ராஜீவ் கொலை தொடர்பாக

ராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை? என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொதுவான தகவல்கள் வெளிவந்த போதிலும். விடுதலைப் புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கின்றன. இங்கு கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்தும், அவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜீவைக் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில், பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டுவெடித்ததும், இந்திய புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும், இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைக்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் உண்மை. ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன், சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.

 

ராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள். விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல், பூகோள, இராணுவ நலன்களுக்கு உட்பட்டதே! இலங்கை- இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திலிருந்தே பார்க்கப்பட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே! இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவிற்கு இருந்த சுயாதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன், தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும்... உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனது தேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலன்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்களை கட்டுப்படுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறவை வளர்த்துக் கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோன்றல் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்த ஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே! இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயாதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து!

 

80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேரு பரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமாக இருந்தவர்கள். தெலுங்கானா மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள். காஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள. பஞ்சாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது. அசாமில் தோன்றியுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது? தென்கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது. சீனாவுடன் யுத்தம் நடத்தி தோல்வியைக் கண்டது. பங்களாதேசத்தினை சூறையாடியது. ஈழமக்களை கொன்று குதறியது. பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி. நேபாளத்திற்கு எதிரான பொருளாதர தடை இதையெல்லாம் நோக்கும் போது தென்கிழக்காசியாவில் இந்தியா விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.

 

எமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித் தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

 

எந்த அடிப்படையில் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.

 

-ஆசிரியர் குழு-

 

 

Last Updated on Thursday, 10 September 2009 20:47