இதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:

“கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.

அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.

……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.

இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.

இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.

இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,

“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.

அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.

ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.

பணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.

இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும். ஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்– பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.

இவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.

காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் ரகசியம் வெளிப்பட்டதா- 19.02.1933