சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல்தான், தமிழன் மேலான அவர்களின் கண்காணிப்பாகியது

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

 

தமிழனை தெய்வமாக மதித்திருப்பார்கள். 1971, 1989-1990 தங்கள் குழந்தைகளை இந்த இராணுவத்திடம் பறிகொடுத்த மக்கள், அதை பழிவாங்க உன்னுடன் சேர்ந்து நின்றிருப்பார்கள். ஆனால் நீ இன்னமும் சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்டுவது நிற்கவில்லை. உனது ஆட்டம் முடிந்து விட்டது, நிற்பாட்டு. நீயே தமிழனுக்கே எதிரானவன். அதையே உன் வரலாறாக நிறுவியிருக்கின்றாய்.   
 
நீ வேறு, தமிழன் வேறு. அது போல் சிங்கள மக்கள் வேறு, சிங்கள அரசு வேறு. உன்னுடைய குறுந்தேசிய தமிழ் இனவெறியை, தமிழர்களின் உணர்வாக காட்ட முனைகின்றாய். தமிழ் தேசிய உணர்வுக்கும், உன்னுடைய இனவெறி உணர்வுக்கும் இடையில் உள்ள மெல்லிய இடைவெளியை கொண்டுதான், தமிழினத்தையே நீ அழித்தவன்.

 

இப்படிப்பட்ட நீ தான் சொல்லுகின்றாய், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழனின் எதிரி என்று. இப்படிக் கூறி தமிழினத்தையே அழித்துவிட்டு, அதைப் பற்றி எந்த சூடுசுரணையுமற்ற நீ, எந்த குற்றவுணர்வுமற்ற நீ, தமிழனின் எதிரி சிங்களவன் என்கின்றாய். தொடர்ந்து இப்படிச் சொல்லி, நாய்ப் பிழைப்பு பிழைக்க முனைகின்றாய்.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் போல், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களும் உனக்கு முன்னால் எதிரிதான். இதனால் தான், அவர்களை தமக்குள் எதிரியாக நீ சித்தரிக்கின்றாயே ஒழிய, அவர்களல்ல.

 

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக, நீ எப்போது தான் இருந்து இருக்கின்றாய். வர்க்க ரீதியாகவும், சமூகரீதியாகவும், தமிழ் மக்களை தமிழன் ஒடுக்கியதை நீ எப்போதாவது உணர்ந்திருக்கின்றாயா!? உனது குறுந்தேசியம், அதைக் களைய முனைந்திருக்கிறதா!? இல்லை. தமிழன் மேலான தமிழனின் வர்க்க ஒடுக்குமுறையையும், சமூக ஒடுக்குமுறையையும் பாதுகாத்து, தமிழ் மக்களை ஒடுக்கியதே உனது குறுந்தேசியம் தான்.

 

உனது இந்தக் குறுந்தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையே ஒடுக்கியதல்லவா. இப்படிப்பட்ட உன்னால் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிச் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது. அவர்களை எதிரியாக காட்டுவதைத் தவிர, வேறு அரசியல் எதுவும் உன்னிடம் கிடையாது. இதுதான் உலகறிந்த  உண்மை.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழனின் எதிரியாக காட்ட, நீ சம்பவங்களை காட்டுகின்றாய். சாதாரண சிங்கள மக்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள், உன்னால் உன் செயலால் அவர்கள் மேல் திணிக்கப்பட்டது.

 

நீ அப்பாவி மக்கள் பயணம் செய்யும் பஸ்சில் குண்டு வைத்ததால், அவர்கள் பஸ்சைக் இயல்பாக கண்காணிக்கின்றனர். அப்பாவிக் கிராமங்கள் மேல் தாக்குதலை நடத்தியதால், கிராமங்களைக் கண்காணிக்கின்றது. அப்பாவி மக்கள் மேலான தாக்குதல்கள், இயல்பாக மக்களின் கண்காணிப்பாகவும், விழிப்புணர்வாகவும் மாறுகின்றது.

 

உன்னைப்போல் இனவெறி கொண்ட சிங்கள உதிரிகள், இதைப் பயன்படுத்தி தமிழ்மக்கள் மேல் அத்துமீறினர். உனக்கு தமிழ் மக்கள் எப்படி பயந்து ஒடுங்கினரோ, அதுபோல் சிங்கள இனவெறி காடையருக்கும், சிங்கள மக்கள் பயந்து ஒடுங்கினர்.

 

அப்பாவி மக்கள் மேல் நீ நடத்திய தாக்குதலின் விளைவுதான் இது. இதை நீ செய்து விட்டு, அவர்கள் தமிழனை இப்படி அணுகுவதாக குற்றம் சாட்டுவது, வேடிக்கையானது. நீ தான் இதில் முதல் குற்றவாளி.

