பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொடரும் புலத்து புலித் தேசியம், தமிழ் தேசியமாக புலத்தில் இவ்வாறு தொடர்ந்து முன்னேறுகின்றது. அன்று புலிகள் தாமல்லாத மாற்று இயக்கங்களை கொன்று குவித்து அதை தமிழ் மக்களின் தேசியமாக்கியது போல், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தமக்குள் மோதுகின்றன. ஆக மோதலை நியாயப்படுத்தி இதை சுற்றிக் கட்டமைக்கின்ற சுத்துமாத்து அரசியல் புலத்து தமிழ்தேசியமாக மாறுகின்றது.

இப்படி புலித்து புலிக் கோஸ்டிகள் வெளிப்படையான வன்முறையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் புலத்து தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தையும், புலிச் சொத்தை தனதாக்கி அதன் மேல் தமது நாட்டாமையையும் கோருகின்றனர். வன்னியில் புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்த போது, அதைத்தான் ஜனநாயக வழிக்கு வருதல் என்றனர். இப்படி தம்மை மட்டும் காப்பற்றிக்கொள்ள மே 15 2009 இரவு போட்ட ஜனநாயக வேசம் தான், ஆயுதத்தை கீழே வைத்தலாகும். இப்படி ஆயுதத்தை சார்ந்து கட்டமைத்து அதிகாரத்தை இழந்து வக்கற்றுப் போன புலத்துப் புலிகள், புலிச் சொத்தைக் கைப்பற்றும் முரண்பாடுதான் இரு பெரும் கோஸ்டியாக மாறியது.

 

 

 

இப்படி புலிக் கோஸ்டிகளுக்கு இடையேயான மோதல், இரண்டு தேர்தலை தனித்தனியாக நடத்தியது. இதன் மூலம் தங்களைத் தாங்களே புலத்து தமிழ்மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டு, புலத்து தமிழ் மக்கள் மேல் நாட்டாமையை தக்க வைக்கவும், புலிச் சொத்தை தமதாக்கவும் முனைந்தனர்.

இப்படி தேர்தல் மூலம் நடத்திய கூத்தைத்தான், புலத்து புலிகள் ஜனநாயகம் என்றனர். வன்னிப் புலிகள் தம்மை காப்பாற்றிக்கொள்ள ஆயுதத்தை கீழே வைத்ததை ஜனநாயகம் என்றனர். புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், ஒரே தேர்தலில் நின்று தங்களை தங்கள் வழியில் நிறுவ முடியவில்லை. இப்படி புலி ஜனநாயகங்கள். புலி கோஸ்டிகள், தத்தமது கோஸ்டிக்கு அமைவாக இரண்டு தேர்தல்.

நாடு கடந்த தமிழீழக்காரரை கவிழ்க்க சதிக்கு ஏற்ப கள்ளவாக்கு போட்டு வெல்ல வைப்பது முதல் பல முனையில் பல எதிர்த்தரப்பு ஜனநாயக புலிக்கூத்துகளை செய்தனர். இந்த முரண்பாடுகளும், இழுபறிகளும் தான், அண்மையில் நாடுகடந்த தமிழீழ உறுப்புரிமை பெற்ற சிலரை வெளியேற்றுவதில் போய் முடிவுற்றது.

இறுதியுத்தத்தில் தம் உயிரைக் காப்பாற்ற ஆயுதத்தை துறந்து சரணடைந்த புலிகளின் ஜனநாயகம் போல், புலிகள் சமாதானம் பேசும் காலத்தில் அரசியல் செய்வது என்பது வெள்ளையும் சொள்ளையுமாக வெளிக்கிட்டு பொக்கற்றில் பேனை செருகி வைத்திருப்பது போல் தான், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தங்களை ஜனநாயகத்துக்கு திரும்பியதாக நடிக்க தனித்தனியாக இரு தேர்தலை நடத்தினர்.

இப்படி மோதல் இரு துருவங்களில், இரு கோஸ்டியாகிய வௌ;வேறு வழிகளில் தொடங்கியது. பாரிசில் பத்திரிகை விற்பதை தடுத்தல், எரித்தல் என்று தொடங்கி இன்று வெளிப்படையான வன்முறையில் புலி ஜனநாயகம் வெளிப்படுகின்றது. புலத்து தமிழ்மக்கள் மேலான அதிகாரத்தைக் புலியின் மறுதரப்பிடம் இருந்து கைப்பற்றவும், சொத்துகளை தமதாக்கவும் நடக்கும் தேர்தல் முதல் இன்றைய வன்முறை வரை எதை எடுத்துக் காட்டுகின்றது.

இது தொடரும் என்பதைத்தான். இதற்குள் இலகுவாக பேரினவாதம் புகுந்து விளையாடும் என்பது, இன்று வெளிப்படையான உண்மையாகியுள்ளது. சிறிலங்காப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே புலத்து தமிழ்மக்கள் மத்தியில் இயங்குவது மட்டுமின்றி, அவர்கள் புலத்து புலிகளின் உயர் மட்டங்களில் புகுந்தும் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.

இன்று புலியின் இரு கோஸ்டிகளும் பரஸ்பரம் ஒன்று மேல் இனனொன்று குற்றஞ்சாட்டவும், அவதூறு செய்யவும் மற்ற தரப்பை இலங்கை கைக்கூலிகளாக காட்டிக் கூறுகின்ற அரசியல் பின்னணியில், இலங்கைப் புலனாய்வுப் பிரிவு மிக வேகமாக புகுந்து விளையாடி வருகின்றது.

புலிப் பணத்துக்காக மோதும் இரு கோஸ்டியும், இலகுவில் பணத்துக்கு விலைபோகும் எல்லையில் தான் தம் அரசியலைக் கொண்டுள்ளனர். பணத்துக்காக அவர்களின் அரசியலும் மோதலும் என்பது, இங்கு மையமாக அரசியல் புள்ளி. சிறிலங்கா புலனாய்வு பிரிவு பணம் வைத்தால் போதும், இந்த இரு கோஸ்டியிலும் இருந்து நக்கும் நாய்களுக்கு பஞ்சம் கிடையாது.

இரு புலிக் கோஸ்டிகளுக்குமிடையில் கொள்கை ரீதியாக அரசியல் முரண்பாடு எதுவும் கிடையாது. புலிப் பணத்தை தமிழரின் பொது நிதியமாக மாற்றினால், இந்த இரு கோஸ்டியும் இல்லை என்பதும் அது சார்ந்த வன்முறைக்கு இடமில்லை என்பதுவும் உண்மை. இங்கு தமிழர், தமிழ்தேசியம் என்பதெல்லாம் போலியானது, புரட்டுத்தனமானது. அனைத்தும் பணத்துக்கானது.

குறைந்தபட்சம் உண்மையான புலித் தேசியத்தையும், தமிழர் நலனையும், இந்த புலிச் சொத்துக்கு வெளியில் தான் இனம் காணமுடியும். முதலில் தமிழ் மக்களிடம் இருந்து புலிகள் பெற்ற பணத்தை, தமிழர் பொதுநிதியமாக மாற்றுங்கள். இதன்பின் தான் குறைந்தபட்சம் புலித் தமிழ்தேசியம் ஒன்று இருந்தால், அதை இனம் காணமுடியும்;. இதுவல்லாத அனைத்தும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற பித்தலாட்டங்கள். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை… எல்லாம் தமிழ்மக்களை மொட்டை அடித்து ஏமாற்றும் அரசியல் மோசடிகள். இன்று வன்முறையும், வன்முறை பற்றிய கருத்துகளும், அதற்கு எதிரான கண்டனங்களும் கூட, இந்தப் பணத்தை மையப்படுத்திய ஒரே அச்சில் பயணிக்கின்றது.

இந்தக் கோஸ்டி அரசியலுக்கு எதிரான தமிழ்மக்களின் நலன்சார் அரசியல், இந்த கோஸ்டியை உருவாக்கிய புலிப் பணத்தை தமிழர் பொது நிதியமாக கோரும் மையக் கோசத்துடன் இதை முன்னிறுத்துவது அவசியமானது. இந்தப் பணம் தான், தேசியத்தை சிதைத்து மோதலுக்கான அரசியல் அடிப்படையை வழங்குகின்றது. இங்கு இதற்கூடாகத்தான் சிறிலங்கா புலானாய்வுப் பிரிவு புகுந்து கொள்ளும் அரசியல் அடிப்படை உருவாகின்றது.

தமிழ்தேசிய அரசியல் பணத்தை மையப்படுத்தி, பணத்துக்கு விலை போகும் வன்முறையாக இன்று மாறிவிட்;டது.

 

பி.இரயாகரன்

09.04.2011