பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தேசியம் - சர்வதேசியம் என்பது, அடிப்படையில் இரு நேரெதிரான அரசியல் மற்றும் போராட்ட வழிமுறைகளைக் கொண்டது. தேசியம் என்பது முதலாளித்துவ தலைமையில் போராடுவதையும், சர்வதேசியம் என்பது பாட்டாளி வர்க்க தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதையும்   அரசியல் உள்ளடக்கமாகக் கொண்டது. இதுவே மார்க்சிஸத்தின் தேசியவாதம்- சர்வதேசியவாதம் பற்றிய அடிப்படையாகும்.

1970 (1948) முதல் இன்று வரை "தமிழ்" "இனம்" "தேசியம்" என்று தமிழ் மக்கள் மீதான இனவொடுக்குமுறையை முன்னிறுத்தி, முன்னெடுக்கப்படுகின்ற அரசியலானது, நம் சமூகத்தில் நிலவும் வளர்ச்சிகுன்றிய, நிலமானியச் சமூகத்தின் எச்சங்களை உள்ளடக்கிய  முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அகமுரண்பாடுகளைக்களைய மறுக்கின்ற அதேவேளை, இன்று நவதாராளவாத முதலாளித்துவமாகவும் இயங்குகின்றது. தேசியம் என்ற சொல்லின் சாரமும், உள்ளடக்கமும் முதலாளித்துவமே. இதன் காரணமாக, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை  சர்வதேசியத்தை முன்னிறுத்தி நாம் முன்னெடுப்பதானால் அரசியற் கலைச்சொற்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்தான புரிதல்கள் வரை, அனைத்தும் விமர்சன - சுயவிமர்சன ரீதியானதாக அணுகியாக வேண்டும்.

இன முரண்பாட்டை கையாள்வதற்கு மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயமானது, அந்த சொல் கொண்டிருக்கக் கூடிய அரசியல் உள்ளடக்கத்துக்கு முரணானதாக பிரிவினையாக இலங்கையின் அனைத்து சமூகங்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கின்றது. இதுபோலவே தேசியம் என்ற சொல். இன்றுள்ள சமூகப்பொருளாதார நிலையிலும், அரசியற் போக்கிலும் தேசியம் என்ற சொல்லின்  உள்ளடக்கம் உழைக்கும் மக்கள் நலனை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கையில் உபயோகப்படுத்தப்படவில்லை. மேலே கூறியது போன்று அது பல அகமுரண்பாடுகளை பாதுகாப்பதற்கான "கருவியாகவும் "நவதாராள பொருளாதார போக்கின் ஆதரவு சக்தியாகவும் உள்ளது. ஆனால் அத்தேசியத்தை முற்போக்கானதாகவும் இடதுசாரிய உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும் எம்மில் பலரால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் விளக்கத்தின் அடிப்படையில் "தேசியத்துக்கான" பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசியத்தில் "முற்போக்கு", "இடதுசாரிய" உள்ளடக்கம் உண்டு என்ற பொதுப்புத்தி, “இடதுசாரிய”மாக இருக்கின்றது. இதற்கு (ரயாகரன்) நானும், எனது எழுத்துகள் மூலம் பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

எனது எழுத்தில் தவறான சொற்கள் மூலம் சரியான அரசியல் உள்ளடக்கத்தை முன்வைத்த போதும், தவறான சொற்கள் கொண்டிருக்கும் எதிர்மறையான அரசியல் போக்கு, சர்வதேசியத்தை நோக்கி பயணிக்க முடியாத தடையாக இயங்கியிருக்கின்றது என்பதும் உண்மையாகும்.

உண்மையில் 1980கள் முதலே தேசியம் குறித்த இடதுசாரிய கண்ணோட்டமானது, தவறான உள்ளடக்கத்தைக் கொண்டு இருந்தது. இடதுசாரிய அடிப்படையில் இனவொடுக்குமுறையை எதிர்கொண்ட போது, சர்வதேசியத்துக்கு பதில் தேசியம் மூலம் அணுகிய தவறான போக்கு, தேசியத்தில் "இடதுசாரிய" அணுகுமுறை உண்டு என்ற தவறான அரசியல் கண்ணோட்டத்துக்கு இட்டுச்சென்றது. தேசியத்தில் "இடதுசாரிய" அணுகுமுறை என்ற போலியானதும், மாற்றானதும் என்ற குருட்டு வழியை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கின்றது.

இந்தவகையில், நான் இயங்கிய என்.எல்.எப்.ரி உட்பட, இதற்கு விதிவிலக்கு கிடையாது. என்.எல்.எப்.ரி க்குப் பிந்தைய எனது தொடரான எழுத்துக்களில், என்.எல்.எப்.ரிக்கு முரணாக சர்வதேசிய உள்ளடக்கத்தை முன்வைத்த போதும், மொழியை இலகுபடுத்தும் அடிப்படையில் "தேசியம்" என்ற சொற்பிரயோகமானது அரசியல்ரீதியாக தவறாக வழிகாட்டி இருக்கின்றது.

1999 இல் "தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல" என்ற எனது நூலின் தலைப்புக் கூறுவது போல், தேசியம் மூலம் அணுகுகின்ற கண்ணோhட்டம் எதுவும் சர்வதேசியமாக (இடதுசாரியமாக) இருக்க முடியாது. (தமிழ்) தேசியம் மூலம் அணுகுகின்ற பார்வை என்பது, அரைகுறையான வளர்ச்சியடையாத  முதலாளித்துவ உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனாலேயே இது இனவாதத்தை ஆதாரமாகக் கொள்கின்றது. நவதாராளவாத முதலாளித்துவத்துக்கு இயைபாக்கமடைந்துள்ளது.

இன்று இனவொடுக்குமுறை குறித்தான பொது அணுகுமுறைகள் மீதான அரசியல் விமர்சனமானது, மேற்கூறிய கருவிலேயே சிதைவடைந்த முதலாளித்துவ தேசியத்தைத் தாண்டி பயணிக்கவில்லை. இது தான் உண்மை. இன்று தமிழ் தேசியத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்கள், சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டவையல்ல. இதனால் இந்த விமர்சனங்கள், புதிதாக எதையும் முன்வைக்க முடிவதில்லை. தமிழ், தேசியம். என்ற அடிப்படையில் நின்று சிந்திக்கின்ற பொது அணுகுமுறை, அரசியல் மாற்றை முன்வைக்க முடியாது போயுள்ளது.

இன்று நம் முன்னுள்ள மிக முக்கியமான  கேள்வி இது தான்.  சிதைவடைந்த முதலாளித்துவ சிந்தனையை உள்ளடக்கமாகவும் - அடிப்படையாகவும்  கொண்ட "தேசியம்" இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும், போராட்ட வடிவமாகவும், இருக்க முடியுமா என்பதே. இதனடிப்படையில் "தேசியம்"என்று நாம் உபயோகிக்கும் சொல்லின் உள்ளடக்கம் என்னவென்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் தான், புதிய போராட்ட வழிமுறைகளை சர்வதேசிய அடிப்படையில் கண்டு அடைய முடியும்.