உன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..!

அறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு உணவு சாப்பிட்ட உடனே நித்திரை கொள்ளக் கூடாது. கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு படும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அறுவைதாசன் அதைப் போய் மனிசியிடம் சொல்லி விட்டு இரண்டு பேரும் சேர்ந்து படுக்கப் போக முதல் உடற்பயிற்சி செய்வோம், உமக்கும் நல்லது தானே என்று மெதுவாக ஜஸ் வைத்தான். நீர் உடம்பை கொஞ்சம் அசைத்தாலே பெரிதாக சத்தம் போடுவீர், இந்த லட்சணத்திலே உமக்கு சேர்ந்து செய்ய வேணுமோ நீர் மட்டும் தனியாக வெளியிலே நடந்து விட்டு வாரும் என்று ஒரேயடியாக மறுத்து விட்டா. இந்தக் கவலையோடு இருந்த நேரத்திலே அய்யாமுத்து வந்து சேர்ச்சிற்கு போக வேண்டும் என்றான்.

வெள்ளிக்கிழமை தோறும் குளித்து முழுகி சுத்த சைவச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு சனிக்கிழமை ஆட்டுக்கறியை போட்டுத் தாக்கும் இரு மரபும் துய்ய வந்த உயர் சைவக்குடி பிறந்த அய்யாமுத்து வேதக்கோவிலிற்கு போக வேண்டும் என்று சொன்னதை கேட்டு அறுவைதாசன் பயந்து போனான். அவனது பயத்தை விளங்கிக் கொண்ட அய்யாமுத்து, என்ரை மகனை ஒரு Faith School இல் சேர்க்க வேண்டும் அதுக்கு இந்த வேதக்கோவிலில் இருக்கிற ஒரு தமிழ்ப்போதகரிடம் கடிதம் வாங்கினால் நல்லதாம், எனக்கு இந்த கிறிஸ்தவ சமயத்தை பற்றி ஒன்றுமே தெரியாது. எங்கடை தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகளிலே வாற அரசியல் ஆய்வாளர்கள் மாதிரி நீயும் ஒரு நாலும் தெரிஞ்ச மனிசன். அது தான் உன்னைக் கூட்டிக் கொண்டு போகலாம் என்று வந்தேன் என்றான்.


பிரித்தானியாவில் Faith School கள் எனப்படும் பாடசாலைகள் பெரும்பாலும் புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க மதத்தினரால் நடாத்தப்படுகின்றன. இவற்றிற்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமான தொகை பொதுமக்களின் வரிப்பணத்தின் மூலமே அரசாங்க உதவியாகக் கிடைக்கிறது. ஒரு மிகச்சிறு பங்கையே அந்த மத நிறுவனங்கள் செலவு செய்கின்றன. ஆனால் பள்ளிகளின் முழுக்கட்டுப்பாடும் மத நிறுவனங்களிடம் இருக்கும். ஒரு சிறு அளவு மற்றைய மதங்களை சேர்ந்தவர்களையும் கண்துடைப்பிற்காக எடுப்பார்கள். இந்த பள்ளிகளில் அரசபள்ளிகளை விட கட்டுப்பாடுகள், கல்வித்தரம் என்பன கூடுதலாக இருக்கும் என்று சில பெற்றோர்கள் தங்களது மதம் அல்லாத மற்றைய மதநிறுவனங்களின் பள்ளிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று தமக்கு அண்மையில் இருந்தால் தமது பிள்ளைகளை சேர்க்க முயற்சி செய்வார்கள்.


அய்யாமுத்து தன்னுடைய மகனை சேர்க்க நினைத்த பள்ளி ஒரு கத்தோலிக்க பள்ளி. பிரித்தானியாவின் பெரும்பான்மை மதம் புரட்டஸ்தாந்து மதம். கத்தோலிக்கர்கள் பெரும்பாலும் அயர்லாந்துகாரர்களும் மற்றைய வெளிநாட்டுக்காரர்களும் தான். இவர்கள் போன கத்தோலிக்க கோவிலிலே ஒரு தமிழ்ப்பூசை, தமிழ் சுவாமியாரால் நடாத்தப்படுகிறது. இவர்கள் உள்ளே நுழைந்த போது சுவாமி சபையிலே பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் எல்லாம் கம்பிகள், அதாவது கம்பி சூட்டிற்கு உருகுவது மாதிரி நாங்கள் கர்த்தராகிய யேசு கிறிஸ்துவின் கருணையிலே உருகுகிறோம் என்றார். உதாரணமே வில்லங்கமாக இருக்குதே என்றான் அறுவைதாசன். நமது மேய்ப்பரான யேசு கிறிஸ்து உங்களை வழி நடாத்துவார் என்று பேச்சை முடித்த சுவாமி, உங்களிற்கு எதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று சபையை பார்த்து சொன்னார்.


கைகளை உயர்த்தியபடி எழுந்து நின்ற அறுவைதாசனை பார்த்த சுவாமி, புதிசாக ஒருத்தன் வந்ததுமில்லாமல் அவனுடைய சந்தேகங்களையும் தன்னிடம் கேட்டுத் தெளிய விரும்புகிறானே இந்த மனம் திருந்திய மைந்தனை கர்த்தருடைய வழி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு தன்னுடைய தோள்களிலே வந்தது தேவனுடைய சித்தமே என்று பெருமிதம் கொண்டு கேளுங்கள் என்றார். கர்த்தர் மேய்ப்பர் என்றால் நாங்கள் எல்லாம் ஆடுகளோ என்று அறுவைதாசன் கேட்டான். ஆகா, மகனின்ரை படிப்பிற்கு வைச்சானே ஆப்பு என்று அய்யாமுத்து கண்ணீர் விடாத குறையாக, சுவாமி என்ரை மகனை உங்களது பள்ளிக்கூடத்திலே சேர்க்க வேண்டும், நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றான். நீங்கள் கத்தோலிக்கரோ என்று சுவாமி கேட்டார். இல்லை சைவசமயம் என்றான் அய்யாமுத்து. அப்படியென்றால் இடம் கிடைக்காது ஏற்கனவே இங்கே இருக்கின்ற கத்தோலிக்கரோடு போலந்தில் இருந்தும் கத்தோலிக்கர்கள் வருவதால் மற்றச் சமயத்தவர்களை சேர்ப்பது முடியாமல் இருக்கிறது என்றார் சுவாமி.


உன்னைப் போல் உனது அயலானை நேசி எண்டு கக்கூஸ் சுவரைக் கூட விடாமல் ஒட்டி வைச்சிருக்கிறீங்கள். ஆனால் உன்னைப் போல் உனது கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி எண்டது தான் உங்களது நடைமுறையாக இருக்கிறது. பொதுமக்களது பணத்திலே நடத்துற பள்ளிக்கு கத்தோலிக்கரை மட்டும் தான் சேர்ப்போம் என்பது எந்த வகையிலே நியாயம். அதுவுமில்லாமல் எல்லோரையும் மதப்படி பிரிக்கும் உங்களது பார்வைப்படி பார்த்தால் இந்த நாடு புரட்டஸ்தாந்து நாடு. கத்தோலிக்கரை வைக்கோலிலே போட்டு எரிச்ச நாடு. கத்தோலிக்கரை திருமணம் செய்தால் அரசராக பதவியேற்க முடியாது என்ற மரபு உள்ள நாடு. வட அயர்லாந்து மக்களை கத்தோலிக்கர்கள் என்பதனால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் நாடு. இப்படியான நாட்டுப்பணத்திலே பள்ளிக்கூடம் நடத்துவதற்கு மட்டும் உங்களது மத உணர்ச்சி இடம் கொடுக்குதோ என்றான் அறுவைதாசன்.


எங்களிற்கு அரசியல் தேவை இல்லை. பரலோகத்தில் இருக்கும் எங்களது பிதாவின் சித்தப்படியே நாங்கள் நடக்கிறோம் என்றார் சுவாமியார். உங்களது பிதா பரலோகத்தில் இல்லை. இந்த உலகத்திலே இருக்கின்ற அதிகார வர்க்கம் தான் உங்களது தேவர்கள். இப்படித் தான் கொழும்பிலே இருக்கின்ற ஆண்டகையோ, ஆட்டின கையோ என்று ஒருத்தரும் இலங்கை மக்கள் அரசியலால் பிரியாமல் நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட வேணும் செபம் சொல்கிறார். தமிழ் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் பேரினவாத அரசுகள் கொன்ற போது எல்லாம் இவர்கள் வாயே திறக்கவில்லை. இத்தாலியிலே இருக்கின்ற மேற்கு நாடுகளின் மாப்புகளும் (போப்பு எண்டும் சிலர் கூப்பிடுகிறார்கள்) மேற்கு நாடுகளிற்கு பிடிக்காத நாடுகளிலே எதாவது நடந்தால் மனித உரிமை மீறல், அப்பாவி மக்களை கொல்லுகிறார்கள் என்று கண்ணீர் விடுவார்கள். மேற்கு நாடுகள் கொல்லும் போது, கொள்ளையடிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று உபதேசம் செய்வார்கள். இது தான் உங்களது அரசியல் வரலாறு என்றான் அறுவைதாசன்.


இப்பிடியே விட்டால் இந்த முறை மட்டுமில்லாமல் எப்பவுமே அந்த பள்ளியிலே சேர்க்க முடியாமல் குழப்பி விடுவான் என்று யோசித்த அய்யாமுத்து, நாங்கள் இன்னொரு நாள் வருகிறோம் என்று சொல்லிய படி அறுவைதாசனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்த அறுவைதாசன் உள்ளே திரும்பிப் பார்த்தான். சுவாமி சற்பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.பொடியன் ஒருவன் கத்தோலிக்க முறைப்படி முழந்தாளிலே இருந்தபடி சற்பிரசாதத்தை வாங்கி கொண்டிருந்தான். அவனது தலை சுவாமியின் இடுப்பிற்கு நேரே இருந்தது. எல்லாத்தையும் பிளான் பண்னித் தான் செய்கிறார்கள் என்றபடி அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்த அறுவைதாசனை பார்த்த அய்யாமுத்து உனக்கு நல்லா மண்டை கழண்டு போச்சு என்றான்.

Last Updated on Sunday, 25 August 2013 17:53