புதிய கலாச்சாரக் கவிதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அயல்நாட்டுக் கடனில்
அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'
..
உதட்டு சாயத்திற்கு மட்டும்
உனது இரத்தம்
..
ஒப்பனைகளின் சுமைதாளாமல்
நெளிகிறது தேசியக்கொடி
..
பொட்டுவைப்பதும் இந்து தர்மம்
பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்
..
தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி
தாராளமாய் விடுகிறார்கள் தூது
..
அப்பன் வருவான் மகன் வருவான்
ஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்
தப்பென்று தள்ளாதே
எவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்
இளைய பாரதமே !
..
காவிரியின் கழிமுகம் காய்ந்தாலென்ன
கருகும் குருத்துக்களை
கடல் நீரால் தலைமுழுகி
பெரும் இலாபமே ஒழுக்கமென்று
கயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்
வளமான இறால் குஞ்சே!
..
குறிஞ்சி மலைத்தேனை
எவன் கொண்டு போனாலென்ன
வேப்பங்கனிகளையும்
வெளிநாட்டான் கொண்டாலென்ன
'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி
தேசம் ஒரு தேன் கிண்ணம்
திருமுடுதற்கோர் விலையென்று
உலகத்தரம் நோக்கி
உயர்ந்திடுவாய் பொன் வண்டே !
..வலையோசை எழுப்புதல் போல்
உன் அலையோசை கடல்மேனி
அந்நியனுக்களித்தாலோ அன்னியச் செலவாணி
உள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு
பன்னாட்டு திமிங்கலத்தை
நெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே!
..
தமிழனா,இந்தியனா?
தரம்பார்க்க தேவையில்லை
கடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்
இடமில்லையெனச் சொல்லி எறிந்துவிட்டு
'முதல்' கொண்டு வருபவனை
முல்லை மணங்கமழ வரவேற்று
கதவை திறப்பாய் கனிவான பாரதமே!
..
மருதத்தை நெய்தலாக்கி
மண்ணையெல்லாம் பாலையாக்கி
'தூது' தொடர்கிறது
'தூ'...மானம் போகிறது.
..
துரை. சண்முகம்

புதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994