குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்துவரும் 196 நிரந்தரத் தொழிலாளர்களில் 174 பேர் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்திலும், 18 பேர் ஏ.ஐ.டி.யு.சி. எனும் தொழிற்சங்கத்திலும் இணைந்துள்ளதால், இரண்டு சங்கங்கள் இந்நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சங்கமான குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தை ஏற்க மறுத்தும் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தும், சங்கத்தின் முன்னணியாளர்களைப் பணிநீக்கம் செய்தும் இந்நிறுவனம் மிரட்டி வருகிறது. எனவே, சட்டப்படிப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கக் கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 26.12.2011 அன்று இச்சங்கத்தினர் முறையிட்ட போது,தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன்,  “நீங்கள் லேபர் கோர்ட்டில் வழக்காடிக் கொள்ளுங்கள்” என்று ஒருதலைப்பட்சமாக அறிவித்துவிட்டு, சிறுபான்மைச் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யுடன் சட்டவிரோதமாகக் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிறுபான்மை சங்கத்தின் மூலம் துரோக ஒப்பந்தத்தைத் திணிக்க முயற்சிக்கும் இச்சதியை  எதிர்த்தும், முதலாளிகளின் கைக்கூலியாகச் செயல்படும் தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன் மற்றும் தொழிலாளர்துறை துணைத் தலைமை ஆய்வாளர் திரு.ஜெகதீசன் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தக் கோரியும் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 4.1.2012 அன்று காலை  கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான பெண்தொழிலாளி ஒருவர் உணவருந்தியதும் சிறிது நேரம் கண்ணயர்ந்த போது, குளோபல் ஃபார்மாடெக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஏகாம்பரம் பொறுக்கித்தனமாக இதை இரகசியமாகப்  படம் பிடித்து,பகிரங்கமாக வெளியிட்டு அவமானப்படுத்தியதோடு, தொழிலாளர்கள் வேலை நேரத்தில் உறங்கியதாகப் பொய்குற்றம் சாட்டி 30 பேரைப் பழிவங்கியுள்ளான். தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவரும் இந்நிறுவனம், போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்க எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை நிர்வாக அதிகாரியின் இக்கீழ்த்தரமான செயல் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இந்தப் பொறுக்கித்தனத்தைக் கண்டு வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பெண்களின் உடை மாற்றும் அறையில் இரகசியமாகக் கேமராவில் புகைப்படம் எடுத்த நிர்வாக அதிகாரியான பொறுக்கி ஏகாம்பரத்தைக் கைது செய்யக் கோரி 11.1.2012 அன்று ஓசூர்  ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  பெண் தொழிலாளர்களின் கண்டன உரையும் எழுச்சிகரமான முழக்கங்களுமாக ஓசூர் நகரை அதிர வைத்தது, இந்த ஆர்ப்பாட்டம்.

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012