புதிய ஜனநாயகம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கடந்த நவம்பர் இறுதியில் அடித்த புயலாலும், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாகப் பெய்த பெருமழையாலும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நீடாமங்கலம் தொடங்கி அதன் கீழ்பகுதிவரை

 ஓடுகின்ற கோரையாறு, ஓடம்போக்கி, பாமணியாறு, அடப்பாறு முதலான ஆறுகள் உடைந்து ஒன்றொடொன்று சேர்ந்து கடலிலும் கலக்க முடியாமல், மூன்று வாரங்களுக்கு மேல் நாகைதிருவாரூர் மாவட்டங்களின் பல கிராமங்கள் தனித்தனித் தீவுகளாகித் தத்தளித்தன.வடிகால்களை சீரமைக்காமல் புறக்கணித்த ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் பல கிராமங்களில் பயிர்கள் வெள்ளத்தில் அழிந்து போய், அவலத்தில் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.


 துயர வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு நிவாரண முகாம்களில் ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது.நாட்கள் பல கடந்தும் இழப்பீடுகளுக்கு உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படவில்லை. அன்றாடம் மக்களின் சாலை மறியல் போராட்டங்களால் இம்மாவட்டங்கள் அதிர்ந்தன. இம்மாவட்டங்களில் இயங்கிவரும் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும் கூடுதலாகவும் நிவாரணம் வழங்கக் கோரியும், அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தை அம்பலப்படுத்தியும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நின்றன.


  இது மட்டுமின்றி, தஞ்சை, வல்லம், செங்கிப்பட்டி, திருவையாறு முதலான பகுதிகளிலிருந்து மக்களிடம் நிவாரணப் பொருட்களைப் பெற்று வந்து, நாகைதிருவாரூர் மாவட்டங்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளான அம்மையப்பன், கருப்பூர், திருமருகல், ஏர்வாடி முதலான பகுதிகளில் நிவாரண முகாம் அமைத்து அவற்றை உடனிருந்து விநியோகித்தன.


 சென்னைநெற்குன்றம், மதுரவாயல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இப்பகுதியில் இயங்கிவரும் பு.மா.இ.மு.  நிவாரணப் பணிகளைச் செய்ததோடு, வடிகால்களை ஆக்கிரமித்து கல்லூரி கட்டியுள்ள கல்வி வியாபாரி ஏ.சி.சண்முகத்தை கைது செய்யக்கோரி, பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டு வருகின்றது.


 பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவே புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்ட இந்நிவாரணப்பணிகள் அளவில் சிறியவைதான் என்றாலும், அது உழைக்கும் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று, புரட்சிகர அமைப்புகளின் மீது மாளாத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.