ஐக்கியமும் போராட்டமும்

உலகமயமாதல் சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிகர வடிவம் என்ன? இது கடந்தகால கட்சிரீதியான வடிங்களையும், போராட்டங்களையும் மறுத்துவிடவில்லை. அதேநேரம் ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரத்தை ஜனநாயகப்படுத்தி மையப்படுத்தக் கோருகின்றது. எளிமைப்படுத்திய வடிவில் இடது முன்னணியாக அனைத்துப் புரட்சிகர சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஸ்தாபன வடிவமும், அதற்கான முதன்மையான அரசியல் பாத்திரமும் அவசியமானது. தனித்தனிக் கட்சிகளின், அமைப்புகளின் செயற்பாடுகள் இதை மையப்படுத்தி, இதற்கூடாக செயற்படுவது அவசியம். முரண்பாடுகள் என்பது முரண்பாடுகளைக் களையும் நோக்கில், நடைமுறைப் போராட்டத்தை முன்நகர்த்துவதாக இருக்க வேண்டும். பல்வேறு முரண்பட்ட சக்திகளையும், முரண்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளி தான் ஐக்கியம். புரட்சிகர சக்திகளும், போராடும் மக்களும் பிரிந்து நிற்காத வண்ணம், பாட்டாளி வர்க்க அரசியல் செயல்தந்திரம் இருக்க வேண்டும்;. முரண்பாடுகளை களைவதற்கான புள்ளி, நடைமுறையில் ஒன்றிணைந்து போராடுவது தான். ஆகவே முரண்பாட்டுடன் இணைந்து போராடும் புள்ளியும், அதற்கான வடிவமும் அதற்கான முதன்மையான இடமும் இன்று அவசியமானது. இதற்கான ஒரு பொது அரசியல்வெளியை உருவாக்கி அரசியல்ரீதியாக முன்னெடுப்பது தான், ஐக்கியத்துக்கான அரசியல் செயல்தந்திரமாக இருக்க முடியும்.

இதற்கான அரசியல் செயல்தளத்தில் ஜனநாயகமும், கோட்பாட்டு தளத்தில் முரணற்ற ஜனநாயகமும் என்ற அடிப்படையில் ஐக்கியத்தை முதன்மைப்படுத்தி, ஐக்கியத்தையும் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். பரந்துபட்ட மக்களைப் பொதுவெளியில் அணிதிரட்டும் வண்ணம், அனைத்துப் புரட்சிகரப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் செயல்தந்திரத்தைக் கொண்டிராத வர்க்கக் கண்ணோட்டம் என்பது வரடடுத்தனமாகி விடும். சர்வதேசரீதியான இன்றைய உலகமயமாதல் சூழலுக்கு ஏற்ற கொள்கையைக் கொண்டிராததால் தான், பல்வேறு நாடுகளின் கட்சிகள் குறுகி தேங்கிவிடுகின்றது.

இன்று முன்பை விட சமூக சக்திகள் பிரிந்து போராடும் தளம் விரிவடைவதுடன், போராடும் சக்திகள் பல முனையாக பிரிந்து நிற்கின்றனர். முரண்பாடுகள் குவியமாகாது, பல முரண்பாடுகள் பகுதிரீதியாக முதன்மை பெறுகின்றது. நாட்டுக்கான ஒரு பிரதான முரண்பாடு என்பதற்கு பதில், பல முரண்பாடுகள் பிரதேசரீதியாக சமூகரீதியாக முன்னெழுந்து முதன்மை பெறுகின்றது. நாடு என்ற கட்டமைப்பு உள்ளுர சிதைகின்ற போது, முரண்பாடுகள் பல முனைப்புடன் பல முனையில் வெளிப்படுகின்றது. அதாவது உலகமயமாதலுடன் நாடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியும் முரண்பாடுகளும் குறைய, நாடு என்ற கட்டமைப்பு விலகி நாடுகளுக்குள் பன்மையான முரண்பாட்டைத் தோற்றுவித்து வருகின்றது. அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடாக எங்குமிருக்க, நாட்டுக்குரியதான பிரதான முரண்பாட்டுக்குரிய குவியம் என்பது சிதைந்து வருகின்றது. பல முரண்பாடுகளை ஒரே நேரத்தில் கையாளவேண்டியுள்ளது. அதேநேரம் அவை ஒன்றுக்கொன்று நேரெதிராகவும், சமாந்தரமாகவும் சிலவேளை முரண்பாடாகவும் கூட முன்னிலைக்கு வருகின்றது.

உலகமயமாதலுடன் உருவாகி இருக்கின்ற அரசியல் நிலைமை இதுவாகும். முரண்பாடுகளும் அதனாலான போராட்டங்களும் தனக்குள் முரண்கூறுகளாக இருந்த போதும், அதைப் புரட்சியில் முரணற்ற கூறாக அணிதிரட்டி முரண்கூறைக் களைவது என்ற பாட்டாளி வர்க்க செயல்தந்திரம் அவசியமானது. அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டின் கீழ் ஒருங்கிணைகின்ற செயல்தந்திரம் என்பது, அனைத்துப் புரட்சிகர கூறுகளையும் ஒருங்கிணைத்து செல்வதாக அமைய வேண்டுமே ஓழிய எதிரானதாக அமையக் கூடாது.

