பணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் விலைக்கு வாங்க வேண்டிய மனித அவலம்

இது வன்னி நாசிய முகாமில் நடக்கும் புதிய வியாபாரம். சிங்கள பேரினவாத போர்க் குற்றவாளிகள், தாங்கள் நடத்திய போர்க் குற்றத்தை மறைக்க பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சிறை வைத்துள்ளனர். அவர்களுடன் வெளியார் உரையாடத் தடைவிதித்துள்ளனர்.

உற்றார் உறவினர் என்று, யாரும் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. ஏன் "மக்கள் தெரிவு செய்த ஜனநாயக" பராளுமன்ற உறுப்பினர்கள் கூட, அங்கு சுதந்திரமாக செல்லவோ, உரையாடவோ முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்னியில் மருத்துவம் செய்த வைத்தியர்கள், இந்த மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளது. தங்கள் குற்றங்கள்  உலகறியக் கூடாது என்ற ஓரே காரணம்தான், அனைத்து நடைமுறையாகியுள்ளது. குற்றவாளிக் குடும்பத்தின், பாசிச அதிகாரமாக மாறி நிற்கின்றது.

இந்த நாசிய முகாமினுள் செல்பவர்கள் கமரா முதல் தொலைபேசிகளையும் எடுத்துச்  செல்ல முடியாது. வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கு இதில் கடுமையான தடைகள், விதிகள். வன்னியிலும், முகாமிலும் நடந்த குற்றங்கள் உலகம் அறியக் கூடாது என்ற பாசிசத்தின் அக்கறை, இப்படி புதிய குற்றங்களையும், புதிய குற்றப் பரம்பரையினரையும்  உற்பத்தி செய்கின்றது.

இதை மூடிமறைக்க காரணங்கள், தர்க்கங்கள் பற்பல. இந்த சிங்கள பேரினவாத பாசிச அரசு இப்படி புதிய பாசிசக் குற்றங்கள் மூலமே, தன்னை தக்கவைக்க முனைகின்றது.

கொலைகாரர்களும், நக்குண்ணிகளும், வியாபாரிகளும், தரகர்களும், கூலிக் குழுக்களும் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றனர். தங்கள் பாசிசத் தொழிலைச் செய்கின்றனர்.

முதியவர்களை உறவினர்கள் கூட்டிச்செல்ல முடியும் என்ற பாசிச அரசின் "மனிதாபிமான" பாசிச அறிவிப்பின் பின், அங்கு ஒரு வியாபாரமே நடக்கின்றது. கூட்டிச் செல்ல முனைபவர்கள் பல தடைகளைச் சந்திக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், லஞ்சம் வெளிப்படையாக  கோரப்படுகின்றது. குறைந்தபட்சம் 50000 முதல் 100000 இருந்தால் தான், முதியவர்களை அங்கு இருந்து உறவினர்கள் மீட்க முடியும் என்ற மனித அவலம்.

இந்த பணக் கொள்ளையில், சம்பந்தப்படும் உயர் அதிகாரிகள் இதில் நேரடியாக சம்பந்தப்படா விட்டாலும், அவர்கள் இதை தடுத்து நிறுத்த முனையவில்லை. இவை அந்த மனித அவலத்தின் மேல், கண்டும் காணாது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் கண்காணிக்கப்படும் போது, இது திட்டமிட்ட அனுமதிக்கப்பட்ட இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திலும் பணம் சுளையாக கைமாறுகின்றது.

இப்படி முதியவர்கள் மீட்கும் உறவினர்கள், வேதனை மேல் வேதனையைத்தான் அனுபவிக்கின்றனர். பணம் வாங்குவதற்காகவே காரியங்களை இழுத்தடித்தும், இல்லாத நடைமுறைகளை புகுத்தியும், மனிதனை வதைத்து "மனிதாபிமானம்" மூலம் பணம் கறக்கின்றனர். "உதவும்" தமிழர்கள் முதல் "மீட்புப்" பொலிஸ் வரை, இந்த பணச்சடங்கை எதிர்பார்த்து "தமிழனுக்கு உதவ" காரியமாற்றுகின்றனர்.

மனிதாபிமானத்துடன் மனிதன் அங்கு செயற்பட்டால், அதை சந்தேகத்துடன் பார்க்கும் அணுகும்  அரச பாசிசம் அங்கு கொடிகட்டி பறக்கின்றது. மனிதம் அச்சத்துடன், தன்னை தற்காத்துக் கொள்கின்றது.

நாசி முகாமோ, இப்படி பலருக்கு பலவழியில் பணத்தை கறந்து கொடுக்கின்றது. அங்குள்ளவர்களை வெளிநாட்டுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யும் வர்த்தகம், முகாமிலும் முகாமைச் சுற்றியும் களைகட்டியுள்ளது. பல இலட்சம் சுளையாக கறந்து சம்பாதிப்பது, புதுத் தொழிலாகியுள்ளது.

சிங்கள தரகர்கள் உட்பட கூலிக்குழுக்கள் வரை, சிதைந்து போன மனிதம் மீது இந்த "மாமாத்" தொழிலைச் செய்கின்றது. பல இலட்சத்தை இதற்காக கோரும் இவர்கள், அங்குள்ள மக்களின் உறவினர்களை முகாங்களைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வைத்தே விலைபேசுகின்றனர்.

இவை எல்லா அரச பாசிசத்தின் குடையின் கீழ் அரங்கேறுகின்றது. அரச பாசிசம் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறையைப் பயன்படுத்தியே, இதில் சம்பாதிப்பது என்பது பொது நடைமுறையாகிவிட்டது.

இந்த மக்கள் முன்பு புலிப் பிரதேசத்தில் இருந்து மீண்டுவர, புலிக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. இன்று அதே நிலையில், அதே மக்கள். பணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய அவலம். இதன் பின் சிங்கள பேரினவாத பாசிச அரச இயந்திரத்தின் துணையுடன், குற்றவாளிகளும் குற்றக் கும்பலும் சேர்ந்து நடத்தும் வியாபாரமாகியுள்ளது.

அப்பாவி மக்களை உயிருள்ள நடைப்பிணமாக்கி, அவர்களை விலைபேசி விற்கின்ற அரச பாசிசமே, இன்று இலங்கைகைய ஆள்கின்றது.

பி.இரயாகரன்
22.06.2009

Last Updated on Monday, 22 June 2009 09:34