அதி உத்தம ஜனாதிபதி மகிந்த சிந்தனைகள் பாகம் இரண்டு

இலங்கையையும், சிங்கள மக்களையும், புத்த மதத்தையும் காப்பாற்றிய இலங்கேஸ்வரன், துட்ட கைமுனு எல்லாளனோடு வாள் சண்டை போட்டு தமிழர்களிடமிருந்து இலங்கையை காப்பாற்றினான். நவீன கைமுனு மகிந்தா கொழும்பிலிருந்து கொண்டே இலங்கையை காப்பாற்றினார் என்றெல்லாம் மண்டையில் மயிரை வழித்தால் மட்டும் போதும் புத்த பிக்குவாகி விடலாம் என்ற மகத்தான கொள்கை கொண்ட இலங்கை பிக்குகளால் போற்றப்படும் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த கவலையோடு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அடுத்த தேர்தலிலே வெல்ல முடியுமா என்ற பெரும் கவலையில் அவர் ஆழ்ந்திருந்தார்.

..

"மகிந்த சரணம் கச்சாமி" என்று மாரித்தவளைகள் கத்துவது போல் சோசலிச ஜனநாயக சிறீலங்காவின் மாண்பு மிகு மந்திரிகள், டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கே.பி போன்ற ஜனநாயகத்தை தமிழ் மக்களிற்கு பெற்று கொடுப்பதற்காகவே உயிர் வாழும் தமிழர்கள், மகிந்தாவின் காலத்தில் நாலைந்து பள்ளிவாசல்களை மட்டுமே இது வரை இடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் என்றால் இதை விட கூடுதலாக இடித்திருப்பார்கள். அதனால் எல்லா வாக்குகளும் மகிந்தாவிற்கே என்று முஸ்லீம் மக்களிற்கு சொல்லும் ரக்கீம், ரிசாட் பதியுதீன் போன்ற முஸ்லீம் தலைவர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் காலிலே விழுந்து பதவியை பெறுவதற்காகவே தாத்தா தொண்டைமானில் இருந்து பேரன் தொண்டைமான் வரை ஒரு வீரப்பரம்பரையை உருவாக்கி வைத்திருக்கும் தொழிலாளர்களின் சந்தா பணத்திலேயே கோடீஸ்வரர்களான மலையக தமிழ்தலைவர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே பஜனை பாடினாலும் அடுத்த தேர்தல் என்ற பயம் அவரின் கழுத்தை சுற்றி இருக்கும் சிவப்புத்துண்டு போன்று மனதை சுற்றி இருந்து கொண்டே இருந்தது.

 

கையை மேலே உயரே தூக்கி எதையோ காட்டுவது போல காட்டி கடைசி வரை எதையும் காட்டாமலேயே சாகும் வரை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களையே கொன்று விட்டு சைக்கிளில் அடிபட்டு சாகும் வரை பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தார். முள்ளிவாய்க்காலில் சண்டையை நடத்திய சரத் பொன்சேகாவுடன் சம்பந்தன் கூட்டுச் சேர்ந்து கொண்டே தான் தமிழ்மக்களின் தலைவன் என்கிறார். சிறிதர் தியேட்டரையே அதன் உரிமையாளர்களிற்கு கொடுக்காத டக்ளஸ் தன் உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தமிழ் மக்களிற்கு கொடுப்பேன் என்று சொல்லி எம்.பி ஆகிறார். கே.எஸ்.ராஜா இந்தியாவிலிருந்து இலங்கையின் வெள்ளித்திரைகளிற்கு தமிழ்படம் வந்து விட்டது என்று வெகுவேகமாக சொல்வது போல நோர்வேயிலேயிருந்து இலங்கைக்கு புலிகளின் மூன்றாவது தலைவர் வந்து விட்டார் என்று மேல் மாகாணசபை, தென் மாகாணசபை தேர்தல்களிலே வெல்லுவதற்காக சிங்கள மக்களிற்கான ஒரு நாடகத்தை தான் மட்டும் போட வேண்டி இருக்கிறதே என்று அவர் கவலைப்பட்டார்.

 

ஒரு ஆணி கூட தயாரிக்காத நாடாக இலங்கையை வைத்திருக்கிறோம். எண்ணெய் கசிந்தால் துப்பரவு செய்யும் இயந்திரத்தை இலங்கையின் இராணுவ அதிகாரிகளிற்கு இஸ்ரேலின் புதிய ராணுவ உபகரணம் என்று காட்டினோம் என்று மொசார்ட்டில் இருந்த ஒருவன் எழுதின புத்தகத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை பாராட்டி எழுதியிருக்கிறான். நிலைமை இப்பிடி இருக்க புலிகளிற்கு எதிரான போரை நாங்கள் மட்டும் நடத்தினோம் என்று எங்களை மட்டும் மாட்டி விடுவது கொஞ்சம் கூட நல்லாயில்லை. ஆயுதம் விற்றவர்கள், ஆலோசனை தந்தவர்களே போர்க்குற்றம் நடந்திருக்கிறது என்று இன்றைக்கு ஜெனிவாவிலே தீர்மானம் போடுகிறார்கள்.

 

அவங்களைக் கூட விட்டு விடலாம், இந்தியா எங்களை ஆதரிக்காமல் சங்கத்து ஆள் என்று கூட பார்க்காமல் நடுநிலைமை என்று சொல்வதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சண்டையிலே கடைசி வரை எங்களோடு இருந்தார்கள். சம்பூர் என்று ஒரு முழு ஊரையே அனல்மின் ஆலைக்காக இந்தியாவிற்காக கொடுத்திருக்கிறோம். மன்மோகன்சிங்கின் தாடிக்குள் முகம் இருக்கிறதா? முகத்தில் தாடி இருக்கிறதா? என்று தெரியாதது போல இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையும் எப்படி என்றே தெரியாமல் இருக்கிறது என்று யோசித்தார்.

 

லிபியாவின் மும்மார் கடாபி எண்ணெய் பணத்திலே "பச்சைப் புத்தகம்" என்று தனது சிந்தனைகளை அள்ளி விட்டது போல இலங்கையை அன்னிய நாடுகளிற்கு அடகு வைத்து எடுத்த பணத்திலே "மகிந்த சிந்தனைகள்" என்று ஒரு அறிவுக்களஞ்சியத்தை எடுத்து விட்டதைப் போல மறுபடியும் தன்னுடைய சிந்தனைகளை தொகுத்து இந்த சிக்கல்களிலே இருந்து விடுபட வேண்டும் என்று முடிவெடுத்தார். பசிலும், கோத்தபாயாவும் சிங்களத்தேசியவீரர்கள் என்று வீரவசனம் பேசினாலும் அமெரிக்க பாஸ்போர்ட்டை எந்த நேரமும் இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் கவிண்டு போய் ஊழல் விசாரணை என்று வந்தால் அடுத்த நிமிடமே அமெரிக்கா பறந்து விடுவார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனம் பேசினாலும், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எனக்கும் மேற்குநாடுகள் தான் உதவி செய்யும். ஆனபடியால் ஒருத்தரையும் பகைத்து வெளியிலே விடக்கூடாது என்று முடிவெடுத்தார்.

 

அந்த நேரத்திலே "உள்ளே வரவிட்டு அடிக்க வேணும்" என்ற பிரபலமான இராணுவ தந்திரோபயம் அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த வசனத்தை கேட்டு விட்டு கனகாலம் வன்னிக்குள் படைகளை அனுப்பாமல், பயந்து கொண்டு இருந்ததும் நினைவுக்கு வந்தது. அது தான் சரி ஒருத்தரையும் வெளியே விடக்கூடாது என்று விட்டு தன்னையறியாமல் "உள்ளே விட்டுத் தான் அடிக்க வேணும்" என்று வாய் விட்டு சொன்னார். பக்கத்திலே இருந்த திருமதி மகிந்தா முகமெல்லாம் நாணி வெட்கச் சிரிப்புடன் ஓடிப் போனார். இவ ஏன் சிரிக்கிறா என்று மகிந்தருக்கு மறுபடி மண்டை கழண்டு போச்சு.

Last Updated on Tuesday, 08 April 2014 07:05