இந்தவகையில் இலங்கையில் பாட்டாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஓருங்கிணைந்து போராடுவது தான், மக்களுக்கான உண்மையான நேர்மையான அரசியலாக இருக்க முடியும். முரண்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முரண்பாடுகளை களைதல் என்ற செயல்தந்திரம், அரசியல்ரீதியாக நடைமுறைக்கு வரவேண்டும்;. பாட்டாளி வர்க்க சக்திகள் முரண்பாட்டைக் காட்டி விலகி நிற்பது முதல் பல்வேறு முரண்பாடுகளை முன்னிறுத்தி நடைமுறையில் ஒருங்கிணைவதை மறுப்பது களையப்பட வேண்டும்.

இன்று இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவையும், இன ஐக்கியத்தைக் கோருகின்ற போது, புரட்சிகர வர்க்க சக்திகளின் ஒன்றிணைவை மையப்படுத்தியதாக அமைய வேண்டும்.

இது தங்கள் முரண்பட்ட கருத்தையும், அதனாலான அரசியல் முரண்பாட்டையும் கைவிடுதல் என்பதல்ல. அதை கொண்டிருக்கக் கூடிய ஜனநாயக வெளியில் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம், முரணற்ற ஜனநாயக வெளியில் முரண்பாட்டை அணுகுவது அவசியமானது. இந்த வகையில் கடந்தகால புரட்சிகர அனுபவங்கள், மாறி வரும் இன்றைய உலக நிலைமைக்கு ஏற்ப புரட்சிகரமாக்கப்பட வேண்டும். புரட்சிகர அனுபவங்கள் அப்படியே நடைமுறைக்கு பொருத்தமற்ற வகையில் பிரயோகிப்பது என்பது, வரட்டுவாதமாகி குறுகி விடுவதில் போய் முடியும்.

இலங்கையில் இரண்டு தேசங்களுக்குரிய தேசிய இனங்களின் முரண்பாட்டை, வெறும் தேசமல்லாத தேசிய இன முரண்பாடாக குறுக்கி தனிமைப்படுத்தியது போல், புரட்சிகர சக்திகள் தமக்குள் செயற்பட முடியாது. (இது பற்றி விரிவாக தனியாக ஆராய்வோம்) குறுகிய தளத்தில் செயற்படுவது, முரண்பாடுகளை முன்னிறுத்தி ஒருங்கிணைவை நிரகரிப்பது, அரசியல்ரீதியான மக்கள் திரள் செயற்பாட்டில் ஒன்றிணைவதை நிராகரிப்பது என்பது, அரசியல்ரீதியாக பாசிசத்துக்கு வாய்ப்பளிப்பதாகும்.

மார்க்சிய லெனினியக் கட்சிகள் புரட்சியை தங்கள் தலைமையில் முன்னெடுக்கின்ற அரசியல் செயற்பாடு மற்றும் உத்தி என்பது, வர்க்கப் போராட்டத்துக்கு முரணாகக் கூடாது. அனைத்தையும் தனக்குக் கீழானதாகக் கருதி தனிமைப்படுத்தும் போக்கு, வர்க்கப் போராட்டத்துக்கு பாதகமானது. மார்க்சிய லெனினியக் கட்சிகள் தங்கள் புரட்சிகர ஸ்தாபனரீதியான அரசியல் வடிவத்தைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்து செயற்படும் ஸ்தாபன வடிவத்தை உருவாக்குவது இன்று முதன்மையானது.

இந்த வகையில் போராடும் அனைத்து புரட்சிகரச் சக்திகளும் ஒருங்கிணைந்து போராடும் களம் அவசியமானது. குறித்த ஒரு முரண்பாடு சார்ந்த சக்திகள் முதல் பாட்டாளி வர்க்க அடிப்படையைக் கொண்ட சக்திகள் வரை, அனைவரையும் நடைமுறைப் போராட்டத்தில் இணைத்துப் போராடக் கூடிய ஒரு அரசியல்ரீதியான ஸ்தாபன வடிவம் இருக்க வேண்டும். போராட்டம் நடக்கும் எல்லாத் தளத்தில், பாட்டாளி வர்க்கம் இருக்கும் வண்ணம் ஜனநாயகத்துக்கான ஸ்தாபன ரீதியான பொதுவெளியை கட்சி உருவாக்கி முன்நகர்த்த வேண்டும்

திரோஸ்கி கட்சியாகட்டும், புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைப்பவராக அல்லது மறுப்பவராக இருக்கட்டும், சுயநிர்ணயத்தை ஏற்றவர் அல்லது ஏற்காதவராக இருக்கட்டும்... இந்த முரண்பாடுகள் நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதில், அதை ஒருங்கிணைப்பதில் தடையாக இருக்கக் கூடாது. புரட்சிகர சக்திகளையும், போராடும் மக்களையும் ஒருங்கிணைக்கின்ற ஸ்தாபன அடித்தளம் அவசியமானது. பல்வேறு முரண்பட்ட கூறுகளை ஒருகிணைக்கும், இடதுசாரிய புரட்சிகர முன்னணி மூலம், பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

பி.இரயாகரன்

29.04.2013

Last Updated on Monday, 29 April 2013 16:50