பாரதிதாசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்
அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!
சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை
செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!
ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்
இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார் ஓர்பால்!
ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை
ஏ!என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்!

அண்டைஅயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார். ஆங்கே
அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக்
கெண்டைவிழிப் புனல்சோர அழுதுதுடித் திட்டாள்;
கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும்
தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்
தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க,
மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான்.
மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்!

பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன்
பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன்
வீசாத மணிஒளியே! என்றுரைத்தாள் மனைவி.
விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று
நேசரெலாம் கேட்டார்கள். கேட்டநோயாளி
நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில் ஆக்கிப்
பேசமுடி யாநிலையில் ஈனசுரத் தாலே
பெண்டுபிள்ளை! பெண்டுபிள்ளை!! என்றுரைத்தான் சோர்ந்தான்!!!

எதிர்இருந்தோர் இதுகேட்டார்; மிகஇரக்கங் கொண்டார்.
இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்.
இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.
இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து
மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க்கா ருக்கு!
புமக்களுக்குப் புவிப்பொருள்கள் பொதுமுவென்று சர்க்கார்
பதிந்துவிட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்
பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!

என்றுசொன்னான் தேற்றுமொழி, இறக்கின்ற மனிதன்
இறக்குங்கால் கவலையின்றி இறக்கட்டும் என்று!
நன்றிந்த வார்த்தைஅவன் காதினிலே பாய்ந்து
நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து
சென்றஉயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச்
செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி,
இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!
இறப்பதெனில் இனியெனக்குக் கற்கண்டென் றானே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt149