Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

இதை முடிமறைப்பதன் மூலமே குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை நடத்த முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ் கட்சிகளுக்கு ஸ்டாலின் காலத்தை தூற்றி ரசிய கட்சி அனுப்பிய கடித்தில் “மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது” என்று அறிவித்தனர். இதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தையே பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து தடம் புரளும் படி கோரியது. இப்படி குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து தூற்றிய போது எது மறுக்கப்பட்டது? எது போற்றப்பட்டது? ஸ்டாலினை தூற்றிய குருச்சேவ் அமெரிக்கா ஜனதிபதியை பற்றி கூறும் போது “அவர் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றவர்” என்றார். “மக்களின் ஆதாரவைப் பெற்றவர் என்பதால், அமெரிக்கா பாட்டாளி வர்க்கமும் சரி, உலக பாட்டாளி வர்க்கம் சரி அவரை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது” என்றார். “அவர் ஜனநாயக வழிகளில் மக்களின் ஆதாரவைப் பெற்றவர்” என்றார். அத்துடன் “சமாதானத்தில் உண்மையான ஆர்வம் உடையவர்” என்றும் “சமாதனத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளார்ந்த கவனம் காட்டினர்” என்றார். மேலும் குருச்சேவ் கென்னடியைப் பற்றி கூறும் போது “பூமியில் அமைதியான வாழ்விற்கும் ஆக்கபூர்வமான உழைப்புக்கும் ஏற்ற நிலைமைகளை அவர் உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்றார். “உலகில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் அவசியமில்லை” என்றார். உலகில் அமைதியை பாட்டாளி வர்க்கம் மட்டுமே நிலைநாட்ட முடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை மறுத்த குருச்சேவ், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஜனபதிபதி “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை உருவாக்குவர்” என்றார். எனவே வர்க்க கட்சிகளை கலைத்து, அவற்றை முதலாளித்துவ கட்சியாக்க கோரினர்.

ஸ்டாலின் என்ற கொடுங்கோலன் தான் வர்க்க கட்சியை முன்னிறுத்தி இதற்கு தடையாக இருந்தாகவும், “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை” உருவாக்குவதற்கு தடையாக இருந்தாக தூற்றினான். பாட்டாளி வர்க்கத்தை இழிவுபடுத்தியபடியும், ஸ்டாலினை மறுத்தபடியும் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து “ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும்” என்றான் குருச்சேவ். இது வேறு ஒன்றுமல்ல, டிராட்ஸ்கி அன்று லெனின் முன்வைத்த சமாதனத்தை மறுத்து, ஜெர்மானிய எல்லையில் படை கலைப்பை கோரிய அதே வடிவில் முன்வைக்கப்பட்டது. குருச்சேவ் ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை ஏகாதிபத்தியத்துடன் சோந்து படைக்க முடியும் என்றான். இப்படி வர்க்க கட்சியின் அரசியல் அடிப்படையை இல்லாததாக்கினான். சுரண்டலற்ற உழைப்புக்கு எற்ற கூலியையும், யுத்தமற்ற அமைதியையும் நிறுவ, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு மறுக்கப்பட வேண்டியது அவசியமென்றான். இதன் மூலம் “ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்கா நாடுகளின் பொரளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கும்” என்று பிரகடனம் செய்து, முதலாளித்துவ மீட்சியை ரஷ்யாவில் குருச்சேவ் நடத்தினான்.

ஆம், உலகை சூறையாடவதில் ஒன்றுபட வேண்டியதையே குருச்சேவ் பிரகடனம் செய்தான். இதற்கு ஸ்டாலின் மறுக்கப்பட்டு தூற்றுப்படுவது அடிப்படை அரசியல் நிபந்தனையாக இருந்தது. குருச்சேவ் ஸ்டாலினை ‘சூதாடி’, ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, ‘பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்’, ‘ஒரு குற்றவாளி’, ‘கொள்ளைக்காரன்’ என்று பலவாக தாக்கினான். ‘ரசியா வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரி’ என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்திய போது ‘குரோத மனோபாவம் கொண்டவர்’ என்றான். ‘இரக்கமின்றி ஆணவமாகச் செயல்பட்டவர்’ என்றான். ‘அடக்குமுறை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்’ என்றான். ‘தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்’ என்றான். ‘ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்ட மிட்டார்’ என்றான் ‘ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டது’ என்றான். இப்படி டிராட்ஸ்கிகளின் நெம்புகோலை இறுக பிடித்தபடி நடத்திய அவதூறுகள் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. அரசியலற்ற அவதூறுகளை பொழிகின்ற போது, அரசியல் ரீதியான சிதைவு அடிப்படையான ஆதாரமாக உள்ளது. வரலாற்றில் இது முதல் முறையமல்ல இறுதியுமல்ல.

