மரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்க்கான உரிமையினை நிலைநாட்டுவோம்!

2009 இல் புலிகள் ஸ்தாபன ரீதியாக அழிக்கப்பட்ட பின்னான அரசியல் சூழல், பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து, தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணமல்போனவர்களை மையப்படுத்தியும் மரணித்த தங்கள் உறவுகளின் நினைவுகளை முன்னிறுத்தியும், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அரசியல் ரீதியாக மனிதவுரிமைகள் சார்ந்தாகவும், உரிமைகள் சார்ந்தாகவும் வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக நிலவும் சமூக கண்ணோட்டத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

அரசு மரணித்தவர்களை நினைவுகொள்ளக் கூடாது என்று அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளது. இதற்கு எதிராக போராட வேண்டியது, மக்களின் வரலாற்றுக் கடமை. போராடியவர்கள் சார்ந்து இருந்த கடந்தகால அரசியலைக் காட்டி, ஓடுக்கப்பட்ட மக்கள் அவர்களை நினைவு கொள்வதை நிரகாரிக்க கூடாது. அதாவது அரசு எதைச் செய்ய முனைகின்றதோ, அதை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அரசியல் சார்ந்து செய்ய முடியாது.


இந்த வகையில் தமிழ் தேசியப் போராட்டத்தில், மரணித்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உறவுகளே இன்று தங்கள் கொல்லப்பட்ட அன்புக்குரியவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி - நினவு தினத்தைக் நடாத்தும் உரிமை கோரி தன்னியல்பாக போராடுகின்றவர்கள். இப்போராட்டத்தை நடாத்தும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உறவுகள் சார்ந்து அவர்களில் நினைவு நாளை அனுஸ்டிக்க போராடுகின்றனரே ஒழிய, 2009 இக்கு முன்னான - கடந்த கால அரசியலை முன்னிறுத்தியோ அல்லது அதைச் சார்ந்தோ போராடவில்லை.


மறுபக்கத்தில் "மாவீரர் தினம்" குறுகிய அரசியல் அடையாளத்தைக் கொண்டது. புலிகள் தங்களின் மரணங்களை மட்டும் முன்னிறுத்தி, குறுகிய அரசியல் நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட செற்பாடு தான் "மாவீரர் தினம்". புலிகள் இல்லாத நிலையில், இன்று புலம்பெயர் நாடுகளில் முரண்பட்ட புலிக்குழுகளின் இருப்புக்காகவும், பண வசூலிப்புக்குமாக முன்னிறுத்தி "மாவீரர்தினம்" தொடருகின்றது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள், மரணித்தவர்களின் தியாகங்கள் தங்கள் சுயநலனுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் உறவுகளின் போராட்டம் இதற்கு வெளியில் நடக்கின்றது. புலிகள் இல்லாத நிலையில், வடக்கு-கிழக்கில் இது உணர்வு பூர்வமானதான தங்கள் உறவுகளை எண்ணி கொள்ளும் ஒரு நாளாக மாறி இருக்கின்றது. மரணித்த தங்கள் உறவுகளையும், காணமல் போன தங்கள் உறவுகளையும் நினைத்துக் கொள்ளவும், அந்த கொடூரங்களை எண்ணி புலம்பவும் போராடவும், புலிகள் முன்பு நடத்திய "மாவீரர் நாள்" துண்டுதலாக இருக்கின்றது.


புலிகள் மட்டும் என்ற நிலை மாறி, கொல்லப்பட்ட மக்கள் தொடங்கி போராடி மரணித்தவர்களை நினைவு கொள்ளும் பொதுச் செயற்பாடாக மாறி இருக்கின்றது. யுத்தத்தில் இறந்தவர்கள் தங்கள் உறவுகளை எண்ணிப் பார்க்கும் ஒரு கணத்தை இது உருவாக்கியிருக்கின்றது. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்காணவர்களின உறவினர்கள் கூட, தங்கள் உறவுகளை இந்நாளில் எண்ணிப் பார்க்கின்றனர். இப்படி பரந்துபட்ட மக்களின் உறவுகள் சம்மந்தப்பட்ட உணர்வு சார்ந்த விடையம், புலிகளின் "மாவீரர் நாளில்" வெளிப்படுகின்றது. புலிகள் இல்லாத நிலையில் "மாவீரர்" தினம் சார்ந்து வெளிப்படும் உணர்வுகளை குறுக்கி புலிகள் சார்ந்த அரசியலாகக் காண்பது தவறானது.


