செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 4

வர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றவர் – நெருங்கிய உறவினர். வழக்கமாக உற்சாகமான ஒரு துள்ளலுடன் வருகிறவர், இன்று இறங்கிய தோள்களுடன் கருத்த முகத்துடன் வந்திருந்தார். நிறைய புகைத்திருப்பார் என்று தெரிந்தது – அவரோடு கை குலுக்கிய பின் எனது கையிலும் புகையிலையின் தீய்ந்த வாடை தொற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமண அழைப்பு கொடுக்கத் தான் வந்திருந்தார்.

அவரது சோர்வுக்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். அவரது நிறுவனம் தன்னை திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (Performance Improvement Plan) சேர்த்திருப்பதாகச் சொன்னவர், ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதற்கு முன் செய்யப்படும் கண் துடைப்பு தான் இந்த திட்டம் என்றார். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம், இரண்டு மாதத்தில் வேலை இழப்பு. பெண்ணுக்கும் அவரது வீட்டாருக்கும் விசயத்தை சொல்லி விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். வேலை இழப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயன்றேன்.

அவர் மெய்நிகர் இயங்குதளமான (Virtualization) விஎம்வேர் (Vmware) மென்பொருளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். மெய்நிகர் இயங்குதளத்தில் தேவையான சர்வர்களை ஏற்படுத்திப் பராமரிப்பது, சர்வர்களுக்கு இடையே மின் தரவுகளை இடம்பெயர்ப்பது (Data Migration) தேவையான சேமிப்பு இடங்களை (Storage Space) உண்டாக்குவது போன்ற நிர்வாக வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதே வேலையில் சுமார் ஆறாண்டு அனுபவம் கொண்டிருந்தார்.

தற்போது அவரது நிறுவனம், இது போன்ற வழமையான நிர்வாகப் பணிகளை (Routine management tasks) தானியங்கி முறையில் (Automate) நிறைவேற்றும் பொருட்டு விஎம்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள வி.ரியலைஸ் (Vrealize) எனும் மென்பொருளைப் பயன்படுத்த துவங்கியுள்ளது – இதனால் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது ஊழியர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வி.ரியலைஸ் என்பது தானியங்கித் தொழில்நுட்பத்தின் (Automation) மிக அடிப்படையான வடிவம். இதே தொழில்நுட்பம் தற்போது மிகப் பெரியளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அமல்படுத்தப்பட்டு பல லட்சம் தொழிலாளர்களின் வேலையைக் காவு வாங்கத் துவங்கியுள்ளது. மனிதக் கட்டுப்பாட்டின் (Manual Control) கீழ் செய்யப்பட்டு வந்த வழமையான நிர்வாகப் பணிகளை விட தானியங்கி முறை குறைவான நேரத்தையும் மனித ஆற்றலையும் கோருவதால் பல நிறுவனங்களும் இப்புதிய தொழில்நுட்பத்தை சுவீகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்தியாவில் சுமார் 31 லட்சம் தகவல் தொழில்நுட்ப வேலைகள் இருப்பதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கின்றது – தானியங்கித் தொழில்நுட்பம் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் போது சுமார் 6 லட்சம் பேர் வேலையிழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் நடக்கவுள்ள வேலை இழப்புகள்.

உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும். சந்தையை வேகமாகக் கைப்பற்றுவது, அதற்காக உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்திப் பொருளை உடனடியாக சந்தைக்குக் கொண்டு சேர்ப்பது, சந்தையில் நிலவும் போட்டியை முன்னரே கணித்து அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிப்பது என முதலாளித்துவ உற்பத்திமுறை தனது தோற்றத்தில் இருந்தே மனித ஆற்றலை விஞ்சிய இயந்திர ஆற்றல்களைத் தேடத் துவங்கி விட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கணினிகளுக்கு தனித்தனியாக செலுத்தும் ஆணைகளை தேவைக்கேற்ப நிரல்களாக (Programme) எழுதுவது வழக்கம் தான். எனினும், ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தானியங்கி முறைகள் அனைத்தும் மனித மூளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடியதாக இருந்தன.