 

நீ சிங்கள அப்பாவி மக்களை பாதுகாத்தபடி, இராணுவ இலக்குகள் மேல் தாக்குதலை நடத்தியிருந்தால், சிங்கள மக்கள் தமிழனை இப்படிக் கண்காணிக்க மாட்டார்கள்;. அப்பாவி சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல் தான், ஒடுக்கப்பட்ட மக்களை அரசின் பின் நிற்பதற்கு வலிந்து இட்டுச் சென்றது. தவறு உன்னுடையதே ஒழிய, அப்பாவிகளான அவர்களுடையதல்ல.

 

இதைப்போல் அரசு அப்பாவி தமிழ் மக்களைத் தாக்கியதன் மூலம், தமிழ் மக்களை உன் மக்கள் விரோத பாசிசத்தின் பின் வாழ வைத்தது. இதே செயலைத்தான் அங்கு நீ செய்தாய். கொஞ்சம் அசந்தால் நீ அப்பாவி சிங்கள மக்களை கொன்றுவிடுவாய் என்ற உண்மை, தமிழன் மேலான சிங்கள மக்களின் பொதுக் கண்காணிப்பாக மாறியது. அந்த மக்கள் சூதுவாது தெரியாத அப்பாவிகள்.

 

நீங்கள் மாபெரும் பாசிசக் கிரிமினல்கள். சிங்களப் பேரினவாத பாசிசப் பயங்கரவாதத்தைப் போன்று, தமிழ் குறுந்தேசிய பயங்கரவாதத்தை சிங்கள மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டவர்கள் நீங்கள். தமிழ் மக்களின் பெயரில், தமிழ் மக்களுக்கு எதிராக நீங்கள் செய்த மன்னிக்க முடியாத குற்றங்கள் இவை.

 

இப்படி உங்கள் குற்றங்களையும், தவறுகளையும், வக்கிரங்களையும், சிங்கள அப்பாவி மக்கள் மேல் ஏவிவிட்டு, அதன் விளைவைக் காட்டி தமிழனுக்கு எதிரானது என்று கூச்சல் போடுவதால் எந்த உண்மையும் பொய்யாகிவிடாது.

 

சிங்கள மக்கள் மேல் தாக்குவதை விடுத்து, சிங்கள பேரினவாத அரச பாசி;ச இயந்திரத்தை எதிர்கொண்டு போராடியிருக்க வேண்டும்;. யுத்தத்தை சிங்கள அப்பாவி மக்கள் மேல் நடத்துவதல்ல. முஸ்;லீம் மக்கள் மேல் நீங்கள் எதை செய்தீர்களோ, அதையே சிங்கள மக்கள் மேல் ஏவியவர்கள்.

 

பின் சிங்கள மக்களை எதிரியாக சித்தரித்து, அவர்களை தமிழ் மக்களின் எதிரியாக கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நீங்கள் தானேயொழிய மக்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் சிங்கள மக்கள், தமக்குள் எதிரிகளல்ல. உங்களைப் போல் இனவாதத்தை உள்வாங்கியவர்கள் தான், அப்படிக் காட்டினர், நடத்தினர். உண்மையான தேசியம் மக்களை எதிரியாக பார்க்கவில்லை. ஏன் அது அப்படி பார்க்காது. தமிழ் குறுந் தேசியமும் - சிங்கள பெருந் தேசியமும், புலி - அரசு வடிவில் இருந்ததே ஒழிய, எந்த மக்கள் மத்தியிலும் அந்த உணர்வு இருக்கவில்லை.

 

இதனால் தான் சிங்கள மக்களுடன் பல இலட்சம் தமிழ் மக்கள் சேர்ந்து வாழமுடிகின்றது. அவர்கள் மத்தியில் இனவெறுப்புணர்வில்லை. உங்கள் செயலால் ஏற்பட்ட மக்கள் கண்காணிப்புதான், அவர்கள் மத்தியில் சில இடைவெளியை உருவாக்கியது. இது உங்கள் நடத்தையால் உருவானது.

 

சிங்கள பேரினவாதமும், தமிழ் குறுந்தேசியமும் ஒடுக்கப்பட்ட மக்களை பிளந்து, அதில் குளிர் காய்ந்தது, காய்கின்றது. உண்மையில் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, தமிழ் குறுந்தேசியம் இருந்தது. அதுபோல் சிங்கள பேரினவாதமும், சிங்கள ஒடுக்கப்;பட்ட மக்களுக்கு எதிரானதாக இருந்துள்ளது.

 

இது தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து வாழக் கூடாது என்பதில், அது கையாண்ட வழிமுறைகள் தான், இனவொடுக்குமுறையில் பல வடிவங்களாக வெளிப்பட்டது. இந்தப் பேரினவாத அரசு 1971, 1989-1990 பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்ததுபோல், தமிழரையும் கொன்று குவித்தது. இப்படி தமிழ் சிங்கள மக்களின் எதிரியை, பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாத எந்த அரசியலும் மக்களின் விடுதலைக்கானதல்ல. அந்த மக்களை ஒடுக்குவதற்கானது. இதுதான் எம் கடந்தகால வரலாறு.

 

பி.இரயாகரன்
20.06.2009
   
              

 

 

Last Updated on Saturday, 20 June 2009 12:48