இந்த நாளில் புலிகள் சார்ந்தும், சாராமலும் மரணித்தவர்கள் முதல் கொல்லப்பட்ட பொது மக்கள் நினைவுகள் அரசின் ஒடுக்குமுறையால் தன்னியல்பாக நினைவுபடுத்தப்படுகிறது. அரசின் ஒடுக்குமுறை புலிகளை ஒழித்த அதேநேரம், தமிழ் தேசிய அடையாளங்கள் மீதான தாக்குதல் அரசியல் ரீதியான வேறு பரிணாமத்தை உருவாக்கி வருகின்றது. வலதுசாரிய புலிகள் இல்லாத நிலையில் அடையாளங்கள் மீதான தாக்குதல், பொது மக்கள் மீதான வன்முறையாக மாறி இருக்கின்றது. உணர்வு ரீதியாக மக்களிடம் வெளிப்படும் தன்னியல்புகள் மீதான அரச ஒடுக்குமுறையாக மாறி இருக்கின்றது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் குறுகிய இனவிடுதலைப் போராட்டமாக சிரழிந்து அழிந்தது போல், தேசிய விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகளும் காணப்படுகின்றது. அதாவது புலிகளின் "மாவீரர் தினம்" மாக குறுகி தனிமைப்பட்டு கிடக்கின்றது.


வலதுசாரி புலிகளும் முதல் மற்றைய இயக்கங்கள் வரை, இடதுசாரிய கோசங்களைப் பயன்படுத்தியே, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை தன் பின்னால் ஆயுதபாணியாக்கியது. இப்படி கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள். இன்று அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளை நினைவு கொள்வதும், அவர்களுக்காக வர்க்க அரசியல் உணர்வு இன்றி தன்னியல்பாக போராடுகின்றனர்.


இப்போராட்டங்கள் சாரம்சத்தில் மனிதவுரிமை சார்ந்தாகவும், அடிப்படை ஜனநாயகத்துக்கான பொதுப் போராட்டமாகவும் காணப்படுக்கின்றது. தன்னியல்பாக முன்னெடுக்கும் இச்செயற்பாடுகள், முன்னைய குறுகிய வட்டங்களை தகர்த்து மனித உரிமைகள் சார்ந்த விடையமாக பரிணாமித்து வருகின்றது. இதை சுற்றி பரந்துபட்ட மக்கள் தங்கள் பொது அனுதாபத்தையும் ஆதாரவையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றனர். வலதுசாரிய இனவாத கட்சிகள் தொடங்கி புலம்பெயர் புலிகள் வரை தனியல்பான போரட்டத்தில் தொங்கிக் கொள்கின்றனரே ஓழிய, இதை முன்னின்று வழிநடத்தவில்லை.


கடந்தகால புலிகளின் அரசியல் செயற்பாடுகளைச் சுற்றிய உருவான சமூக விளைவுகளை, புலிகளின் அரசியலாக காட்டி அரசியல் நீக்கம் செய்வதல்ல. அரசியல் விளைவுகளைக் கொண்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளை, ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த ஒன்றாக முன்னெடுத்தது அதை ஒடுக்கப்பட்ட மக்களின் பொது அரசியல் செயற்பாடாக மாற்ற வேண்டும். போராட்டத்தை சுற்றி மரணித்த மக்களும், மக்களின் விடுதலைக்கானதாக நம்பிய போராட்டத்தில் தங்களை தியாகம் செய்தவர்களின் நினைவுகளை போற்றவும், அதை அரசுக்கு எதிராக முன்னிறுத்தி போராடுவதும் இன்று அவசியமானது. இதை கொச்சைப்படுத்தவும், அடக்கியொடுக்குவதையும் அனுமதிக்க முடியாது. இப்படி பரந்துபட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை இன்று இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு எதிராக, அவர்களின் உறவுகளை சுற்றி நிலவிய அரசியலைக் காட்டி நினைவு தினங்களை எதிர்ப்பது தவறானது.


தேசியப் போராட்டத்தில் பலியிடப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் இயங்குசக்திகள் மற்றும் அதன் பிள்ளைகள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியற் போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ஒடுக்குமுறையாளர்களின் அரசியல் தேவைக்காகப் பலியிடப்பட்டார்கள் என்ற அரசியல் விழிப்புணர்வை உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் எற்படுததுவதே இன்று பாட்டாளி வர்க்க சக்திகளின் அதி முக்கிய பணியாகவிருக்கிறது. அத்துடன் மேற்கூறிய அடிப்படையில் மடிந்த தியாகிகளின் நினைவுகளை உழைக்கும் வர்க்க அரசியல் மயமமாக்கி, அவர்களின் நினைவுகளை உள்ளடக்கிய அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது பட்டாளி வர்க்க முன்னணிச் சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும.


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
26-11-2013

Last Updated on Wednesday, 27 November 2013 07:48