அதாவது வழமையான தானியங்கி முறையை இயக்குபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் மனிதர்கள் இருந்தனர். இது குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்தது என்றாலும் இன்னொரு முனையில் புதிய வேலைகளை (குறைந்த விகிதத்திலாவது) உருவாக்கியது. மேலும் தானியங்கி முறையில் நடக்கும் உற்பத்தியைக் கண்காணிக்கும் பணியை மனிதர்கள் செய்தனர்.

ஆனால், தற்போது கூறப்படும் “தானியங்கித் தொழில்நுட்பம்” என்கிற சொல்லின் பொருளும் பரிமாணமும் முற்றிலும் வேறானதாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக செயற்கை நுண்ணறித் திறனில் உருவான பாய்ச்சல் வளர்ச்சியின் தாக்கம் தானியங்கித் தொழில்நுட்பத்திலும் பிரதிபலித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது, எப்படி, எந்த வகையில் தானியங்கல் முறையில் செயல்படுத்த வேண்டும் என்கிற முடிவை எடுப்பதற்கும், அதை செயல்படுத்துதற்குமான இடத்தை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ளது.

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வேலை அதற்கு முன் எங்கெல்லாம் நடந்தது, அவ்வாறு நடந்த வேலைகளின் விளைவு என்ன, என்னென்ன சாத்தியமான தவறுகள் ஏற்படலாம் என்பதை செயற்கை நுண்ணறிக் கணினிகள் ‘கற்றுள்ளன’. எனவே மென்பொருட்கள் விடுக்கும் கட்டளைக்குப் பதிலாக, செய்யப்படும் வேலைகளைச் சோதித்தறிவதும், சூழலுக்குத் தகுந்தாற் போல் எதிர்வினையாற்றுவதும் செயற்கை நுண்ணறிக் கணினிகளுக்கு தற்போது சாத்தியமாகியுள்ளது.

ஆலை உற்பத்தித் துறைகளைப் பொருத்தளவில் – குறிப்பாக இயந்திரவியல் துறையில் – என்பதுகளிலேயே மெல்ல மெல்ல தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியின் விளைவாக இயந்திரக் கரங்களின் துல்லியம் அதிகரித்துள்ளது.

ஆலை உற்பத்தியில் இதுவரை புகுத்தப்பட முடியாமல் இருந்த வேலைப் பிரிவுகளுக்கெல்லாம் தானியங்கல் உற்பத்தி முறை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்காவில் நடந்த 50 லட்சம் வேலையிழப்புகளில் சுமார் 88 சதவீதம் தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதால் நிகழ்ந்துள்ளது என்கிறது பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  ஆய்வு ஒன்று.

அடுத்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் சுமார் 38 சதவீத வேலைகளை தானியங்கித் தொழில்நுட்பம் காவு வாங்க உள்ளதாக ப்ரைஸ்வாட்டர் கூப்பரின் ஆய்வறிக்கை ஒன்று எச்சரிகை மணி அடிக்கின்றது. இந்தியாவில் மட்டும் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 23 சதவீத தொழிலாளர்கள் தானியங்கித் தொழில்நுட்பத்தால் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறார் பீப்பிள்ஸ்ட்ராங் நிறுவனத்தின் தலைவர் பன்சால்.

இப்புதிய போக்கு ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. உதாரணமாக மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம்.

மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களைக் கண்டறிய SOAP (Subjective, Objective, Assessment and Plan) முறை பின்பற்றப்படுகின்றது. நோயாளி ஒருவரின் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்டு அகநிலையாக (Subjective) அந்த நோய் அல்லது பிரச்சினை உருவாக என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வது. பின் புறநிலையாக (Objective) பல்வேறு சோதனைகளின் மூலம் அந்த நோயைப் புரிந்து கொள்வது. பின் சோதனை முடிவுகளை அலசி ஆராய்வது (Assessment). இறுதியாக அவரது நோயைக் குணப்படுத்தும் திட்டம் (Plan) ஒன்றை வகுப்பது என்பதே தற்போது கைக்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ நடைமுறை.