பக்கூன் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு மார்க்ஸ்சை வசைபாடிய போதும் இது நிகழ்ந்தது. முதலில் மார்க்ஸ்சின் நம்பிக்கையைப் பெற “நான் உங்கள் சீடன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றான். முதலாம் அகில தலைமையை கைப்பற்ற பக்கூன் எடுத்த முயற்சியில் தோற்ற போது “ஒரு ஜெர்மானியனும், யூதனுமான அவன், அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி மட்டுமல்ல ஒரு சர்வாதிகாரி” என்றான். பாட்டாளி வர்க்க அடிப்படையைக் கைவிட்ட காவுத்ஸ்கி லெனினை வசைபாடிய போது “ஓர் அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு மத்திய கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை லெனின் குறுக்கிவிட்ட”தாக தூற்றினான். மேலும் அவன் லெனினை தூற்றிய போது “ஏகக் கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று தூற்றினான். டிராட்ஸ்கி ஸ்ரானினை தூற்றும் போது “கொடுங்கோலன்” என்றான்; “ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது” என்றான். டிராட்ஸ்கி லெனினையும் போல்ஷ்விக் கட்சியையும் தூற்றும் போது ‘பதவி வெறியர்கள்’, ‘பிளவுவாதிகள்’ என்று குற்றம் சாட்டினான். ‘குழுவாதத்தை எதிர்ப்போம்’ என்று டிராட்ஸ்கி ஆர்ப்பாட்டம் செய்த போது லெனின், “குழு வாதத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கி, குழுவாதத்தின் மோசமான மிச்ச சொச்சங்களின் பிரதிநிதி” “மோசமான பிளவுவாதிகளின் பிரதிநிதி” என்று அம்பலப்படுத்துகின்றார். டிட்டோ பாட்டாளி வர்க்கத் தலைவர் ஸ்டாலினை தூற்றும் போது முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் ஒரு சர்வாதிகாரியாக இருப்பதாக அவதூறு பொழிந்தான். இப்படி மார்க்சியத்தை கைவிட்டு ஒடியவர்கள் எப்போதும் ஒரேவிதமாக ஊளையிடுவதில் பின்நிற்பதில்லை. மார்க்சியத்தை கைவிட்டு ஒடும் போது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் மேல் அவதுறை பொழிவது அல்லது உச்சி மோந்து புகழ்ந்து வழிபாடுகளை உருவாக்கியபடி தான் பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தப்படுகின்றது.

இது பற்றி லெனின் குறிப்பிடும் போது “ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மத்தியில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவர்கள் மறைந்த பின்னர், அவர்களுடைய எதிரிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுவதற்காக அந்த தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த முயல்வது வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்தது” நிகழ்ந்து வருகின்றது. இதற்கு வெளியில் தலைவர்கள் உயிருடன் உள்ள போதே மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் மூலம் இது பரிணாமிக்கின்றது. குருச்சேவ் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றிய போதும், அவன் மூடிமறைக்கபட்ட ஒரு சந்தர்ப்பவாதியாக இழி பிறவியாக இருந்தான். 1937 இல் குருச்சேவ் “தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயாத்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக கரம் உயாத்துபவர்கள், உழைக்கும் வர்க்கத்துக்கும் மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கும் எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் ஆகியோராது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்!” என்றான். பின்னால் ஸ்டாலினை தூற்றிய இவனே, ஸ்டாலினை 1939 இல் ஸ்ராலினை போற்றும் போது “மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர், போராட்ட தோழன்”, என்றான். 1939 இல் “மாபெரும் மேதை, ஆசான் மனிதகுலத்தின் தலைவர்” என்றான். 1945 இல்  “எப்போதும் வெற்றியீட்டும் மாபெரும் இராணுவத் தளபதி” என்றான். 1939 இல் “மக்களின் உண்மையான நன்பன்” என்றான். 1949 இல் “சொந்த தந்தை” எனறு பலவாறாக ஸ்ராலினைப் புகழ்ந்தான். ஆனால் ஸ்ராலின் மரணமடைந்த பின் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை தொடங்கிய போது, மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை கைவிட்டு எதிர்மறையில் நின்று தூற்றினான். 1957 யூன் மாதம் மத்திய குழு கூட்டத்தில் குருச்சேவ் மொலடோவ், சுகனோவிச் ஆகியோரைச் சுட்டிக் காட்டி “எங்கள் கட்சித் தலைவர்களினதும், எண்ணற்ற அப்பாவி போல்ஷவிக்குகளினதும் இரத்தக் கறை உங்கள் கைகளில் படிந்து உள்ளது” என கூச்சல் இட்டான். அப்போது “உமது கையிலும் தான்” என  எதிர்க் கூச்சல் ஈட்டனர். அதற்கு குருச்சேவ் “ஆம் எனது கையிலும் தான்” என்று கூறி, நான் அப்போது பொலிட்பீரோவில் இருக்கவில்லை என்று திட்டினான். இப்படி பரஸ்பரம் தூற்றி கழுத்தின் மேல் கத்திய வைத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை எதிர்பின்றி விரைவாக்கினான். முதலாளித்துவ மீட்சிக்கான சதியில் ஈடுபட்டவர்களைப் பற்றிக் கூறும்போது குருச்சேவ், “ஸ்டாலினால் பலியெடுக்கப்பட்ட சிறந்த அப்பாவி கம்யூனிஸ்டுகளை” என்ற படி அமெரிக்காவுடன் கூடிக்கூலாவினான். ஸ்டாலின் பாதுகாத்த அனைத்து பாட்டாளி வர்க்க அடிப்படைகளையும் தூக்கியெறிந்தான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6

5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5

4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4

3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3

2.ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி –

1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1