் செங்கற்களையும், சிமெண்டையும் கொண்டு சுவர்களைக் கட்டி எழுப்புவது தான் ரவியின் வேலை. இதற்கு தினசரி கூலி நானூற்று ஐம்பது ரூபாய். சென்னைக்கு வந்து செல்ல போக்குவரத்து, தேநீர் ஆகியவற்றுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகி விடுகின்றது. கடந்த ஐந்தாண்டுகளாக ரவி இந்த வேலையில் இருக்கிறார். சுவரெழுப்ப தினமும் குறைந்தது ஐநூறு செங்கற்களையாவது குனிந்து குனிந்து எடுக்கிறார். பூசுவதற்கு அதைவிட இரு மடங்கு அதிகமான முறை குனிந்து கலவையை எடுக்கிறார். காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கும் வேலை மாலை ஐந்து மணிக்கு முடிவடைகின்றது.

பகற்பொழுது முழுவதும் குனிந்து, நிமிர்ந்து உழைத்த தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் வண்டியைப் பிடிக்க ஓடோடி வருகிறார்கள். கணிசமானோர் வாரத்தில் மூன்று நாட்களாவது டாஸ்மாக்கில் ஐந்து பத்து நிமிடங்களில் அவசர கதியாக மதுவருந்தி விட்டு வருகின்றனர். உடல் வலி, பயண வலி அனைத்திற்கும் இதுவே உத்திரவாதமான ’மருந்து’. புகைவண்டியில் ஏறியதுமே தளர்வுற்று, கழிவறைகளில் சுருண்டு கொள்கிறார்கள். எட்டரை மணிக்கு வாலாஜாவில் இறங்கும் ரவி அங்கிருந்து பத்து கி.மீ. தொலைவிலுள்ள நீலகண்டராயன்பேட்டையை அடைய பத்தரை மணியாகி விடுகின்றது. பிறகு சாப்பிட்டு விட்டுத் தூங்க பதினொன்று, பன்னிரெண்டாகி விடும். எட்டு மணி நேரம் கூட நிம்மதியாக உறங்காமல் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும்  வீட்டிற்குள் வரும் போதும், கிளம்பும் போதும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் குழந்தைகளைப் பார்க்க முடியும். அன்று கறி சமைத்து சாப்பிட்டு விட்டு, முழுவதும் அவருக்கு ஓய்வு, உறக்கம் தான்.

குடும்பம், குழந்தைகள், மனைவி, இல்லம் என எல்லாம் இருந்தும் அமைதியான, ரசனையான வாழ்க்கை எதுவும் இந்தப் பயணிகளுக்கு வாய்க்கவில்லை. சாவி கொடுக்கப்பட்ட எந்திரங்களைப் போல சென்னைக்கு வந்து போகும் இந்த மக்களிடம் வாழ்க்கைக் கதைகள் அல்லது வலிகள் ஏராளமிருக்கின்றன. அந்த சோகமான கதைகளைச் சுமந்து கொண்டுதான் ஏற்காடு விரைவு வண்டி தினமும் சடசடவென்று ஓடுகின்றது.

வேலைக்குக் கிளம்பும் போது இரு வேளை உணவையும் கூடையில் எடுத்துக் கொள்கிறார்கள். காலை உணவை பயணத்தின்போது முடிக்கிறார்கள். புளி மூட்டைகளைப் போல திணிக்கப்பட்டிருக்கும் இடத்தில் எப்படி சாப்பிடுவது ? எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் நின்றபடியே சாப்பிட வேண்டும். கழிவறையில் நின்றால் அங்கேயே தான் சாப்பிட வேண்டும்! சாப்பிட்ட பிறகு கை கழுவும் இடத்திற்கெல்லாம் போய் கழுவ முடியாது. அப்படி இப்படி எந்தப் பக்கமும் நகரக் கூட இடம் இருக்காது.

‘பையன் பத்தாம் வகுப்பு பெயிலானா என்ன ! மறுபடியும் எழுதச் சொல்லலாம் இல்ல!‘ ரவியிடம் பேச்சுக் கொடுத்தேன்.‘அதுக்கும் காசு தானே சார் பிரச்சினை. மாசம் மூவாயிரம் பீசு சார்‘ என்றார். அப்போது ஒருவர் சிறுநீர் கழிக்க உள்ளே செல்ல வேண்டும் என்றார். கழிவறை மேடையில் போடப்பட்டிருந்த ஜன்னல் பலகையை எடுத்து ஓரமாகச் சாய்த்து வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர் உள்ளே சென்றார். மீண்டும் அவர் வெளியே வந்ததும் பழையபடி பலகையை இருக்கையாக்கிக் கொண்டு அமர்ந்தனர். கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டும், –பயணித்துக் கொண்டும் செல்லும் இந்தக் காட்சியின் அதிர்ச்சியில் நான் உறைந்திருக்க, ரவி அதை சட்டை செய்யாமல் தொடர்ந்தார்.

‘பொண்ணு கல்யாணத்துல லட்சக்கணக்குல கடன் ஆகிடுச்சு சார். அதுக்கு வட்டி கட்ட தான் சரியா இருக்கு. கடனை அடைக்க முடியல. அடுத்து தங்கச்சிங்க இருக்காங்க. அவங்களையும் நாங்க தான் பார்த்துக்கணும். அப்பா இல்ல. மூணு அண்ணனுங்க. பொண்ணு கல்யாணத்துல கடன் மூன்றரை லட்சம்.‘  ‘அவ்வளவு செலவு பண்ணி எதுக்கு கல்யாணம் பண்ணீங்க ?‘  ‘நகையே பத்து பவுண் சார். அதுக்கு மட்டுமே ரெண்டு லட்சம் ஆயிருச்சு. அப்புறம் கல்யாணச் செலவு எல்லாம் சேத்து மூன்றரை ஆகிடுச்சு. கூலி வேலை செய்றோம்னு கேவலமா பார்க்கிறாங்க, நம்மளும் நல்லா நடத்திக்காட்டணும்னு தான் கடனை வாங்கியாவது கல்யாணத்தைப் பெருசா நடத்தணும்னு நடத்தினோம்.‘   அவர் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘நான்லாம் அஞ்சு வருசமா தான் சார் இந்த வேலைக்கு வந்து போறேன். இருக்கிறதுலேயே இவன் தான் சார் சீனியர்‘ என்று அருகிலிருந்த சதீசைக் காட்டினார்.  சதீசு பதினைந்து ஆண்டுகளாகத் தினமும் சென்னைக்கு வந்து போகிறார். அவருடைய கண்கள் நன்றாகச் சிவந்திருந்தன. ‘என்ன இப்படி சிவந்திருக்கு. சரியா தூக்கம் இல்லையா ?‘ ‘இல்லை சார்! சீலிங்கை பூசும் போது சிமெண்ட் பால் கண்ணுல விழும். இத்தனை வருசமா அது பட்டு பட்டு தான் இப்படி இருக்கு‘ என்றார். சதீசுக்கு வயது முப்பது. சரியாகப் படிக்கவில்லை என்பதால் பதினைந்து வயதிலேயே கூலியாளாக வேலைக்கு வந்து இன்று மேஸ்திரியாக இருக்கிறார். ரவி வாங்குகின்ற சம்பளம் தான் இவருக்கும்.

‘இந்தப் பையன் இன்னைக்கு தான் சார் வந்திருக்கான், பத்தாவது பெயிலாகிட்டான்‘ என்று மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பையனைக் காட்டிச் சொன்னார் சதீசு. அந்தப் பையனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். அன்றிலிருந்து அவனும் அந்த இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட ஒருவனாக பிணைக்கப்பட்டு விட்டான்.

அடுத்த பெட்டியில் ஏறினேன். கூட்டமாகப் பலர் குழுமி நின்று கொண்டிருந்த ஒரு இடத்தில் கட்சிகளை ஒரு குரல் மானக்கேடாகத் திட்டிக் கொண்டிருந்தது. அதாவது அங்கே ‘அரசியல் விவாதம்‘ நடந்து கொண்டிருந்தது. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் ‘என்ன சார் விவாதம்‘ என்றேன். ‘தி.மு.க. கனிமொழி, அலைக்கற்றை பற்றி‘ என்றார். அவர் பெயர் சுந்தர். ‘மின்வெட்டு, மின்கட்டண உயர்வு பற்றி எல்லாம் பேசலையா ?‘ என்றதும், ‘நீங்க ரொம்ப லேட்டு, அதெல்லாம் சோளிங்கருக்கு முன்னாடியே பேசியாச்சு‘ என்றார்.

சுந்தர் ஆர்.பி.எஃப். இல் (ரயில்வே பாதுகாப்புப்படை) வேலை செய்கிறார். ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் ஆவடி ஸ்டேசனுக்கு வந்து செல்கிறார். அவர் சக பயணிகளுடன் ஒரு காவலரைப் போல நடந்து கொள்ளவில்லை. சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து காலை நான்கு மணிக்குக் கிளம்பும் பல்லாயிரக்கணக்கான பயணிகளில் இவரும் ஒருவர். இப்போது வண்டி சற்று வேகம் குறைந்தது. ஏதோ ஒரு நிறுத்தம் வருவதற்கான அறிகுறி அது. ’நம்ம தாய் நாடு வந்துருச்சு எல்லோரும் வாங்க‘ என்றார் ஒருவர். அது காட்பாடி. நிறைய பேர் இறங்கினர். ’தாய்நாட்டில்’ வாழ முடியாமல் ’அந்நிய’ நாட்டிற்கு அலுத்துக் களைத்து செல்லும் பயணம் என்று அவர் சொல்லுகிறாரோ?

காட்பாடியில் இறங்குபவர்களில் கணிசமானவர்கள் அங்கிருந்து வேலூருக்கு இரு சக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்கிறார்கள். காட்பாடி தாண்டியதும் சற்றுக் கூட்டம் குறைந்தது. பிறகு வந்த முகுந்தராயபுரத்தில் அடுத்த பெட்டிக்கு மாறினேன். அங்கு கணிசமாக கூட்டம் குறைந்திருந்தது. அருகில் அமர்ந்து கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் வனத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அலுவலகம். வீடு வேலூர். இந்த வண்டியில் தான் தினமும் வந்து செல்கிறார். ‘ஏன் சார்? வேலூருக்கே மாற்றலாகி வரலாமே‘ என்றால், ‘அதுக்கு இப்படி ட்ரெய்ன்லயே அலைஞ்சிறலாம்‘ என்றார். வேலூர் அலுவலகத்திலுள்ள ஒரு அதிகாரியின் குடைச்சலால் தான் இவரே சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்திருக்கிறார்.

அடுத்தடுத்து வந்த ஊர்களில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இறங்கி, இருளில் மறைந்து போனார்கள். நான் இரவு முழுவதையும் இரயில் நிலையத்திலேயே கழித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு வரும் ஏலகிரிக்காக ஜோலார்பேட்டையில் காத்திருந்தேன். காலையில் வண்டியைப் பிடித்து சென்னை திரும்பினேன்.

சென்னையில் இறங்கியதும் பக்கத்து நடைமேடையில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது.

அந்த வண்டியைப் பார்த்ததுமே ‘நாம் என்ன ஐரோப்பிய இரயில் நிலையத்திற்குள் ஏதும் வந்து விட்டோமோ?!‘ என்று ஒரு விநாடி தோன்றியது. இதுவரை அந்த வண்டியை அங்கே பார்த்ததில்லை. அது அவ்வளவு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தது. அது பெங்களூர் செல்லும் சதாப்தி விரைவு வண்டி. அந்த வண்டியில் பொதுப்பெட்டிகள் இல்லை. அது முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட உயர்தர மக்களுக்கான வண்டி.

அன்றாடம் கழிப்பறையில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் மக்களுக்கு வாய்த்த ஏலகிரி விரைவு வண்டி இருக்கும் நாட்டில்தான் சதாப்தியும் செல்கிறது. இரண்டு இந்தியா இருக்கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

குடியிருக்கும் ஊரில் ஒரு குறைந்தபட்ச வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் இந்த மக்கள் தினந்தோறும் இந்த நரக வாழ்க்கையை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

ஏலகிரியில் செல்லும் மக்களுக்கு மானாட மயிலாடவோ, ஏர்டெல் சூப்பர் சிங்கரோ, ஐ.பி.எல் போன்றனவோ இல்லை. சீரியல்களோ எதுவுமில்லை. வார விடுமுறையில் சுற்றுலாவோ, உயர்தர உணவு விடுதிக்குச் செல்வதோ, இன்னபிற நடுத்தர வர்க்க கேளிக்கைகளெல்லாம் இந்த மக்களின் கனவில் கூட இல்லை. இவர்களை அடித்துத் தோய்த்துதான் பணக்காரர்களின் இந்தியா நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக ஜொலிக்கிறது.

ஒளிரும் இந்தியாவைப் பார்க்க வேண்டுமா? ஏலகிரியில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்! கண்ணைப் பறிக்கும் அந்த அவல வாழ்க்கைக் காட்சிகளின் அதிர்ச்சிகளிலிருந்து நான் இன்னமும் மீளவில்லை.

______________________________________________________

- வினவு செய்தியாளர், - புதிய கலாச்சாரம், மே – 2012