இதில் சோதனைகளைப் பரிசீலித்து நோயின் தாக்கத்தைப் புரிந்து கொள்வது என்ற கட்டத்தில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது. குறிப்பாக ஐ.பி.எம் நிறுவனம், மெர்ஜ் ஹெல்த்கேர் எனும் நிறுவனத்தை சுமார் 1 பில்லியன் டாலர் செலவில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மெர்ஜ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வசமிருந்த சுமார் 30 ஆயிரம் கோடி மருத்துவ ஆய்வறிக்கையின் படிமங்களுக்கு (Scanned images) உரிமம் பெற்றுள்ளது.

சுமார் 7,500 மருத்துவமனைகளின் பரிசோதனைக் கூடங்களில் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கைப் படிமங்களை தற்போது ஐ.பி.எம் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிக் கணினியான வாட்சனில் (Watson) பதிவேற்றியுள்ளது. குறிப்பிட்ட நோயைக் கண்டறியச் செய்யப்படும் ஸ்கேன் அறிக்கைக்கைகளை வாட்சனிடம் கொடுத்தால், அது தன்னிடம் இருக்கும் படிம மாதிரிகளோடு ஒப்பிட்டு நோய் தாக்கு உள்ளதா, எந்த அளவில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும். அதாவது, இன்று எக்ஸ் ரே அல்லது ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து ஒரு ரேடியாலஜிஸ்ட் அல்லது சிறப்பு மருத்துவர் கூறுகின்ற மதிப்பீட்டினை, அவர்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு துல்லியத்துடன் வாட்சனால் கூற முடியும்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள திறன் கடிகாரம் (Smart watch) வாட்சனின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது உடலின் வெப்ப நிலை, இதயத் துடிப்பின் வேகம், உடலின் இயக்கம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட திறன் கடிகாரம், அவ்வப்போதைய உடல் நிலைக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய செயல்களை பரிந்துரைக்கும். உதாரணமாக, உங்களது கொழுப்பின் அளவுக்கு இன்று நீங்கள் ஐந்து கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதோடு, நீங்கள் நடக்கிறீர்களா இல்லையா என்பதையும் கண்காணிக்கும். மேலும் உங்களது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், வெப்ப நிலை உள்ளிட்ட தகவல்களைத் தொடர்ந்து வாட்சனுக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கும்.

தற்போது நோயை முன்கூட்டியே கண்டறியும் கட்டத்தைக் கடந்து, குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்துவதற்கான பிரத்யேகமான மருத்துவ திட்டங்களையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் மூலம் வகுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. இதன் மூலம் மருத்துவர்களை ஒரேயடியாக இயந்திரங்களின் மூலம் மாற்றீடு செய்ய முடியுமா அல்லது அப்படி செய்வது சாத்தியமா என்றும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பான ஒரு நோயாளியின் சூழல், அவரது கலாச்சாரம், அவர் சார்ந்த வர்க்கம் உட்பட பல்வேறு புறநிலை மற்றும் அகநிலை அம்சங்களையும் கணக்கெடுத்தே அவரைத் தாக்கியிருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு தீர்வளிக்க முடியும் – சுருக்கமாகச் சொல்வதென்றால் நோய்க்கான மருத்துவத்தை அறிவியல் என்று சொன்னால், அதை யாருக்கு எப்போது எந்த அளவில் வழங்குவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பது ஒரு கலையாகவும் இருக்கிறது.

மருத்துவரின் அனுபவ அறிவு, நோயாளியின் வாய்மொழி, உடல்மொழி உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அவருடைய திறன் மற்றும் மருத்துவரின் உள்ளுணர்வு உள்ளிட்ட பல அம்சங்கள், மருத்துவத்தை ஒரு “கலை”யாகவும் ஆக்குகின்றன. இதை செயற்கை நுண்ணறிவு மாற்றீடு செய்ய முடியுமா என்பது குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சட்டத் துறையை எடுத்துக் கொண்டால், ஐ.பி.எம் வாட்சன் செயற்கை நுண்ணறிக் கணினியில் இயங்கும் ராஸ் இண்டெலிஜென்ஸ் (ROSS Intelligence) எனும் தொழில்நுட்பம், சட்ட ஒப்பந்தங்களின் படிம மாதிரிகளை (Scanned images) ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான சட்ட நூல்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட மில்லியன் கணக்கிலான தீர்ப்புகள், மாதிரி சட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல கோடிக்கணக்கான சட்ட ஆவணங்கள் படிமங்களாக (Images) செயற்கை நுண்ணறிக் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் பற்றிய சட்ட ஆலோசனை பெற வேண்டுமெனில், அந்த ஒப்பந்த நகலை ஸ்கேன் செய்து வாட்சனிடம் கொடுத்தால் துல்லியமான ஆலோசனையை அது வழங்கி விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த தணிக்கை நிறுவனமான டெலோய்டி, செயற்கை நுண்ணறித் திறன் கொண்ட தானியங்கி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களில் கீழ்நிலை சட்ட உதவியாளர்களாக உள்ள சுமார் 40 சதவீத வழக்கறிஞர்கள் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த ஆவணத்தை மனித ஆற்றலைக் கொண்டு ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் போது 65 சதவீத அளவுக்கே பிழையற்ற அலோசனை கிடைக்கிறது.

இதே செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சுமார் 98 சதவீத அளவுக்கு துல்லியமான ஆலோசனை கிடைக்கின்றது. எனினும் மருத்துவத் துறையில் நடக்கும் விவாதத்தைப் போலவே சட்ட உலகிலும், மனித மூளையின் முடிவெடுக்கும் திறனுக்கு இயந்திரத்தின் முடிவெடுக்கும் திறனுக்கும் ஒப்பீடு செய்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

கட்டுமானத் துறை தொடங்கி ஆலை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை வரையிலான எந்தத் துறையும் தானியங்கல் தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. தற்போது இந்திய ஐ.டி துறை ஊழியர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தானியங்கல் முறையை இந்தப் பின்புலத்தில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறை என்பதே பிற துறைத் தொழிலாளர்களுடைய வேலைகளைத் தின்று தான் வளர்ந்தது. தற்போது செயற்கை நுண்ணறித் திறனும் தானியங்கல் தொழில்நுட்பமும் அதே துறையினைச் சேர்ந்த ஊழியர்களை ரத்தப்பலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக பட்ச உற்பத்தி; உற்பத்திச் செலவைக் குறைப்பது; உற்பத்தித் திறனைக் கூட்டுவது; மனிதர்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பவையெல்லாம் முதலாளித்துவ நியதிகளின்படி  தவிர்க்கவியலாத போக்குகள். இதன் விளைவாக வேலையற்றோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

தொழில் துறைகளில் முன்னறிப் புலனாய்வுத் திறன் ஏற்படுத்தி வரும் மாற்றங்களும், அதன் விளைவான வேலையிழப்புகளும் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் ஆளும் வர்க்கங்களின் கைகளில் இத்தொழில்நுட்பம் புதிய ஆயுதங்களைக் கொடுத்துள்ளது. மீப்பெரும் மின் தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் சமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் தேவையான முடிவுகளை வந்தடைகின்ற சாத்தியங்களை இத்தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கின்றன.

எதிர்காலம் குறித்து துல்லியமாக அனுமானிக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்து வருகிறது. மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் மென்மேலும் ”கற்றுக் கொள்கிறது”. இதன் காரணமாகவே துல்லியமான அனுமானங்கள் சாத்தியமாகின்றன. எதிர்காலம் குறித்த இந்த முன்னறிப் புலனாய்வுத் (Predective intelligence) திறனின் விளைவுகள் தாம், கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக தானியங்கல் தொழில்நுட்பத் துறையில் பிரதிபலிக்கின்றன.

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்குமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த முடிவுகளை வந்தடைய இத்தொழில்நுட்பம் கைக்கொள்ளும் முன்னறிப் புலனாய்வு (Predictive intelligence) முறையையும் அது தொடர்பான பகுப்பாய்வு (analytics) முறைகளையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு